The jackal and the ape! | Anusasana-Parva-Section-09 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 09)
பதிவின் சுருக்கம் : கொடையளிப்பதாக உறுதியளித்தும் அவற்றைக் கொடாமல் இருப்பவன் கதியை விளக்க நரி மற்றும் குரங்கின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் காந்தி கொண்டவரே, பிராமணர்களுக்குக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்த கொடைகளைப் புத்தி மயக்கத்தால் {லோபத்தினால்} கொடுக்காமலிருக்கும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?(1) ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, இவ்வகையில் உள்ள கடமைகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், உறுதியளித்த கொடையைக் கொடுக்காதிருக்கும் தீய ஈனர்களின் கதி என்னவாகிறது?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "உறுதிமொழியளித்த கொடை சிறிதாகவோ, பெரிதாவோ இருந்தாலும், அதைக் கொடுக்காத மனிதன், சந்ததியை எதிர்பார்க்கும் அலியைப் போல (அனைத்துத் திசைகளிலும்) தனது நம்பிக்கைகள் கனியற்றுப் போவதைப் பார்க்கும் பேரிழிவை அடைகிறான்.(3) ஓ! பாரதா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அத்தகைய மனிதன் தான் பிறந்த நாள் முதல், தன் மரணம் வரை செய்த நற்செயல்கள் எதுவும்,(4) வேள்வி நெருப்பில் அவன் ஊற்றும் ஆகுதிகள் எதுவும், அவன் அளிக்கும் கொடைகள் எதுவும், அவன் செய்யும் தவங்கள் எதுவும் என அனைத்தும் கனியற்று {பலனற்றுப்} போகின்றன.(5) ஓ! பாரதர்களின் தலைவா, சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், நன்கு அமைக்கப்பட்ட தங்கள் புத்தியின் துணை கொண்டு இதையே தங்கள் கருத்தாக அறிவிக்கின்றனர்.(6) அத்தகைய மனிதன், கருப்பு நிறக் காதுடைய ஆயிரம் குதிரைகளைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் கருதுகின்றனர்.(7)
இது தொடர்பாக ஒரு நரிக்கும், ஒரு குரங்குக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! பகைவர்களைச் சுடுபவனே, அவை இரண்டும் மனிதர்களாக இருந்தபோது அணுக்கமான நண்பர்களாக இருந்தன. மரணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் நரியாகவும், மற்றவர் குரங்காகவும் ஆகினர்.(9) சுடலைக்கு மத்தியில் ஒரு விலங்கின் சடலத்தை உண்ணும் நரியைக் கண்ட குரங்கு, முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது அது {நரி} தன் நண்பனாக இருந்ததை நினைவு கூர்ந்து அதனிடம்,(10) "உண்மையில், ஒரு விலங்கின் அழுகிய சடலத்தைப் போன்ற வெறுக்கத்தக்க இந்த உணவை இப்பிறவியில் உண்ணும் கடப்பாட்டை அடையும் அளவுக்கு முற்பிறவியில் நீ இழைத்த பயங்கரப் பாவம் என்ன?" என்று கேட்டது.(11)
இவ்வாறு கேட்கப்பட்ட நரியானது, குரங்கிடம், "ஒரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு அக்கொடையை நான் அவருக்குக் கொடுக்காதிருந்தேன்.(12) ஓ! குரங்கே, இந்த இழிந்த இருப்பு நிலையில் நான் வீழ்ந்ததற்கு அந்தப் பாவமே காரணம். அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பசியேற்படும்போது, இத்தகைய உணவை உண்ணும் கடப்பாட்டை நான் அடைந்தேன்" என்று மறுமொழி சொன்னது".(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பிறகு அந்த நரியானது குரங்கிடம், "ஒரு குரங்காவதற்கு நீ இழைத்த பாவமென்ன?" என்று கேட்டது.(14)
அந்தக் குரங்கு {நரியிடம்}, "என்னுடைய முற்பிறவியில் பிராமணர்களுக்குச் சொந்தமான கனிகளை நான் அபகரித்து வந்தேன். அதனால் நான் குரங்கானேன். புத்தியும், கல்வியும் கொண்ட ஒருவரும் பிராமணர்களுக்குச் சொந்தமானதை ஒருபோதும் அபகரிக்கக்கூடாது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், ஒருவன் இதைத் தவிர்க்கும் அதே வேளையில் பிராமணர்களுடன் எந்தச் சச்சரவையும் தவிர்க்க வேண்டும். ஒருவன் அவர்களுக்கு உறுதியளித்த பிறகு அந்தக் கொடையை அவர்களுக்கு நிச்சயம் அவன் கொடுக்க வேண்டும்" என்றது".(15)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, நான் என் ஆசானுடன் பிராமணர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்தே இதை நான் கேட்டேன். இக்காரியத்தில் புராதனமான, புனிதமான அறிவுக்குள் அந்த அறம் சார்ந்த மனிதர் உரைத்துக் கொண்டிருக்கும்போது, இதை நான் கேட்டேன்.(16) ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, பிராமணர்களைக் குறித்துக் கிருஷ்ணர் {வியாசர்} உரையாடிக் கொண்டிருக்கும்போதும் இதை நான் கேட்டிருக்கிறேன்[1].(17) ஒரு பிராமணனின் உடைமை ஒருபோதும் அபகரிக்கப்படக்கூடாது. அவர்களை ஒருபோதும் தனிமையில் விடக்கூடாது. ஏழையாகவோ, கஞ்சனாகவோ, வயதில் இளையவராகவோ இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது.(18) பிராமணர்கள் இஃதை எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதியளித்த கொடையை நிச்சயம் கொடுக்க வேண்டும். மேன்மையான ஒரு பிராமணர் தன் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடையக்கூடாது.(19) ஓ! மன்னா, ஒரு பிராமணனுக்குள் எழும் எதிர்பார்ப்பானது சுடர்மிக்க நெருப்பைப் போன்றது எனச் சொல்லப்படுகிறது[2].(20)
[1] "தீவில் பிறந்த கிருஷ்ணர், அல்லது வியாசரே இங்கே கிருஷ்ணராகக் குறிப்பிடப்படுவதாக உரையாசிரியர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "ஒரு பிராமணரின் எதிர்பார்ப்பு நிறைவடையாமல் போனால், போலியாக எதிர்பார்ப்பை எழவைத்த மனிதனை அஃது எரிக்கவல்லதாகும் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எதிர்பார்ப்புகள் எழுந்த ஒரு பிராமணர், எந்த மனிதன் மீது தன் கண்களைச் செலுத்துவாரோ அவன், ஓ! ஏகாதிபதி, சுடர்மிக்க நெருப்பால் எரிய வல்ல வைக்கோல் குவியலைப் போலவே எரியத்தகுந்தவனாவான்[3].(21) ஓ! பாரதா, மன்னன் கொடுக்கும் (கௌரவங்கள் மற்றும் கொடைகளில்) ஒரு பிராமணன் நிறைவடைந்து அந்த மன்னனிடம் இனிமையும், அன்பும் நிறைந்த வார்த்தைகளை {ஆசிகளைச்} சொல்லி அவன் அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழும்போது, உடலில் உள்ள பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு மருத்துவனைப் போல அவன் அந்த மன்னனின் பெரும் நன்மைக்கான ஊற்றுக்கண்ணாகிறான்.(22) அத்தகைய ஒரு பிரமாணன், அந்த மன்னனின் மகன்கள், பேரர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் ஆகியோரும் விலங்குகள், நகரம் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் நன்மையும், அமைதியும் அடையும்படி செய்கிறான்.(23) பூமியில் ஆயிரங்கதிர் சூரியனைப் போல ஒரு பிராமணனின் சக்தி அவ்வளவு பெரியதாகும்.(24)
[3] கும்பகோணம் பதிப்பில், "அரசனே, ப்ராம்மணன் முதலில் ஆசையுண்டானதனால் கோபித்து எவனைப் பார்ப்பானோ அவனை விறகை அக்னி எரிப்பது போல எரித்து விடுவானல்லனோ?" என்றிருக்கிறது.
எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்க அல்லது மகிழ்ச்சிமிக்க நிலையை அடைய விரும்பினால், அவன் ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதாக உறுதியளித்ததை நிச்சயம் கொடுக்க வேண்டும்.(25) ஒரு பிராமணனுக்குக் கொடைகளை அளிப்பதால் அவன் நிச்சயம் உயர்ந்த சொர்க்கத்தை அடைவான். உண்மையில், கொடையளிக்கும் ஈகையே ஒருவன் அடையும் உயர்ந்த காரியம் {கர்மம்} ஆகும்.(26) ஒரு பிராமணனுக்கு ஒருவன் அளிக்கும் கொடைகளால், தேவர்களும், பித்ருக்களும் ஆதரிக்கப்படுகிறார்கள். எனவே, ஞானம் கொண்ட ஒருவன், பிராமணர்களுக்கு எப்போதும் கொடைகளை அளிக்க வேண்டும்.(27) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அளிக்கத் தகுந்த பிராமணனே ஒருவனுடைய உயர்ந்த நோக்கம் எனச் சொல்லப்படுகிறான்[4]. எக்காலத்திலும் ஒரு பிராமணனை முறையாக வழிபடாமல் அவன் வரவேற்கப்படக்கூடாது. {எப்போதும் ஒரு பிராமணன் முறையாக வழிபடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும்}." {என்றார் பீஷ்மர்}.(28)
[4] கும்பகோணம் பதிப்பில், "ப்ராம்மணன் முதன்மையான புண்யதீர்த்தமென்று சொல்லப்பெறுகிறான்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |