Worship offered by Krishna to Shiva! | Anusasana-Parva-Section-14f | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : சிவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற உபமன்யு; சிவனை நோக்கித் தவமிருந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் சொன்ன சிவத் துதி...
{உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார்}, ஈசானனின் புகழை இவ்வாறு பாடிவிட்டு, பெரும் அர்ப்பணிப்புடன் அவனது காலைக் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியப் பொருட்களும் கொடுத்து, அவன் இடப்போகும் எந்த ஆணைக்கும் கீழ்ப்படியத் தயாராக என் கரங்களைக் கூப்பி நின்றேன்.(327) ஓ! ஐயா, அப்போது, தெய்வீக நறுமணத்தைக் கொண்டதும், குளிர்ந்த நீர் படர்ந்ததுமான மங்கல மலர்மாரி என் தலையில் பொழிந்தது.(328) தேவ இசைக்கலைஞர்கள் தங்கள் பேரிகைகளை இசைக்கத் தொடங்கினர். ஏற்புடைய, நறுமணமிக்க இனிய தென்றல் வீசத் தொடங்கி என்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(329) அப்போது காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனும், மனைவியின் துணையுடன் கூடியவனுமான மஹாதேவன் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் தேவர்களிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்,(330) "தேவர்களே உயர் ஆன்ம உபமன்யுவின் அர்ப்பணிப்பைப் பாருங்கள். உண்மையில் அந்த அர்ப்பணிப்பு மாறாமல் நீடித்திருப்பதும், நிலையானதும், பெரியதும், முற்றிலும் மாற்றமில்லாததுமாகும்" என்றான்.(331)
சூலபாணியான அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஓ!கிருஷ்ணா, அவனுக்குத் தலைவணங்கிய தேவர்கள் மதிப்புடன் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்,(332) "ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் ஆசானே, ஓ!அனைவருக்கும் தலைவா, இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடையட்டும்" என்றனர்.(333)
பெரும்பாட்டனான பிரம்மனுடன் கூடிய தேவர்கள் அனைவராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஈசன் மற்றும் சங்கரன் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் சர்வன், புன்னகைத்தவாறே என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(334) அந்தச் சிறப்புமிக்கச் சங்கரன் {உபமன்யுவிடம்}, "ஓ! அன்புக்குரிய உபமன்யு, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஓ! முனிவர்களில் முதன்மையானவனே, என்னைப் பார். ஓ! கல்விமானான முனிவனே, என்னிடம் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட நீ என்னால் சோதிக்கப்பட்டாய்.(335) சிவனிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் நான் உன்னிடம் மிக உயர்வான நிறைவை அடைந்தேன். எனவே, உன் இதயத்தில் நீ கொண்டுள்ள எந்த விருப்பமும் கனியும் தன்மையை நான் இன்று உனக்கு அளிக்கப் போகிறேன்" என்றான்.(336)
பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் என் கண்கள் கண்ணீரால் குளமானது, (அதே உணர்ச்சியின் மூலம்) எனக்கு மயிர்ச்சிலிர்ப்பும் ஏற்பட்டது.(337) மண்டியிட்டு மீண்டும் மீண்டும் அவனை வணங்கிய நான், மகிழ்ச்சியால் அடைபட்ட குரலுடன், அவனிடம்,(338) "ஓ! சிறப்புமிக்கத் தேவா, நான் இவ்வளவு நாளும் இறந்திருந்ததாகவும், இன்றுதான் பிறந்ததாகவும் தெரிகிறது, தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானின் முன்பு இப்போது இருப்பதால் இன்றுதான் நான் என் பிறவிப்பயனை அடைந்தேன்.(339) தேவர்களும் கூட இதயப்பூர்வமான வழிபாட்டைச் செலுத்தாமல் காண முடியாத அளவிலா ஆற்றல் கொண்டவனை நான் என் கண்களால் காண்பதால் என்னைவிடப் பெருமைமிக்கவன் எவன் இருக்க முடியும்?(340) தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்தது, நித்தியமானது, அனைத்திலிருந்து வேறுபட்டது, பிறப்பில்லாதது, அறிவே ஆனது, அழிவற்றது என்று கல்வியும் ஞானமும் கொண்டோர் எதைச் சொல்வார்களோ, ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, அது தத்துவங்கள் அனைத்தின் தொடக்கமாக இருப்பவனும், அழிவற்றவனும், மாற்றமற்றவனும், தத்துவங்கள் அனைத்தையும் ஆளும் விதிகளை அறிந்தவனும், புருஷர்களில் முதன்மையானவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான உன்னுடன் அடையாளங்காணப்படுகிறது.(341,342)
வலப்புறத்தில் இருந்து பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தவனும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனும் நீயே. படைப்பைப் பாதுகாக்க இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவைப் படைத்தவன் நீயே.(343) யுக முடிவு வந்த போதும், படைப்பு மீண்டும் அழிக்கப்படும்போதும் ருத்திரனைப் படைக்கும் பலமிக்கத் தலைவன் நீயே. உன்னிலிருந்து எழுந்த அந்த ருத்திரன், பெருஞ்சக்தி கொண்ட காலன் மற்றும் (பெருங்கடலும் கொள்ள முடியாத அளவு நீரைக் கொண்ட) சம்வர்த்தக மேகம் மற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவங்களை ஏற்று அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட படைப்பை அழித்தான். உண்மையில் அண்ட அழிவுக்கான காலம் நேரும்போது, அண்டத்தை விழுங்கத் தயாராக ருத்திரன் நிற்கிறான்.(344,345) அசைவன மற்றும் அசையாதன என அனைத்தையும் கொண்ட அண்டத்தின் மூலப் படைப்பாளனான அந்த மஹாதேவன் நீயே. கல்பத்தின் முடிவில் அனைத்துப் பொருட்களையும் உன்னுள் ஈர்த்துக் கொள்பவன் நீயே.(346) அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனையும் படைத்தவன் நீயே. தேவர்களாலும் காணப்பட இயலாதவனான நீ அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நீடித்து நிறைந்திருக்கிறாய்.(347) ஓ! தலைவா, என்னிடம் நீ நிறைவடைந்திருந்தால், நீ எனக்கு வரங்களை அளிக்க விரும்பினால், ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள இந்த அர்ப்பணிப்பு எப்போதும் மாறாது நீடித்திருக்கட்டும்.(348) ஓ! தேவர்களில் சிறந்தவனே, உன் அருளின் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை நான் அடைய வேண்டுகிறேன்.(349) மேலும் நான் என் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருடன் எப்போதும் பால் கலந்த உணவை உண்ண வேண்டும். சிறப்புமிக்கவனான நீ எப்போதும் எங்கள் ஆசிரமத்தில் இருப்பாயாக" என்று கேட்டேன்.(350)
இவ்வாறு என்னால் சொல்லப்பட்டதும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆசானும், அண்டம் அனைத்தினாலும் வழிபடப்படுபவனும், சிறப்புமிக்க மஹேஸ்வரனுமான சிவன், இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான்.(351) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், "துன்ப துயரங்கள் அனைத்தில் இருந்தும் நீ விடுபட்டிருப்பாயாக, முதுமைக்கும், மரணத்திற்கும் மேலானவனாக இருப்பாயாக. பெரும் சக்தியுடனும், ஆன்ம அறிவுடன் கூடியவனாகப் புகழடைவாயாக. என் அருளின் மூலம் முனிவர்கள் எப்போதும் உன்னை நாடி வருவார்கள். உன் நடத்தை நல்லதாகவும், அறம் நிறைந்ததாகவும் இருக்கட்டும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தும் உனதாகட்டும், அண்ட அறிவைப் பெற்று, ஏற்புடைய இனிய தோற்றத்துடன் இருப்பாயாக.