The forms of Shiva! | Anusasana-Parva-Section-14c | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : உபமன்யு தாம் சிவனைக் கண்ட வகையைக் கிருஷ்ணனுக்குச் சொல்லத் தொடங்கியது; தமது அன்னையிடம் பால் உணவு கேட்ட உபமன்யு; பால் உணவு கொடுக்க முடியாத அவரது அன்னை சிவனை வேண்டச் சொன்னது; சிவனின் இருப்புநிலைகளை உபமன்யுவுக்குச் சொன்ன அவரது அன்னை...
{உபமன்யு தொடர்ந்தார்}, பழங்காலத்தில் கிருத யுகத்தில், ஓ! மகனே, வியாக்ரபாதர் என்ற பெயரில் பெரும் புகழைக் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் தனது ஞானத்திற்காகவும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களில் கொண்ட திறனுக்காகவும் கொண்டாடப்பட்டார்.(109) அந்த முனிவரின் மகன்களாக நானும், என் தம்பியாகத் தௌமியனும் பிறந்தோம். ஓ! மாதவா, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட சில முனிவர்களின் ஆசிரமத்தை தௌமியனின் துணையுடன் நான் அடைந்தேன். அங்கே ஒரு பசுவிடம் பால் கறக்கப்படுவதைக் கண்டேன். நான் பாலைக் கண்டேன், அஃது அமுதத்துக்கு ஒப்பான சுவையுடையதாக எனக்குத் தோன்றியது.(111) பிறகு வீடு திரும்பிய நான், குழந்தைத்தனத்தால் உந்தப்பட்டு என் அன்னையிடம், "பாலில் தயாரிக்கப்பட்ட ஏதாவது உணவைத் தருவாயாக" என்று கேட்டேன்.(112)
அப்போது வீட்டில் பாலில்லை என்பதால், நான் அதைக் கேட்டதும் என் அன்னை மிகவும் வருத்தமடைந்தாள். ஓ! மாதவா, என் அன்னை (அரிசி) மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்தாள்.(113) நீரானது வெண்ணிறமானது, என் தாய் அஃதை எங்கள் முன்பு வைத்து, பாலென்று சொல்லி எங்களைக் குடிக்கச் சொன்னாள். அதற்கு முன்பே ஒரு சந்தர்ப்பத்தில் செழிப்புமிக்கவரான எங்கள் உறவினரின் வசிப்பிடத்திற்கு ஒரு வேள்விக்காக என் தந்தை அழைத்துச் சென்ற போது நான் பாலைக் குடித்திருக்கிறேன்.(114) அந்தச் சந்தர்ப்பத்தில் தேவர்களைத் திளைக்கச் செய்யும் ஒரு தெய்வீகப் பசுக் கறக்கப்பட்டது. சுவையில் அமுதத்திற்கு ஒப்பான அவளது பாலைக் குடித்திருந்ததால்,(115) பாலின் தன்மையை நான் அறிந்திருந்தேன். எனவே, பாலென்று சொல்லி என் அன்னை கொடுத்த பொருளின் தோற்றத்தை உடனடியாகப் புரிந்து கொண்டேன். ஓ! மகனே, உண்மையில் அந்த மாவு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை.(116)
குழந்தைத்தனத்தால் உந்தப்பட்ட நான் என் தாயாரிடம், "ஓ! தாயே, நீ எனக்குக் கொடுத்தது பாலில் தயாரிக்கப்பட்ட உணவல்ல" என்றேன்.(117)
ஓ! மாதவா, இதனால் துயரத்தில் நிறைந்த என் அன்னை பெற்ற பாசத்தால் என்னைத் தழுவி உச்சி முகர்ந்து, என்னிடம், "ஓ! குழந்தாய், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட தவசிகளால் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை எங்கே பெற முடியும்? அத்தகைய மனிதர்கள், எப்போதும் காட்டில் வசித்து, கிழங்குகள், வேர்கள் மற்றும் கனிகளை உண்டு வாழ்கின்றனர்.(119) ஓ! குழந்தாய், மலைகளையும் காடுகளையும் இல்லங்களாகக் கொண்டவர்களும், வாலகில்யர்களின் ஓய்விடங்களான ஆற்றங்கரைகளில் வாழ்பவர்களுமான நம்மால் பாலை எங்குப் பெற முடியும்?(120) ஓ! அன்புக் குழந்தாய், நாம் (சில வேளைகளில்) காற்றையும், சில வேளைகளில் நீரையும் உண்டு வாழ்கிறோம். காடுகள் மற்றும் சோலைகளுக்கு மத்தியில் உள்ள ஆசிரமங்களில் நாம் வாழ்கிறோம். கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மனிதர்கள் உண்ணும் அனைத்து வகை உணவுகளையும் தவிர்ப்பதே நமது வழக்கம். காட்டில் விளையும் உணவை உண்பதே நமது வழக்கம்.(121) ஓ! குழந்தாய், சுரபியின் சந்ததி {பசுக்கள்} ஏதும் இல்லாத காட்டில் பால் கிடைக்காது[12]. ஆற்றங்கரைகள், அல்லது குகைகள், அல்லது மலைச்சாரல்கள், அல்லது தீர்த்தங்கள், அல்லது அதுபோன்ற வேறுவகை இடங்களில் வசித்து,(122) சிவனையே நமது உயர்ந்த புகலிடமாகக் கொண்டு தவங்களிலும், புனித மந்திரங்களை உரைப்பதிலும் நம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஓ! குழந்தாய், வரமளிப்பவனும், முக்கண்களைக் கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ஸ்தாணுவை நிறைவடையச் செய்யாமல்,(123) பாலில் தயாரிக்கப்பட்ட உணவையும், நல்ல ஆடைகளையும், உலகில் இன்பத்திற்குரிய பிற பொருட்களை ஒருவன் எங்கிருந்து அடைவான்? ஓ! அன்பு மகனே, முழு ஆன்மாவுடன் சங்கரனிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக {சங்கரனிடம் நீ பக்தி கொள்வாயாக}.(124) ஓ! குழந்தாய், அவனது அருளின் மூலம் உனது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ நிச்சயம் அடைவாய்" என்றாள்.
[12] "சொர்க்கத்திலும், பூமியிலும் உள்ள பசுக்களின் உண்மையான மூதன்னையே இந்தத் தெய்வீகப் பசுவான சுரபி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்நாளில் என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான்,(125) மதிப்புடன் என் கரங்களைக் கூப்பி அவளை வணங்கி, "ஓ! தாயே, இந்த மஹாதேவன் எவன்? என்ன வகையில் அவனை ஒருவனால் நிறைவடையச் செய்ய இயலும்?(126) அந்தத் தேவன் எங்கே வசிக்கிறான்? அவனை எவ்வாறு காணலாம்? எதனால் அவன் நிறைவை அடைவான்? அந்தச் சர்வனின் வடிவம் எது? அவனைக் குறித்த அறிவை அடைவதில் ஒருவன் எவ்வாறு வெல்லலாம்? ஓ! தாயே, என்னிடம் நிறைவை அடைந்தால், அவனை எனக்குக் காட்டுவாயாக" என்றேன்.(127)
ஓ! கிருஷ்ணா, ஓ! கோவிந்தா, நான் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு என் தாயார் பெற்ற பாசத்தால் நிறைந்து என் தலையை முகர்ந்த போது அவளது கண்களைக் கண்ணீர் மறைத்தது.(128) ஓ! மதுசூதனா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, அப்போது என் உடலை மென்மையாகத் தட்டிக் கொடுத்த என் தாயார், பெரும் பணிவுடன் கூடிய தொனியில் பின்வரும் வார்த்தைகளை என்னிடம் சொன்னாள்.(129) என் தாயார், "தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் மஹாதேவனை அறிவது மிகக் கடினமாகும். இந்த மனிதர்கள் அவனைத் தங்கள் இதயங்களில் சுமக்க, அல்லது அவனைப் புரிந்துகொள்ள வல்லவர்களல்ல. அவர்களால் அவனைத் தங்கள் மனங்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் அவனைப் பற்றவும் முடியாது, மேலும் அவர்களால் அவனைக் காணவும் முடியாது,(130) அவனது வடிவங்கள் பலவாகும் என ஞானிகள் உறுதியாகச் சொல்கின்றனர். மேலும் அவன் வசிக்கும் இடங்களும் பலவாகும். அவனது அருளின் வடிவங்கள் பலவாகும்.(131) ஈசனின் சிறந்த செயல்கள் அனைத்தையும், பழங்காலத்தில் அவன் ஏற்ற வடிவங்கள் அனைத்தையும் என அவற்றின் விபரங்களுடன் புரிந்து கொள்ள எவன் இருக்கிறான்?(132) சர்வன் எவ்வாறு விளையாடுவான்?, எவ்வாறு நிறைவை அடைவான் என்ற யாரால் சொல்ல முடியும்? அண்டத்தின் வடிவிலான மஹேஸ்வரன் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கிறான்.(133) ஈசானனின் மங்கலமான அற்புதச் செயல்கள் குறித்து முனிவர்கள் உரையாடும்போது, தன்னை வழிபடுபவர்களிடம் கருணையால் தூண்டப்பட்டு அவன் எவ்வாறு நேரடியாகக் காட்சி கொடுப்பான் என்பதைக் கேட்டிருக்கிறேன்.(134) பழங்காலத்தில் மஹாதேவன் ஏற்ற பல்வேறு வடிவங்கள் குறித்த செய்திகளைப் பிராமணர்களுக்குக் கருணை காட்டும் நோக்கில் சொர்க்கவாசிகள் சொல்லியிருக்கின்றனர். அவற்றைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மகனே, நான் அவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றாள்.(135)
என் அன்னை தொடர்ந்தாள், "பிரம்மன், விஷ்ணு, தேவர்களின் தலைவன், ருத்திர்கள், ஆதித்தியர்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்கள் ஆகிய வடிவங்களைப் பவன் {சிவன்} ஏற்கிறான்.(136) மனிதர்கள், பெண்கள், பிரேதங்கள், பிசாசங்கள், கிராதர்கள், சபரர்கள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். காடுகள் மற்றும் சோலைகளில் வசிக்கும் சபரர்களின் வடிவங்களையும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் ஏற்கிறான்.(137) ஆமைகள், மீன்கள், சங்குகள் ஆகிய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். மனிதர்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்தும் பவளக் கொடிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(138) யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், தைத்தியர்கள், தானவர்கள் ஆகியோரின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், பொந்துகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களையும் ஏற்கிறான்.(139) புலிகள், சிங்கங்கள், மான்கள், ஓநாய்கள், கரடிகள், பறவைகள், ஆந்தைகள் மற்றும் நரிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(140)
அன்னங்கள், காக்கைகள், மயில்கள், ஓணான்கள், பல்லிகள் மற்றும் நாரைகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். கொக்குகள், கழுகுகள், சக்கரவாகங்கள் ஆகிய வடிவங்களையும் அவனே ஏற்கிறான்.(141) உண்மையில் அவன், சாசங்கள் மற்றும் மலைகளின் வடிவங்களையும் ஏற்கிறான். ஓ! மகனே, பசுகள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகிய வடிவங்களையும் மஹாதேவனே ஏற்கிறான்.(142) ஆடுகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் பல்வேறு வகை விலங்குகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். அழகிய தோகைகளைக் கொண்ட பல்வேறு வகைப் பறவைகளின் வடிவங்களையும் பவனே ஏற்கிறான்.(143) பிராமணர்களுக்கு மத்தியில் தண்டங்கள், குடைகள் மற்றும் கமண்டலங்களுடன் இருக்கும் மனிதர்களின் வடிவங்களைத் தரிப்பவன் மஹாதேவனே. சில வேளைகளில் அவன் ஆறு முகம் படைத்தவனாகிறான், சில வேளைகளில் பல முகங்களைத் தரித்தவனாகிறான். சில வேளைகளில் அவன் மூன்று கண்களை உடைய வடிவங்களையும், பல தலைகளையுடைய வடிவங்களையும் ஏற்கிறான்.(144) சில வேளைகளில் பல கோடி கால்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற வயிறுகள் மற்றும் முகங்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற கரங்கள் மற்றும் எண்ணற்ற இடைகளையுடைய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் அவன் எண்ணற்ற கணங்கள் மற்றும் பூதங்கள் சூழ இருக்கிறான்.(145) முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வடிவங்களை அவனே ஏற்கிறான். சில வேளைகளில் அவன் சாம்பற் {திருநீறு} பூசப்பட்ட வெண்ணிறத்துடன், நெற்றியில் அரை மதியால் அலங்கரிக்கப்பட்ட வடிவத்தை ஏற்கிறான்.(146)
பல்வேறு வகைக் குரல்களில் பாடப்படும் பல்வேறு துதிகளால் துதிக்கப்படுபவனும், புகழ்மாலைநிறைந்த பல்வேறு மந்திரங்களால் வழிபடப்படுபவனும், சில வேளைகளில் சர்வன் என்றழைக்கப்படுபவனுமான அவன், அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனாக இருக்கிறான், மேலும் அனைத்து உயிரினங்களும் சார்ந்திருக்கும் பொதுவான அடித்தளமாக அவனே இருக்கிறான்.(147) மஹாதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மா ஆவான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். (கடமைகள் {தர்மங்கள்} மற்றும் சடங்குகள் குறித்த) உரைகள் அனைத்தையும் பேசுபவன் அவனே ஆவான். எங்கும் வசிக்கும் அவன், அண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிப்பவனாக அறியப்பட வேண்டும்.(148) தன்னை வழிபடும் ஒவ்வொருவனாலும் வளர்க்கப்படும் ஆசைகளை அறிந்தவன் அவன். தன்னைத் துதிப்பவனின் நோக்கத்தை அறிபவன் அவன். உனக்கு விருப்பமிருந்தால், அந்தத் தேவர்களுடைய தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக.(149) அவன் சில வேளைகளில் மகிழ்வான், சில வேளைகளில் கோபவசப்படுவான், சில வேளைகளில் ஹும் என்ற அசையை மிக உரக்கச் சொல்வான். அவன் சில வேளைகளில் சக்கரத்தைத் தரிக்கிறான், சில வேளைகளில் திரிசூலத்தையும், சில வேளைகளில் கதாயுதத்தையும், சில வேளைகளில் உலக்கைகளையும், சில வேளைகளில் வாள்களையும், சில வேளைகளில் போர்க்கோடரிகளையும் தரிப்பான்.(150)
உலகைத் தலையில் தாங்கும் சேஷனின் வடிவை ஏற்பவன் அவனே. அவன் பாம்புகளைத் தன் கச்சையாகக் கொண்டிருக்கிறான், அவனது காதுகள் பாம்புகளால் செய்யப்பட்ட காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சூடும் புனித நூலாகவும் பாம்புகளே அமைகின்றன. யானைத் தோல் அவனது மேலாடையாக அமைகிறது.(151) சில வேளைகளில் அவன் சிரிக்கிறான், சில வேளைகளில் பாடுகிறான், சில வேளைகளில் மிக அழகாக ஆடுகிறான். எண்ணற்ற பூதங்களாலும், கணங்களாலும் சூழப்பட்ட அவன் சில வேளைகளில் இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் இசைக்கும் பல்வேறு வகைக் கருவிகள் இனிமையான ஒலிகளை வழங்குகின்றன.(152) அவன் சில வேளைகளில் (சுடலைகளில்) திரிகிறான், சில வேளைகளில் கொட்டாவி விடுகிறான், சில வேளைகளில் அழுகிறான், சில வேளைகளில் பிறரை அழச் செய்கிறான். சில வேளைகளில் அவன் பித்தனின் தோற்றத்தை ஏற்கிறான், சில வேளைகளில் மது மயக்கத்துடன் கூடியவனாகவும், சில வேளைகளில் மிக இனிய சொற்களைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.(153) அச்சுறுத்தும் கடுமையுடன் கூடிய அவன் சில வேளைகளில், தன் கண்களால் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் உரக்கச் சிரிக்கிறான். சில வேளைகளில் அவன் உறங்குகிறான், சில வேளைகளில் விழித்திருக்கிறான், சில வேளைகளில் விரும்பியவாறு கொட்டவீ விடுகிறான்.(154) சில வேளைகளில் அவன் புனித மந்திரங்களை ஓதுகிறான், சில வேளைகளில் ஓதப்படும் அந்த மந்திரங்களின் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் தவங்களைச் செய்கிறான், சில வேளைகளில் செய்யப்படும் அத்தவங்களில் துதிக்கப்படும் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் கொடைகளை அளிக்கிறான், சில வேளைகளில் கொடைகளை ஏற்கிறான்; சில வேளைகளில் யோகத்தில் ஆழ்கிறான், சில வேளைகளில் பிறருடைய தியான யோகத்தின் பொருளாகிறான்.(155)
வேள்விப் பீடத்திலோ {யாகவேதியின் நடுவிலோ}, வேள்வித் தண்டிலோ {யூபஸ்தம்பத்திலோ} அவன் காணப்படுகிறான்; மாட்டுக் கொட்டில் அல்லது நெருப்பின் மத்தியிலும் அவன் காணப்படுகிறான். மீண்டும் அவனை அங்கே காணமுடியாதும் போகலாம். அவன் சிறுவனாகவோ, முதிர்ந்தவனாகவோ காணப்படுகிறான்.(156) அவன் முனிவர்களின் மகள்கள் மற்றும் மனைவிகளுடன் விளையாடுகிறான். அவனுடைய முடி நீண்டதாகவும் நிமிர்ந்து நிற்பதாகவும் இருக்கிறது. திசைகளையே ஆபரணங்களாகக் கொண்ட அவன் முழு அம்மணமாக இருக்கிறான். அவன் பயங்கரக் கண்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(157) அவன் வெண்மையாகவும், கருமையாகவும், கருப்பனாகவும், வெளுப்பனாகவும் இருக்கிறான், புகையின் நிறத்தைக் கொண்டவனாகவும், சிவப்பாகவும் அவன் இருக்கிறான். நீண்ட பயங்கரமான கண்களைக் கொண்டவனாக அவன் இருக்கிறான். வெட்ட வெளியையே ஆடையாகக் கொண்டவன் அவன், அனைத்துப் பொருட்களையும் மறைப்பவனும் அவன்.(158)
வடிவமற்றவனும், மாயையால் அமைந்தவனும், அண்டத்தின் செயல்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தின் வடிவைக் கொண்டவனும், ஹிரண்யகர்ப்பனின் வடிவத்தை ஏற்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாதவனுமான அவன் பிறப்பற்றவனாக இருக்கிறான்.(159) அவன் (ஒவ்வொரு உயிரினத்தின்) இதயத்தில் வாழ்கிறான். அவனே உயிர் மூச்சு, அவனே மனம், அவனே (உடற்பொதியில் மறைந்திருக்கும்) ஜீவனும் ஆவான் . அவன் யோகத்தின் ஆன்மாவாக இருக்கிறான், அவனே யோகம் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியர் நுழையும் தியான யோகமாக அவனே இருக்கிறான். அவனே பரமாத்மா ஆவான். உண்மையில், புலன்களாலல்லாமல், அவனது இருப்பைப் பற்றும் ஆன்மாவால் மட்டுமே அவன் புரிந்து கொள்ளப்படுகிறான்.(160) அவன் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் பாடகனாகவும் இருக்கிறான். அவன் ஒரு லட்சம் கண்களைக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு வாயைக் கொண்டிருக்கிறான், இரண்டு வாய்கள், மூன்று வாய்கள் மற்றும் பல வாய்களையும் கொண்டிருக்கிறான். (161) ஓ! மகனே {உபமன்யு}, உன்னை அவனுக்கு அர்ப்பணித்து, அவனில் உன் இதயத்தை நிலை நிறுத்தி, அவனையே சார்ந்திருந்து, அவனையே ஒரே புகலிடமாக ஏற்று மஹாதேவனைத் துதிப்பாயாக. அவ்வாறு செய்தால் உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாய்" என்றாள் {என் தாயார்}.(162)
அநுசாஸனபர்வம் பகுதி – 14இ வரை உள்ள சுலோகங்கள் : 162
ஆங்கிலத்தில் | In English |