Acts and their fruits! | Anusasana-Parva-Section-07 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 07)
பதிவின் சுருக்கம் : நல்வினை மற்றும் தீவினைகளின் பயன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே, பெரியோர்களில் முதன்மையானவரே, நற்செயல்களின் கனிகள் என்னென்ன என்பது குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை விழிப்படைச் செய்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, முனிவர்களின் இரகசிய ஞானமான இதைக் கேட்பாயாக.(2) வெகு காலம் விரும்பியவையும், இறந்த பிறகு மனிதர்களால் அடையப்படுபவையுமான கதிகளை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக. எந்தெந்த உடல்களில் அல்லது இருப்பின் வடிவங்களில் உயிரினங்களால் செயல்கள் செய்யப்படுகின்றனவோ,(3) அவற்றின் கனிகள் {பலன்கள்} அதைச் செய்பவர்கள் அதே உடல்களைக் கொண்டிருக்கும்போதே அறுவடை செய்யப்படுகின்றன {அடையப்படுகின்றன}. உயிரினங்கள் எந்த நிலைகளில் நல்ல அல்லது தீய செயல்களைச் செய்கின்றனவோ, அடுத்தடுத்த பிறவிகளில் அதே நிலையில் இருக்கும்போது அவை அவற்றின் கனிகளை அறுவடை செய்கின்றன. ஐம்புலன்களின் உதவியால் செய்யப்படும் எந்தச் செயலும் தொலைந்து போவதில்லை {எந்த செயலுக்கும் பலனில்லாமல் போவதில்லை}.(4)
ஐம்புலன்களும், ஆறாவதாக அழிவில்லாத ஆன்மாவும் சாட்சிகளாக நீடிக்கின்றன. ஒருவன் தன் கண்களை (பிறரின் தொண்டில்) அர்ப்பணிக்க வேண்டும்;(5) அவன் தன் இதயத்தையும் (அதே காரியத்திற்கே) அர்ப்பணிக்க வேண்டும்; அவன் ஏற்புடைய {இனிமையான} சொற்களையே பேச வேண்டும்;(6) மேலும் அவன் (தன் விருந்தினரை) வழிபட்டுப் பின்பற்றவும் வேண்டும். இதுவே ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி என்றழைக்கப்படுகிறது. முன்பின் தெரியாதவனும், நீண்ட பயணத்தால் களைப்படைந்தவனும், சோர்வடைந்தவனுமான ஒரு பயணிக்கு நல்ல உணவை அளிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(7) வேள்வித் தரைகளை மட்டுமே தங்கள் படுக்கையாகப் பயன்படுத்துபவர்கள், (அடுத்தடுத்த பிறவிகளில்) மாடமாளிகைகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளையும், கந்தலாடைகளையும் மட்டுமே உடுத்துபவர்களுக்கு நல்ல ஆடை மற்றும் ஆபரணங்கள் கிடைக்கின்றன.(8)
தவம் செய்து தன் ஆன்மாவை யோகத்தில் நிலைக்கச் செய்தவர்கள், (இம்மையில் தங்கள் துறவின் கனியாக) வாகனங்களையும், விலங்குகளையும் அடைகிறார்கள். வேள்வி நெருப்பின் அருகே படுக்கும் ஏகாதிபதி வீரத்தை அடைகிறான்.(9) சுவை மிக்கவை அனைத்தையும் அனுபவிக்காமல் துறப்பவன் செழிப்பை அடைகிறான், விலங்குணவைத் தவிர்ப்பவன், பிள்ளைகளையும், கால்நடைகளையும் {விலங்குகளையும்} அடைகிறான்.(10) தலைகீழாகத் தொங்கிக் கொண்டு, அல்லது நீரில் வாழ்ந்து, அல்லது தனிமையாக வாழ்ந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் விரும்பப்படும் கதிகள் அனைத்தையும் அடைகிறான்.(11) ஒரு விருந்தினருக்கு உறைவிடமளித்து, கால் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, உணவு, ஒளி மற்றும் படுக்கையும் அளிப்பவன், ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி செய்ததன் தகுதிகளை {புண்ணியங்களை} அடைகிறான்.(12)
போர்க்களத்தில், போர்வீரனின் நிலையை {வீராஸனத்தை} அடைந்து, போர்வீரனின் படுக்கையில் {வீரசயனத்தில்}[1] தன்னைக் கிடத்திக் கொள்ளும் ஒருவன், விருப்பத்திற்குரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் நித்திய உலகங்களை அடைகிறான்.(13) ஓ! மன்னா, ஈகையுடன் கொடையளிக்கும் மனிதன் வளங்களை அடைகிறான். பேசாநோன்பினால் {மௌனமிருப்பதனால்} அதிகாரம் செலுத்தும் தகைமையையும், தவப் பயிற்சியினால் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும், பிரம்மச்சரியத்தினால் பெருகும் நீண்ட வாழ்நாளையும், பிறருக்குத் தீங்கிழையாமல் இருப்பதன் மூலம் அழகு, செழிப்பு மற்றும் நோயிலிருந்து விடுதலை {உடல்நலம்} ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(14) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு அரசுரிமை கிடைக்கிறது. மரங்களின் இலைகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், சொர்க்கவாசத்தை அடைகின்றனர்.(15) ஓ! மன்னா, உணவைத் தவிர்ப்பதன் மூலம் {உண்ணா நோன்பினால்} ஒரு மனிதன் இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது. மூலிகைகளை மட்டுமே தன் உணவாகச் சுருக்கிக் கொள்பவன், பசுக்களை அடைகிறான். புற்களை மட்டுமே உண்டு வாழ்பவன் தேவலோகங்களை அடைகிறான்.(16)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "வீராஸனம், யுத்தங்களில் நிலைமாறாமலிருப்பது. வீரசயனம், போர்க்களத்திலயே பீஷ்மரைப் போலப் படுப்பது. வீரஸ்தான், யுத்தத்தில் பின்வாங்காமல் நிற்பது. இங்கே வீராஸனம் = போர்க்களம்; ’அதில் வீரசயனம் என்னும் மரணத்தை அடைந்து, வீரஸ்தானமான ஸ்வர்க்கம் சென்றவனுக்கு’ என்பது பழையவுரை" என்றிருக்கிறது.
ஒருவன் தன் மனைவியுடன் கலவியைத் தவிர்ப்பதன் மூலமும், பகலின் மூன்று வேளைகளில் தூய்மைச் சடங்குகளை {நீராடுதலைச்} செய்வதன் மூலமும், வாழ்வுக்காகக் காற்றைமட்டுமே உண்டு வாழ்வதன் மூலமும் ஒருவன் ஒரு வேள்வியின் தகுதியை அடைகிறான். வாய்மை பயில்வதன் மூலம் சொர்க்கமும், வேள்விகளின் மூலம் உன்னதப் பிறவிகளும் அடையப்படுகின்றன.(17) தூய ஒழுக்கத்தைக் கொண்டவனும், நீரை மட்டுமே உண்டு வாழ்பவனும், இடையறாமல் அக்னிஹோத்ரம் செய்பவனும், காயத்ரியை உரைப்பவனுமான பிராமணன் ஒரு நாட்டை அடைகிறான். உணவைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது அதை ஒழுங்குமுறை செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைகிறான்.(18) ஓ! மன்னா, வேள்விகளில் ஈடுபடும்போது பரிந்துரைக்கப்படும் உணவுகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலமும், பனிரெண்டு வருடங்கள் புனிதப்பயணம் {யாத்திரை} செய்வதன் மூலமும் வீரர்களுக்காக ஒதுக்கப்படும் வசிப்பிடங்களைவிடச் சிறந்த இடத்தை ஒருவன் அடைகிறான்.(19) வேதங்கள் அனைத்தையும் படிப்பதன் மூலம் ஒருவன் உடனடியாகத் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான், எண்ணத்தால் அறம்பயில்வதன் மூலம் அவன் சொரக்கலோகத்தை அடைகிறான்[2].(20)
[2] கங்குலியில் வரும் இந்தப் பத்தி கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கிறது, "மூன்று காலமும் ஸ்நானம் செய்பவன் ஸ்திரீகளை அடைவான். வாயுபக்ஷணம் செய்பவன் யாகபலனை அடைவான். பொய்யாமையால் ஸ்வர்க்கத்தையும், வ்ரதத்தினால் உயர் குலத்தையும் அடைகிறான். ஜலபானம் செய்கிறவன், விடாமல் அக்னிஹோத்ரம் செய்யும் பரிசுத்தனான பிராம்மணனாக ஜனிக்கிறான். காற்றைப் புஜிப்பவனுக்கு ராஜ்யமும், உண்ணாமல் உபவாஸமிருப்பவனுக்கு ஸ்வர்க்கமும் வருகின்றன. அரசனே, பன்னிரண்டு வர்ஷகாலம் தீக்ஷித்துக் கொண்டு உபவாசஸத்தையும், ஸ்நானத்தையும் செய்வதனால், ஸ்வர்க்கலோகத்திற்கும் மேற்படுகிறான். எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்கள் மறவாமலிருப்பதனால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான். வைராக்யத்துடன் வேதத்தை ஜபம் செய்பவர்களுக்கு, ஸ்வர்க்கமும், மோக்ஷமும் பலனாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மனப்பூர்வமாகத் தர்மத்தைச் செய்பவன் ஸ்வர்க்கலோகத்தை அடைகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கிட்டத்தட்ட கும்பகோணம் பதிப்பில் உள்ளவாறே இருக்கிறது. கங்குலியின் மொழிபெயர்ப்பு இங்கே பிழையாகவே தோன்றுகிறது. மூடர்களால் வெல்ல முடியாததும், உடல் வீரியத்தின் தணிவிலும் தணிவடையாததும், மரண நோயைப் போலத் தொற்றிக் கொள்வதும், மகிழ்ச்சி மற்றும் உலகம் சார்ந்த இன்பங்களில் இதயம் கொள்வதுமான ஆழமான ஏக்கத்தை {ஆசையைக்} கைவிட இயன்ற மனிதன் மட்டுமே {உண்மையான} இன்பத்தை அடையவல்லவனாக இருக்கிறான்.(21)
ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கண்டடையும் கன்றைப் போலவே, மனிதனின் முற்பிறவி செயல்களும் (அவன் {வெவ்வேறு பிறவிகளில்} வெவ்வேறு வகையில் மாற்றமடையும்போதும்) அவனைப் பின்தொடர்கின்றன.(22) மரத்தின் மலர்களும், கனிகளும், புலப்படும் ஆதிக்கங்கள் எதன் மூலமும் தூண்டப்படாமல், பருவ காலத்தைத் தவறவிடாததைப் போலவே முற்பிறவியில் செய்த கர்மம், சரியான காலத்தின் தன் கனிகளைக் கொண்டு வருகிறது.(23) வயதானதும் மனிதனின் மயிரில் நரைகூடுகிறது; அவனது பற்கள் தளர்கின்றன; அவனது கண்களும், காதுகளும் செயல்பாட்டில் மங்குகின்றன; ஆனால் இன்பங்களில் அவனுக்குரிய ஆசை மட்டுமே தணிவடையாத ஒரே பொருளாக இருக்கிறது.(24) தந்தையை நிறைவு செய்யும் செயல்களால் பிரஜாபதி நிறைவடைகிறான், தாயை நிறைவு செய்யும் செயல்களால் பூமாதேவி நிறைவடைகிறாள், ஆசானை நிறைவு செய்யும் செயல்களால் பிரம்மனே துதிக்கப்படுகிறான். இம்மூவரை மதிப்பவர்களால் அறமே மதிக்கப்படுகிறது. இம்மூன்றையும் வெறுப்போரின் செயல்கள் அவர்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது" என்றார் {பீஷ்மர்}".(25,26)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பீஷ்மரின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குருகுல இளவரசர்கள் ஆச்சரியத்தால் நிறைந்து, மனமத்தில் நிறைவடைந்தவர்களான இன்புற்றார்கள்".(27) {மேலும் பீஷ்மர் தொடர்ந்தார்},[3] "வெற்றி அடையும் விருப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள், அல்லது உரிய கொடைகள் அளிக்கப்படாமல் செய்யப்படும் சோம வேள்வி, அல்லது உரிய ஸ்லோகங்களைச் சொல்லாமல் நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் பயனளிக்காமல், தீய விளைவுகளுக்கு வழி வகுப்பதைப் போலவே, பாவமும், தீய விளைவுகளும் பொய்மையில் இருந்து உண்டாகின்றன.(28) ஓ! இளவரசே {ஜனமேஜயா}, நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகள் குறித்த இந்தக் கோட்பாட்டைப் பழங்கால முனிவர்கள் சொன்னபடியே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறென்ன நீ கேட்க விரும்புகிறாய்?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(29)
[3] பீஷ்மர் தொடர்ந்தார் என்ற செய்தி கங்குலியில் இல்லை. வைசம்பாயனர் சொல்வது போலவே இவ்வுரை இறுதிவரை தொடர்ந்து செல்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கிறது. ஆனால், கும்பகோணம் பதிப்பில் இவ்விடத்தில் பீஷ்மர் மீண்டும் சொல்வதாகக் குறிப்பிருக்கிறது. அதன்படியே அடைப்புக்குறிக்குள் பீஷ்மர் சொல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
அநுசாஸனபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |