The Viswamitra race! | Anusasana-Parva-Section-04 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 04)
பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் பிறப்பு; அடைதற்கரிதான பிராமணத் தன்மையை அவர் அடைந்த காரணம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் விஷ்வாமித்ரர் எவ்வாறு பிராமணர் மற்றும் பிராமண முனிவர் என்ற நிலைகளை அடைந்தார் என்பதை விளக்கமாகக் கேட்பாயாக.(1) ஓ! பாரத வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, பாரதக் குலத்தில் பல வேள்விகளைச் செய்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான ஆஜமீடன்[1] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(2) அவனது மகன் ஜன்னு என்ற பெயர் கொண்ட பெரும் மன்னன் ஆவான். உயர்ந்த மனம் கொண்ட இந்த இளவரசனின் மகளாகக் கங்கை இருந்தாள்.(3) பெரும் புகழ்பெற்றவனும், தந்தைக்கு இணையான அறவோனுமான சிந்துத்வீபன் இந்த இளவரசனின் {ஜன்னுவின்} மகனாக இருந்தான். சிந்துத்வீபனிடமிருந்து பெரும் அரசமுனியான பலாகாஸ்வன் உண்டானான்.(4) வல்லபன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய மகன் உடல் படைத்த இரண்டாவது தர்மனைப் போல இருந்தான். அவனது மகனான குசிகன், ஆயிரங்கண் இந்திரனைப் போல மகிமையுடன் பிரகாசித்தான்.(5)
[1] இங்கே குறிப்பிடப்படும் ஆஜமீடன் வேறொரு மன்னனான கதோத்திரனாக இருக்க வேண்டும். அவனுக்கும் ஆஜமீடன் என்ற பெயர் இருந்திருக்கக்கூடும். விஷ்வாமித்திரரின் மகளான சகுந்தலையின் மகனே பரதனாவான். பரதனின் வழித்தோன்றல்களில் ஒருவனான ஆஜமீடனாக இவன் இருக்க முடியாது.
விஷ்ணு புராணத்தின்படி
புரூரவ மாமன்னனுக்கு ஆயுசு, அமாவசு, விசுவாவசு, சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அமாவசு என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு கதோத்திரன் அவனுக்கு ஜன்னு, கங்கையை அவனுடைய மகளாக வைத்தார்கள். அதனால் கங்கைக்கு சான்னவி என்ற பெயர் உண்டாயிற்று. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். அவனுக்கு அசகன், அவனுக்கு பலாகாசுவன், அவனுக்கு குசன், அவனுக்கு குசாம்பன், குசநாபன். அதூர்த்தரஜசுவசு என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் குசாம்பன் என்பவன் எனக்கு இந்திர சமானனான மகன் உண்டாக வேண்டும் என்று தவஞ்செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி,
எனவே,
கதோத்திரன் ஆஜமீடன் என சொல்லப்பட்டிருக்க வேண்டும்
சுமந்து ---- > சிந்துத்வீபன்
அசகனை மகாபாரதம் குறிப்பிடவில்லை.
வல்லபன் என்ப்படுவது குசன்
குசிகன் எனப்படுவது குசநாபன்
காதி
சந்திரன் - புதன் - ப்ரூரவஸ் - அமாவசு - பீமன் - காஞ்சனன் - கதோத்திரன்(ஆஜமீடன்) - ஜன்னு - சுமந்து(சிந்துத்வீபன்) - அசகன் - பலகாஸ்வன் - குசன் (வல்லபன்) - குசநாபன் (குசிகன்) - காதி - கௌசிகன்(விசுவாமித்திரர்)
இதுவே சரியான வரிசையாக இருக்க வேண்டும்
ரிசீகர் {காதியிடம்}, "ஓ! மன்னா, உன் மகளின் கரத்திற்காக நான் என்ன மணக்கொடையை அளிக்க வேண்டும்? தயக்கமேதும் இல்லாமல் இக்காரியத்தை எனக்குச் சொல்வாயாக" என்றார்.(11)
காதி, "ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரக்கதிரின் வண்ணத்தைக் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஓராயிரம் குதிரைகளை எனக்குக் கொடுப்பீராக" என்றான்".(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிருகு குலத்தில் முதன்மையானவரான அந்த வலிமைமிக்கச் சியவனரின் மகன் {ரிசீகர்}, அதிதியின் மகனும், நீர்நிலைகள் அனைத்தின் தலைவனுமான வருண தேவனிடம்,(13) "ஓ! தேவர்களில் சிறந்தவனே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரனின் பிரகாசத்தையே நிறமாகக் கொண்டவையும, ஒரு காது கருப்பாக இருப்பவையுமான ஓராயிரம் குதிரைகளைக் கொடுக்க வேண்டுமென உன்னை நான் வேண்டுகிறேன்" என்று வேண்டினார்.(14)
அதிதியின் மகனான வருண தேவன், சிறப்பானவரான அந்தப் பிருகு குலக்கொழுந்திடம், "அப்படியே ஆகட்டும். நீர் எங்கே தேடினாலும் (உமது முன்னிலையில்) குதிரைகள் எழும்" என்றான்.(15)
ரிசீகர் அவற்றைக் குறித்து நினைத்த உடனேயே உயர்வகையைச் சேர்ந்தவையும், சந்திரனின் காந்தி மக்கிய நிறத்தையும் கொண்ட ஆயிரம் குதிரைகள் கங்கையின் நீரில் இருந்து எழுந்தன.(16) கான்யகுப்ஜத்திற்கு அருகில் புனிதமான கங்கைக்கரையில் அந்தக் குதிரைகள் தோன்றியதன் விளைவால் இன்றும் மனிதர்களுக்கு மத்தியில் அவ்விடம் அஸ்வதீர்த்தம் என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கிறது.(17) அப்போது தவசிகளில் சிறந்தவரான ரிசீகர் மனத்தில் நிறைவடைந்து, காதியிடம் மணக்கொடையாக அந்தச் சிறந்த ஆயிரம் குதிரைகளையும் கொடுத்தார்.(18) மன்னன் காதி, ஆச்சரியத்தால் நிறைந்து, சபிக்கப்படுவோமென அஞ்சி தன் மகளை நகைகளால் அலங்கரித்து அந்தப் பிருகு மகனுக்கு {ரிசீகருக்குக்} கொடுத்தான்.(19) அந்த முதன்மையான மறுபிறப்பாள முனிவர், திருமணத்தில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளின் படி அவளது கரத்தை ஏற்றார். அந்த இளவரசியும் தன்னை அந்தப் பிராமணரின் மனைவியாகக் கண்டு பெரும் நிறைவையடைந்தாள்.(20)
ஓ! பாரதா, அவளது ஒழுக்கத்தில் பெரும் நிறைவை அடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், அவளுக்கு ஒரு வரத்தை அருளும் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.(21) ஓ! சிறப்புமிக்க மன்னா, அந்த இளவரசி {சத்தியவதி} இக்காரியத்தைத் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய், தன் முன்பு கீழ் நோக்கிய கண்களுடன் {தலை குணிந்து} நின்றிருந்த தன் மகளிடம்,(22) "ஓ! என் மகளே, உன் கணவனிடம் எனக்கும் ஓர் உதிவியைப் பெறுவதே உனக்குத் தகும். கடுந்தவங்களுடன் கூடிய அந்தத் தவசி எனக்கு ஒரு மகன் பிறப்பதற்குரிய வரத்தை அருள வல்லவர்" என்றாள்.(23)
ஓ! மன்னா, அப்போது அந்த இளவரசி {சத்தியவதி} தன் கணவரான ரிசீகரிடம் உடனே திரும்பி தன் தாயின் விருப்பத்தைச் சொன்னாள்.(24) ரிசீகர், "ஓ! அருளப்பட்டவளே, என் உதவியால் அனைத்து நற்குணமும் கொண்ட ஒரு மகனை அவள் விரைவில் பெறுவாள். உன் வேண்டுகோள் நிறைவேறும்.(25) வலிமைமிக்கவனும், மகிமைமிக்கவனும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவனும், என் குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான ஒரு மகன் உனக்குப் பிறப்பான். இதை நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்.(26) நீங்கள் இருவரும் உங்கள் பருவ காலத்தில் நீராடிய {ருது ஸ்நானம் முடிந்த} பிறகு, ஓ! சிறந்த பெண்ணே, அவள் அரச மரத்தையும், நீ அத்தி மரத்தையும் தழுவினால் உங்கள் விரும்பத்திற்குரிய பொருளை நீங்கள் அடைவீர்கள்.(27) ஓ! இனிய புன்னகை கொண்ட பெண்ணே, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட இந்த வேள்விக் காணிக்கைகள் (சாரு) இரண்டை நீங்கள் இருவரும் உண்டால் (நீங்கள் விரும்பியபடியே) மகன்களை அடைவீர்கள்" என்றார்.(28)
இதனால் இதயத்தில் மகிழ்ச்சியடைந்த சத்தியவதி, ரிசீகரால் சொல்லப்பட்ட அனைத்தையும், சாரு {ஹவிஸ்}[2] உருண்டைகள் இரண்டைக் குறித்தும் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய் தன் மகளான சத்தியவதியிடம், "ஓ! மகளே, உன் கணவனை விட நான் உன்னால் பெரிதும் மதிக்கப்படத் தகுந்தவள் என்பதைக் கருதி என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக.(30) மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டு உன் கணவனால் உனக்குக் கொடுக்கப்பட்ட சாருவை {ஹவிஸை} எனக்குக் கொடுப்பாயாக, மேலும் எனக்குப் பரிந்துரைக்கப்பட்டதை நீ எடுத்துக் கொள்வாயாக.(31) ஓ! பழியற்ற குணத்துடன் கூடிய இனிய புன்னகை கொண்டவளே, என் வார்த்தைக்கு உன்னிடம் மதிப்பிருந்தால், நமக்காக நிர்ணயிக்கப்பட்ட மரங்களையும் நாம் மாற்றிக் கொள்வோம்.(32) தனக்குச் சிறந்தவனும், களங்கமற்றவனுமான மகன் வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். மகிமை பொருந்திய ரிசீகரும் இக்காரியத்தில் இவ்வாறே செய்திருக்க வேண்டும். அது முடிவில் தெரியப் போகிறது.(33) ஓ! அழகிய பெண்ணே, இக்காரணத்தால் என் இதயம் உன் சாருவையும், உன் மரத்தையும் கொள்ள விரும்புகிறது. நீயும் உனக்குச் சிறந்த தம்பியை அடைவாய் என்பதைக் கருத்தில் கொள்வாயாக" என்றாள்.(34)
[2] "அரிசி, பார்லி {வாற்கோதுமை}, பருப்பு ஆகியவற்றை நெய் மற்றும் பாலுடன் சேர்ந்து கொதிக்க வைத்து எடுக்கப்படும் ஒரு நைவேத்தியமே இந்தச் சாருவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு, ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தாய், மகளான சத்யவதி ஆகிய இருவரும் கருவுற்றனர்.(35) பிருகுவின் சிறந்த வழித்தோன்றலான அந்தப் பெரும் முனிவர் {ரிசீகர்}, தமது மனைவி கருவுற்றதை அறிந்து, இதயத்தில் நிறைவடைந்து, அவளிடம் {சத்யவதியிடம்},(36) "ஓ! சிறந்த பெண்ணே, சாருவை மாற்றிக் கொண்டதில் நீ நல்லது செய்யவில்லை என்பது விரைவில் வெளிப்படையாகும். நீ மரங்களை மாற்றிக் கொண்டாய் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.(37) உன்னுடைய சாருவில் மொத்தமாகச் சேகரிக்கப்பட்ட பிரம்ம சக்தியையும், உன் தாய்க்குரிய சாருவில் க்ஷத்திரிய சக்தியையும் வைத்திருந்தேன்.(38) நீ மூவுலகங்களிலும் புகழத்தக்க நற்குணங்களைக் கொண்ட ஒரு பிராமணனை ஈன்றெடுக்கும்படியும், அவள் (உன் தாய்) ஒரு சிறந்த க்ஷத்திரியனை ஈன்றெடுக்கும்படியும் விதித்திருந்தேன்.(39) ஆனால், ஓ! சிறந்த பெண்ணே, நீ (சாருவை) மாற்றிவிட்டதால் உன் தாய் சிறந்த பிராமணனையும், செய்கையில் கொடூரம் நிறைந்த க்ஷத்திரியனை நீயும் ஈன்றெடுப்பீர்கள். ஓ! பெண்ணே, உன் தாய் மீது கொண்ட பாசத்தால் நீ செய்தது நல்லதல்ல" எனறார்.(41)
ஓ! மன்னா, சிறந்த பெண்மணியான அந்தச் சத்தியவதி இதைக் கேட்டுக் கவலையடைந்து, இரண்டாக ஒடிந்துவிழும் அழகிய கொடியைப் போலத் தரையில் விழுந்தாள்.(42) புலனுணர்வு மீண்டு தன் தலைவனுக்குத் தலைவணங்கிய அந்தக் காதியின் மகள், பிருகு குலத்தில் முதன்மையானவரான தன் கணவரிடம்,(43) "ஓ! மறுபிறப்பாள முனிவரே, பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவரே, உம்மிடம் மன்றாடும் உமது மனைவிடம் கருணை கொண்டு, எனக்கு க்ஷத்திரிய மகன் பிறக்காமல் இருக்க வகைச் செய்வீராக.(44) ஓ! பிராமணரே, உமக்கு விருப்பமிருந்தால் என் மகன் அவ்வாறில்லாமல், என் பேரன் தன் கொடூரச் செயல்களுக்குப் புகழ்பெற்றவனாக இருக்கட்டும். நீர் எனக்கு இந்த உதவியைச் செய்வீராக" என்றாள்.(45)
ஓ! மன்னா, கடுந்தவங்களைக் கொண்ட அந்த மனிதர், தம் மனைவியிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார். அதன் பிறகு அவள் ஜமதக்னி என்ற பெயரில் அருள்நிறைந்த ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(46) காதியின் கொண்டாடப்பட்ட மனைவியும், அந்த முனிவரின் {ரிசீகரின்} அருளால் பிரம்ம ஞானத்தை அறிந்த மறுபிறப்பாள முனி விஷ்வாமித்ரரை ஈனறெடுத்தாள்.(47) பெரும் அர்ப்பணிப்பணிப்பைக் கொண்டிருந்த விஷ்வாமித்ரர் ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமண நிலையை அடைந்து, ஒரு பிராமணக் குலத்தையே உண்டாக்கியவரானார்.(48) அவரது மகன்கள், கடுந்தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வேதங்களில் கல்விமான்களும், பல கோத்ரங்களை உண்டாக்கியவர்களுமான பல பிராமணக் குலங்களின் உயர் ஆன்ம மூதாதையர்களாக இருந்தனர்.(49)
புகழத்தக்க மதுச்சந்தர், வலிமைமிக்கத் தேவராதர், அக்ஷீணர், சகுந்தர், பப்ரு, காலபதன்,(50) கொண்டாடப்பட்ட யாஜ்ஞவல்க்யர், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட ஸ்தூணர், உலூகர், முத்கலர் {யமதூதர்}, தவசி ஸைந்தவயானர்,(51) சிறப்புமிக்கப் பல்குஜங்கர் {பர்ணஜங்கர்}, பெரும் முனிவர் காலவர், ருசி, கொண்டாடப்பட்ட வஜ்ரர், ஸாலங்காயனர்,(52) லீலாத்யர், நாரதர், கூர்ச்சாமுகர் என்ற பெயரில் அறியப்பட்டவர், வாஹுலி {வாதுலி}, முஸலர், வக்ஷோக்ரீவர்,(53) ஆங்க்ரிகர், நைகத்ருக், சிலாயூபர், சிதர் {ஸிதர்}, சுசி, சக்ரகர், மாருதந்தவ்யர், வாதக்னர், அஸ்வலாயனர்,(54) ஸ்யாமாயனர், கார்க்யர், ஜாபாலி, ஸுஸ்ருதர், காரீஷி, ஸம்ச்ருத்யர், பர பௌரவர், தந்து,(55) பெருந்தவசி கபிலர், தாடகாயனர், உபகஹனர், ஆஸுராயணர், மார்கமர் {மார்த்தர்}, ஹிரண்யாக்ஷர், ஜங்காரி, பாப்ரவாயணி, ஸூதி {பூதி}, விபூதி, ஸூதர், ஸூரக்ருத்,(56) ஆராணி {அராலி}, நாசிகர், சாம்பேயர், உஜ்ஜயனர், நவதந்து, பகநகர், ஸேயனர், யதி,(57) அம்போருஹர் {அம்போருதர்}, அமத்யஸின் {சாருமத்ஸ்யர்}, சீரிஷின், கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேக்ஷின், பெரும் முனிவர் நாரதி(58) ஆகிய முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரின் மகன்களாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.
ஓ! மன்னன் யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனே, உயர்ந்த தவமும், அர்ப்பணிப்பும் மிக்க விஷ்வாமித்ரர் (பரம்பரை வழியில்) ஒரு க்ஷத்திரியராக இருந்தாலும்,(59) ரிசீகரால் (சாருவில்) உயர்ந்த பிரம்ம சக்தி இடப்பட்டதால் ஒரு பிராமணரானார். சூரியன், சந்திரன், அக்னி தேவன் ஆகியோரின் சக்திகளைக் கொண்ட விஷ்வாமித்ரர் பிறந்த கதையை உனக்கு விளக்கமாகச் சொல்லிவிட்டேன்.(61) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு வேறு எந்தக் காரியத்தில் ஐயம் இருந்தாலும், எனக்கு அறியச் செய்வாயாக, நான் அவற்றைப் போக்குவேன்" என்றார் {பீஷ்மர்}.(62)
அநுசாஸனபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |