The residence of Goddess Sree! | Anusasana-Parva-Section-11 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 11)
பதிவின் சுருக்கம் : லட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் ருக்மிணிக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பாரதர்களின் தலைவரே, எந்த வகை ஆண், அல்லது எந்த வகைப் பெண்ணில் செழிப்பின் தேவி {லட்சுமி} எப்போதும் வசிக்கிறாள்?" எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக உள்ளபடியே நடந்ததையும், நான் கேட்டதையும் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு காலத்தில் இளவரசி ருக்மிணி, தேவகி மகனின் {கிருஷ்ணனின்} முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(2) தன் கொடியில் மகரத்தைக் கொண்டவனான பிரத்யும்னனின் தாயானவள் {ருக்மிணி}, அழகில் சுடர்விடுபவளும், தாமரையின் நிறத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவியை {லட்சுமியைக்} கண்டு, ஆவலால் நிறைந்தவளாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்:(3) "நீ யாரின் அருகில் இருக்கிறாய், யாருக்குத் தொண்டாற்றுகிறாய்? மேலும் நீ யாருக்குத் தொண்டாற்றுவதில்லை? ஓ! அனைத்துயிரினங்ளுடைய தலைவனின் அன்புக்குரியவளே, ஓ! தவத்திலும், பலத்திலும் ஒரு பெருமுனிவருக்கு இணையானவளே, இஃதை எனக்கு உண்மையில் சொல்வாயாக" என்று கேட்டாள்.(4) அந்த இளவரசியால் {ருக்மிணியால்} இவ்வாறு கேட்கப்பட்டவளும், சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவி, அருளால் தூண்டப்பட்டு, இனிமையானவையும், அழகானவையுமான இந்த வார்த்தைகளைக் கருடனைத் தன் கொடியில் கொண்டவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து மறுமொழியாகக் கூறினாள்.(5)
ஸ்ரீ {லட்சுமி}, "ஓ! அருளப்பட்ட பெண்ணே {ருக்மிணி}, நாநலம், சுறுசுறுப்பு, காரியத்தில் கவனம் ஆகியவற்றைக் கொண்டவனும், கோபத்தில் இருந்து விடுபட்டவனும், தேவர்களை வழிபடுபவனும், நன்றியுணர்வுமிக்கவனும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த மனத்தைக் கொண்டவனுமாக இருப்பவனிடம் எப்போதும் வசிக்கிறேன்.(6) காரியத்தில் கவனமில்லாதவன், நம்பிக்கையில்லாதவன் {நாத்திகன்}, காமத்தின் விளைவால் இனக்கலப்பு செய்பவன், நன்றிமறந்தவன், தூய்மையற்ற நடைமுறைகளைக் கொண்டவன், கடுமையான மற்றும் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவன், கள்வன், தன் ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் வன்மத்தை வளர்ப்பவன் ஆகியோரிடத்தில் ஒருபோதும் வசிப்பதில்லை.(7) சக்தி, பலம், வாழ்வு, கௌரவம் ஆகியவை குறைந்திருப்போர், அற்ப காரியம் ஒவ்வொன்றிற்கும் துயரமடைபவர்கள், எப்போதும் கோபமடைபவர்கள் ஆகியோரிடத்தில் நான் ஒருபோதும் வசிப்பதில்லை. மேலும், எண்ணத்தில் ஒன்றாகவும், செயலில் மற்றொன்றாகவும் இருப்போரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை.(8) தனக்காக எந்த உடைமையையும் ஒருபோதும் விரும்பாதவன், அல்லது முயற்சியின்றிக் கிட்டும் பொருளில் நிறைவடைந்து எஞ்சியவற்றில் குருடாயிருப்பவன், அல்லது சொற்ப உடைமைகளிலேயே நிறைவடைபவர்கள் ஆகியோரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை[1].(9) தங்கள் வகைக்கான {வர்ணத்திற்கான} கடமைகளைச் செய்வோர், அல்லது அறக்கடமைகளை அறிந்தோர், அல்லது, முதியோரின் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்தோர், தங்கள் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டோர், அல்லது தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், அல்லது மன்னிக்கும் தன்மை என்ற அறத்தை நோற்பவர்கள், அல்லது செயல்படுவதில் திறனும் ஊக்கமும் வாய்ந்தவர்கள், அல்லது மன்னிக்கும் தன்மை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பெண்களிடம் நான் எப்போதும் வசிப்பேன்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "மனத்தில் மேன்மேல் பயனைக் கருதாதவர்களும், இயற்கையிலேயே மனச்சோர்வை அடைந்தவர்களும், அல்பத்தில் திருப்தி அடையும் தன்மையுள்ளவர்களுமாகிய மனிதர்களிடம் நான் ஒருகாலும் நன்றாயிருப்பதில்லை" என்றிருக்கிறது.
வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தேவர்களை வழிபடுபவர்களுமான பெண்களிடமும் நான் வசிக்கிறேன். வீட்டு அறைகலன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்காதவர்கள், தங்கள் கணவர்களின் விருப்பங்களுக்கு முரணான வார்த்தைகளையே எப்போதும் சொல்பவர்கள் ஆகிய பெண்களிடம் நான் வசிப்பதில்லை.(11) வேறு மனிதர்களின் வீடுகளில் விருப்பமுள்ளவர்கள் மற்றும் பணிவில்லாதவர்களாக இருக்கும் பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். மறுபுறம், தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்போர், நன்னடத்தையால் அருளப்பட்டவர்கள், எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொள்பவர்கள், நல்ல ஆடைகளை உடுத்துபவர்கள் ஆகிய பெண்களிடம் எப்போதும் நான் வசிக்கிறேன்.(12) பேச்சில் வாய்மை நிறைந்தோர், அழகிய ஏற்புடைய குணங்களைக் கொண்டோர், அருளப்பட்டோர், அனைத்து சிறப்புகளையும் கொண்டோர் ஆகிய பெண்களில் எப்போதும் நான் வசிக்கிறேன். பாவம் நிறைந்தோர், தூய்மையற்றோர், கடைவாயை நாவால் நனைப்போர், பொறுமையோ, மனோவுறுதியோ இல்லாதோர், சண்டை சச்சரவுகளில் விருப்பமுள்ளோர்;(13) அதிகம் உறங்குவோர் மற்றும் எப்போதும் படுத்தே கிடப்பவர்கள் ஆகிய பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். வாகனங்கள், அவற்றை இழுக்கும் விலங்குகள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள், நல்ல ஆபரணங்கள், வேள்விகள், மழை நிறைந்த மேகங்கள்,(14) முற்றாக மலர்ந்த தாமரைகள், கூதிர் கால ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் எப்போதும் நான் வசிக்கிறேன். யானைகள், மாட்டுக் கொட்டில், நல்ல இருக்கைகள், முற்றாக மலர்ந்த தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தடாகங்கள் ஆகியவற்றில் நான் வசிக்கிறேன்.(15)
நாரைகளின் இனிய இசையைக் கொண்டவையும், பல்வேறு மர வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட கரைகளைக் கொண்டவையும், பிராமணர்கள், தவசிகள் மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறரால் அடையப்பட்டவையும், தங்கள் போக்கில் இனிமையான மென் சலசலப்பைக் கொண்டவையுமான ஆறுகளிலும் நான் வாழ்கிறேன்.(16) நீராடவும், தாகம் தணித்துக் கொள்வதற்காகவும் மூழ்கும் சிங்கங்கள் மற்றும் யானைகளால் சேறாகக் கலங்கி பெரும் அளவில் கரைபுரண்டோடும் நீருடன் கூடிய ஆழமான ஆறுகளிலும் நான் எப்போதும் வசிக்கிறேன். மதங்கொண்ட யானைகள், காளை மாடுகள், அரியணை ஆகியவற்றிலும், மன்னர்கள் மற்றும் நல்ல மனிதர்களிடத்திலும் நான் வசிக்கிறேன்.(17) எந்த வீட்டு மக்கள் வேள்வித் தீயில் ஆகுதிகளை ஊற்றி, பசுக்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்களை வணங்குகிறார்களோ அந்த வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன். தேவர்களின் வழிபாட்டில் சரியான நேரங்களில் மலர்களைக் காணிக்கையளிப்போர் உள்ள வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன்[2].(18)
[2] "தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் எதுவும் ‘வலி’ (வளையம் என்பதன் ஒருமை) என்ற பொருளைக் கொண்டதாகும். விலங்கின் உயிருக்குப் பதிலாகத் தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளிக்கும் வீட்டில் செழிப்பின் தேவி வசிக்கிறாள் என்பதே இந்த ஸ்லோக இரண்டாம் வரியின் பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்கள், அறம் நோற்பதில் அர்ப்பணிப்புள்ள க்ஷத்திரியர்கள், உழவில் அர்ப்பணிப்புள்ள வைசியர்கள், மூன்று மேல் வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} (மேனியால் செய்யப்படும்) தொண்டில் அர்ப்பணிப்புள்ள சூத்திரர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(19) நான் நாராயணனில் உறுதிமிக்க மாற்றமில்லாத இதயத்துடன் கூடியவளாக உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிக்கிறேன். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, ஏற்புடைய குணம், முற்று முழுதான அறம் ஆகியவை அவனிலேயே இருக்கின்றன.(20) ஓ! பெண்ணே {ருக்மிணி}, (நாராயணனைத் தவிர, நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும்) உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிப்பதில்லை என நான் சொல்ல முடியாதா? எந்த மனிதனிடம் நான் சக்தியாக வசிக்கிறேனோ, அவனிடம் அறமும், புகழும், ஆசைக்குரிய பொருட்களும், செல்வமும் தழைத்துப் பெருகும்" என்றாள் {ஸ்ரீ}" {என்றார் பீஷ்மர்}.(21)
அநுசாஸனபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |