Bhangaswana's desire to continue as a woman! | Anusasana-Parva-Section-12 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 12)
பதிவின் சுருக்கம் : ஆண் பெண் கலவியில் யாருக்கு இன்பம் அதிகமென்பதைச் சொல்ல பங்காஸ்வனன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் புரியும் கலவிச் செயல்பாட்டில் அவ்விருவரில் அதிக இன்பத்தைப் பெறுபவர் எவர் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அருள்கூர்ந்து இக்காரியத்தில் எனது ஐயத்தைப் போக்குவீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, பங்காஸ்வனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை இக்கேள்வியை முன்வைக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பங்காஸ்வனன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். அவன் பெரும் அறவோனாகவும், அரசமுனியாகவும் அறியப்பட்டிருந்தான். எனினும், ஓ! மனிதர்களின் தலைவா, அவன் பிள்ளையற்றவனாக இருந்ததால், ஒரு பிள்ளையைப் பெறும் விருப்பத்தில் ஒரு வேள்வியைச் செய்தான்.(3) அந்த வலிமைமிக்க ஏகாதிபதி செய்த அக்னிஸ்டுதம் என்ற அவ்வேள்வியில், நெருப்பின் தேவன் மட்டுமே துதிக்கப்படுவதன் விளைவால் இந்திரன் அஃதை {அவ்வேள்வியை} எப்போதும் விரும்பியதில்லை. எனினும் அது {அவ்வேள்வி}, பிள்ளை பெறும் நோக்கில் தங்கள் பாவங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ள முனையும் மனிதர்களால் விரும்பப்படும் வேள்வியாக இருந்தது[1].(4)
[1] "ஒரு மனிதன் தன் பாவங்களின் விளைவாலேயே பிள்ளையில்லாமல் இருக்கிறான் என்பது நம்பிக்கை. இந்தப் பாவங்களைக் கழுவிவிட்டால் அவன் நிச்சயம் பிள்ளைகளை அடைவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிக்கப் பலசாலியான அந்த ராஜரிஷி புத்ரனில்லாமலிருந்ததனால் புத்ரனைக் கருதி அக்னிஷ்டுதம் என்று பெயருள்ளதும், இந்திரனுக்கு விரோதமுமான யாகத்தைச் செய்தான். அந்த யாகம் மனிதர்களுக்குப்ராயச்சித்தத்திற்காகவும், புத்ரபலனுக்காகவும் விதிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
உயர்வாக அருளப்பட்டவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன், அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்} அக்னிஷ்டுத வேள்வியைச் செய்ய விரும்புவதை அறிந்து, (அவனிடம் சில தவறுகளைக் கண்டால் தன்னை அவமதித்தவனை அவனால் தண்டிக்க முடியும் என்பதால்) நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட அந்த அரசமுனியிடம் {பங்காஸ்வனிடம்} அந்தக் கணம் முதல் தவறுகளைத் தேடத் தொடங்கினான்.(5) எனினும், ஓ! மன்னா, எப்போதும் இந்திரனின் கண்காணிப்பு இருந்தபோதிலும், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடம் அவனால் தவறுகளை எதையும் காண முடியவில்லை. சில காலம் கழித்து ஒரு நாள், அந்த மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(6) இந்திரன் தனக்குள்ளேயே, "உண்மையில் இஃது ஒரு வாய்ப்புதான்" எனச் சொல்லிக் கொண்டு அந்த ஏகாதிபதியை புத்திமயங்கச் செய்தான். தேவர்களின் தலைவனால் புலன்கள் திகைத்துக் குழப்பத்தில் இருந்த அம்மன்னன் தன் குதிரையில் தனியாகச் சென்று கொண்டிருந்தான்.(7) பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்ட அம்மன்னனால் திசைப்புள்ளிகளை உறுதி செய்து கொள்ள முடியாத வண்ணம் அவனது மயக்கம் பெரிதாக இருந்தது.(8) அப்போது அவன் தெளிந்த நீர் நிரம்பிய மிக அழகிய தடாகம் ஒன்றைக் கண்டான். தன் குதிரையில் இருந்து இறங்கிய அவன், தடாகத்திற்குள் மூழ்கித், தன் விலங்கையும் {குதிரையையும் நீர்} குடிக்கச் செய்தான்.(9) பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அம்மன்னன் மீண்டும் தடாகத்திற்கு மூழ்கினான். அந்த நீரின் தன்மையால் அவன் பெண்ணாக மாறிவிட்டதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.(10)
இவ்வாறு தான் பாலின மாற்றம் அடைந்ததைக் கண்ட அம்மன்னன் வெட்கமடைந்தான் {அவமானமடைந்தான்}. புலன்களும், மனமும் முற்றிலும் கலங்கிய அவன் முழு இதயத்துடன் இவ்வகையில் நினைக்கத் தொடங்கினான்:(11) "ஐயோ, என் குதிரையை நான் எவ்வாறு செலுத்தப் போகிறேன்? என் தலைநகருக்கு எவ்வாறு திரும்பப் போகிறேன்? அக்னிஷ்டுத வேள்வி செய்ததன் விளைவால், பெரும் வலிமைமிக்கவர்களும், என் மடியில் பிறந்தவர்களுமான நூறு மகன்களைப் பெற்றிருக்கிறேன். ஐயோ, இவ்வாறு மாற்றமடைந்திருக்கும் நான் அவர்களிடம் என்ன சொல்லப் போகிறேன்? என் மனைவியர், உறவினர், நலன்விரும்பிகள், நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள என் குடிமக்கள் ஆகியோரிடம் நான் என்ன சொல்லப் போகிறேன்?(12,13) கடமை, அறம் மற்றும் பிற காரியங்களின் உண்மைகளை அறிந்த முனிவர்கள், அமைதியான குணம், மென்மை, பெருங்கலக்கமடையும் தன்மை {பிறருக்கு உட்படுதல், நகை, விளையாட்டு, தேக ஒளி} ஆகியவற்றைப் பெண்களின் குணங்கள் என்றும்,(14) செயல்பாடு {உடல் உழைப்பு}, கடுமை, சக்தி ஆகியவற்றை ஆண்களின் குணங்கள் என்றும் சொல்கிறார்கள். ஐயோ என் ஆண்தன்மை மறைந்துவிட்டதே. என்ன காரணத்திற்காக எனக்குப் பெண்தன்மை உண்டானது? இந்தப் பாலின மாறுபாட்டின் விளைவால், என் குதிரையில் நான் மீண்டும் எவ்வாறு ஏறப் போகிறேன்?" {என்று நினைத்தான்}.(15)
இந்தச் சோகமான எண்ணங்களுடன் கூடிய அந்த ஏகாதிபதி, பெண்ணாக மாறியிருந்தாலும், பெரும் முயற்சிக்குப் பிறகு தன் குதிரையில் ஏறி தலைநகரத்திற்குத் திரும்பினான்.(16) அவனது {மன்னன் பங்காஸ்வனது மகன்கள், மனைவியர், பணியாட்கள், நகரம் மற்றும் மாகாணங்களின் குடிமக்கள் ஆகியோர் இந்த இயல்புக்கு மீறிய மாறுபாட்டைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(17) அப்போது நாநலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அந்த அரச முனி {பங்காஸ்வனன்}, அவர்கள் அனைவரிடமும், "ஒரு பெரும் படையின் துணையுடன் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். திசைப்புள்ளிகளின் அறிவனைத்தையும் இழந்த நான், விதியின் உந்துதலால் அடர்த்தியானதும், பயங்கரமானதுமான ஒரு காட்டுக்குள் நுழைந்தேன்.(18) அந்தப் பயங்கரக் காட்டில், தாகத்தால் பீடிக்கப்பட்ட நான் என் புலனுணர்வை இழந்தேன். அப்போது, நீர்க்கோழிகள் நிறைந்ததும், அனைத்து வர்ணனைகளுக்கும் தகுந்ததுமான ஓர் அழகி தடாகத்தைக் கண்டேன்.(19) தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அந்த ஓடைக்குள் மூழ்கிய நான் ஒரு பெண்ணாக மாறிவிட்டேன்" என்றான்.
பெண்ணாக மாறியிருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்}, பிறகு, தன் மனைவியர் மற்றும் அமைச்சர்களை அழைத்து,(20) தன் மகன்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்: "நீங்கள் இந்நாட்டை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். மகன்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன்" என்றான்.(21) அந்த ஏகாதிபதி தன் பிள்ளைகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றான்.
அங்கே வந்த அவள் {பெண்ணாக மாறியிருக்கும் அந்த ஏகாதிபதி} ஒரு தவசி வசித்து வந்த ஓர் ஆசிமத்தை அடைந்தாள்.(22) {பெண்ணாக} மாற்றமடைந்திருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வன்}, அந்தத் தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றாள். அந்தப் பிள்ளைகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு தன் முந்தைய பிள்ளைகளிடம் சென்ற அவள் அவர்களிடம் {பழைய பிள்ளைகளிடம்},(23) "நான் ஆணாக இருந்த போது என் மடியில் பிறந்த பிள்ளைகள் நீங்கள். மாற்றமடைந்திருக்கும் இந்நிலையில் என்னால் ஈன்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள். மகன்களே, ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த சகோதரர்களைப் போலவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக என் நாட்டை அனுபவிப்பீராக" என்றாள்.(24)
தங்களைப் பெற்றவரின் இந்த ஆணையின் படி அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்த நாட்டை அனுபவிக்கத் தொடங்கினர். அந்த மன்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையாக நாட்டை அனுபவிப்பதைக் கண்டு,(25) கோபத்தில் நிறைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, "இந்த அரசமுனியைப் பெண்ணாக மாற்றியதன் மூலம் நான் அவனுக்குத் தீங்கிழைப்பதற்குப் பதில் நன்மையையே செய்திருப்பதாகத் தெரிகிறது" என்று சிந்திக்கத் தொடங்கினான்.(26) நூறு வேள்விகளைச் செய்தவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன் இவ்வாறு சொல்லி ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, மன்னனின் தலைநகருக்குச் சென்று அந்தப் பிள்ளைகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவதில் வென்றான்.(27) அவன் அவர்களிடம், " ஒரே தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளே கூடச் சகோதரர்களாக அமைதியாக ஒரு போதும் நீடித்ததில்லை. தவசி கசியபரின் மகன்களான தேவர்களும், அசுரர்களும் மூவுலகங்களின் அரசுரிமையினிமித்தம் ஒருவரோடொருவர் பிணக்கு கொண்டனர்.(28) இளவரசர்களான உங்களைப் பொறுத்தவரையில், நீங்களே அரச முனியான பங்காஸ்வனனின் பிள்ளைகள் ஆவீர். மற்றும் இவர்களோ ஒரு தவசியின் பிள்ளைகளாவர். தேவர்களும், அசுரர்களும் கூட ஒரே தந்தையின் பிள்ளைகள்தானே (இருப்பினும் அவர்களும் ஒருவருடனொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். எனவே, நீங்கள் சண்டயிடுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்}?(29) உங்கள் தந்தைவழியில் நீங்கள் அடைந்த இந்த நாடு ஒரு தவசியின் பிள்ளைகளால் அனுபவிக்கப்படுகிறது" என்றான்.
இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்குள் ஒரு பிளவை உண்டாக்குவதில் இந்திரன் வென்றதால், மிக விரைவில் அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(30) ஒரு பெண் தவசியாக வாழ்ந்து வந்த மன்னன் பங்காஸ்வனன், இதைக் கேட்டுத் துயரத்தில் எரிந்து, அழுது புலம்பினான். தேவர்களின் தலைவனான இந்திரன், ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, அந்தப் பெண் தவசி வாழ்ந்து வந்த இடத்திற்குச் சென்று அவளைச் சந்தித்து,(31) "ஓ! அழகிய முகம் படைத்தவளே, எந்தத் துயரத்தின் எரிச்சலில் நீ இவ்வாறு அழுது கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.
பிராமணனைக் கண்ட அந்தப் பெண், பரிதாபகரமான குரலில்,(32) "ஓ! மறுபிறப்பாளரே, என்னுடைய இருநூறு மகன்கள் காலத்தால் {காலனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர். ஓ! கல்விமானான பிராமணரே, முன்பு நான் ஒரு மன்னனாக இருந்தேன், அந்நிலையில் எனக்கு நூறு மகன்கள் இருந்தனர்.(33) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, என் சொந்த வடிவத்தில் அவர்கள் என்னால் பெறப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நான் வேட்டைக்குச் சென்றேன். மயக்கத்துடன் கூடிய நான் ஓர் அடர்த்தியான காட்டில் திரிந்து கொண்டிருந்தேன்.(34) இறுதியாக ஒரு தடாகத்தைக் கண்டு அதற்குள் மூழ்கினேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, எழுந்த போது நான் பெண்ணாக மாறியிருப்பதைக் கண்டேன். என் தலைநகருக்குத் திரும்பி என் ஆட்சிப்பகுதிகளுக்கான அரசுரிமையின் என் மகன்களை நிறுவிவிட்டு நான் காட்டுக்குத் திரும்பினேன்.(35) பெண்ணாக மாறிய நான், என் கணவரான ஓர் உயர் ஆன்ம தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றேன். அவர்கள் அனைவரும் அந்தத் தவசியின் ஆசிரமத்திலேயே பிறந்தனர். அவர்களைத் தலைநகரத்திற்கு அழைத்துச் சென்றேன்.(36) ஓ! இருபிறப்பாளரே, காலத்தின் ஆதிக்கத்தில் என் பிள்ளைகள் ஒருவரோடொருவர் சச்சரவில் ஈடுபட்டனர். இவ்வாறு காலத்தால் பீடிக்கப்பட்ட நான் துயரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றாள்.(37)
அப்போது இந்திரன் அவளிடம் {பங்காஸ்வனிடம்} கடும் வார்த்தைகளில், "ஓ! பெண்ணே, பழங்காலத்தில் இந்திரனுக்குப் பிடிக்காத ஒரு வேள்வியைச் செய்ததால் நீ எனக்குப் பெருந்துன்பத்தைத் தந்தாய்.(38) உண்மையில், நான் அப்போது இருந்தாலும், என்னை நீ மதித்து அழைக்கவில்லை. ஓ! தீய புத்தி கொண்டவளே, நானே அந்த இந்திரன். நீ யாரிடம் வேண்டுமென்றே பகையை நாடினாயோ அவன் நானே" என்றான்.(39)
இந்திரனைக் கண்ட அந்த அரசமுனி, அவனது பாதங்களில் வீழ்ந்து தன் தலையால் அவற்றைத் தீண்டி, "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, என்னிடம் நிறைவுகொள்வாயாக. நீ சொல்லும் வேள்வியானது வாரிசை விரும்பி செய்யப்பட்டது (செய்யப்பட்டதே அன்றி உனக்குத் தீங்கிழைக்கும் எந்த நோக்கத்திலும் செய்யப்படவில்லை).(40) எனவே, எனக்கு உன் மன்னிப்பை அருள்வதே உனக்குத் தகும்" என்றான்.
