Friday, January 04, 2019

சூத்திரனும், பிராமணனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 10

Sudra and a Brahmana! | Anusasana-Parva-Section-10 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 10)


பதிவின் சுருக்கம் : சூத்திரனுக்கு அறிவுரை சொன்ன பிராமணரின் நிலையை எடுத்துக் காட்டி தாழ்ந்தோருக்கு அறிவுரை சொல்லக்கூடாது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அரசமுனியே, பிறப்பால் தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதனுக்கு நட்பின் விருப்பத்தாலோ, இல்லாமலோ {அன்பினாலோ} அறிவுரை சொல்வதால் ஒருவன் களங்கம் {பாவம்} இழைத்தவன் ஆவானா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! பாட்டா, எனக்கு இது விரிவாகச் சொல்லப்படுவதைக் கேட்க விரும்புகிறேன். கடமையின் பாதை {அறம்} மிக நுட்பமானதாகும். அவ்வழியில் மனிதர்கள் தடுமாறுவதே அடிக்கடி காணப்படுகிறது" என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இது தொடர்பாகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட முனிவர்களிடம் இருந்து நான் கேட்டவற்றை முறையாக நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) தாழ்ந்த அல்லது இழிந்த சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவுரை வழங்கக்கூடாது[1]. அத்தகையை மனிதனுக்கு அறிவுரையை வழங்கும் ஓராசான் பெரும்பாவத்தை இழைப்பதாகச் சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! ஏகாதிபதி, துன்பத்தில் வீழ்ந்தவனும், தாழ்ந்த பிறவியைக் கொண்டவனுமான ஒரு மனிதனுக்கு அறிவுரை வழங்குவதன் தீய விளைவுகளைப் பழங்காலத்தில் நடந்த இந்நிகழ்வின் மூலம் நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)

[1] கும்பகோணம் பதிப்பில், "ஜாதியில் இழிவானவனுக்கு உபதேசம் செய்யக்கூடாது. அப்படி உபதேசிப்பதில உபதேசிப்பவனுக்குப் பெரும்பாவம் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இழிபிறவியான ஒருவனுக்கு ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது" என்றிருக்கிறது. மூலத்தில் jātihīnasya ஜாதிஹீனஸ்ய என்றிருக்கிறது.

நான் சொல்லப்போகும் இந்நிகழ்வு, மங்கலமான இமயச் சாரத்தில் உள்ள குறிப்பிட்ட மறுபிறப்பாள தவசிகளின் ஆசிரமத்தில் நேர்ந்ததாகும். அங்கே, அந்த மலைகளின் இளவரசனுடைய சாரலில், பல்வேறு வகையான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புனிதமான ஆசிரமம் இருந்தது.(6) பல்வேறு வகைச் செடிகொடிகள் நிறைந்த அந்த இடம், விலங்குகள் மற்றும் பறவைகள் பலவற்றின் ஓய்விடமாகவும் இருந்தது. சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த அந்த இடமானது, ஒவ்வொரு பருவகாலத்தில் மலர்ந்திருக்கும் சோலைகளின் விளைவால் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது.(7) அங்கே பிரம்மச்சாரிகள் பலரும், காட்டு வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} வாழ்வோர் பலரும் அங்கே இருந்தனர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், சக்தி மற்றும் பிரகாசத்தில் சூரியனையோ, நெருப்பையோ போன்றவர்களுமான பிராமணர்கள் பலரும் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(8) பல்வேறு நோன்புகளையும், நியமங்களையும் கொண்டவர்களும், தீக்ஷை பெற்றவர்களும், எளிய உணவை உண்பவர்களும், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவர்களுமான பல்வேறு வகைத் தவசிகள் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(9) பெரும் எண்ணிக்கையிலான வாலகில்யர்களும், சந்நியாச நோன்பை நோற்கும் பலரும் அங்கே எப்போதும் வசித்து வந்தனர். இவை அனைத்தின் விளைவால் அந்த ஆசிரமம், அங்கே வசிப்பவர்கள் சொல்லும் வேதங்கள் மற்றும் புனித மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(10)

ஒரு காலத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட ஒரு சூத்திரன் அந்த ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்திற்கு அவன் வந்ததும், தவசிகள் அனைவராலும் அவன் முறையாகக் கௌரவிக்கப்பட்டான்[2].(11) ஓ! பாரதா, பல்வேறு வர்க்கங்களை {வர்ணங்களைச்} சேர்ந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், (தூய்மையிலும், சக்தியிலும்) தேவர்களுக்கு ஒப்பானவர்களும், பல்வேறு வகைத் தீக்ஷைகளைப் பெற்றவர்களுமான அந்தத் தவசிகளைக் கண்டு அந்தச் சூத்திரன் இதயத்தில் பெரும் நிறைவை அடைந்தான்.(12) அனைத்தையும் கண்ட அந்தச் சூத்திரன், தவப்பயிற்சிக்குத் தன்னை அர்ப்பணிக்கும் விருப்பத்தை {தன்னுள்} உணர்ந்தான். ஓ! பாரதா, அவன் குலபதியின் பாதங்களைத் தீண்டி[3],(13) "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது அருளால் நான் அறக்கடமைகளைக் கற்க (பயிற்சி செய்ய) விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவரே, அக்கடமைகளைக் குறித்துச் சொல்லி, (தொடக்கச் சடங்குகளைச் செய்வதன் மூலம்) துறவு வாழ்வுக்கு என்னை அறிமுகம் செய்வதே உமக்குத் தகும்.(14) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, சாதியால் சூத்திரனான நான், நிச்சயம் வர்ணத்தால் தாழ்ந்தவனே. நான் இங்கே உமக்குப் பணிவிடை செய்யவும், தொண்டாற்றவும் விரும்புகிறேன். உமது உறைவிடத்தை எளிமையாக நாடும் என்னிடம் நிறைவு கொள்வீராக" என்றான்.(15)

[2] கும்பகோணம் பதிப்பில், "தயாள குணம் பொருந்தின ஒரு சூத்ரன் விருப்பங்கொண்டு அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தான்; ரிஷிகளால் கௌரவிக்கவும் பெற்றான்" என்றிருக்கிறது.

[3] "பத்தாயிரம் தவசிகளைத் தன் சீடர்களாகக் கொண்ட ஒரு தவசியே குலபதியாவார். சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையான கன்வர் ஒரு குலபதி ஆவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

குலபதி, "ஒரு சூத்திரன், துறவு வாழ்வுக்கான குறியீடுகளைப் பின்பற்றி இங்கே வாழ்வது சாத்தியமில்லை. நீ விரும்பினால், எங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டும், தொண்டாற்றிக் கொண்டும் இங்கேயே இருக்கலாம்.(16) அத்தகைய தொண்டின் மூலம் நீ உயர்ந்த இன்பலோகங்கள் பலவற்றை அடைவாய் என்பதில் ஐயமில்லை" என்றார்".(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, அந்தத் தவசியால் இவ்வாறு சொல்லப்பட்டும், அந்தச் சூத்திரன் தன் மனத்தில் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினான், "நான் இப்போது என்ன செய்வது? தகுதிக்கு {புண்ணியத்திற்கு} வழிவகுக்கும் அந்த அறக்கடமைகளில் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.(18) எனினும், எனக்கான நன்மையை நானே செய்து கொள்ளத் தீர்மானிக்கிறேன்" {என்று நினைத்தான்}. அந்த ஆசிரமத்தில் இருந்து தொலைவான ஓர் இடத்தை அடைந்த அவன், மரத்தின் குச்சிகள் மற்றும் இலைகளால் ஒரு குடிசையை அமைத்தான்.(19) ஓ! பாரதர்களின் தலைவா, ஒரு வேள்வி மேடையையும் அமைத்து, தனது உறக்கத்திற்கான சிறு இடத்தையும் ஒதுக்கிக் கொண்ட அவன், தேவர்களுக்காகச் சில மேடைகளை அமைத்து, பேச்சைத் தவிர்த்து, கடும் நோன்புகள், நியமங்கள் மற்றும் தவங்களுக்கான ஒரு வாழ்வைப் பின்பற்றத் தொடங்கினான்.(20) அவன், ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்யவும், (உணவு மற்றும் உறக்கத்தைப் பொறுத்தவரையில்) பிற நோன்புகளை நோற்கவும், தேவர்களுக்கான வேள்விகளைச் செய்யவும், வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றவும், இவ்வழியில் தேவர்களைத் துதித்து வழிபடவும் தொடங்கினான்.(21) உடல் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் தவித்து, கனிகள் மற்றும் கிழங்குகளைக் குறைவாகவே உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன் ஆசிரமத்திற்கு வந்த விருந்தாளிகள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, சுற்றிலும் அபரிமிதமாக வளர்ந்திருந்த கனிகளையும், கீரைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். இவ்வழியில் அவன் தன் ஆசிரமத்திலேயே நெடுங்காலத்தைக் கழித்தான்.(22,23)

ஒரு நாள் ஒரு தவசி தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் நோக்கில் அந்தச் சூத்திரனின் ஆசிரமத்திற்கு வந்தார். சூத்திரன், முறையாக சடங்குகளுடன் அந்த முனிவரை வரவேற்று வழிபட்டு, அவரை உயர்வான நிறைவைக் கொள்ளச் செய்தான்.(24) பெரும் சக்தியும், அற ஆன்மாவும் கொண்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த முனிவர், தனக்கு விருந்தளிப்பவனிடம் ஏற்புடைய பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசி, தாம் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்தையும் அவனுக்குச் சொன்னார்.(25) ஓ! பாரதர்களின் தலைவா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இவ்வழியில் அந்த முனிவர், அந்தச் சூத்திரனைக் காண எண்ணற்ற முறை அந்த ஆசிரமத்திற்கு வந்தார்.(26) ஓ! மன்னா, இந்தச் சந்தர்ப்பங்கள் ஒன்றில் சூத்திரன் அம்முனிவரிடம், "நான், பித்ருக்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன். இக்காரியத்தில் நீர் எனக்கு அன்பைக் காட்டுவீராக {கருணை கொள்வீராக}" என்று கேட்டான்.(27) ஓ! ஏகாதிபதி, "மிக்க நன்று" என அந்தப் பிராமணர் மறுமொழி கூறினார்.(28)

அப்போது அந்தச் சூத்திரன் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அந்த முனிவர் தமது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், குச {தர்ப்பைப்} புற்களையும், காட்டின் காய் கனிகளையும், ஒரு புனிதமான இருக்கையையும், விருஷி என்றழைக்கப்பட்ட இருக்கையையும் கொண்டு வந்தான்.(29) மேலும் அவன் தெற்கு நோக்கி நின்று கொண்டு அந்த விருஷியை மேற்கு நோக்கிப் போட்டான். இதைக் கண்டு, இது விதிக்கு எதிரானது என்பதை அறிந்த அந்த முனிவர் அந்தச் சூத்திரனிடம்,(30) "விருஷியின் தலையைக் கிழக்கு நோக்கித் திருப்புவாயாக, நீயும் உன்னைத் தூய்மை செய்து கொண்டு, வடக்கு நோக்கிய முகத்துடன் அமர்வாயாக" என்றார். அம்முனிவர் சொன்னது போலவே அந்தச் சூத்திரன் அனைத்தையும் செய்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அறம் நோற்பவனுமான அந்தச் சூத்திரன், தவங்களைக் கொண்ட அந்த முனிவரிடம் இருந்து, குசப் புற்களை {தர்ப்பைகளைப்} பரப்புவது முறை, அர்க்கியம் வைப்பது போன்ற முறைகள், ஆகுதிகளை ஊற்றும் காரியத்தில் செய்யப்பட வேண்டிய சடங்குகள், காணிக்கை அளிக்கப்பட வேண்டிய உணவு ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்து, விதிப்படி விதிக்கப்பட்டுள்ள சிராத்தம் குறித்த அனைத்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டான். பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்குகள் நிறைவடைந்ததும் சூத்திரன் அந்த முனிவரை அவரது வசிப்பிடத்திற்கே அனுப்பி வைத்தான்[4].(32,33)

[4] "எந்தப் பிராமணனும், ஒரு சூத்திரனுக்கு அவனுடைய அறச் சடங்குகளிலோ, பித்ரு சடங்குகளிலோ உதவக்கூடாது என்று சாத்திரங்கள் அறிவிக்கின்றன. இந்த விதியை மீறும் பிராமணர்கள் தங்கள் மேன்மையான நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் சூத்திர யாஜிகள் என்று கண்டிக்கப்படுகின்றனர். இங்கே இந்த முனிவர், பித்ரு சடங்குகள் செய்யும் முறையை மட்டும் சொல்லி ஒரு சூத்திரயாஜினாகிவிட்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சிறந்த புத்தியுள்ள அந்தச் சூத்ரன் அந்த ரிஷியினால் சொல்லப்பட்ட தர்ப்பம் அர்க்ய முதலானவற்றையெல்லாம் அவர் விதித்தபடி ஸரியாகச் செய்தான். அவன் தர்மமார்க்கத்திலேயேயிருந்து கொண்டு சிராத்த கார்யங்கள் நடத்தும் போதெல்லாம் ஹவ்யகவ்யங்களின் {தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய அன்னம் குறித்த} விதிகளனைத்தையும் அம்முனிவர் சொன்னார். அம்முனிவர் அவனுடைய பித்ரு கார்யம் முடிந்த பின் அவனால் அனுப்பப்பட்டுத் திரும்பிச் சென்றார்" என்றிருக்கிறது.

இத்தகைய தவங்கள் மற்றும் நோன்புகளைச் செய்து கொண்டே நீண்ட காலத்தைக் கழித்த அந்தச் சூத்திரத் தவசி அந்தச் சோலையிலேயே மரணத்தைச் சந்தித்தான். அந்தப் பயிற்சிகளால் அந்தச் சூத்திரன் ஈட்டிய தகுதியின் {புண்ணியத்தின்} விளைவாக மறுபிறவியில் பெரும் மன்னனின் குடும்பத்தில் பிறந்து,(34) காலத்தில் அவன் பெருங்காந்தியைக் கொண்டவனானான். அந்த மறுபிறப்பாள முனிவரும் காலம் வந்தபோது இயற்கைக்குத் தன் கடனைச் செலுத்தினார் {இறந்து போனார்}.(35) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர் மறுபிறவியில் ஒரு புரோஹிதரின் குடும்பத்தில் பிறந்தார். தவத்தில் வாழ்வைக் கழித்த அந்தச் சூத்திரன், அன்பினால் அவனுக்குப் பித்ரு பூஜையில் செய்யப்படும் சடங்குகளைக் கற்பித்த அந்த மறுபிறப்பாள முனிவர் ஆகிய இருவரில் ஒருவர் அரச குடும்பக் கொழுந்தாகவும், மற்றொருவர் புரோகிதக் குடும்பத்தின் உறுப்பினராகவும் மறுபிறவி அடைந்தனர்.(36) இருவரும் வளரத் தொடங்கினர், இருவரும் வழக்கமான கல்விக் கிளைகளில் பெரும் ஞானத்தை அடைந்தனர்.

அந்தப் பிராமணர் வேதங்களையும், அதர்வணங்களையும் நன்கறிந்தவரானார்[5].(37) மேலும், மறுபிறவி அடைந்த அந்த முனிவர், அறச்சடங்குகள், நோன்புகள், கணியம் {சோதிடம்}, வானவியல் தொடர்பான வேதாங்க சூத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகள் அனைத்திலும் பெருந்திறனைப் பெற்றார். சாங்கியத் தத்துவத்திலும் அவர் பெரும் திளைப்பை அடையத் தொடங்கினார்.(38) அதே வேளையில், இளவரசனாக மறுபிறவியடைந்த அந்தச் சூத்திரன், தன் தந்தையான மன்னன் இறந்தபோது, அவனது இறுதிச் சடங்குகளைச் செய்து, ஈமக் காரியங்கள் அனைத்தையும் செய்வதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்ட பிறகு, குடிமக்கள் அவனது தந்தை வழியில் வந்த அரியணையில் அவனைத் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர்.(39) அவன் மன்னனாக நிறுவப்பட்ட உடனேயே அவன், மறுபிறவி எடுத்திருந்த அந்த முனிவரைத் தன் புரோஹிதராக நியமித்தான். உண்மையில், அந்தப் பிராமணரைத் தன் புரோகிதராக்கிக் கொண்ட அந்த மன்னன் பெரும் மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்.(40)

[5] "atharvavede vede ca என்பது பொதுவாக அதர்வணங்கள் வேதங்களில் அடங்கியிருக்கவில்லை, வேதங்கள் மூன்றாக மட்டுமே இருந்தன என்ற பொருளைத் தருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ரிஷியானவர் அதர்வண வேதத்திலும், மற்ற வேதங்களிலும் மிகத் தேர்ச்சியடைந்தார்; கல்ப ஸூத்ரங்களின்படி யாக முதலான கிரியைகள் செய்வதிலும் சோதிட சாஸ்த்ரத்திலும் மேன்மையை அடைந்தார்" என்றிருக்கிறது. இக்காரியத்தில் கும்பகோணம் பதிப்பின் உரையே சரியாகத் தெரிகிறது. மூலத்தில் அதர்வண வேதம் என்றே இருக்கும்போது வலிந்து மூன்றுதான் என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவன் தன் நாட்டை நீதியுடன் ஆட்சி செய்து, தன் குடிமக்கள் அனைவரையும் பேணி வளர்த்துப் பாதுகாத்தான். எனினும், ஒவ்வொரு நாளும் தன் புரோகிதரிடம் ஆசி பெறும்போதும், அறச்சடங்குகள் அல்லது புனிதமான பிற சடங்குகளைச் செய்யும்போதும் அவரைக் காணும் மன்னன் புன்னகைக்கவோ, உரக்கச் சிரிக்கவோ செய்தான். ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் மறுபிறவியில் மன்னனான அந்தச் சூத்திரன், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தன் புரோகிதரைக் கண்டு சிரித்தான்.(41,42) மன்னன் எப்போதும் சிரிப்பதைக் கவனித்த புரோகிதர், எப்போதெல்லாம் தமது கண்களை அவன் மேல் செலுத்தினாரோ அப்போதெல்லாம் கோபமடைந்தார்.(43) ஒரு தருணத்தில் அவர் யாருமற்ற ஓரிடத்தில் அம்மன்னனைச் சந்தித்தார். அவர் ஏற்புடைய உரையின் மூலம் மன்னனை நிறைவு கொள்ளச் செய்தார்.(44) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்கனத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் புரோகிதர் மன்னனிடம், "ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நீ எனக்கு ஒரு வரமளிக்க வேண்டுகிறேன்" என்றார்.(45)

மன்னன், "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நான் உமக்கு நூறு வரங்களை அளிக்கவும் தயாராக இருக்கிறேன் எனும்போது ஏன் ஒன்று மட்டுமே கேட்கிறீர்? நான் உம்மிடம் கொண்ட அன்புக்கும், மதிப்புக்கும் என்னால் உமக்குக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை" என்றான்.(46)

புரோஹிதர், "ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்தால் ஒரே ஒரு வரத்தை மட்டுமே விரும்புகிறேன். பொய் சொல்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வதாக உறுதியளிப்பாயாக" என்றார்".(47)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, புரோகிதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னன் அவரிடம், "அவ்வாறே ஆகட்டும். நீர் என்னிடம் கேட்பது நான் அறிந்ததாக இருந்தால் நிச்சயம் நான் உமக்கு உண்மையைச் சொல்வேன். மறுபுறம் அக்காரியத்தை நான் அறியவில்லையென்றால் நான் ஒன்றையும் சொல்லமாட்டேன்" என்றான்.(48)

புரோஹிதர், "ஒவ்வொரு நாளும் என் ஆசிகளைப் பெறும் தருணங்களிலும், உன் சார்பாக நான் அறச்சடங்குகளைச் செய்வதில் ஈடுபடும்போதும், ஹோமம் மற்றும் பிற தணிவுச் சடங்குகளைச் செய்யும் தருணங்களிலும் நீ ஏன் என்னைக் கண்டு சிரிக்கிறாய்?(49) அத்தருணங்கள் அனைத்திலும் நீ சிரிப்பதைக் கண்டு என் மனம் வெட்கத்தால் ஒடுங்குகிறது. ஓ! மன்னா, உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுமென நான் உன்னை உறுதியளிக்கச் செய்திருக்கிறேன். பொய் சொல்வது உனக்குத் தகாது.(50) உன் நடத்தைக்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டும். உன் சிரிப்புக் காரணமற்றதாக இருக்க முடியாது. அக்காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது. நீ எனக்கு உண்மையைச் சொல்வாயாக" என்றார்.(51)

மன்னன், "ஓ! மறுபிறப்பாளரே, நீர் இவ்வாறு கேட்ட பிறகு, நீர் கேட்கத்தகாததாக இருப்பினும் உமக்கு இக்காரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் உமக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். ஓ! மறுபிறப்பாளரே, மிகக் கவனமாகக் கேட்பீராக.(52) ஓ!இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நமது முற்பிறவிகளில் (நமக்கு) என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. அப்பிறவியை நான் நினைவில் கொண்டுள்ளேன். குவிந்த மனத்தோடு நான் சொல்வதைக் கேட்பீராக.(53) முற்பிறவியில் நான் கடுந்தவங்களில் ஈடுபடும் ஒரு சூத்திரனாக இருந்தேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நீரோ கடுந்தவங்களைக் கொண்ட ஒரு முனிவராக இருந்தீர்.(54) ஓ!  பாவமற்றவரே, ஓ! பிராமணரே, (ஒரு சந்தர்ப்பத்தில்) என் பித்ருக்களைக் கௌரவிக்க நான் செய்த சடங்குகளில், எனக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நீர் குறிப்பிட்ட சில அறிவுரைகளைச் சொல்லி என்னை நிறைவு கொள்ளச் செய்தீர்.(55) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, விருஷி மற்றும் குச {தர்ப்பைப்} புற்களைப் பரப்பும் முறை, ஆகுதிகள், இறைச்சி மற்றும் பிற உணவுகளைக் காணிக்கை அளிப்பது குறித்த அறிவுரைகளை நீர் எனக்குச் சொன்னீர். இந்தக் குற்றத்தின் விளைவால் நீர் ஒரு புரோஹிதராகப் பிறந்தீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நானோ மன்னாகப் பிறந்திருக்கிறேன். காலம் கொண்டு வரும் மாற்றங்களைக் காண்பீராக. (முற்பிறவியில்) நீ எனக்கு அறிவுரை கூறியதன் விளைவால் இக்கனியை அறுவடை செய்திருக்கிறீர் {இந்தப் பலனை அடைந்திருக்கிறீர்}.(57) ஓ! பிராமணரே, இக்காரணத்திற்காகவே நான் உம்மைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறேன். உம்மை அவமதிக்கும் விருப்பத்தில் நிச்சயம் நான் சிரிக்கவில்லை. நீர் என் ஆசானாவீர்.(58) இந்நிலை மாறுபாட்டில் நான் உண்மையில் வருத்தமடைகிறேன். இந்த நினைப்பில் என் இதயம் எரிகிறது. நமது முற்பிறவியை நினைவுகூர்ந்தே உம்மைக் காணும்போது நான் சிரிக்கிறேன்.(59) நீர் எனக்குக் கொடுத்த அறிவுரைகளின் மூலம் உமது கடுந்தவங்கள் அனைத்தும் அழிவடைந்தன. புரோஹிதரான உமது தற்போதைய அலுவலைத் துறந்து மீண்டும் மேன்மையான பிறவியை அடைய முயற்சிப்பீராக.(60) இப்பிறவியில் உள்ளதைவிட மறுபிறவியில் இழிந்த நிலையை அடையாமல் இருக்க முயற்சி செய்வீராக. ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, விரும்பிய அளவுக்குச் செல்வங்களை எடுத்துக் கொண்டு உமது ஆன்மாவைத் தூய்மையடையச் செய்வீராக" என்றான்".(61)

பீஷ்மர் தொடர்ந்தார், "(புரோஹித அலுவலில் இருந்து) மன்னனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட அந்தப் பிராமணர், தன் வகையைச் சேர்ந்தோருக்குச் செல்வம், நிலம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட பல கொடைகளை அளித்தார்.(62) அவர் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட கடும் தவங்களைச் செய்தார். அவர் புனித நீர்நிலைகள் பலவற்றுக்குச் சென்று அந்த இடங்களில் வைத்துப் பல கொடைகளை அளித்தார்.(63) மறுபிறப்பாள வகையினருக்குப் பசுக்களைக் கொடையளித்து ஆன்மத் தூய்மையை அடைந்து ஞானத்தை ஈட்டுவதில் வென்றார். அவர், முற்பிறவியில் தாம் வாழ்ந்த அதே ஆசிரமத்திற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தார்.(64) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவை அனைத்தின் விளைவால் அந்தப் பிராமணர் உயர்ந்த வெற்றியை அடைவதில் வென்றார். அவர் அந்த ஆசிரமத்தில் வசித்த தவசிகள் அனைவரின் மதிப்பிற்குரிய பொருளாக இருந்தார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இவ்வகையிலேயே அந்த மறுபிறப்பாள முனிவர் பெரும் துயரத்தை அடைந்தார். எனவே ஒரு பிராமணன் சூத்திரர்களுக்கு ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது.(66)

ஓ! மன்னா, ஒரு பிராமணன் தாழ்ந்த பிறவியைக் கொண்ட ஒரு மனிதனுக்கு அறிவுரை சொல்லி துயரத்தை அடைந்ததால் பிராமணன் (அத்தகைய தாழ்ந்த பிறவியைக் கொண்டோருக்கு) அறிவுரை சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.(67) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, ஒரு பிராமணன் தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து அறிவுரை பெறவோ, அறிவுரை சொல்லவோ கூடாது.(68) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினர் {வர்ணத்தார்} இருபிறப்பாளர்களாக {த்விஜர்களாகக்} கருதப்படுகிறார்கள். ஒரு பிராமணன் இவர்களுக்கு அறிவுரை சொல்வதால் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான்.(69) எனவே, தாழ்ந்த வகையைச் சார்ந்த மனிதர்களின் முன்பு நல்லோர் ஒருபோதும் எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது. அறத்தின் பாதை மிக நுட்பமானதும், தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாததும் ஆகும்.(70) இந்தக் காரணத்திற்காகவே தவசிகள் அமைதி நோன்பை நோற்று (மௌன விரதம் இருந்து), பேச்சில் ஈடுபடாமல் தீக்ஷையைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். சரியற்றது அல்லது வருத்தமளிக்கக்கூடியதைச் சொல்வதற்கு {சொற்குற்றத்துக்கு} அஞ்சியே தவசிகள் பேச்சை துறக்கிறார்கள்[6].(71)

[6] "தீக்ஷை என்பது வேள்விகளைச் செய்வதற்கும், தான் விரும்பும் நோன்புகளை நோற்பதற்கும் ஒருவன் செய்து கொள்ள வேண்டிய சடங்காகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அறவோரும், அனைத்துச் சாதனைகளையும் செய்தோரும், உண்மை மற்றும் எளிய நடத்தை கொண்டோரும் கூடச் சரியாகப் பேசாத வார்த்தைகளின் விளைவால் பெருங்களங்கத்தை {பெரும்பாவத்தை} இழைத்ததாக அறியப்படுகிறார்கள்.(72) {அறியாமல்} யாருக்கும் எது குறித்தும் ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது. சொல்லப்பட்ட அறிவுரையின் காரணமாக, அறிவுரை பெற்றவன் பாவமேதும் செய்தால் அந்தப் பாவம் அறிவுரை சொன்ன பிராமணனையே சாரும்.(73) எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் மனிதன் எப்போதும் ஞானத்துடன் செயல்பட வேண்டும். பணப் பறிமாற்றத்திற்காகச் சொல்லப்படும் அறிவுரை உபதேசிப்பவனைக் களங்கமடையச் செய்யும் {பாவமீட்ட வைக்கும்}.(74) பிறரால் வேண்டப்படும் ஒருவன் தன் நினைவின் துணையுடன் தீர்மானத்தை அடைந்த பிறகு சரியானதை மட்டுமே சொல்ல வேண்டும்.(75) நான் இப்போது அறிவுரை குறித்த காரியங்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். அறிவுரை சொல்வதன் விளைவால் மனிதர்கள் எப்போதும் பெரும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். எனவே, ஒருவன் பிறருக்கு அறிவுரைகள் சொல்வதைத் தவிர்ப்பது அவசியமாகிறது" {என்றார் பீஷ்மர்}[7].(76)

[7] வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே - என்ற விவேகசிந்தாமணி பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது. இந்தப் பகுதியை சாதிப்பாகுபாடாகக் கருதுவது அவரவர் ஞானத்தைப் பொருத்தது.

அநுசாஸனபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 76

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top