(353) சிதைவற்ற இளமை உனதாகட்டும், நெருப்பைப் போன்ற சக்தி உனதாகட்டும். மேலும், உனக்கு மிக ஏற்புடையதாக இருக்கும் பாற்கடலானது, நீ விரும்பிய இடத்தில் (உனது மற்றும் உன் நண்பர்களின் உணவுத் தேவைக்காகத்) தோன்றும். நீயும் உன் நண்பர்களும், தேவ அமுதம் கலந்த பாலால் தயாரிக்கப்பட்ட உணவை எப்போதும் அடைவீர்கள்.(354,355) ஒரு கல்பம் நிறைவடைந்ததும் நீ என் தோழமையை அடைவாய். உனது குடும்பம், குலம் மற்றும் உற்றார் உறவினர் வற்றாதவர்களாக இருப்பார்கள்.(356) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என்னிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பு நித்தியமானதாக இருக்கும். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நான் எப்போதும் உன் ஆசிரமத்தில் இருப்பேன்.(357) ஓ! மகனே, நீ விரும்பிய இடத்தில் வாழ்வாயாக, எந்தக் கவலையும் உனதாக வேண்டாம். ஓ! கல்விமானான பிராமணா, நீ நினைத்த மாத்திரத்தில் நான் உன் முன் தோன்றுவேன்" என்றான் {சிவன்}.(358)
இவ்வார்த்தைகளைச் சொல்லி இந்த வரங்களை அளித்தவனும், கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடியவனுமான அந்தச் சிறப்புமிக்க ஈசானன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(359) ஓ! கிருஷ்ணா, கடுந்தவங்களின் துணையுடன் இவ்வாறே நான் அந்தத் தேவர்களின் தேவனைக் கண்டேன். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தப் பெருந்தேவனால் சொல்லப்பட்ட அனைத்தையும் நான் அடைந்தேன்.(360) ஓ!கிருஷ்ணா, இங்கே வசிக்கும் சித்தர்கள், முனிவர்கள், வித்யாதரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரை உன் கண்களின் முன்பு பார்.(361) அனைத்து வகை மலர்களையும், கனிகளையும் விளைவிக்கும் இந்த மரங்களையும், செடி கொடிகளையும் பார். சுற்றிலும் இனிய நறுமணத்தைப் பொழிந்த படியே அழகிய இலைகளுடன் கூடிய அவை அனைத்துக் காலங்களுக்கும் உரிய மலர்களைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்.(362) ஓ!வலிய கரங்களைக் கொண்டவனே, உயர்ந்த தலைவனும், உயர் ஆன்ம தேவனுமான அந்தத் தேவர்களின் தேவனுடைய அருளின் மூலம் இவை அனைத்தும் தெய்வீக இயல்பைக் கொண்டிருக்கின்றன" என்றார் உபமன்யு".(363)
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அவரது வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்ன அனைத்தையும் என் கண்களாலேயே கண்டும் நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். பிறகு நான் பெருந்தவசியான அந்த உபமன்யுவிடம்,(364) "ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தேவனே வந்து மதித்த ஆசிரமத்தைக் கொண்ட அறவோன், பெரும்புகழுக்குத் தகுந்து உம்மைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(365) ஓ! தவசிகளின் தலைவரே, பலமிக்கவனும், பெரும் சங்கரனுமான அந்தச் சிவன் எனக்கும் காட்சி கொடுத்து எனக்கு நன்மையை அருள்வானா?" என்று கேட்டேன்.(366)
உபமன்யு {கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, ஓ! பாவமற்றவனே, நான் கண்டது போலவே நீயும் மஹாதேவனின் காட்சியை வெகு விரைவில் பெறுவாய்.(367) ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவனே, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, இன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து நீ மஹாதேவனின் காட்சியைப் பெறுவாய் என என் ஆன்மப் பார்வையில் நான் காண்கிறேன்.(368) ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, மஹேஸ்வரனிடமிருந்தும், அவனது மனைவியிடமிருந்தும் நீ இருபத்துநான்கு வரங்களைப் பெறுவாய். எது உண்மை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(369) உயர்ந்த ஞானத்தைக் கொண்ட அந்தப் பெருந்தேவனுடைய அருளின் மூலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நான் அறிவேன்.(370) ஆயிரக்கணக்காக இருக்கும் இம்முனிவர்களுக்கும், எண்ணற்ற வேறு பிறருக்கும் அந்தப் பெரும் ஹரன் நன்மையைச் செய்திருக்கிறான். ஓ! மாதவா, அந்தப் பெருந்தேவன் உனக்கு ஏன் நன்மையைச் செய்ய மாட்டான். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், கருணையும் நம்பிக்கையும் நிறைந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனைத் தேவர்கள் சந்திப்பது மெச்சத்தகுந்ததே. நான் சில மந்திரங்களை உனக்குச் சொல்கிறேன். நீ அவற்றைத் தொடர்ந்து சொல்வாயாக. இதன் மூலம் நீ நிச்சயம் சங்கரனைக் காண்பாய்" என்றார் {உபமன்யு}" {என்றான் கிருஷ்ணன்}.(372)
அருள்நிறைந்த விஷ்ணு {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "பிறகு நான் அவரிடம், "ஓ! மறுபிறப்பாள முனிவரே, ஓ! பெருந்தவசியே, திதியின் மகன்களைக் கூட்டங்கூட்டமாகக் கலங்கடித்த அந்தத் தேவர்கள் தலைவனை உமது அருளின் மூலம் நான் நிச்சயம் காண்பேன்.(373) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மஹாதேவனைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த எட்டு நாட்களும் ஒரு மணி நேரத்தைப் போலக் கடந்து சென்றது.(374) எட்டாம் நாளில் நான் சடங்குகளின்படி அந்தப் பிராமணரின் கரங்களில் தீக்ஷையைப் பெற்றேன். நான் தண்டத்தை அவரது கரங்களில் இருந்து பெற்றேன். பரிந்துரைக்கப்பட்டபடி தலையையும் மழித்துக் கொண்டேன். என் கரங்களில் ஓரளவுக்குக் குசப் புற்களை எடுத்துக் கொண்டேன். மரவுரியை உடுத்திக் கொண்டேன். என் மேனியெங்கும் நெய் பூசிக் கொண்டேன். முஞ்சப் புற்களை நான் என் மடியைச் சுற்றிக் கட்டிக் கொண்டேன்.(375) ஒரு மாத காலம் நான் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இரண்டாம் மாதத்தில் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களைக் காற்றை மட்டுமே உண்டு கடத்தினேன்.(376) அவ்வளவு காலமும் நான் கரங்களை உயர்த்தியபடி ஒற்றைக் காலில் நின்று கொண்டு, உறக்கத்தைத் துறந்திருந்தேன். ஓ! பாரதரே, பிறகு ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடன் தெரிந்த ஒரு ஒளியை நான் ஆகாயத்தில் கண்டேன்.(377)
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிரகாசத்துக்கு மத்தியில் நீலமலைத் திரளைப் போலத் தெரிவதும், நாரைவரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், மகத்தான் வானவில்களால் துலங்கியதும், மின்னல் கீற்றுகள் மற்றும் கண்களுடன் கூடிய இடி நெருப்புடன் கூடியதுமான ஒரு மேகத்தைக் கண்டேன்.(378) அந்த மேகத்திற்கு மத்தியில் பலமிக்க மஹாதேவன் பெரும் பிரகாசத்துடனும், தன் மனைவியான உமையின் துணையுடனும் இருந்தான். உண்மையில் அந்தப் பெருந்தேவன், தவங்கள், சக்தி, அழகு, பிரகாசம் ஆகியவற்றுடன் தன் அருளில் தன் அன்புக்குரிய மனைவியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(379) மனைவியுடன் கூடிய அந்தப் பலமிக்க மஹேஸ்வரன் அந்த மேகத்தின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். மேக அடுக்குகளுக்கு மத்தியல் சூரியனும், சந்திரனும் இருப்பதைப் போல அந்தக் காட்சி தோன்றியது.(380) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் அனைவரின் புகலிடமும், துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனுமான ஹரனைக் கண்டதால் என் உடலில் மயிர் சிலிர்ப்பு ஏற்பட்டு, என் கண்கள் ஆச்சரியத்தால் விரிவடைந்தன.(381)
மஹாதேவன் தன் தலையில் ஒரு கிரீடம் சூடியிருந்தான். அவன் சூலம் தரித்திருந்தான். புலித்தோல் உடுத்தி, தலையில் சடாமுடி தரித்து, தன் கரங்களில் ஒன்றில் (சந்நியாசிக்குரிய) தண்டத்தைக் கொண்டிருந்தான். மேலும் அவன் பிநாகத்தையும், வஜ்ரத்தையும் கொண்டிருந்தான். அவனது பற்கள் கூர்முனை கொண்டவையாக இருந்தன. தோளில் சிறந்த தோள்வளை பூட்டியிருந்தான். அவனது புனித நூலாக {பூணூலாக} ஒரு பாம்பு அமைந்திருந்தது.(382) பாதம் வரை தொங்குவதும், பலவண்ண மலர்களாலானதுமான சிறந்த மாலை அவன் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், கூதிர் கால மாலைப் பொழுதில் மிகப் பிரகாசமாகத் தெரியும் சந்திரனைப் போல நான் அவனைக் கண்டேன்.(383) பல்வேறு வகைப் பூத கணங்களால் சூழப்பட்டிருந்த அவன், பளிச்சென்ற பிரகாசத்துடன் பார்க்கக் கடினமான கூதிர் காலச் சூரியனைப் போலத் தெரிந்தான்.(384) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவும், வெண்செயல்களும் கொண்டவனும், காளையில் அமர்ந்திருந்தவனுமான அந்தத் தேவனைச் சுற்றிலும் ஆயிரத்துநூறு {1100} ருத்திரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.(385)
ஆதித்தியர்கள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் சாத்திரங்களில் உள்ள பாடல்களைச் சொல்லி அந்த அண்டத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(386) அதிதியின் மகன்களான இந்திரன் மற்றும் அவனது தம்பியான உபேந்திரன் {விஷ்ணு} ஆகிய இருவரும், பெரும்பாட்டன் பிரம்மனும் என இவர்கள் அனைவரும் பவனின் முன்னிலையில் ரதந்தரச் சாமத்தைப் பாடினார்கள்.(387) எண்ணற்ற யோக ஆசான்கள், பிள்ளைகளுடன் கூடிய முனிவர்கள், தெய்வீக முனிவர்கள், பூமாதேவி, (பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடைப்பட்ட) வானம், நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, பருவங்கள், இரவு, வருடங்கள், க்ஷணங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள், தெய்வீக அறிவியல்கள், அறிவின் கிளைகள், வாய்மையை அறிந்தவர்கள் ஆகியோர் பெருந்தகப்பனும் யோகத்தை அளித்தவனுமான அந்த உயர்ந்த ஆசானுக்குத் தலை வணங்கினர்.(388-390)
சனத்குமாரர், வேதங்கள், வரலாறுகள், மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(391) மனுக்கள் எழுவர், சோமன், அதர்வணங்கள், பிருஹஸ்பதி, பிருகு, தக்ஷன், காசியபர், வசிஷ்டர், காசியர்,(392) ஓ! யுதிஷ்டிரரே, சந்தங்கள், தீக்ஷை, வேள்விகள், தக்ஷிணை, வேள்வி நெருப்புகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஹவிஸ் (தெளிந்த நெய்) வேள்விக்குத் தேவையான பொருட்கள் என உடல்கொண்ட வடிவங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தோர் அனைவரையும் நான் கண்டேன்.(393) லோகபாலர்கள், ஆறுகள், பாம்புகள், மலைகள், தெய்வீகத் தாய்மார், தேவர்களின் மனைவிமார் மற்றும் மகள்கள்,(394) ஆயிரமாயிரமாக, கோடிக்கணக்கில் இருந்த தவசிகள் ஆகியோர் அமைதியான ஆன்மா கொண்ட அந்தப் பலமிக்கத் தலைவனுக்குத் தலைவணங்குவதை நான் கண்டேன். மலைகள், பெருங்கடல்கள், திசைகள் ஆகியனவும் அதையே செய்தன, கந்தர்வர்கள், இசையில் திறம்பெற்ற அப்ரசரஸ்கள் ஆகியோர்,(395) அற்புதம் நிறைந்தவனான பவனின் புகழை தெய்வீகத் தொனியில் பாடிக் கொண்டிருந்தனர். வித்யாதரர்கள், தானவர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள்,(396) அசைவன, அசையாதன எனப் படைக்கப்பட்டவை அனைத்தும் எண்ணத்ததாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பலமிக்கத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். தேவர்கள் அனைவரின் தலைவனான சர்வன் என் முன் தோன்றி, மகிமை அனைத்துடன் அமர்ந்திருந்தான்.(397) என் கண் முன்னே மகிமையுடன் அமர்ந்திருக்கும் ஈசானனைக் கண்டு, பெரும்பாட்டன் மற்றும் சக்ரனுடன் கூடிய மொத்த அண்டமும் என்னைப் பார்த்தது.(398) எனினும், மஹாதேவனைப் பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை.
அப்போது அந்தப் பெருந்தேவன் என்னிடம், "ஓ! கிருஷ்ணா, பார், என்னிடம் பேசுவாயாக.(399) நீ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முறை என்னைத் துதித்திருக்கிறாய். மூவுலகங்களிலும் எனக்கு உன்னைவிட அன்புக்குரியவன் வேறு எவனும் கிடையாது" என்றான்.(400)
நான் அவனுக்குத் தலைவணங்கியதும், அவனது மனைவியான உமாதேவி என்னிடம் நிறைவடைந்தாள். பிறகு, பெரும்பாட்டனான பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் அந்தப் பெருந்தேவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்".(401)
அருள் நிறைந்த விஷ்ணு சொன்னான், "நான் மஹாதேவனிடம், ஓ! அனைத்துப் பொருட்களின் நித்திய மூலமா உன்னை வணங்குகிறேன். வேதங்களின் தலைவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள். தவம் என்றும், சத்வம் என்றும், ரஜஸ் என்றும், தமஸ் என்றும், வாய்மை என்றும் அறவோர் உன்னைச் சொல்கிறார்கள்.(402) பிரம்மன் நீயே, ருத்திரன் நீயே, வருணன் நீயே, அக்னி நீயே, மனு நீயே, பவன் நீயே, தாத்ரி நீயே, தாஷ்டிரி நீயே, விதாத்ரி நீயே, அனைத்துப் பொருட்களின் பலமிக்க ஆசான் நீயே, எங்கும் இருப்பவன் நீயே.(403) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் உன்னில் இருந்தே எழுந்தன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டன.(404) புலன்கள், மனம், உயிர் மூச்சுகள் {வாயுக்கள்}, ஏழு வேள்வி நெருப்புகள், நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவையே புகலிடமாகக் கொண்டோர், துதிக்கப்படுபவர்களும், துதிகளுக்குத் தகுந்தவர்களுமான தேவர்கள் அனைவரையும்விட மேன்மையானவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள்.(405)
ஓ! சிறப்புமிக்கவனே, வேதங்களும், வேள்விகளும், சோமன், தக்ஷிணை, பாவகன், ஹவிஸ் மற்றும் வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நீயே.(406) வேள்வியால் பெறும் தகுதி {புண்ணியம்}, பிறர் கொடுக்கும் கொடைகள், வேத கல்வி, நோன்புகள், கட்டுப்பாடுடையோரின் ஒழுக்க நெறிகள், பணிவு, புகழ், செழிப்பு, காந்தி, மனநிறைவு, வெற்றி ஆகியன உன்னிடம் வழிநடத்திச் செல்லவே நீடித்திருக்கின்றன.(407) ஓ!சிறப்புமிக்கவனே, ஆசை, கோபம், அச்சம், காமம், செருக்கு, மயக்கம், வன்மம், துன்பம், நோய்கள் ஆகியன உனது பிள்ளைகளே.(408) உயிரினங்கள் செய்யும் செயல்களும் நீயே, அந்தச் செயல்களால் விளையும் இன்பதுன்பங்களும் நீயே, இன்பதுன்பமற்ற நிலைகளும் நீயே, ஆசையின் அழிவில்லாத வித்தான அறியாமை நீயே, மனத்தின் உயர்ந்த மூலம் நீயே, பலம் நீயே, நிலைபேறும் நீயும்.(409) வெளிப்படாதவன் நீயே, பவனன் நீயே, புலப்படாதவன் நீயே, ஆயிரங்கதிர் சூரியன் நீயே, பிரகாசமான சித் நீயே, தத்துவங்கள் அனைத்திலும் முதல் தத்துவம் நீயே, உயிரின் புகலிடம் நீயே.(410)
மஹத், ஆன்மா, புத்தி, பிரம்மன், அண்டம், சம்பு, சுயம்பு, ஆகிய சொற்களின் மூலமும், (வேதங்களில்) அடுத்தடுத்து தோன்றும் இதுபோன்ற பிற சொல்களின் மூலமும், மஹத்துடனும், ஆன்மாவுடனும் உனது இயல்பு (வேதங்களை அறிந்த மனிதர்களால்) அடையாளம் காணப்படுகிறது. உண்மையில் இவையாவும் நீயெனக் கருதியே கல்விமானான ஒரு பிராமணன், உலகத்தின் வேராக இருக்கும் அறியாமையை வெல்கிறான்.(411,412) உயிரினங்கள் அனைத்தின் இதயம் நீயே, க்ஷேத்ரக்ஞன் என்று முனிவர்களால் துதிக்கப்படுபவன் நீயே. உன் கரங்களும் பாதங்களும் அனைத்து இடங்களிலும் நீண்டிருக்கின்றன, உன் கண்களும், தலையும், முகமும் எங்கும் இருக்கின்றன. அண்டத்தில் எங்கும் உள்ளதைக் கேட்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.(413) சூரியனின் விளைவால் எழும் நிமிஷங்கள் மற்றும் காலத்தின் வேறு பிரிவுகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கனியாக இருப்பதும் நீயே.(414) (உயர்ந்த சித்தின்) மூலப் பிரகாசம் நீயே. புருஷன் நீயே, அனைத்துப் பொருட்களில் வசிப்பவன் நீயே. வெற்றியின் யோக குணங்களான நுட்பம், திரள், கனி, மேன்மை, பிரகாசம் மற்றும் மாற்றமில்லாமை ஆகியவை நீயே.(415)
புத்தி, நுண்ணறிவு, மற்றும் உலகங்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்தே இருக்கின்றன. தியானத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவர்களும் வாய்மையில் அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களும் உன்னையே நாடுகிறார்கள், உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்.(416) மாற்றமில்லாதவனாக, அல்லது அனைத்து இதயங்களிலும் வசிப்பவனாக, அல்லது உயர்ந்த பலம் கொண்டவனாக, அல்லது ஆதி புருஷனாக, அல்லது தூய ஞானமாக, அல்லது பிரகாசமிக்கச் சித்தாக, அல்லது நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக உன்னை அறிபவர்கள் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்களே. உண்மையில் அத்தகைய மனிதர்கள் புத்தியைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.(417) (மஹத், அகங்காரம், தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் நுட்பமான ஐம்பூதங்கள் ஆகியவை அடங்கிய) ஏழு நுட்பமான காரியங்கள், (அனைத்துமறிந்த நிலை, நிறைவு அல்லது முழுமை, தொடக்கமற்ற ஞானம், சார்பில்லா நிலை {சுதந்திரம்}, எக்காலத்திலும் பழுதில்லாததும், முடிவற்றதுமான பலம் ஆகிய) ஆறு குணங்கள், போலிக் கருத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட யோகத்தை அறிதல் ஆகியவற்றின் மூலம் ஞானம் கொண்ட மனிதன், பெரியவனான உனக்குள் நுழைவதில் வெல்கிறான்" என்றேன்.(418)
ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, துன்ப துயரங்களை அகற்றுபவனான பவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதும், அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமானது (என் வார்த்தைகளில் உள்ள உண்மையை அங்கீகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக) சிங்க முழக்கம் செய்தது.(419) அங்கிருந்த எண்ணற்ற பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், பல்வேறு ராட்சசர்கள், பூத கணங்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அந்தப் பெருந்தேவனுக்குத் தலைவணங்கினர்.(420) அப்போது பெரும் நறுமணத்தைக் கொண்ட தெய்வீக மலர்கள் என் தலையில் பொழிந்தன, அந்த இடத்தில் இனிமையான தென்றல் வீசியது.(421) பிறகு, அண்டத்தின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், பலமிக்கவனுமான சங்கரன், உமாதேவியையும், தேவர்கள் தலைவனையும், என்னையும் கண்டு, என்னிடம்,(422) "ஓ! கிருஷ்ணா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ எம்மிடம் பெரும் அர்ப்பணிப்பில் நிறைந்திருக்கிறாய் என்பதை நாம் அறிவோம். உன் நன்மைக்கானதைச் செய்வாயாக. நான் உன்னிடம் கொண்ட அன்பும், பாசமும் பெரியதாகும்.(423) நீ எட்டு வரங்களைக் கேட்பாயாக.[28] ஓ! கிருஷ்ணா, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, அவற்றை நான் உனக்கு நிச்சயம் தருவேன். ஓ! யாதவர்களின் தலைவா, அவை எவை என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ விரும்புபவற்றைச் சொல்வாயாக. அவை அடைவதற்கு மிகக் கடினமானவையாக இருந்தாலும் அவற்றை நிச்சயம் நீ பெறுவாய்" என்றான் {சிவன்}.(424)
[28] "369ம் சுலோகத்தில் கிருஷ்ணன் மஹாதேவனிடம் இருந்து இருபத்து நான்கு வரங்களைப் பெறுவான் என்று உபமன்யு சொல்கிறார். மஹாதேவனிடம் இருந்து எட்டும், உமையிடம் இருந்து எட்டும் பெற்றான் எனச் சொற்களை விரிவாக்கி உரையாசிரியர் இங்கே விளக்குகிறார். மொழிநடையில் அவ்வாறு இல்லையாதலால் இது வலிந்து கூறப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 14ஊ வரை உள்ள சுலோகங்கள் : 424
ஆங்கிலத்தில் | In English |