{பாலின} மாற்றமடைந்த அந்த ஏகாதிபதி தன்னிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பதைக் கண்ட இந்திரன் அவனிடம் நிறைவை அடைந்து, அவனுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க விரும்பி,(41) "ஓ! மன்னா, பெண்ணாக மாறிய நிலையில் உன்னால் பெறப்பட்டவர்கள், ஆண் பாலினம் கொண்ட மனிதனின் நிலையில் இருந்து உன்னால் பெறப்பட்டவர்கள் ஆகிய உன் மகன்களில் நீ எவரை மீட்க விரும்புகிறாய்? {அவர்களில் எவர் பிழைக்க வேண்டும்?}" என்று கேட்டான்.(42)
அந்தப் பெண் தவசி தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு இந்திரனிடம், "ஓ! வாசவா, பெண்ணாக இருந்து என்னால் பெறப்பட்ட என் மகன்கள் மீண்டும் உயிர் பெறட்டும்" என்றாள்.(43)
இந்த மறுமொழியால் ஆச்சரியத்தால் நிறைந்த இந்திரன் மீண்டும் அந்தப் பெண்ணிடம், "மனிதரில் ஆண் பாலின வடிவில் இருந்த போது உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் குறைவான அன்பைக் கொண்டிருக்கிறாய்?(44) {பெண்ணாக} மாற்றமடைந்த இந்த நிலையில் உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் அதிக அன்பைக் கொண்டிருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றான்.(45)
அந்தப் பெண், "ஆண் கொள்ளும் பாசத்தைவிடப் பெண்கொள்ளும் பாசமே பெரிது. ஓ! சக்ரா, ஒரு பெண்ணாக என்னால் பெறப்பட்ட பிள்ளைகள் மீண்டும் உயிர் பெறுவதையே நான் விரும்புகிறேன்" என்றாள்".(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டதும் பெரும் நிறைவடைந்த இந்திரன் அவளிடம், "ஓ! வாய்மை நிறைந்த பெண்ணே, உன் பிள்ளைகள் அனைவரும் உயிர் பெறட்டும்.(47) ஓ! மன்னர்களில் முதன்மையானவனாக இருந்தவளே, நீ மற்றுமொரு வரத்தையும் கொள்வாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே உண்மையில் நீ எந்த வரத்தை விரும்பினாலும் கேட்பாயாக. பெண், அல்லது ஆண் என நீ தேர்ந்தெடுக்கும் எந்நிலையையும் நீ என்னிடம் இருந்து பெறலாம்" என்றான்.(48)
அதற்கு அந்தப் பெண், "ஓ! சக்ரா, நான் பெண்ணாக நீடிக்கவே விரும்புகிறேன். உண்மையில், ஓ! வாசவா, நான் ஆண் தன்மையை மீண்டும் பெற விரும்பவில்லை" என்றாள்.
இந்தப் பதிலைக் கேட்ட இந்திரன், மீண்டும் அவளிடம்,(49) "ஓ! பலமிக்கவளே, ஆண்மை நிலையைக் கைவிட்டு ஏன் நீ பெண்மையை விரும்புகிறாய்?" என்று கேட்டான்.
ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்து பெண்ணாக மாறியிருப்பவள் இவ்வாறு கேட்கப்பட்டதும்,(50) "கலவிச் செயல்பாடுகளில் ஆண்களால் அனுபவிக்கப்படுவதை விடப் பெண்களால் அனுபவிக்கப்படும் இன்பமே பெரியது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்திற்காக நான் பெண்ணாகவே தொடர விரும்புகிறேன்.(51) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, பெண்ணாக இருக்கும் என்னுடைய தற்போதைய நிலையிலேயே நான் பெரும் இன்பத்தைப் பெற்றேன் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். இப்போது பெண்ணாக இருக்கும் இந்நிலையிலேயே நான் நிறைவாக இருக்கிறேன். ஓ! சொர்க்கத்தின் தலைவா, இப்போது நீ என்னைவிட்டுச் செல்லலாம்" என்றாள்[2].(52)
[2] பெண் தவசியாக இருந்தவள் கலவி இன்பத்திற்காகப் பெண்ணாகத் தொடர விரும்புவது முரணாகத் தெரிகிறது. இந்தக் கதை இடைசெருகலாக இருக்கலாம்.
அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்களின் தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! ஏகாதிபதி, நீ கேட்டதன் அடிப்படையில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்களே அதிக இன்பத்தைப் பெறுபவர்களாக அறியப்படுகிறார்கள்" {என்றார் பீஷ்மர்}.(53)
அநுசாஸனபர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |