The speciality of Brahmanas! | Anusasana-Parva-Section-08 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 08)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வழிபடத்தகுந்தவர் எவர்? வணங்கத்தகுந்தவர் எவர்? ஓ! பாரதரே, தலைவணங்கத்தகுந்தவர் எவர்? நீர் விரும்புபவர் எவர்? ஓ! இளவரசே {பீஷ்மரே}, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(1) நீர் துன்பத்தின் பீடிப்பில் மூழ்கும்போது உமது மனம் எதில் வசித்திருக்கும்? மனிதர்களின் உலகான இம்மையிலும், இதன்பின் வரும் மறுமையிலும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிரம்மத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்களும், தளராத ஊக்கத்துடன் கூடிய தங்கள் வேத கல்வியின் மூலம் உண்டாகும் தவங்களைச் செய்பவர்களுமான மறுபிறப்பாளர்களையே {பிராமணர்களையே} நான் விரும்புகிறேன்.(3) எவரின் குலத்தில் சிறுவர்களும், கிழவர்களும், தளராது ஊக்கத்துடன் தங்கள் மூதாதையரின் பணிச்சுமையைச் சோர்வின்றிச் சுமக்கிறார்களோ அவர்களுக்காக என் இதயம் ஏங்குகிறது {அவர்களை என் இதயம் விரும்புகிறது}.(4) அறிவின் பல்வேறு கிளைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்களும், தற்கட்டுப்பாடு, மென்மையான பேச்சு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களும், பிரம்ம அறிவு, அறவொழுக்கம் கொண்டவர்களுமான பிராமணர்கள்,(5) அன்னக்கூட்டங்களைப் போல மதிப்புமிக்கச் சபைகளில் உரையாற்றுகின்றனர்[1]. ஓ! யுதிஷ்டிரா, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் மங்கலமானைவையும், ஏற்புடையவையும் {இனிமையானவையும்}, சிறப்பானவையும், நன்றாக உச்சரிக்கப்படுபவையுமாக இருக்கின்றன. அவர்கள் ஏகாதிபதிகளின் சபைகளில் சொல்லும் உலகியல் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த இரு மகிழ்ச்சிகளும் நிறைந்த வார்த்தைகள், அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களால் கவனமாகவும், மதிப்புடனும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன[2].(6,7)
[1] "நீர் கலந்த பாலில், நீரை விட்டு பாலை மட்டுமே அருந்தும் அன்னங்களை இது குறிப்பதாக உரையாசிரியர் விளக்குகிறார். கல்விமான்களான பிராமணர்கள் அன்னங்களைப் போல உலகத்திற்கு நன்மை பயப்பதைச் சொல்கிறார்கள், தீமையானதையும், பாவம் நிறைந்ததையும் பேச மறுக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், "எல்லா வித்தைகளையும் நன்றாகக் கற்பிக்கப்பட்டவரும், அடக்கமுடையவரும், நயமாகப் பேசுகிறவரும், எப்போதும் கேள்வியையும் ஒழுக்கத்தையும் விடாதவரும் ப்ரம்மஜ்ஞானிகளுமான ஸாதுக்கள், அரசர்கள் கேட்க விரும்பிய போது தேவலோகத்து மேகங்கள் (அமுதம் பொழியும் மேகங்கள்) போலவும், மங்களகரமாகவும், மதுரமாகவும், தெளிவாகவும், இம்மையிலும், மறுமையிலும் ஸுகத்தைத் தரும்படியும் பேசின பேச்சுக்களைக் கேட்கிறோமல்லவா?" என்றிருக்கிறது.
உண்மையில், ஞானத்தையும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களும், பிறரால் மதிக்கப்படுபவர்களுமான அவர்கள் மன்னர்களின் சபைகளில் சொல்லும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் அவர்களுக்காக ஏங்குகிறது {அவர்களிடம் விருப்பம் கொள்கிறது}.(8) ஓ! ஏகாதிபதி, பிராமணர்களின் மனம் நிறைவதற்காக நன்கு சமைக்கப்பட்ட தூய உணவை நிறைவாக அர்ப்பணிப்புடன் கொடுப்பவர்களுக்கு என் இதயம் ஏங்குகிறது.(9) போர்க்களத்தில் போரிடுவது எளிது, ஆனால் செருக்கும், தற்பெருமையுமின்றிக் கொடையளிப்பது அவ்வாறானதல்ல.(10) ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் துணிச்சல்மிக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கணக்கிடுகையில் கொடைகளில் வீரனாக இருப்பவனே மேன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(11) ஓ! இனியவனே, நல்ல குலத்தில் பிறந்து, நன்னடத்தைக் கொண்டவனாகத் தவங்களிலும், கல்வியிலும் அர்ப்பணிப்புள்ளவனாக இருப்பதைவிட நான் ஓர் ஈனப் பிராமணனாக இருந்தாலும் என்னைப் பெரியவனாகக் கருதிக் கொள்வேன்.(12) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வுலகில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவன் வேறெவனும் இல்லையென்றாலும், பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்[3].(13)
[3] கும்பகோணம் பதிப்பில், "நான் மறுஜென்மத்தில் ஹீனப்ராம்மணனாகவாவது ப்ரம்ம குலத்தில் பிறந்து, தர்மத்தைவிடாமல் தவத்தையும், ஞானத்தையும் முதன்மையாகக் கொண்டிருப்பேனாயின், அத்ருஷ்டமுள்ளவனாவேன். பாண்டுபுத்ரனே, எனக்கு உன்னைவிட மேலான அன்பன் இவ்வுலகத்தில் இல்லை. பாரதனே, ப்ராம்மணர்கள் மட்டும் உன்னைவிட அதிக அன்பர்கள்" என்றிருக்கிறது.
எனக்குப் பிராமணர்கள் உன்னைவிட அன்புக்குரியவர்கள் என்ற உண்மையால், என் தந்தையான சந்தனுவால் அடையப்பட்ட இன்பலோகங்கள் அனைத்திற்கும் செல்வேன் என நான் நம்புகிறேன்.(14) என் தந்தையோ, என் தந்தையின் தந்தையோ, குருதியால் என்னுடன் தொடர்புடைய வேறு எவருமோ பிராமணர்களைவிட எனக்கு அன்புக்குரியவர்கள் இல்லை.(15) (நான் வழிபாட்டுக்குத் தகுந்த பிராமணர்களைத் தேவர்களாக வழிபடுவதால்) என் பிராமண வழிபாட்டின் மூலம் நான் சிறிய அல்லது பெரிய பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை.(16) எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் பிராமணர்களுக்கு நான் செயல்பட்டிருக்கும் விளைவால் நான் இப்போது (இந்தக் கணைப்படுக்கையில் கிடந்தாலும்) எந்தத் துன்பத்தையும் உணரவில்லை.(17) பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். இவ்வகை அழைப்பு எப்போதும் என்னை உயர்வான நிறைவை அடையச் செய்கிறது. பிராமணர்களுக்கு நன்மை செய்வது என்பது புனிதச் செயல்கள் அனைத்திலும் புனிதமானதாகும்.(18) பிராமணர்களுக்குப் பின்னால் மதிப்புடன் நடந்து சென்ற எனக்கு அருள்நிறைந்த உலகங்கள் காத்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஓ! மகனே, காலத்திற்கும் எப்போதும் நீடித்திருக்கும் உலகங்களுக்கு நான் மிக விரைவில் செல்லப் போகிறேன்.(19)
ஓ! யுதிஷ்டிரா, பெண்களின் கடமைகள் அவர்களது கணவர்களின் {கடமைகளுக்குத்} தொடர்புடையதாகவும் அவற்றையே சார்ந்துமிருக்கின்றன. உண்மையில் ஒரு பெண்ணுக்குக் கணவனே தெய்வமாவான், அவள் அடைய விரும்பும் உயர்ந்த கதியும் அவனே ஆவான். மனைவிக்குக் கணவனைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் பிராமணர்கள் இருக்கிறார்கள்[4].(20) முழுமையாக நூறு வயதுடைய ஒரு க்ஷத்திரியனும், பத்து வயதேயுடைய ஒரு நல்ல பிராமணச் சிறுவனும் இருந்தால், பிராமணனே முதன்மையானவன் என்பதால் பின்னவன் {பிராமணச் சிறுவன்} தந்தையாகவும், முன்னவன் {க்ஷத்திரிய முதியவர்} மகனாகவும் கருதப்பட வேண்டும்.(21) {பழங்காலத்தில்} ஒரு பெண், தன் கணவன் இல்லாதபோது, அவனுடைய தம்பியையே தன் கணவனாகக் கொண்டதைப் போலவே பூமியும் பிராமணனை அடையாமல், க்ஷத்திரியனைத் தன் தலைவன் ஆக்கிக் கொண்டாள்.(22) பிராமணர்களை மகன்களைப் போலப் பாதுகாக்கவும், தந்தைமார் அல்லது ஆசான்களைப் போல வழிபடவும் வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே, உண்மையில், வேள்வி அல்லது ஹோம நெருப்பின் முன்னால் மக்கள் மதிப்புடன் காத்திருப்பதைப் போலவே அவர்கள் {பிராமணர்கள்} முன்பும் காத்திருக்க வேண்டும்.(23) பிராமணர்கள் எளிமையானவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள். அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே அவர்கள் எப்போதும் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவர்கள் கோபமடையும்போது, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாகிறார்கள். இக்காரணங்களால் அவர்கள் மதிப்புடனும், பணிவுடனும் தொண்டாற்றப்பட்டு, எப்போதும் காத்திருக்கப்பட வேண்டும் {அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும்}.(24)
[4] கும்பகோணம் பதிப்பில், "யுதிஷ்டிர, ‘உலகத்தில் பெண்களுக்குக் கணவனைப் பற்றியதே தர்மம்; அவனே தெய்வம்; அவனே கதி; வேறு இல்லை’ என்பதெப்படியோ அப்படியே க்ஷத்ரியனுக்கு எல்லாம் அந்தணர்தாம்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, சக்தி {அதிகாரம்} மற்றும் தவங்கள் {சாந்தம்} ஆகிய இரண்டிற்கும் ஒருவன் எப்போதும் அஞ்ச வேண்டும். இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது தொலைவில் வைக்கப்பட வேண்டும்.(25) இவை இரண்டின் விளைவுகளும் மிக விரைவானவை. எனினும், தவங்களுடன் கூடிய பிராமணர்கள் கோபப்பட்டால், தங்கள் கோபத்திற்குரிய பொருளை (அந்தப் பொருள் எவ்வளவு தான் சக்தியைக் கொண்டிருந்தாலும்) கொன்றுவிடலாம் என்பதால் {சக்தியைக் காட்டிலும்} தவங்களுக்கு மேன்மையுண்டு.(26) கோபத்தை வென்ற ஒரு பிராமணன் மீது பெரும் அளவிலான சக்தியும், தவங்களும் பயன்படுத்தப்பட்டாலும் அவை தணிவையே அடையும். சக்தி மற்றும் தவங்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் அழிவு இரண்டுக்கும் ஏற்படும், அதே வேளையில், தவங்களுக்கு எதிராக சக்தி பயன்படுத்தப்பட்டால், அதற்கு {சக்திக்கு} ஒன்றும் எஞ்சாத அழிவு ஏற்படும்; சக்திக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தவங்களை முழுமையாக அழிக்க முடியாது[5].(27) கையில் தடியுடன் மந்தையைப் பாதுகாக்கும் ஓர் இடையனைப் போலவே க்ஷத்திரியர்களும் வேதங்களையும், பிராமணர்களையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(28) உண்மையில், ஒரு தந்தை தன் மகன்களைப் பாதுகாப்பதைப் போலவே ஒரு க்ஷத்திரியன் பிராமணர்களில் அறவோர் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பிராமணர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கண்காணிக்கும் விதமாக அவனது கண்கள் எப்போதும் அவர்களது இல்லத்தின் மீது இருக்க வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(29)
[5] கும்பகோணம் பதிப்பில், "சிறந்த தவமுள்ள ப்ராம்மணர்கள் கோபித்தால் கெடுத்துவிடுவார். ப்ராம்மண ஸ்த்ரீகளைத் தாயைப் போலப் பூஜித்துத் தூரத்திலிருந்து நன்றாகக் காப்பாற்ற வேண்டும். கோபமில்லாதவன் விஷயத்தில் பிழை செய்வதனால் நீண்ட காலம் நரகத்தை அனுபவிப்பான். ப்ராம்மணனைக் கோபியாமிலுருக்கச் செய்வதனால், அவனுக்கு மஹிமை, தவம் இரண்டையும் கொடுத்ததாகும். ப்ராம்மணனுக்குத் தானம் செய்ததில் மிச்சமெடுத்துக் கொள்ளாமலிருப்பவன், அவனது தவம் மஹிமையிரண்டிலும் பாகம் அடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிராமணர்கள் கோபப்பட்டால் கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாவர். அவர்களுடைய சக்தியும், தவங்களும் எப்போதும் அச்சத்தை ஏற்படுத்துபவை. எனவே, ஒருவன் அவர்களுடைய சக்தியையும், தவங்களையும் தவிர்க்க வேண்டும். அவை கட்டவிழ்த்துவிடப்பட்டால், இரண்டும் மிக விரைவாக அச்சத்திற்கு வழிவகுக்கும். ஓ! பெரும் மன்னா, ஒருபிராமணத் தவசியின் கோபம் கொல்லக்கூடிய ஒன்றாகும். அவை இரண்டும் கோபத்தை வென்ற ஒரு பிராமணருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால் இரண்டும் தணிவடையும். ஆனால் தணிவடைந்தாலும் அவற்றில் ஒன்று முழுமையாகத் தணிவதில்லை" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |