Worship offered by Upamanyu to Lord Shiva! | Anusasana-Parva-Section-14e | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : உபமன்யுவிடம் இந்திரனாக வந்தவன் சிவனாக மாறியது; அந்தக் காட்சி மாறுதலை நுணுக்கமாக விவரித்த உபமன்யு; உபமன்யு சொன்ன சிவத் துதி...
{உபமன்யு தொடர்ந்தார்}, தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, என் கடுந்தவங்களாலும் மஹாதேவனை நிறைவடையச் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தந்த துயரத்தில் மூழ்கினேன்.(234) எனினும், கண்ணிமைப்பதற்குள் என் முன்னிருந்த தெய்வீக யானையானது, அன்னம், அல்லது குருக்கத்திப்பூ, அல்லது தாமரைத் தண்டு, அல்லது வெள்ளி, அல்லது பாற்கடலைப் போன்ற வெண்ணிறம் கொண்ட ஒரு காளையாக மாறியது. பேருடலைப் படைத்திருந்த அதன் வால் கருப்பாகவும், அதன் கண்கள் தேனைப் போன்ற பழுப்பு நிறத்திலும் இருந்தன.(235,236) வஜ்ரம் போன்று கடினமானதாக இருந்த அதன் கொம்புகள் தங்க நிறத்தில் இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூர்முனைகளைக் கொண்டு அந்தக் காளை பூமியைப் பிளக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(237) அவ்விலங்கு, பசும்பொன்னாலான ஆபரணங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகம், குளம்புகள், மூக்கு, காதுகள் ஆகியன மிக அழகாக இருந்தன, அதன் இடையும் கட்டுக்கோப்பாக இருந்தது.(238) அதன் விலாப்புறங்கள் பேரழகுடன் இருந்தன, அதன் கழுத்து மிகப்பருத்திருந்தது. அதன் திமில் பேரழகுடன் ஒளிர்ந்து, தோள் பகுதி முழுவதையும் நிறைத்திருப்பதாகத் தெரிந்தது. (239) அது பனிமலைச் சிகரம் போலவோ, வானத்தில் உள்ள மேகங்களைப் போலவோ தெரிந்தது. அவ்விலங்கின் முதுகில் சிறப்புமிக்க மஹாதேவனும், அவனது மனைவியான உமையும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(240)
உண்மையில் மஹாதேவன் முழுமையாக இருக்கும் நட்சத்திரத் தலைவனை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது சக்தியில் பிறந்த நெருப்பானது, மேகங்களுக்கு மத்தியில் தோன்றும் மின்னல் கீற்றுகளின் பிரகாசத்துக்கு ஒப்பாக இருந்தது. உண்மையில் பளிச்சிடும் காந்தியால் அனைத்துப் புறங்களையும் நிறைத்தபடி ஆயிரம் சூரியர்கள் எழுந்ததைப் போலத் தெரிந்தது. அந்தப் பரமனின் சக்தியானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தது.(241,242) திசைகள் அனைத்தும் அந்தச் சக்தியால் நிறைந்திருந்ததால் என்னால் எந்தப் பக்கத்திலும் எதையும் காண முடியவில்லை. கவலையில் நிறைந்த நான் இஃது என்னவாக இருக்கும் என்று மீண்டும் சிந்தித்தேன்.(243) எனினும், அந்தச் சக்தி நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை, அந்தத் தேவதேவன் மாயையின் மூலம் திசைகள் தெளிவடைந்தன.(244) அதன்பிறகே நான் காளையின் முதுகில் அருளப்பட்டவனாக, ஏற்புடைய தோற்றத்தில், புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்த சிறப்புமிக்க ஸ்தாணு அல்லது மஹேஸ்வரனைக் கண்டேன்.(245) அந்தப் பெருந்தtவன் களங்கமற்ற குணங்களைக் கொண்ட பார்வதியுடன் இருந்தான்.
உண்மையில், எதிலும் பற்று கொள்ளாதவனும், அனைத்து வகைச் சக்திகளின் கொள்ளிடமாக இருப்பவனும், நீலமிடறு கொண்டவனுமான உயர் ஆன்ம ஸ்தாணுவை, பதினெட்டுக் கரங்களுடன், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாகக் கண்டேன்.(246) அவன் வெள்ளுடைகள் உடுத்தி, வெண் மாலைகள் சூடி, மேனியில் வெண்பூச்சுப் பூசியிருந்தான். அண்டத்தில் தடுக்கப்படமுடியாததான அவனது கொடியின் நிறம் வெள்ளையாக இருந்தது. அவனது மேனியைச் சுற்றியிருந்த நூலும் {பூணூலும்} வெள்ளையாகவே இருந்தது.(247) தனக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், ஆடுபவர்களும், பாடுபவர்களும், பல வகை இசைக்கருவிகளை இசைப்பவர்களுமான அவனது துணைவர்களால் {கணங்களால்} அவன் சூழப்பட்டிருந்தான்.(248) வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரன் அவனது மகுடமாக அமைந்து, அவனது நெற்றியில் கூதிர் கால ஆகாயத்தில் எழும் சந்திரனைப் போலத் தெரிந்தது. மூன்று சூரியர்களைப் போலத் தெரிந்த அவனது முக்கண்களின் விளைவால் அவன் காந்தியில் பளிச்சிடுபவனாகத் தெரிந்தான்.(249) அவனது உடலில் இருந்த தூய வெண்ணிற மாலை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தூய வெண்ணிற தாமரைச் சரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(250)
ஓ! கோவிந்தா, அளவிலா ஆற்றலைக் கொண்டவையும், பவனுக்குச் சொந்தமானவையும், அனைத்து வகைச் சக்திகளும் நிறைந்தவையுமான ஆயுதங்களை அவற்றின் உடல் கொண்ட வடிவங்களை நான் கண்டேன்.(251) அந்த உயர் ஆன்ம தேவன் வானவில்லுக்கு ஒப்பான நிறங்களைக் கொண்ட ஒரு வில்லை ஏந்தியிருந்தான். பிநாகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் அந்த வில் உண்மையில் ஒரு பெரும்பாம்பாகும்.(252) உண்மையில் ஏழு தலைகள், பேருடல், கூரிய பற்கள், கடும் நஞ்சு, பெருங்கழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஆண் பாம்பே அதைச் சுற்றிலும் நாண்கயிறாகக் கட்டப்பட்டிருந்தது.(253) சூரியன் அல்லது யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போன்ற காந்தியுடன் ஒரு கணையும் அதில் இருந்தது. உண்மையில் அந்தக் கணையானது, வலிமைமிக்கதும், பயங்கரமானதும், தனக்கு இணையான மற்றொன்று இல்லாததும், விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஆயுதமுமான சிறப்புமிக்கப் பாசுபதமே ஆகும். பெரும் வடிவத்தில் இருந்த அஃது இடையறாமல் நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(254,255)
அஃது {ஒரே} ஒரு காலையும், பெரிய பற்களையும், ஓராயிரம் தலைகளையும், ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் கண்களையும் கொண்டிருந்தது. உண்மையில் அது தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(256) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ! கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா, சிறப்பானதும், அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதுமான அந்த ஆயுதத்தை நான் மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.(260)
பாசுபதத்திற்கு இணையானதும், ஒருவேளை மேன்மையானதும், பெரும் பலம் வாய்ந்ததுமான புதிர்மிக்க மற்றுமோராயுதம் இருக்கிறது. நான் அதையும் கண்டேன். சூலபாணியான மஹாதேவனின் சூலம் என்று அஃது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது.(261) அந்தச் சிறப்புமிக்கத் தேவனால் ஏவப்படும் அவ்வாயுதத்தால், மொத்த பூமியைப் பிளக்கவும், கடலின் நீரை வற்ற செய்யவும், மொத்த அண்டத்தையே அழிக்கவும் இயலும்.(262) பழங்காலத்தில் யுவனாஸ்வனின் மகனும், மூவுலகங்களையும் வென்றவனும், ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, அவனது துருப்பினர் அனைவருடன் சேர்த்து {லவணாசுரன் கையில் இருந்த} அவ்வாயுதத்தாலேயே அழிக்கப்பட்டான்.(263) ஓ! கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ! கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ! கோவிந்தா, நான் அவ்வாயுதத்தை மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.
ராமரிடம் {பரசுராமரிடம்} நிறைவடைந்த மஹாதேவனால், க்ஷத்திரியர்களை அழிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கூர்முனை போர்க்கோடரியான மற்றொரு ஆயுதத்தையும் நான் கண்டேன். (பிருகு குலத்தின்) ராமர் {பரசுராமர்} இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் உலகமனைத்தின் ஆட்சியாளனாக இருந்த பெரும் கார்த்தவீரியனைப் பயங்கரமான போரில் கொன்றார்.(267,268) ஓ! கோவிந்தா, அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(269) சுடர்மிக்க முனையைக் கொண்டதும் மிகப் பயங்கரமானதுமான அந்தக் கோடரியானது, பாம்பால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாதேவனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அது மஹாதேவனின் மேனியில் சுடர்மிக்க நெருப்பின் தழலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(270)
பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனிடம் நான் எண்ணற்ற வேறு தெய்வீக ஆயுதங்களையும் கண்டேன். இருப்பினும், ஓ! பாவமற்றவனே, முக்கியக் குணங்களைக் கொண்ட சிலவற்றின் பெயரை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(271) அந்தப் பெருந்தேவனின் இடப்புறத்தில், மனோவேகம் கொண்ட அன்னப்பறவைகளுடன் பூட்டப்பட்டதும், பெரும்பாட்டனான பிரம்மன் அமர்ந்திருந்ததுமான தேர் நின்று கொண்டிருந்தது.(272) அதே புறத்திலேயே, சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களைத் தரித்து, வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்திருக்கும் நாராயணனும் தென்பட்டான்.(273) உமா தேவியின் அருகில், பயங்கர ஈட்டி {வேல்} மற்றும் மணிகளைத் தரித்தவனும், மற்றொரு அக்னியைப் போலத் தெரிந்தவனுமான ஸ்கந்தன் {முருகன்} தன் மயில் மீது அமர்ந்திருந்தான்.(274) மஹாதேவனுக்கு முன்பாக, (ஆற்றலிலும், சக்தியிலும்) இரண்டாம் சங்கரனைப் போலத் தெரிந்த நந்தி தன் சூலத்துடன் நிற்பதையும் நான் கண்டேன்.(275)
சுயம்புவான மனுவின் தலைமையிலான முனிவர்கள், பிருகுவைத் தங்களில் முதல்வராகக் கொண்ட முனிவர்கள், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.(276) பூத கணங்கள், தெய்வீகத் தாய்மார்கள்[25] அனைவரும் மஹாதேவனைச் சூழ்ந்து நின்று மதிப்புடன் அவனை வழிபட்டனர்.(277) தேவர்கள் பல்வேறு பாடல்களைப் பாடுவதன் மூலம் மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ரதந்தரம் {சாம வேத மந்திரம்} சொல்லும் பெரும்பாட்டன் பிரம்மனும் மஹாதேவனைத் துதித்தான்.(278) ஜியேஷ்ட சாமன் சொல்லும் நாராயணனும், பவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். வேத மந்திரங்களில் முதன்மையான சதருத்ரீயத்தின் துணையுடன் சக்ரனும் {இந்திரனும்} துதித்துக் கொண்டிருந்தான்.(279) உண்மையில், பிரம்மன், நாராயணன், சக்ரன் {இந்திரன்} ஆகிய உயர் ஆன்ம தேவர்கள் மூவரும் மூன்று வேள்வி நெருப்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(280) கூதிர் கால மேகங்களுக்கிடையில் தன் ஒளிவட்டத்திற்கு மத்தியில் உள்ள சூரியனைப் போல அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(281) ஓ! கேசவா, நான் வானில் கூட்டங்கூட்டமாகப் பல சூரியர்களையும், சந்திரர்களையும் கண்டேன். பிறகு அண்டத்தின் பரகுருவான அனைத்தின் சிறப்புமிக்கத் தலைவனைத் துதித்தேன்".(282)
[25] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இவர்கள், "பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா என்ற எழுவர்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
உபமன்யு தொடர்ந்தார் {உபமன்யு கிருஷ்ணனிடம் நான் தொடர்ந்தேன் என்று சொல்கிறார்}, "ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! அனைத்துப் பொருட்களின் புகலிடமே, ஓ! மஹாதேவன் என்றழைக்கப்படுபவனே, உன்னை வணங்குகிறேன். சக்ரனின் ஆடை மற்றும் வடிவம் பூண்டு, சக்ரனின் வடிவை ஏற்றுச் சக்ரனாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(283) வஜ்ரதாரியாக, பழுப்பாக, சிவப்பாக இருக்கும் உன்னை வணங்குகிறேன். எப்போதும் பிநாகம் தரித்திருப்பவனும், சங்கு மற்றும் சூலத்தை ஏந்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(284) கருப்பு உடை உடுப்பவனும், கரியவனும், சுருள் முடி கொண்டவனும், கருப்பு மான் தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், தேய்பிறையின் எட்டாம் திதிக்கு {கிருஷ்ணபக்ஷஅஷ்டமிக்குத்} தலைமை தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(285)
வெள்ளை நிறம் கொண்டவனும், வெண்மை என்று அழைக்கப்படுபவனும், வெள்ளுடை உடுத்துபவனும், அங்கமெங்கும் வெண்சாம்பல் {திருநீறு} பூசியவனும், வெண்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(286) செந்நிறம் கொண்டவனும், செவ்வாடை உடுத்துபவனும், செங்கொடிகளுடன் கூடிய செம்பதாகைகள் கொண்டவனும், செம்மாலை சூடுபவனும், செஞ்சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(287) பழுப்பு {பொன்} நிறம் கொண்டவனும், பழுப்பு ஆடை உடுத்துபவனும், பழுப்புக் கொடிகளுடன் கூடிய பழுப்புப் பதாகைகள் கொண்டவனும், பழுப்பு மாலைகளைச் சூடுபவனும், பழுப்புச் சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.தலைக்கு மேலே அரசக்குடை கொண்டவனும், முதன்மையான மகுடத்தைச் சூடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(288) மனோ வேகம் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், பாதிப் பாகத்தில் ஹாரம், தோள்வளை மற்றும் குண்டலம் அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(289) தேவர்களில் முதன்மையானவனும், முனிவர்களில் முதன்மையானவனும், இந்திரர்களில் முதன்மையானவனுமான உன்னை வணங்குகிறேன். பாதிப்பாகத்தில் தாமரை மாலை அணிந்தவனும், உடலில் பல தாமரைகளைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(290)
பாதி உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டவனும், பாதி உடலில் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், நறுமணப்பொருட்களால் பூசப்பட்டவனுமான உன்னை வணங்குகிறேன்[26].(291) சூரியனின் நிறத்தைக் கொண்டவனும், சூரியனையே போன்றவனும், சூரியன் போன்ற முகத்தைக் கொண்டவனும், சூரியனைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(292) சோமனாக இருப்பவனும், சோமனைப் போன்று மென்மையானவனும், சந்திர வட்டிலைத் தரிப்பவனும், சந்திரனின் குணத்தைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழகிய பற்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(293) கருப்பு நிறம் கொண்டவனும், வெள்ளை நிறம் கொண்டவனும், பாதி மஞ்சள் பாதி வெள்ளையான வடிவம் கொண்டவனும், பாதி ஆண், பாதிப் பெண்ணாக இருக்கும் உடலைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(294) காளையை வாகனமாகக் கொண்டவனும், முதன்மையான யானையைச் செலுத்துபவனும், அரிதாக அடையப்படுபவனும், பிறரால் அணுக முடியாத இடங்களுக்குச் செல்ல வல்லவனுமான உன்னை வணங்குகிறேன்.(295)
[26] "மஹாதேவனின் உடல் பாதி ஆணும், பாதிப் பெண்ணுமாகும். ஆண் பாகத்தில் எலும்பு மாலைகளும், பெண் பாகத்தில் மலர் மாலைகளும் உண்டு. ஆண் பாகத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்படும் அனைத்தும், பெண் பாகத்தில் அனைவராலும் விரும்பப்படும் அனைத்தும் உண்டு. மஹாதேவனின் இந்தக் குறிப்பிட்ட வடிவம் ஹரகௌரி என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கணங்களால் புகழ் பாடப்படுபவனும், பல்வேறு கணங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், கணங்கள் நடக்கும் பாதையைப் பின்பற்றுபவனும், கணங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதை நோன்பாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(296) வெண்மேக நிறம் கொண்டவனும், மாலைவேளை மேகங்களின் காந்தியைக் கொண்டவனும், பெயர்களால் விவரிக்கப்பட முடியாதவனும், (அண்டத்தில் வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத) சுய வடிவைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(297) செந்நிறத்தில் அழகிய மாலை சூடியிருப்பவனும், செவ்வாடை உடுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(298) தலையில் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடம் கொண்டவனும், அரைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்டவனும், கிரீடத்தில் பல அழகிய ரத்தினங்களைச் சூடுபவனும், தலையில் எட்டு மலர்களைக்[27] கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(299) நெருப்பு வாயும், நெருப்புக் கண்களையும் கொண்டவனும், ஓராயிரம் சந்திரர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், நெருப்பின் வடிவே ஆனவனும், அழகனும், இனிமையானவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், புதிரானவனுமான உன்னை வணங்குகிறேன்.(300)
[27] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பஞ்சபூதங்கள், மனம், புத்தி அஹங்காரங்கள்" இவை என்றிருக்கிறது.
ஆகாயத்தில் திரிபவனும், பசுக்கள் மேயும் புல்வெளிகளில் வசிப்பதை விரும்புபவனும், பூமியில் நடப்பவனும், பூமியாகவே இருப்பவனும், முடிவிலாதவனும், மங்கலம் மிகுந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(301) உடையற்றவனும் (அல்லது திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டவனும்), இருக்கும் ஒரு கணத்திலேயே ஒவ்வோர் இடத்தையும் மகிழ்ச்சிமிக்க இல்லமாக மாற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன். அண்டத்தையே இல்லமாகக் கொண்டவனும், ஞானத்தையும், இன்பத்தையும் ஆன்மாவாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(302) எப்போதும் கிரீடம் தரிப்பவனும், பெரிய தோள்வளையை அணிபவனும், கழுத்தைச் சுற்றும் மாலையாகப் பாம்பைக் கொண்டவனும், மேனியில் அழகிய ஆபரணங்கள் பலவற்றை அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(303) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனும், பாலினமற்றவனும், சாங்கியனும், யோகியுமான உன்னை வணங்குகிறேன்.(304) வேள்விகளில் வழிபடப்படும் தேவர்களின் அருளாக இருப்பவனும், அதர்வணமாக இருப்பவனும், அனைத்து வகை நோய் மற்றும் துன்பங்களைக் குறைப்பவனும், கவலைகள் யாவையும் அகற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(305)
மேகங்களைப் போல ஆழ முழங்குபவனும், பல்வேறு வகை மாயைகளைச் செய்பவனும், மண்ணுக்கும், அதில் விதைக்கப்படும் வித்துக்கும் தலைமை தாங்குபவனும், அனைத்தையும் படைத்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(306) தேவர்கள் அனைவரின் தலைவனும், அண்டத்தின் ஆசானும், காற்றின் வேகம் கொண்டவனும், காற்றின் வடிவே ஆனவனுமான உன்னை வணங்குகிறேன்.(307) பொன்மாலை அணிபவனும், மலைகளிலும், குன்றுகளிலும் விளையாடுபவனும், தேவர்களின் பகைவர் அனைவராலும் துதிக்கப்படுபவனும், கடும் வேகமும், சக்தியும் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(308) பெரும்பாட்டனான பிரம்மனின் தலைகளில் ஒன்றைத் துண்டித்தவனும், மஹிஷன் என்ற பெயர் கொண்ட அசுரனைக் கொன்றவனும், மூன்று வடிவங்களை ஏற்பவனும், அனைத்த வடிவங்களையும் தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(309) அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனும், (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், காம தேவனின் உடலை அழித்தவனும், தண்டக்கோலைத் தரிப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(310)
ஸ்கந்தனும், விசாகனும், பிராமணத் தண்டமும், பவனும், சர்வனும், அண்ட வடிவுமான உன்னை நான் வணங்குகிறேன்.(311) ஈசானனும், பகனை அழித்தவனும், அந்தகனைக் கொன்றவனும், அண்டமேயானவனும், மாயைகளைக் கொண்டவனும், புலப்படுபவனும், புலப்படாதவன் என இரண்டாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(312) உயிரினங்கள் அனைத்தின் கதியும், முதன்மையானவனும், அனைத்தின் இதயமும் நீயே. தேவர்கள் அனைவரிலும் பிரம்மன் நீயே, ருத்திரர்களில் சிவப்பும், நீலமும் {நீல லோகிதன்} நீயே.(313) அனைத்து உயிரினங்கள் ஆன்மா நீயே, சாங்கிய தத்துவத்தில் புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே. புனிதப் பொருட்கள் அனைத்திலும் ரிஷபம் {சிறந்தவன்} நீயே. மங்கலம் என்றும் அங்கங்கள் இல்லாதவன் (பகுபடாதவன்) என்றும் யோகியரால் அழைக்கப்படுபவன் நீயே.(314) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} நோற்பவர்களில் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} நீயே, அண்டத் தலைவர்களில் பெருந்தலைவன் நீயே. யக்ஷர்கள் அனைவரிலும் குபேரன் நீயே, வேள்விகள் அனைத்திலும் விஷ்ணு {முதன்மையான வேள்வி} நீயே.(315)
மலைகளில் மேரு நீயே, ஆகாயத்து ஒளிக்கோள்களில் சந்திரன் நீயே, முனிவர்களில் வசிஷ்டர் நீயே, கோள்களில் சூரியன் நீயே.(316) காட்டு விலங்குகளில் சிங்கம் நீயே, வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் காளை நீயே.(317) ஆதித்தியர்களில் விஷ்ணு (உபேந்திரன்) நீயே, வசுகளில் பாவகன் நீயே, பறவைகளில் வினதையின் மகன் (கருடன்) நீயே, பாம்புகளில் அனந்தன் (சேஷன்) நீயே.(318) வேதங்களில் சாமங்கள் நீயே, யஜுஸ்களில் சதருத்ரீயம் நீயே, யோகிகளில் சனத்குமாரர் நீயே, சாங்கியர்களில் கபிலர் நீயே.(319) மருத்துகளில் சக்ரன் {இந்திரன்} நீயே, பித்ருக்களில் தேவராதன் நீயே, (படைக்கப்பட்டவை வசிப்பதற்கான) உலகங்கள் அனைத்திலும் பிரம்மலோகம் நீயே, உயிரினங்கள் அடையும் கதிகள் அனைத்திலும் விடுதலை {முக்தி}, அல்லது மோக்ஷம் நீயே.(320) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, மலைகளில் இமய மலை நீயே, வகைகள் {வர்ணங்கள்} அனைத்திலும் பிராமணன் நீயே, கல்விமான்களான பிராமணர்கள் அனைவரிலும் தீக்ஷை {யாகதீக்ஷை} பெற்றவன் நீயே.(321)
உலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் சூரியன் நீயே, அனைத்தையும் அழிக்கும் காலன் நீயே. அண்டத்தில் உள்ள மேன்மையான சக்தி மற்றும் திறன்கள் அனைத்தும் நீயே.(322) உயர்ந்த பலத்தைக் கொண்டவன் நீயே. இதுவே என் நிச்சயமான தீர்மானமாகும். ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, ஓ! வழிபடுபவர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவனே, உன்னை வணங்குகிறேன்.(323) ஓ! யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ! நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ! பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ! தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ! மஹேஸ்வரா, நான் உன் பாதங்களைக் கழுவ நீர், அல்லது அர்க்கியம் கொடுக்க வில்லை" {என்று சொல்லி சிவனை வணங்கினேன்}.(326)
அநுசாஸனபர்வம் பகுதி – 14உ வரை உள்ள சுலோகங்கள் : 326
ஆங்கிலத்தில் | In English |