Upamanyu! | Anusasana-Parva-Section-14b | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : இமயம் சென்ற கிருஷ்ணன்; உபமன்சுவின் ஆசிரமத்தை அடைந்தது; அந்த ஆசிரமம் இருந்த பகுதி குறித்த வர்ணனை; கிருஷ்ணனுக்கும் உபமன்யுவுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சிவனின் பெருமையைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு...
இனிமை நிறைந்த அந்த ஆசிரமம், வியாக்ரபாதரின் வழித்தோன்றலான உயர் ஆன்ம உபமன்யுவினுடையதாகும். தேவர்கள், கந்தர்வர்களால் மதித்து மெச்சபடும் அந்த ஆசிரமமானது வேத அழகில் மறைந்திருப்பதாகத் தெரிந்தது.(46) மலர்கள் மற்றும் கனிகளுடன் கூடியவையான தவங்கள், ககுபங்கள் {மருது}, கடம்பங்கள் {கடம்பு}, தென்னை, குருவாகங்கள் {மருதாணி}, கேதகங்கள் {தாழை}, நாவல், பாடலங்கள் {பாதிரி}, ஆல், வருணகங்கள் {வருணம்}, வத்ஸநாபங்கள், வில்வங்கள், ஸரளங்கள், கபிட்டங்கள் {விளா}, பியாளங்கள் {பரியாளம்}, சாலங்கள் {ஆச்சா}, பனைகள்,(47) பதரிகள் {இலந்தை}, இங்குடிகள் {குருக்கத்தி}, புன்னகங்கள் {புன்னை}, அசோகங்கள், ஆம்ரங்கள் {மா}, {பச்சிலை, இலுப்பை}, கோவிதாரங்கள், சண்பகங்கள், பலா மரங்கள்,(48) ஆகியவற்றாலும் இன்னும் பிற மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆசிரமம் வாழை மரங்களின் நேர்த் தண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(49) உண்மையில் அவ்வாசிரமம், பல்வேறு வகைப் பறவைகளுக்கு உணவாக அமையும் பல்வேறு வகைக் கனிகளையுடைய பல்வேறு வகை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் (வேள்வி நெருப்புகளின்) சாம்பற்குவியல்கள் {திருநீற்றுக் குவியல்கள்} உரிய இடங்களில் வீசப்பட்டிருந்தது அக்காட்சிக்கு மேலும் அழகூட்டியது.(50)
மேலும் அது புள்ளிமான்கள், குரங்குகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் பல்வேறு மான்வகைகள், மயில்கள், பூனைகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருந்தது.(51) உண்மையில், பெரும் எண்ணிக்கையிலான வேறு விலங்குகளும், எருமைகளும், கரடிகளும் அங்கிருந்தன. தெய்வீக மங்கையரின் இனிய இசையைச் சுமந்தபடியே தொடர்ந்து இனிய தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது.(52) ஓ! வீரரே, மலையருவிகள் மற்றும் ஊற்றுகளின் பிதற்றல்கள், சிறகு படைத்த இசைக்குழுவின் {பறவைகளின்} இனிய கூவல்கள், யானைகளில் பிளிறல்கள், கின்னரர்களின் இனிய இசை, சாமங்களைப் பாடும் தவசிகளின் மங்கலக் குரல், மற்றும் இனிமை நிறைந்த பல்வேறு இசைகளுடன் கூடிய அந்த ஆசிரமம் மிக அழகானதாக இருந்தது. நான் கண்ட அந்த இனிமை நிறைந்த ஆசிரமத்தைப் போன்று மற்றொன்றைக் கற்பனையிலும் காண முடியாது. அந்த ஆசிரமத்தில் புனித நெருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் மலர்ந்த கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த பெரிய வீடுகளும் {அக்னி ஹோத்ர சாலைகளும்} இருந்தன.(53,54) புனிதமான தெளிந்த நீரைக் கொண்ட கங்கை ஆற்றினால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த ஜானுவின் மகள் {கங்கை} எப்போதும் அங்கே இருந்தாள்.[6] அறவோர் அனைவரில் முதன்மையானவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், சக்தியில் நெருப்புக்கு ஒப்பானவர்களுமான பல தவசிகளாலும் அது நிறைந்திருந்தது.(55)
[6] "முனிவர் ஜானுவின் மகளாகக் கங்கை ஒப்பிடப்படுகிறாள் எனவே அவள் ஜானவி என்ற பெயரில் அறியப்படுகிறாள். ஜானவி எப்போதும் அங்கே இருந்தாள் என்பது அங்கே வருவோருக்கு தகுதியை {புண்ணியத்தை} அளிக்கும் விருப்பத்தில் அந்தத் தேவி எப்போதும் புலப்படாதவளாக அங்கேயே இருந்தாள் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தத் தவசிகளில் சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் ஜபம் அல்லது புனித மந்திரங்களை அமைதியாகப் பாராயணம் செய்வதில் ஈடுபட்டனர். சிலர் கருணை மற்றும் வேறு சில அறங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தியான யோகத்தின் தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யோகியராக இருந்தனர். அவர்களில் சிலர் புகையை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், வேறு சிலர் நெருப்பையும், வேறு சிலர் பாலையும் உண்டு வாழ்ந்தனர். இவ்வாறே அந்த ஆசிரமம் மறுபிறப்பாளர்களில் முதன்மையான பலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(56) அங்கே இருந்த சிலர், கைகளைப் பயன்படுத்துவதைத் துறந்து பசுவைப் போல உண்ணவும், குடிக்கவும் செய்யும் நோன்பை நோற்றுவந்தனர். சிலர் தானியங்களை நசுக்க இரு கற்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர், மேலும் சிலர் அக்காரியத்திற்காகத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்தினர். சிலர் சந்திரனின் கதிர்களைப் பருகுவதன் மூலமும், நுரையை மட்டுமே பருகியும் வாழ்ந்து வந்தனர். வேறு சிலர் மானைப் போல வாழும் நோன்பைக் கைக்கொண்டிருந்தனர்[7].(57) சிலர் அரசம்பழங்களை உண்டு வாழ்கின்றனர், சிலர் நீரிலேயே கிடக்கின்றனர். சிலர் கந்தைகளை உடுத்திக் கொள்கின்றனர், சில மான்தோல்களையும், சிலர் மரவுரிகளையும் உடுத்துகின்றனர்.(58) உண்மையில், முதன்மையான வகையைச் சார்ந்த பல்வேறு தவசிகள் இவற்றையும், இன்னும் வலிநிறைந்த பிற நோன்புகளை நோற்பதையும் கண்டேன். பிறகு நான் அந்த ஆசிரமத்திற்குள் நுழைய விரும்பினேன்.(59) உண்மையில் அந்த ஆசிரமம், தேவர்கள், உயர் ஆன்மாக்கள், சிவன், அறச் செயல்களைச் செய்யும் அனைத்து உயிரினங்களாலும் மதித்துத் துதிக்கப்பட்டது. இவ்வாறு சொல்லப்படும் அஃது ஆகாயத்திலுள்ள சந்திர வட்டிலைப் போலவே இமயச் சாரலில் மிக அழகானதாக இருந்தது.(60)
[7] "ஒருபோதும் உணவைத் தேடாமல் கண்டதை உண்பவர்கள்; கைகளையும் ஒருபோதும் பயன்படுத்தாதவர்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சுடர்மிகு தவங்களைச் செய்த உயர் ஆன்ம தவசிகளுடைய அருகாமையின் விளைவாக அங்கே கீரிப்பிள்ளை பாம்புடனும், புலியானது மானுடனும் தங்கள் இயல்பான பகைமையை மறந்து விளையாடிக் கொண்டிருந்தன.(61) அனைத்து உயிரினங்களும் திளைத்திருக்கும் அந்த முதன்மையான ஆசிரமத்தில் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் முழுமையாக நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலரும்,(62) கடினமான நோன்புகளை நோற்பதற்காகக் கொண்டாடப்படும் உயர் ஆன்ம முனிவர்கள் பலரும் வசித்திருப்பதை நான் கண்டேன். அந்த ஆசிரமத்தில் நான் நுழைந்தபோது, தலையில் சடாமுடி தரித்தவரும், மரவுரி உடுத்தியவரும்,(63) தவங்கள் மற்றும் சக்தியால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், சீடர்களால் பணிவிடை செய்யப்படுபவரும், வயதில் இளமையானவருமான ஒரு முதன்மையான பிராமணரைக் கண்டேன்.(64)
அவரது பெயர் உபமன்யு ஆகும். தலைவணங்கி நின்ற என்னிடம் அவர் {உபமன்யு}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, உனக்குநல்வரவு. இன்று நீ இங்கு வந்திருப்பதால் எங்கள் தவங்களைக் கனிவதை நாங்கள் காண்கிறோம். துதிக்கத்தக்கவனாக இருப்பினும் எங்களை நீ துதிக்கிறாய். காணத்தகுந்தவனாக இருப்பினும் நீ எங்களைக் காண விரும்புகிறாய்" என்றார்.(65) நான் என் கரங்களைக் கூப்பி அவரது ஆசிரமத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நலத்தையும், அவருடைய சீடர்களின் ஆன்ம முன்னேற்றத்தையும் குறித்து விசாரித்தேன்.(66)
சிறப்புமிக்கவரான அந்த உபமன்யு, அப்போது மிக இனிமையான வார்த்தைகளை எனக்குச் சொன்னார் "ஓ! கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ! ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நிறைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ! எதிரிகளை அழிப்பவனே, நீ யாரைத் தேடுகிறாயோ அந்தச் சிந்தனைக்கெட்டாத தேவன், நன்மை மற்றும் தீமை நிறைந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் தன்னுள் ஈர்த்து இருப்புக்கு வந்து தன் மனைவியுடன் இங்கே வாழ்கிறான்.(71) ஹிரண்யகசிபு என்ற பெயரில் பிறந்தவனும், மேரு மலைகளையே அசைக்கும் பெரும்பலம் கொண்டவனுமான தானவன், மஹாதேவனிடம் இருந்து தேவர்கள் அனைவரின் பலத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு கோடி வருடங்கள் அதை அனுபவித்தான்.(72)
அவனது மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும் {மூத்த மகனும்}, மந்தாரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒருவன், மஹாதேவனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் சக்ரனோடு பத்து லட்சம் வருடங்கள் போரிடுவதில் வென்றான்.(73) ஓ! கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்ததும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ! கேசவா, அந்த ஆயுதம் கூட மூவுலகங்களிலும் ஒரு தீய கோளைப் போலத் தோன்றியவனும், ஹிரண்யகசிபுவின் மகனுமான மந்தாரனின் உடலில் சிறு தடத்தையும் ஏற்படுத்த தவறியது.(78) மஹாதேவனிடம் வரத்தைப் பெற்றவனும், பெரும் பலத்துடன் கூடியவனுமான அந்தத் தீய கோளின் உடலில் உன்னுடைய சக்கரத்தைப் போன்ற நாற்றுக்கணக்கான சக்கரங்களாலும், சக்ரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வஜ்ராயுதங்களாலும் சிறு காயத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.(79) வலிமைமிக்கவனான மந்தாரனால் பீடிக்கப்பட்ட தேவர்கள், அவனையும், மஹாதேவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற அவனுடைய துணைவர்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.(80)
[8] "இங்கே கிரஹம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் கோளாகும். அனைவருக்கும் ஏற்படுத்தும் தீங்கினால் அவன் அந்தத் தீய கிரகத்தின் {மாந்தி / குளிகன்} பெயரைப் பெற்றிருக்க வேண்டும்.
வித்யுத்பிரபன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு தானவனிடம் நிறைவடைந்த மஹாதேவன் அவனுக்கு மூவுலகங்களின் ஆட்சியுரிமையை அருளினான். அந்தத் தானவன் மூவுலகங்களின் ஆட்சியுரிமையில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்தான்.(81) மஹாதேவன் அவனிடம் {வித்யுத்பிரபனிடம்}, "நீ என்னுடைய பணியாட்களில் ஒருவனாக இருப்பாய்" என்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தலைவன் {சிவன்} அவனுக்குக் கோடிக்கணக்கான பிள்ளைகளை வரமாக அளித்தான். பிறப்பில்லாதவனான அந்த அனைத்து உயிரினங்களின் ஆசான் குசத்வீபம் என்ற பெயருடைய ஒரு நாட்டை மேலும் ஒரு வரமாக அவனுக்கு அளித்தான்.(82)
சதமுகன் என்ற பெயரையுடைய மற்றொரு பேரசுரன் பிரம்மனால் படைக்கப்பட்டான். அவன் தன்னுடலின் சதையையே (மஹாதேவனுக்கான காணிக்கையாக) வேள்வி நெருப்பில் நூறு வருடங்கள் ஊற்றிக் கொண்டிருந்தான்.(83) இத்தகைய தவங்களால் நிறைவையடைந்த சங்கரன் அவனிடம் {சதமுகனிடம்}, "நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்று கேட்டான். அதற்குச் சதமுகன், "ஓ! அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நித்திய சக்தியையும் எனக்குக் கொடுப்பாயாக" என்று மறுமொழி கூறினான்[9]. அவன் இவ்வாறு சொன்னதும் அந்தப் பலமிக்கத் தலைவன் அவனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.(85)
[9] "84ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் ’யோகம்’ என்பது ’படைக்கும் சக்தி’ என உரையாசிரியரால் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேவஸ்ரேஷ்டரே, எனக்கு ஆச்சரியமான யோகசக்தியும் எக்காலமும் அழியாத தேகவன்மையும் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! தேவர்களில் சிறந்தவனே, நான் நித்திய பலத்தை அடையும்பொருட்டு இயல்புக்குமீறிய யோகத்தை எனக்கு அருள்வாயாக" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் வல்லமை வேண்டும் என்று சதமுகன் கேட்கிறான்.
பழங்காலத்தில் சுயம்புவான பிரம்மன், பிள்ளைகளை அடையும் நோக்கில் யோகத்தில் தன் மனத்தைக் குவித்து முன்னூறு ஆண்டுகளாக ஒரு வேள்வியைச் செய்தான்.(86) மஹாதேவன் அந்த வேள்வியின் தகுதிகளுக்கு ஏற்ற திறனைக் கொண்ட ஓராயிரம் மகன்களை அவனுக்கு அளித்தான். ஓ! கிருஷ்ணா, தேவர்களால் பாடப்படும் அந்த யோகத் தலைவனை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(87) யாஜ்ஞவல்கியர் என்ற பெயரில் அறியப்படும் முனிவர் பெரும் அறவோனாவார். அவர் மஹாதேவனைத் துதித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.(88) பராசரரின் மகனும், யோகத்தில் ஆன்மாவை நிலைக்கச் செய்யும் பெருந்தவசியுமான வியாசர் சங்கரனைத் துதித்ததன் மூலம் பெரும்புகழை அடைந்தார்.(89)
முன்பொரு சந்தர்ப்பத்தில் வாலகில்யர்கள் மகவத்தால் {இந்திரனால்} அவமதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அவர் சிறப்புமிக்க ருத்திரனை நிறைவடையச் செய்தனர்.(90) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அண்டத்தில் தலைவன், வாலகில்யர்களால் இவ்வாறு நிறைவை அடைந்து, அவர்களிடம், "இந்திரனிடம் இருந்து அமுதத்தை அபகரிக்கும் ஒரு பறைவையைப் படைப்பதில் உங்கள் தவத்தின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்" என்றான்.(91) முன்பொரு சந்தர்ப்பத்தில் மஹாதேவனின் கோபத்தின் மூலம் நீர்கள் {நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள நீர்) அனைத்தும் மறைந்தன. தேவர்கள் சப்தகபாலம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்து அவனை நிறைவடையச் செய்து, அவனது அருளின் மூலம் உலகங்களில் வேறு நீர் பாயும்படி செய்தார்கள். உண்மையில், அந்த முக்கண் தேவன் நிறைவடைந்தபோது, மீண்டும் உடனடியாக உலகில் நீர் தோன்றியது.(92)
வேதங்களை அறிந்தவளான அத்ரியின் மனைவி {அனசூயை} ஒரு கோபத்தில் தன் கணவனைக் கைவிட்டு, "அந்தத் தவசியின் ஆதிக்கத்தின் கீழ் இனி ஒருபோதும் வாழ மாட்டேன்" என்றாள்.(93) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவள் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினாள். தன் கணவரான அத்ரியிடம் கொண்ட அச்சத்தால் அவள் {மஹாதேவனின் பாதுகாப்பை நாடி} உணவனைத்தையும் துறந்து முன்னூறு வருடங்களைக் கழித்தாள்.(94) அக்காலம் முழுவதும் அவள் பவனை நிறைவடையச் செய்யும் நோக்கத்தால் உலக்கைகளில் மீது உறங்கினாள். பிறகு அந்தப் பெருந்தேவன் அவள் முன்பு தோன்றி புன்னகைத்தவாறே, "நீ ஒரு மகனை அடைவாய்.(95) கணவனின் தேவை இல்லாமல், ருத்திரனின் அருளால் மட்டுமே நீ ஒரு மகனைப் பெறுவாய். தந்தையின் குலத்தில் பிறக்கும் அந்த மகன் தன் தகுதிக்குத்தக்க உன் பெயராலேயே {தத்தாத்ரேயர் என்ற பெயரில்} கொண்டாடப்படுவான்" என்றான்[10].(96)
[10] கும்பகோணம் பதிப்பில், "உனக்குப் பிள்ளை உண்டாவன்; கணவனில்லாமலே ருத்ரர் அனுக்கிரகத்தினால் உன் பேராலேயே நீ விரும்பும் கீர்த்தியை அடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விரும்பியவாறே நீ ஒரு மகனை அடைவாய். அவன் தன் பெயரால் அழைக்கப்படும் குலத்தினால் புகழடைவான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் உரை சரியாகப் படுகிறது.
ஓ! மதுசூதனா, சிறப்புமிக்க விகர்ணரும் {விகர்ண முனிவரும்} கூட மஹாதேவனிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்டு, கடுந்தவங்களால் அவனை நிறைவடையச் செய்து, மகிழ்ச்சியையும் உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(97) ஓ! கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், "நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ! மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்" என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், "ஓ! பாவமற்றவனே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். முதுமை அல்லது மரணத்திற்கு ஆட்படாதவனும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவனுமான ஓர் ஆசானாக நீ இருப்பாய்" என்றான்.(102)
[11] பிபேக்திப்ராயின் பதிப்பில் இவரைப் பற்றிய அடிக்குறிப்பில், "இவர் ஒரு புகழ்பெற்ற முனிவராவார். ரிக்வேத உரையின் பெரும்பகுதியில் இன்னும் எஞ்சியிருப்பது சாகல்யப் பதிப்பே" என்றிருக்கிறது.
ஓ! ஜனார்த்தனா, அர்ப்பணிப்பில் நிறைந்த சக்ரனும் {இந்திரனும்} கூடப் பழங்காலத்தில் வாராணசியில் {காசியில்}, வெட்ட வெளியையே தன் ஆடைகளாகக் கொண்டவனும், ஏற்புடைய தைலமாகச் சாம்பலைப் பூசிக் கொள்பவனுமான மஹாதேவனைத் துதித்தான்.(103) இவ்வாறு மஹாதேவனைத் துதித்த அவன் தேவர்களின் அரசுரிமையை அடைந்தான். நாரதரும் கூடப் பழங்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் பெரும் பவனைத் துதித்தார். தேவகுருவுக்குக் குருவான அந்த மஹாதேவன் அவரிடம் நிறைவடைந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(104) "சக்தியிலும், தவங்களிலும் உனக்கு இணையானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். பாட்டினாலும், இசைக்கருவியினாலும் எப்போதும் நீ எனக்குப் பணிவிடை செய்வாயாக" என்றான்.(105) ஓ! மாதவா, ஓ! தலைவா, பழங்காலத்தில், உயிரினங்கள் அனைத்தின் ஆசானான அந்தத் தேவ தேவனைக் காண்பதில் நான் எவ்வாறு வென்றேன் என்பதைக் கேட்பாயாக.(106) மேலும், ஓ! பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ! பாவமற்றவனே, தேவதேவனான அந்த மஹேஸ்வரனிடம் பெற்றத்தில் இருந்து நான் அடைந்த வெற்றிகள் அனைத்தையும் முழு விபரங்களுடன் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(108)
அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ வரை உள்ள சுலோகங்கள் : 108
ஆங்கிலத்தில் | In English |