Ten evil paths! | Anusasana-Parva-Section-13 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 13)
பதிவின் சுருக்கம் : வினைகளைப் புரிவோர், அவற்றின் நல்ல, தீய விளைவுகளை அனுபவிக்கவே வேண்டும் என்பது குறித்தும், தவிர்க்கப்பட வேண்டிய பத்து தீய பாதைகளைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இம்மை, மறுமை ஆகியவற்றை இன்பமாகக் கடந்து செல்ல ஒரு மனிதன் செய்ய வேண்டியது என்ன? உண்மையில் ஒருவன் தன் ஒழுக்கத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? இந்நோக்கில் ஒருவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "உடலைக் கொண்டு செய்யப்படும் மூன்று செயல்களையும், பேச்சால் செய்யப்படும் நான்கையும் {நான்கு செயல்களையும்}, மனத்தால் செய்யப்படும் மூன்றையும், செயல்பாட்டின் இந்தப் பத்து பாதைகளையும் ஒருவன் தவிர்க்க வேண்டும்.(2) பிற உயிரினங்களின் உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தல், களவு, அல்லது பிறருக்கு உரியவற்றை அபகரித்தல், அடுத்தவர் மனைவிகளை அனுபவித்தல் ஆகிய உடலால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(3) தீய உரை, கடுஞ்சொற்கள், அடுத்தவரின் குறைகளை அறிக்கையிடல், பொய்மை ஆகிய வாக்கால் செய்யப்படும் நான்கு {தீய} செயல்களை ஒருபோதும் செய்யவோ, நினைக்கவோ கூடக் கூடாது.(4) பிறரின் உடைமைகளில் பேராசை கொள்வது, பிறருக்குத் தீங்கிழைப்பது, வேத விதிகளில் அவநம்பிக்கை ஆகிய மனத்தால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(5) எனவே ஒருவன் சொல், உடல் அல்லது மனத்தால் எந்தத் தீய செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது. நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்வதால் ஒருவன் அவற்றின் நியாயமான விளைவுகளை நிச்சயம் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ நேரும். இதைவிட அதிகம் வேறெதுவும் இல்லை" என்றார் {பீஷ்மர்}.(6)
அநுசாஸனபர்வம் பகுதி – 13ல் உள்ள் சுலோகங்கள் : 6
ஆங்கிலத்தில் | In English |