The old lady turned to be a maiden! | Anusasana-Parva-Section-20 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 20)
பதிவின் சுருக்கம் : அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறியது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பெண்மணி, "அப்படியே ஆகட்டும்" என்றாள். பிறகு அவள் (முனிவரின் உடலில் பூசுவதற்காக) எண்ணெயும் {தைலமும்}, தூய்மைச்சடங்கின் போது அணியும் துண்டையும் கொண்டு வந்தாள்.(1) அந்தத் தவசியால் அனுமதிக்கப்பட்ட அவள், தான் கொண்டு வந்த நறுமணத் தைலத்தை அவரது உடல்முழுவதும் பூசினாள்.(2) மென்மையாக {தைலம் கொண்டு} பூசப்பட்ட அந்த முனிவர், பூச்சு முடிந்ததும், தூய்மைச் சடங்கிற்கான அறைக்கு {மஞ்சனமாடுமிடத்திற்குச்} சென்றார். அங்கே அவர் பெருங்காந்தியைக் கொண்டதும், சிறந்ததுமான புதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(3) முனிவர் தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த முதிய பெண்மணி தன் மென்மையான கரங்களால் இனிமையாகத் தீண்டி அவரது உடலைக் கழுவத் தொடங்கினாள்.(4) முனிவரின் தூய்மைச்சடங்கு காரியத்தில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மிக ஏற்புடைய தொண்டைச் செய்தாள். கடும் நோன்புகளைக் கொண்ட அம்முனிவர், தம்மைக் கழுவிய வெண்ணீருக்கும், தம்மைக் கழுவுவதில் ஈடுபடும் மென்கரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறியதால் மொத்த இரவும் இவ்வாறே கழிந்தது. நீராடலில் இருந்து எழுந்த முனிவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்[1].(5,6) கிழக்கு அடிவானில் சூரியன் எழுவதை அவர் கண்டார்.
[1] கும்பகோணம் பதிப்பில், "அம்முனிவர் அந்த ஆஸனத்தில் உட்கார்ந்த பிறகு இனிமையாகக் கைபடும்படி அந்த ஸ்திரீ மெதுவாக அவருக்கு ஸ்நானம் செய்வித்தாள்; அம்முனிவருக்குத் தேவலோகத்திய உபசாரங்களை முறைப்படி செய்தாள். மிக்க ஸுகஉஷ்ணமான வெந்நீராலும், அவள் கைபட்ட ஸுகத்தினாலும் உண்டான நித்திரையினால் அவ்விரவு முழுவதும் கடந்து போனதையும் அம்மகாமுனிவர் அறியாமற்போனார். பிறகு, அவர் எழுந்து மிக்க ஆச்சர்யத்துடன் கீழ்த்திசையில் ஆகாயத்தில் ஸூர்யன் உதயமாயிருந்ததைக் கண்டார்" என்றிருக்கிறது.
இதனால் ஆச்சரியமடைந்த அவர், தமக்குள்ளேயே, "இஃது உண்மையா? என் புத்திமயக்கமா?" எனக் கேட்டுக் கொண்டார்.(7) அம்முனிவர் ஆயிரங்கதிர் தேவனை {சூரியனை} முறையாக வழிபட்டார். அது முடிந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்த முதிய பெண்மணி, அமுதத்தின் சுவைக்கு ஒப்பான சுவைமிக்க உணவை அம்முனிவருக்குப் படைத்தாள்.(8) உணவு சுவைமிக்கதாக இருந்ததன் விளைவால் முனிவரால் அதிகம் உண்ண முடியவில்லை. அவர் சிறிதளவே உட்கொண்டாலும் பகல் கடந்து மாலை வந்தது.(9) அப்போது அந்த முதிய பெண்மணி படுக்கைக்குச் சென்று உறங்கும்படி முனிவரிடம் கேட்டுக் கொண்டாள். முனிவருக்கு ஒரு சிறந்த படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, மற்றொரு படுக்கையில் அவள் படுத்துக் கொண்டாள்.(10) முதலில் முனிவரும், அந்த முதிய பெண்ணும் வெவ்வேறு படுக்கையில் படுத்திருந்தாலும், நள்ளிரவில் அந்தப் பெண் தன் படுக்கையைவிட்டு எழுந்து முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(11)
அஷ்டவக்கிரர், "ஓ! அருளப்பட்ட பெண்ணே, மாற்றான் மனைவியுடன் பாலினக் கலவியில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. உத்தமியே, என் படுக்கையைவிட்டுச் செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக, நீயே விரும்பி இதிலிருந்து விலகுவாயாக" என்றார்[2].(12)
[2] "இறுதி சொற்களுக்கு, ‘உன் படுக்கைக்குசென்று படுப்பாயாக’ என்றும் பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தப் பெண், "ஓ! கல்விமானான பிராமணரே, நான் ஆசையால் {காமத்தால்} கொடுமைப்படுத்தப்படுகிறேன் {காமக்கொடுமையிலிருக்கிறேன்}. என் அர்ப்பணிப்பை {பக்தியைக்} குறித்துக் கொள்வீராக. என்னை அன்புடன் அழைக்க மறுப்பதால் நீர் பாவத்தை இழைக்கிறீர்" என்றாள்.(15)
அஷ்டவக்கிரர், "தான்விரும்பியபடி செயல்படும் மனிதன் பல்வேறு பாவங்கள் இழுத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாட்டின் மூலம் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவல்லவனாக இருக்கிறேன். உத்தமியே, உன் படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக" என்றார்.(16)
அந்தப் பெண், "நான் உமக்குத் தலைவணங்குகிறேன். எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும். ஓ பாவமற்றவரே, நான் உம்முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறேன், நீர் எனது புகலிடமாவீராக.(17) உண்மையில், உமது துணைவியாக இல்லாத ஒருத்தியுடன் கலவியில் ஈடுபடுவதைப் பாவமாகக் கண்டீரெனில், நான் என்னை உமக்குக் கொடுக்கிறேன். ஓ! மறுப்பிறப்பாளரே, திருமணத்திற்காக என் கரத்தை நீர் ஏற்பீராக.(18) நீர் எப்பாவமும் இழைத்தவராக மாட்டீர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். நானே எனக்கு அதிகாரி என்பதை அறிவீராக.[3] இதில் பாவமேதும் இருந்தால், அஃது என்னை மட்டுமே சேரட்டும். நீர் என்னை ஏற்பீராக" என்றாள்.(19)
[3] கும்பகோணம் பதிப்பில், "எனக்குக் கணவனில்லாமல் நானே ஸ்வதந்திரமாயிருப்பவளென்றறியும். அப்படிப்பட்டவளுக்கு எது தர்மமோ அது எனக்கிருக்கட்டும். நான் உம்மிடத்தில் மனம் வைத்தவளாகவும், யாருக்கும் உட்படாதவளாகவும் இருக்கிறேன். என்னை நீர் அடையலாம்" என்றிருக்கிறது.
அஷ்டவக்கிரர், "ஓ! உத்தமியே, நீயே உனக்கு அதிகாரியாக இருப்பது எவ்வாறு? இதன் காரணத்தை எனக்கு நீ சொல்வாயாக. மூவுலகிலும் தனக்குத்தானே தலைவியாகக் கருதத்தக்க ஒரு பெண்ணாவது இல்லையே.(20) கன்னிகையாக இருக்கும்போது அவளைத் தந்தை பாதுகாக்கிறார். இளமையில் இருக்கும்போது அவளைக் கணவன் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். பெண்கள் தாங்கள் வாழுங்காலம் வரை ஒரு போதும் சார்பற்றவர்களாக {சுதந்திரமானவர்களாக} இருப்பதில்லை" என்றார்[4].(21)
[4] கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும் அஷ்டவக்கிரர் பேசுவதாக நீள்கிறது. அது பின்வருமாறு: "கிழவியாயிருப்பவளைக் கன்னிகையென்று நான் நம்பவில்லை. குற்றமற்றவளே. எனக்கு உன் மேல் ஆசையுமில்லை" என்று முடிகிறது.
அந்தப் பெண், "கன்னிப்பருவத்தில் இருந்தே நான் பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகிறேன். இதில் ஐயமேதும் கொள்ளாதீர். நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீராக. ஓ! பிராமணரே, நான் உம்மிடம் கொண்ட இந்த அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொன்றுவிடாதீர் {என் ஆசையைக் கெடாதீர்}" என்றாள்.(22)
அஷ்டவக்கிரர், "நீ என்னை விரும்புவதைப் போலவே நானும் உன்னை விரும்புகிறேன். எனினும், தீர்க்க வேண்டிய இந்தக் கேள்வியுமிருக்கிறது. என் விருப்பங்களுக்கு நான் வசப்படுவதால், முனிவரின் {வதான்யரின்} விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டவனாகக் கருதப்படுவேனா?(23) இஃது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. இது நன்மைக்கு வழிவகுக்குமா?". {இந்தக் கணத்தில் கிழவி குமரியாகிறாள்}.
{அஷ்டவக்கிரர் தமக்குள்ளேயே}, "இதோ அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னி இருக்கிறாள்.(24) இவள் பேரழகுடன் இருக்கிறாள். இவ்வளவு காலம் இவளது அழகை ஏன் முதுமை மறைத்திருந்தது? தற்போது ஓர் அழகிய கன்னியாகத் தெரிகிறாளே. இதன் பிறகு இவள் என்ன வடிவத்தை ஏற்கப்போகிறாள் என்பதை அறிய முடியாது[5].(25) ஆசைகள் மற்றும் விருப்பங்களிடம் நான் கொண்டுள்ள கட்டுப்பாட்டையோ, நான் ஏற்கனவே அடைந்திருக்கும் மனநிறைவிலிருந்தோ நான் ஒருபோதும் பிறழமாட்டேன். அத்தகைய பிறழ்வு நன்மையானதாகத் தெரியவில்லை. நான் வாய்மையுடனே என்னை ஒருங்கிணைத்துக் கொள்வேன்" {என்றார்}[6] {என்றார் பீஷ்மர்}.(26)
[5] "எனக்கெது சிறந்ததாக இருக்கும்? வதான்யரின் மகளை விரும்பலாமா? இந்தப் பெண்ணை எடுத்துக் கொள்ளலாமா? என உரையாசிரியர் விளக்குகிறார். இக்கருத்து வலிந்து பெறப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] கும்பகோணம் பதிப்பில், "இவள் சிறந்த ஆபரணங்களும், உடைகளுமுள்ள கன்னிகையாகவே என்னிடம் வந்திருக்கிறாள். ஆனால், இவளுடைய இந்தச் சிறந்த ரூபம் மூப்பையடைந்திருந்ததெப்படி? இப்போது திரும்பவும் இப்படிப்பட்ட கன்னிகை வடிவம் வந்திருக்கிறது. இதற்கு மேலென்னாகுமோ? எவ்வகையிலும் நியமம் தவறுவதில் எனக்கு இஷ்டமில்லை. நான் ஸத்யமாகவே இவளை க்ரஹிக்க வேண்டும்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார் என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் :26
ஆங்கிலத்தில் | In English |