Masculine and Feminine marks! | Anusasana-Parva-Section-14d | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : அன்னையின் சொல் கேட்டு, சிவனை நினைத்துத் தவமிருந்த உபமன்யு; உபமன்யுவிடம் நிறைவடைந்த சிவன், அவரைச் சோதிக்க இந்திரனின் வடிவில் வந்தது; வேறு எந்தத் தேவனிடமும் வரம்பெற மாட்டேன் என உபமன்யு சொன்னது; சிவனின் மகிமையைச் சொன்னது; சிவலிங்கச் சின்னத்தின் பொருள் சொன்ன உபமன்யு...
{உபமன்யு தொடர்ந்தார்}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே என் அன்னையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்த நாள் முதல் வேறு எந்த நோக்கமும் இல்லாத என் அர்ப்பணிப்பை மஹாதேவனிடம் செலுத்தினேன்.(163) பிறகு நான், சங்கரனை நிறைவடையச் செய்வதற்காகக் கடுந்தவங்கில் ஈடுபட்டேன். ஓராயிரம் வருடங்கள் நான் என் இடக்கால் கட்டைவிரலில் நின்றேன்.(164) அதன் பிறகு ஓராயிரம் வருடங்கள் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அதன்பிறகு ஓராயிரம் வருடங்கள் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அடுத்த ஆயிரம் வருடங்கள் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.(165) அதன் பிறகு எழுநூறு ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இவ்வகையில் நான் முழுமையாக ஓராயிரம் தேவ வருடங்கள் மஹாதேவனைத் துதித்தேன்.(166) இதன்பிறகு அண்டத்தின் ஆசானான பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவடைந்தான். நான் அவனிடம் மட்டுமே முற்றான அர்ப்பணிப்புடன் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய அவன்,(167) தேவர்கள் அனைவராலும் சூழப்பட்ட சக்ரனின் {இந்திரனின்} வடிவில் என் முன்னிலையில் தோன்றினான்.
மேனியில் ஆயிரம் கண் கொண்டவனும், வஜ்ராயுதம் தரித்தவனும், கொண்டாடப்படுபவனுமான சக்ரனாக அவன் தோன்றினான்.(168) அவன், தூய வெண்ணிறம் கொண்டதும், கண்கள் சிவந்ததும், காதுகள் மடங்கியதும், மதநீர் பெருகுவதும், துதிக்கை மடங்கியதும், காணப் பயங்கரமானதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான ஒரு யானையைச் செலுத்திக் கொண்டு வந்தான். உண்மையில், அத்தகைய யானையைச் செலுத்தி வரும் தேவர்களின் தலைவன் சக்தியால் சுடர்விடுபவனாகத் தெரிந்தான். தலையில் அழகிய மகுடத்துடனும், கழுத்தைச் சுற்றும் மாலைகளுடனும், கரங்களைச் சுற்றும் கங்கணங்களுடனும் அவன் நான் இருந்த இடத்திற்கு வந்தான்.(169,170) அவனது தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டிருந்தது. பல அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடையும், பல கந்தர்வர்கள் அவனது புகழைப் பாடவும் செய்தனர்.(171) அவன் என்னிடம், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் நிறைவடைந்தேன். நீர் விரும்பும் வரத்தை என்னிடம் இரந்து பெறலாம்" என்றான்.(172)
சக்ரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழவில்லை. உண்மையில், ஓ! கிருஷ்ணா, நான் தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினேன்,(173) "நான் உன்னிடமோ, வேறு பிற தேவர்களிடமோ எந்த வரத்தையும் விரும்பவில்லை. ஓ! இனிய தேவா, மஹாதேவனிடம் மட்டுமே வரங்களைக் கேட்பேன் என நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(174) உண்மை, இஃது உண்மை, நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே. மஹேஸ்வரன் தொடர்பானவற்றைத் தவிர வேறு எந்தச் சொற்களும் எனக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல.(175) அந்த அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் நான் புழுவாகவோ, பல கிளைகளையுடைய மரமாகவோ ஆயத்தமாக இருக்கிறேன். மஹாதேவனின் வரங்களின் மூலம் அடையப்படாத அருளானது மூவுலகங்களின் அரசுரிமையே ஆனாலும் அஃது எனக்கு ஏற்புடையதல்ல.(176) நான் ஸ்வபாகர்களுக்கு {சண்டாளர்களுக்கு} மத்தியில் பிறப்பை அடைந்தாலும், ஹரனின் பாதத்திலேயே அர்ப்பணிப்புடன் இருப்பேன். மேலும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பசுபதியிடம்} அர்ப்பணிப்பில்லாமல் இந்திரனின் அரண்மனையில் பிறக்கவும் நான் விரும்பவில்லை.(177)
தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானான அண்டத்தின் தலைவனிடம் அர்ப்பணிப்பில்லாதவன் உணவில்லாமல் வெறும் காற்று மற்றும் நீரை உண்டு வாழ்ந்தாலும் அவனது துன்பம் தீராது.(178) மஹாதேவனின் பாதத்தை நினையாமல் ஒரு கணமும் வாழ விரும்பாத மனிதர்களுக்கு அறம் மற்றும் பிறவகை நெறிகள் நிறைந்த உரைகள் ஏதும் தேவையில்லை.(179) அறமற்ற, அல்லது பாவம் நிறைந்த யுகம் தோன்றும்போது, ஒருவன் மஹாதேவனிடம் தன் இதயத்தை அர்ப்பணிக்காமல் ஒரு கணத்தையும் கடத்தக்கூடாது. ஹரனிடம் அர்ப்பணிப்பு என்ற அமுதத்தைப் பருகிய ஒருவன் உலக அச்சங்களில் இருந்து விடுபடுகிறான்.(180) மஹாதேவனின் அருளைப் பெறாத ஒருவனால் ஒரு நாள், அரை நாள், ஒரு முகூர்த்தம், ஒரு க்ஷணம் {ஒரு நிமிடம்}, ஒரு லவம் {ஒரு நொடி} கூட மஹாதேவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் ஒருபோதும் வெல்ல முடியாது.(181) ஓ! சக்ரா, மஹாதேவனின் ஆணையின் பேரில் நான் உற்சாகமாக ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ ஆவேனேயன்றி, மூவுலகங்களின் அரசுரிமையை நீ கொடுக்க முன்வந்தாலும் அஃது எனக்கு உவப்பாகாது.(182)
ஹரனின் சொல்லால் நான் நாயாகவும் ஆவேன். உண்மையில், அஃது என் உயர்ந்த விருப்பத்திற்கு இணக்கமாகவே அமையும். மஹேஸ்வரனால் கொடுக்கப்படவில்லையென்றால் நான் தேவர்களின் அரசுரிமையையும் கொள்ள மாட்டேன்.(183) சொர்க்கத்தின் ஆட்சிப்பகுதிகளை நான் அடைய விரும்பவில்லை. பிரம்ம லோகத்தை நான் விரும்பவில்லை. உண்மையில், விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுவதும், முற்றாகப் பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுவதுமான தனிப்பட்ட இருப்பின் அழிவை நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஹரனின் அடிமையாக வேண்டுகிறேன்[13].(184) தலையில் மகுடம் தரித்தவனும், சந்திர வட்டிலைப்போன்ற தூய வெண்ணிற உடலைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான அந்தச் சிறப்புமிக்க மஹேசன் என்னிடம் நிறைவடையாத வரையில் உடல் படைத்த உயிரினங்கள் அனைத்திற்கும் நூறு முறை நேரும் முதுமை, மரணம், பிறவி மூலம் கிட்டும் துன்பம் அனைத்தையும் நான் உற்சாகமாகப் பொறுத்துக் கொள்வேன்.(185) முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவனும், சூரியன், சந்திரன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மூவுலகங்களில் காணப்படும் உண்மையான மற்றும் உண்மையற்ற அனைத்தின் வேராக இருப்பவனும், அல்லது அவற்றுக்கு மூலக் காரணனனும், பகுபடாத ஒரே இருப்பாக உள்ளவனுமான ருத்திரனை நிறைவடையச் செய்யாமல் இந்த அண்டத்தில் அமைதிநிலையை அடைய இயன்றவன் எவன் இருக்கிறான்?(186) என் குற்றங்களின் விளைவால் எனக்கு மறுபிறவிகள் நேருமாயின், அந்தப் பிறவிகள் அனைத்திலும் நான் பவனிடம் மட்டுமே என்னை அர்ப்பணிப்பேன் {பக்தி கொள்வேன்}" என்றேன்.(187)
[13] கும்பகோணம் பதிப்பில், "தேவேந்திரபதத்தையும், பிரம்மலோகத்தையும், மோக்ஷத்தையும் மற்றுமுள்ள எந்தப் பலன்களையும் நான் கேட்கவில்லை; சிவனுக்குத் தாஸனாயிருப்பதை மட்டுமே கேட்கிறேன்" என்றிருக்கிறது.
இந்திரன் {இந்திரனாக வந்த சிவன்}, "பரம்பொருளின் இருப்புக்கு, அல்லது காரணங்கள் அனைத்திற்கும் காரணமாக அவன் இருப்பதற்கு என்ன காரணங்களை உம்மால் சொல்ல முடியும்?" என்று கேட்டான்.(188)
உபமன்யு {நான்}, "இருப்பு மற்றும் இல்லாமையாக, வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாதவனாக, நித்தியமானவனாக அல்லது மாற்றமில்லாதவனாக, ஒருவனாக மற்றும் பலராகப் பிரம்மத்தை ஓதுபவர்கள் எவனை விளக்குகிறார்களோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(189) தொடக்கம், நடுவுநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனும், ஞானம் மற்றும் பலமாக இருப்பவனும், புலப்படாதவனும், பரமாத்மாவும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(190) பலம் அனைத்தும் வரும் இடமாக இருப்பவனும், எவராலும் படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், எந்த வித்திலிருந்தும் எழாதவனாக இருந்தாலும், அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் வித்தாக இருப்பவன் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(191) இருள் குணத்தை {தமஸ் குணத்தைக்} கடந்தவனும், சுடர்மிக்கப் பிரகாசமாக இருப்பவனும், தவங்கள் அனைத்தின் சாரமாக இருப்பவனும், அவனைப் புரிந்து கொள்ளும் நோக்கில் நாம் கொள்ளும் திறன்கள் அனைத்தையும் கடந்தவனும், துன்பம் அல்லது கவலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் அறிய வேண்டியவனும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(192) ஓ! புரந்தரா, பூதங்கள் அனைத்தின் படைப்பையும், உயிரினங்கள் அனைத்தின் எண்ணங்களையும் அறிந்தவனும், இருப்புக்கு, அல்லது அனைத்து உயிரினங்களின் படைப்புக்கு மூலக் காரணனும், எங்கும் நிறைந்திருப்பவனும், அனைத்தையும் கொடுக்கும் பலம் கொண்டவனும் எவனோ அவனையே நான் வழிபடுகிறேன்.(193)
வாதத்தால் {விவாதத்தால்} புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், சாங்கிய மற்றும் யோக அமைப்பு தத்துவங்களின் பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்திருப்பவனும், வேண்டப்படும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அனைவராலும் வழிபடப்பட்டுத் துதிக்கப்படுபவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(194) ஓ! மகவத், மகவத்தின் ஆன்மாவாக இருப்பவனும், தேவர்களின் தேவனும், உயிரினங்கள் அனைத்தின் ஆசானும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(195) உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம்மனை முதலில் படைத்தவனும், வெளியை (தன் சக்தியால்) நிறைத்து ஆதி முட்டையை இருப்புக்கு அழைத்தவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்[14].(196) நெருப்பு, நீர், காற்று, நிலம், வெளி, மனம், மஹத் என்றழைக்கப்படுவது ஆகியற்றைப் படைத்தவன் பரமனைத் தவிர வேறு எவன்?(197) ஓ! சக்ரா, எனக்குச் சொல்வாயாக; மனம், புத்தி, அகங்காரம், தன்மாத்திரைகள் மற்றும் புலன்களைச் சிவனைத் தவிர வேறு எவனால் படைக்க முடியும்? சிவனைவிட உயர்ந்தவன் வேறு எவன்?[15](198) இந்த அண்டத்தைப் படைத்தவன் பெரும்பாட்டனான பிரம்மனே என ஞானிகள் சொல்கின்றனர். எனினும், அந்தப் பிரம்மன், தேவர்களின் தேவனான மஹாதேவனைத் துதித்து, நிறைவடையச் செய்ததன் மூலமே தன் பலத்தையும், செழிப்பையும் அடைந்தான்.(199) பிரம்மன், விஷ்ணு மற்றும் ருத்திரனைப் படைத்த அந்தச் சிறப்புமிக்கவனில் இருக்கும் (படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற) அந்த உயர்ந்த பலமானது மஹாதேவனிடமிருந்து அடையப்பட்டதே. எனக்குச் சொல்வாயாக; அந்தப் பரமனுக்கு மேலானவன் வேறு எவன்?[16](200)
[14] "இங்கே மஹாதேவன் பிரம்மமாகச் சொல்லப்படுகிறான். அனைத்தையும் படைக்கக் காரணமான பொருள் வெளியாகும். பிரம்மமான அவன் தன் படைப்பு சக்தியால் வெளியை நிறைத்து ஆதி முட்டையைப் படைத்து அதற்குள் அண்டத்தின் பெரும்பாட்டனான பிரம்மனை வைத்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகங்களைப் படைத்தவரான பிரம்மதேவரையும் முதலில் படைத்தவரும், ஆகாசத்தை நிரப்பின அண்டமாயிருப்பவரும் எவரோ அவரிடம் வரங்கேட்கிறோம்" என்றிருக்கிறது.[15] "தன்மாத்திரைகள் என்பன நம்மால் திரளாக உணரப்படும் நுண்பூதங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[16] "இங்கே மஹாதேவன் பரப்பிரம்மமாகச் சொல்லப்படுகிறான். எனவே, பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரைப் பட்டவன் தன் படைப்பு சக்தியை மஹாதேவனிடம் இருந்தே அடைந்தான். இவ்வாறு மஹாதேவனே வெளிப்படாத பிரம்மமாகச் சொல்லப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகம் படைத்தவர் ப்ரம்மதேவரென்று சொல்லுகின்றனர். அவரும், தேவஸ்ரேஷ்டரான பரமசிவனை ஆராதித்துத்தான் பெரிய ஐஸ்வரியத்தை அனுபவிக்கிறார். பிரம்மவிஷ்ணுக்கள் முதலானவர்களின் உயர்ந்த ஐஸ்வரியமும் பகவானான பரமசிவனிடத்திலிருக்கிறது. மஹாதேவரான பரமேஸ்வரரைத் தவிர ஐஸ்வரியமுள்ளவர் வேறு யாரிருக்கிறார்?" என்றிருக்கிறது.
தைத்தியர்கள் மற்றும் தானவர்களில் முதன்மையானவர்களின் ஒடுக்கும் சக்தி மற்றும் அரசுரிமையின் மூலம் தீர்மானிக்கும் பலத்தைக் கொடுக்கவும், திதியின் மகன்களைத் தலைமைத்துவத்துடன் இணைக்கவும் வல்லவன் அந்தத் தேவர்களின் தேவனைத் தவிர வேறு எவன்?[17](201) திசைகளின் பல்வேறு புள்ளிகள், காலம், சூரியன், ஒளிரும் பொருட்கள், கோள்கள், காற்று, நீர், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள் ஆகியவையும் நீ மஹாதேவனிடம் இருந்து வந்தவன் என்பதை அறியும். எமக்குச் சொல்; அந்தப் பரமனை விட உயர்ந்தவன் வேறு எவன்?(202) வேள்வியைப் படைத்து, திரிபுரத்தை அழித்த காரியங்களில் மஹாதேவனைத் தவிர வேறு எவன் இருக்கிறான்? தைத்தியர்கள் மற்றும் தானவர்களை அடைந்து பகைவர்களை நொறுக்குபவனாகச் செயல்படுபவன் மஹாதேவனைத் தவிர வேறு எவன்? (203) ஓ! புரந்தரா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, சித்தர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்களால் வழிபடப்படும் ஆயிரங்கண் கொண்ட உன்னை நான் காணும்போது, போலி தத்துவங்கள் நிறைந்த பல போலி வாக்கியங்களின் தேவை என்ன இருக்கிறது? ஓ! குசிகர்களில் சிறந்தவனே, இவை அனைத்தும், தேவர்களின் தேவனான மஹாதேவனின் கருணையால் விளைந்தவையே[18].(204,205)
[17] கும்பகோணம் பதிப்பில், "தைத்யர், தானவர் முதலானவர்களுக்கும் நாதரும், பகைவரையழிப்பவரும், தேவர்க்கும் ஈஸ்வரருமாகிய சங்கரரைவிட வேறு யார் திதிக்குப் புத்ரர்களுண்டாக வரங்கொடுக்கவல்லவர்" என்றிருக்கிறது.[18] கும்பகோணம் பதிப்பில், "யாகத்தையும், திரிபுரர்களையும், தைத்யர்கள் தானவர்களில் முக்கியமானவர்களையும் உண்டாக்கியும் அழித்தும், காப்பாற்றியுமிருப்பவரும், பகைவர்களைக் கொல்பவரும் பரமேஸ்வரரைவிட வேறு யாரிருக்கிறார்? சொல். புரந்தர, தேவராஜனே, சித்தர்களாலும், கந்தர்வர்களாலும், தேவர்களாலும், ரிஷிகளாலும் பூஜிக்கப்பட்ட ஆயிரங்கண்ணனான உன்னையே கண்டபிறகு அனேக யுக்திவாதங்களைப் பொருந்தச் சொல்வதற்கு எதற்கு? தேவேந்திரனே, உன்னுடைய ஐஸ்வரியமெல்லாம் தேவர்க்குந்தேவரான ஈஸ்வரருடைய அனுக்ரகத்தினாலேதான்" என்றிருக்கிறது.
ஓ! கேசவா, சொர்க்கத்திலும், பிற காணப்படாதவற்றிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும், நீக்கமற நிறைந்திருக்கும் தலைவனையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் இந்த உலகங்களும் மஹேஸ்வரனிடம் இருந்தே வந்தன, ஜீவன் அனுபவிப்பதற்காக (அவனால்) படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[19].(206) கேட்கப்படும் அனைத்தையும் அறிந்தவர்கள், பூ, புவ, சுவ, மஹா என்ற பெயர்களில் அறியப்படும் உலகங்களிலும், லோகாலோக மலைகளுக்கு மத்தியிலும், தீவுகளிலும், மேரு மலைகளிலும், மகிழ்ச்சியை விளைவிக்கும்அனைத்துப் பொருட்களிலும், உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் மஹேஸ்வரன் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.(207) ஓ! சக்ரா, பவனைத் தவிர வேறு எந்தப் பலமிக்க வடிவையும் தேவர்களும் அசுரர்களும் காணமுடியவில்லையெனில், அதிலும் குறிப்பாக முன்னவர்கள் {தேவர்கள்} எதிர்க்கப்படும்போதும், பின்னவர்களால் {அசுரர்களால்} பீடிக்கப்படும்போதும் அவ்வடிவத்தின் பாதுகாப்பை நாடவில்லையா?(208) தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்களுக்கிடையில் பரஸ்பர அழிவை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் பகைமிக்கப் போர்கள் அனைத்திலும், அழிவடைவோரின் செயல்கள் சார்ந்த நிலைக்கு இணங்கிய பலத்தைப் பவனே அவர்களுக்குக் கொடுக்கிறான்.(209) எனக்குச் சொல்வாயாக; அந்தகன், சுக்ரன், துந்துபி, மஹிஷன், முதன்மையான யக்ஷர்கள் பலர், பலன், ராட்சசர்கள் மற்றும் நிவாதகவசர்கள் ஆகியோருக்கு வரங்களை அருளி மீண்டும் அவற்றை அவர்களிடம் இருந்து பறிக்க மஹேஸ்வரனைத் தவிர வேறு எவனால் இயலும்?(210) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசானான {தந்தையான} மஹாதேவனின் உயிர் வித்து நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்படவில்லையா? அந்த வித்தில் இருந்தே தங்க மலை {பொன்மலை} உதித்தது. இத்தகைய குணத்துடன் கூடிய வித்தைக் கொண்டவன் வேறு எவன்?[20](211)
[19] கும்பகோணம் பதிப்பில், "இந்திரனே, சேதனங்களையும், அசேதனங்களையும் தலைமையாகவுடைய உலகங்களிலுள்ளவையெல்லாம் யாருக்கும் புலப்படாதவரும், ப்ரகிருதியிலிருந்து விடுபட்டவரும், ப்ரம்மதேவர்க்கும் ஈஸ்வரருமாகிய சிவபிரானுக்காக ஏற்பட்டவையென்றும், ஸர்வவியாபியான அவரையே ஆத்மாவாகவுடையவையென்றும், அம்மகேஸ்வரரிடத்திலிருந்தே வந்தவையென்றும் அறி" என்றிருக்கிறது. இங்கே உபமன்யு கேசவன் என்று இந்திரனையே அழைக்கிறார்.[20] இந்த மறைகுறிப்பு உரையாசிரியரால் இவ்வாறு விளக்கப்படுகிறது: ஒரு காலத்தில் மஹாதேவனின் வித்துச் சுடர்மிக்க நெருப்பில் விழுந்தது. நெருப்புத் தேவனால் எரிக்க முடியாமல் அதை நீக்கினான். எனினும் இவ்வாறு அகற்றப்பட்ட அந்த வித்துத் தங்க மலையானது. இது ஹைமகிரியாகும். பர்துவான் மொழிபெயர்ப்பார் சொல்வது போல இமய மலையல்ல" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார்.
திசைகளையே தன் ஆடையாகக் கொண்டவன் என இவ்வுலகில் பாடப்படுபவன் வேறு எவன் இருக்கிறான்? மேல்நோக்கிய உயிர்வித்துடன் கூடிய ஒரு பிரம்மச்சாரி என்று சொல்லப்படுபவன் வேறு எவன்? தன் உடலில் பாதியை அன்பு மனைவிக்குக் கொடுப்பவன் வேறு எவன்? காமதேவனை அடக்கவல்லவன் வேறு எவன்?(212) ஓ! இந்திரா, தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பரமானந்தம் நிறைந்த உயர்ந்த பகுதியைக் கொண்டவன் வேறு எவன்? சுடலையையே தனது விளையாட்டு மைதானமாகக் கொண்டவன் வேறு எவன்? ஆடலுக்காகப் புகழப்படுபவன் வேறு எவன்?(213) எவனுடைய வழிபாடும், பலமும் மாற்றமில்லாததாகவே நீடிக்கிறது? பூத கணங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவன் வேறு எவன்? ஓ! தேவா, தன்னைப் போலவே பலம் நிறைந்தவர்களையும், அந்தப் பலத்தில் செருக்கு கொண்டவர்களையும் தன் துணைவர்களாகக் கொண்டிருப்பவன் வேறு எவன்?[21](214) மாற்றமில்லாதது என மூவுலகங்களாலும் மதிக்கப்பட்டு வழிபடப்படும் இடத்தை {கைலை மலையைக்} கொண்டவன் வேறு எவன்? மழையைப் பொழிந்து, வெப்பத்தைக் கொடுத்து, சக்தியால் சுடர்விடுபவன் வேறு எவன்?(215) நம் மூலிகைச் செல்வத்தை யாரிம் இருந்து நாம் பெறுகிறோம்? அனைத்து வகைச் செல்வங்களையும் தாங்குபவன் எவன்? அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட மூவுலகங்களிலும் விரும்பியவாறு விளையாடுபவன் வேறு எவன்?(216)
[21] "மஹாதேவனின் துணைவர்கள் கணங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் தேவ என்பது விளி வேற்றுமைக்காகப் பயன்படுத்தப்படுவதாகும். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் இதைத் தேவ கணம் எனத் தொகை சொல்லாகத் தவறாகக் கொண்டிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எவர் பூதங்களுடன் விளையாடுகிறார்? தேவக்கூட்டங்கள் யாருடைய பலத்தையடைந்த ஐஸ்வரியத்தினால் கர்வித்திருக்கின்றன?" என்றிருக்கிறது.
ஓ! இந்திரா, மஹேஸ்வரனே (அனைத்திற்கும்) மூலக் காரணன் என்பதை அறிவாயாக. ஞானம், (தவ) வெற்றி, சாத்திர விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றின் மூலம் யோகிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்களால் அவன் துதிக்கப்படுகிறான்.(217) வேள்விகள் செய்வது மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்வது ஆகியவற்றின் துணை மூலம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் அவன் துதிக்கப்படுகிறான். செயற்கனிகள் அனைத்தையும் கடந்தவனாக இருப்பதால் அவற்றால் அவனை ஒருபோதும் தீண்டமுடியாது. இவ்வாறு இருக்கும் அவனையே அனைத்தின் மூலக் காரணன் என்று நான் அழைக்கிறேன்.(218) அவன் திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {ஸூக்ஷ்மமாகவும்} இருக்கிறான். அவன் ஒப்பில்லாதவனாக இருக்கிறான். புலன்களால் அவனை உணர முடியாது. குணங்களுடன் கூடியவனாகவும், அவை அற்றவனாகவும் அவன் இருக்கிறான். குணங்கள் அவனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவனே குணங்களின் தலைவனாவான். மஹேஸ்வரனின் இடம் இத்தகையதே.(219) (அண்டத்தின்) வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணன் அவனே. அண்டத்தின் காரணனும், அதன் அழிவுக்குக் காரணனும் அவனே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே. அனைத்துப் பொருட்களுக்கும் தந்தை அவனே. உண்மையில், அனைத்துக்கும் காரணன் அவனே.(220)
அவன் மாற்றமில்லாதவன், அவன் வெளிப்படாதவன், ஞானம் அவனே; அறியாமை அவனே; ஒவ்வொரு செயலும் அவனே; ஒவ்வொரு விடுபடலும் அவனே; அறம் அவனே; மறம் அவனே. ஓ! சக்ரா, அனைத்துக்கும் காரணன் என என்னால் அழைக்கப்படுபவனும் அவனே.(221) ஓ! இந்திரா இரு பாலினங்களின் குறியீட்டையும் கொண்டிருக்கும் மஹாதேவனின் சின்னத்தை {லிங்கத்தைக்} காண்பாயாக. படைப்பு மற்றும் அழிவு ஆகிய இரண்டுக்கும் காரணனும், தேவதேவனுமான அந்த ருத்திரன், தன் வடிவத்தில் அண்டத்தின் படைப்புக்கான ஒரே காரணமான இரண்டு பாலினங்களின் குறியீடுகளையும் வெளிப்படுத்துகிறான்[22].(222) முன்பு எனக்கு அவனே அண்டத்தின் காரணன் என்றும், அனைத்திற்கும் காரணமான ஒருவன் என்றும் என் அன்னை சொல்லியிருக்கிறாள். ஓ! சக்ரா, ஈசனைவிட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உனக்கு விருப்பமிருந்தால் அவனது அன்பையும், பாதுகாப்பையும் பெற அவனிடம் பணிவாயாக.(223) ஓ! தேவர்களின் தலைவா, (மஹாதேவனால் வெளிப்படுத்தப்படும்) பாலினக் கலப்பின் மூலமே அண்டம் உதித்தது என்பது காணத்தக்க சான்றே. குணங்கள் கொண்டவை, குணங்கள் அற்றவை, பிரம்மன் மற்றும் பிற வித்துகளை உடனடிக் காரணங்களாகக் கொண்டவை ஆகியவற்றின் தொகையே அண்டம் என்பதை நீ அறிவாய். ஆயிரம் ஆசைகள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன், இந்திரன், ஹுதாசன் {அக்னி}, விஷ்ணு மற்றும் பிற தேவர்கள், தைத்தியர்கள் அசுரர்கள் அனைவரும் மஹாதேவனை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்று எப்போதும் சொல்கிறார்கள்.(224) அசையும் மற்றும் அசையாதன அடங்கிய அண்டத்தில் அனைவராலும் அறியப்பட்டவனும், சிறந்தவன், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவன், மங்கலமே வடிவானவன் என்று சொல்லப்படுபவனுமான அந்தத் தேவனிடம் ஆசையால் உந்தப்பட்டு, கட்டுப்பாட்டுடன் கூடிய மனத்துடன் உடைமைகள் அனைத்திலும் உயர்ந்த விடுதலையை {முக்தியைத்} தாமதமில்லாமல் கேட்கிறேன்[23].(225)
[22] கும்பகோணம் பதிப்பில், "ஓ! தேவேந்திரனே, தேவர்க்குந்தேவரும் ஸ்ருஷ்டிக்கும் ஸம்ஹாரத்திற்குங் கர்த்தாவுமாகிய ருத்ரரால் இவ்வுலகத்தில் பகத்தின் அடையாளத்தோடுகூடின லிங்கம் உண்டாக்கப்பட்டிருப்பதை நீ ப்ரத்யக்ஷமாகக் காணலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.[23] கும்பகோணம் பதிப்பில், "சராசரங்களடங்கிய உலகங்களுக்கு ஈஸ்வரரும், அறியத்தக்கவற்றுள் உத்தமரென்று கூறப்பட்டவருமான அந்தச் சங்கரரையே மனத்தில் தியானித்துப் போகத்தையும் மோக்ஷத்தையும் பற்றிக் கேட்கிறேன்" என்றிருக்கிறது. இதே பகுதியின் 184ம் ஸ்லோகத்தில் நான் முக்தியை விரும்பவில்லை, ஹரனின் அடிமையாக வேண்டும் என்று விரும்பும் உபமன்யு. 225ம் ஸ்லோகத்தில் முக்தியை வேண்டுகிறார். இந்தப் பகுதியின் நீளம் மற்றும் இதில் உள்ள சில பகுதிகளைக் கருத்தில் கொள்ளும்போது இது நிச்சயம் இடைசெருகலாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
(நான் நம்புவது என்ன என்பதை நிறுவ) வேறு காரணங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? உயர்ந்த மஹாதேவனே அனைத்துக் காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறான். மஹாதேவனைத் தவிர வேறு எந்தத் தேவனின் அடையாளத்தையும் {லிங்கத்தையும்} தேவர்கள் துதித்ததாக நாம் ஒருபோதும் கேட்டதில்லை.(226) மஹேஸ்வரன் ஏற்கப்படவில்லையென்றால், வேறு யாருடைய சின்னமாவது வழிபடப்படுகிறது, அல்லது தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறது என்று நீ எப்போதாவது கேட்டதுண்டா?(227) ஓ! இந்திரா, நீ உட்படப் பிரம்மன், விஷ்ணு மற்றும் பிற தேவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சின்னத்தை {லிங்கத்தைக்} கொண்டவனே உண்மையில் துதிக்கத்தக்க தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(228) பிரம்மன் தாமரையைத் தன் சின்னமாகக் கொண்டிருக்கிறான். விஷ்ணு சக்கரத்தைக் கொண்டிருக்கிறான். இந்திரன் வஜ்ரத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகின் உயிரினங்கள் இந்தத் தேவர்களின் சின்னங்களைத் தரிப்பதில்லை. மறுபுறம், மஹாதேவன் மற்றும் அவனது மனைவியின் சின்னங்களையே உயிரினங்கள் அனைத்தும் தரித்திருக்கின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தும் மஹேஸ்வரனுக்குச் சொந்தமானவை என்றே கருதப்பட வேண்டும்.(229) உயிரினங்களில் பெண் பாலினத்தவர் அனைவரும் உமையின் இயல்பையே தங்கள் காரணமாகக் கொண்டு உதித்தவர்கள் எனவே உமைக்குச் சொந்தமான பெண்மையின் குறியீட்டை அவர்கள் தரிக்கிறார்கள்; அதே வேளையில் உயிரினங்களில் ஆண் பாலினத்தவர் அனைவரும் சிவனில் இருந்து உதித்து, சிவனுக்குச் சொந்தமான ஆண் குறியைத் தரிக்கின்றனர். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும், மஹாதேவனின் குறியீட்டையோ, அவனது மனைவியின் குறியீட்டையோ தரிக்காமலும், அந்த உயர்ந்த தலைவனைத் தவிர வேறு காரணம் இருக்கிறது என்று சொல்பவன் மிக இழிந்தவனாகக் கருதப்பட்டு, அவனை அண்டத்தின் உயிரினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது[24].(230) ஆண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் ஈசானன் என்றும், பெண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் உமை என்றும் அறியப்பட வேண்டும். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இரு வகை வடிவங்களால் நீக்கமற நிறைந்திருக்கின்றன.(231) மஹாதேவனிடம் இருந்தே நான் வரங்களைப் பெற விரும்புகிறேன். ஓ! கௌசிகா, இதில் தவறினால் நான் அழிவையே விரும்புகிறேன். ஓ! சக்ரா, ஓ! பலனைக் கொன்றவனே, விரும்பியவாறு செல்வாயாக, அல்லது இருப்பாயாக.(232) வரங்களையோ, சாபங்களையோ நான் மஹாதேவனிடம் இருந்தே பெற விரும்புகிறேன். வேறு எந்தத் தேவனையும் நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தை வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் பெறவும் மாட்டேன்" என்றேன் {என்றார் உபமன்யு}.(233)
[24] கும்பகோணம் பதிப்பில், "தாமரை மலரையாவது, சக்கரத்தையாவது, வச்சிராயுதத்தையாவது அடையாளமாகக் கொண்டு பிரஜைகள் பிறப்பதில்லை; லிங்கத்தையும், பகத்தையும் அடையாளமாகவுடையவைகளாகப் பிறக்கின்றன. ஆதலால் பிரஜைகள் ஈஸ்வரருடையவை. பெண்களெல்லாரும் உமாதேவின் காரண ரூபத்திலிருந்து உண்டாக்கப்பட்டதனால் பகம் அடையாளமாகப் பிறந்திருக்கின்றனர். புருஷர்களனைவரும் சிவனுடைய லிங்கத்தினால் அடையாளம் செய்யப்பட்டிருப்பது பிரத்தியக்ஷமாயிருக்கிறது. சராசரங்களடங்கிய இம்மூவுலகங்களிலும் ஈசுவரரைவிட வேறு காரணம் உளதென்றும், தேவியின் அடையாளம் இல்லையென்றும் சொல்லும் கெடுமதியுள்ள மனிதன் நாஸ்திகனாவான். ஆண்குறியுள்ளவையனைத்தும் ஈஸ்வரரென்றும், பெண்குறியுள்ளவையனைத்தும் உமையென்றும் அறி" என்றிருக்கிறது. லிங்கத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை எங்கும் காண முடியாது. இது மிகப் பிற்காலத்திய இடைசெருகலாகவே இருக்கமுடியும். இந்தப் பகுதி முழுவதும் தத்துவச் செறிவற்றதாகவும், தேவ பேதம் காட்டுவதாகவும் இருக்கிறது. இது முற்றிலும் மஹாபாரதப் போக்கிற்கு முரணாக இருக்கிறது. லிங்கத்திற்கு இப்படிப்பட்ட விளக்கம் வேறு புராணங்கள் எதிலும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அநுசாஸனபர்வம் பகுதி – 14ஈ வரை உள்ள சுலோகங்கள் : 233
ஆங்கிலத்தில் | In English |