The marriage of Ashtavakra! | Anusasana-Parva-Section-21 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 21)
பதிவின் சுருக்கம் : அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறிய வட திசை தேவி...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அஷ்டவக்கிரர் பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும் அந்தப் பெண் அஷ்டவக்கிரரின் சாபத்திற்கு ஏன் அஞ்சவில்லை என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் அஷ்டவக்கிரர் அந்த இடத்தில் இருந்து திரும்பி வந்தது எவ்வாறு?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அஷ்டவக்கிரர் அவளிடம், "நீ இவ்வாறு உன் வடிவை மாற்றிக் கொண்டது எவ்வாறு? உண்மையற்ற எதையும் நீ சொல்லக்கூடாது. இதை நான் அறிய விரும்புகிறேன். ஒரு பிராமணன் முன்பு உண்மையைப் பேசுவாயாக" என்றார்.(2)
அந்தப் பெண், "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சொர்க்கத்திலோ, பூமியிலோ எங்கு நீர் வசித்தாலும், {எங்கும்} பாலினங்களுக்கிடையிலான கலவி ஆசை காணப்படுகிறது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, இவை யாவும் என்ன என்பதைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(3) ஓ! பாவமற்றவரே, நீர் சரியாக இருக்கிறீரா என்பதைச் சோதிக்க நான் வகுத்த சோதனையிது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, உமது மனோபலத்தால் உலகங்கள் அனைத்தையும் நீர் ஆடக்கிவிட்டீர்.(4) நான் வட திசைப்புள்ளியின் உடல் வடிவம் என்பதை அறிவீராக. நீர் பெண்மையின் மென்மையைக் கண்டீர். முதிய பெண்களும் கூடக் கலவியாசையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.(5) பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறார்கள். சிறப்புமிக்கவரான நீர் இங்கு வந்த நோக்கத்தை நான் அறிவேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமக்கான மணப்பெண்ணின் தந்தையும், முனிவருமான வாதன்யர், நான் உமக்குப் போதிக்கும் வகையில் உம்மை இங்கே அனுப்பி வைத்தார். அம்முனிவரின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் ஏற்கனவே உமக்குப் போதித்துவிட்டேன்[1].(7) நீர் பாதுகாப்பாக இல்லம் திரும்புவீர். நீர் திரும்பிப் பயணிக்கையில் உமக்குச் சிரமமேற்படாது. நீர் தேர்ந்தெடுத்த பெண்ணையே நீர் மனைவியாக அடைவீர். அவள் உமக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(8) ஆசையினாலே நான் உம்மை வேண்டினேன். நீர் எனக்குச் சிறந்த பதிலைக் கொடுத்தீர். பாலினக்கலவியாசையானது மூவுலகிலும் கடக்கப்பட முடியாததாகும்[2].(9) இத்தகைய தகுதியை அடைந்த நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வீராக. (என்னிடம் இருந்து) வேறு என்ன கேட்க விரும்புகிறீர்? ஓ! அஷ்டவக்கிரரே, வாய்மைக்குப் பொருந்தும் வகையில் அதை நான் உமக்குச் சொல்வேன்.(10) ஓ! மறுபிறப்பாள தவசியே, உம் நிமித்தமாக முனிவர் வதான்யரால் நான் முதலில் நிறைவடையச் செய்யப்பட்டேன் {வதான்யரால் நான் வேண்டிக் கொள்ளப்பட்டேன்}. அவரைக் கௌரவிக்கவே இவை யாவற்றையும் நான் உமக்குச் சொன்னேன்" என்றாள் {வடதிசைதேவி}".(11)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்னர், "பெண்ணானவள் ஸுகத்தில் மிகப் பற்றுள்ளவள்; இன்சொல்லினாலும் விட்டுப் பிரியாமலிருப்பதனாலும் சிறந்த ஆடை முதலியவற்றினாலும் அதிகமாக நெருங்காமலிருப்பதானாலும், ஒற்றுமையினாலும் காப்பாற்றப்படுகிறாள். புண்ணியத் திதிகள் இல்லாத போதும் சாஸ்திரத்தினால் விலக்கப்படாத இரவுகளிலும், ருது காலமில்லாவிடினும் சேரலாம். இராத்திரி காலத்தில் அதிக நியமம் வேண்டாம். நியமத்தை முழுதும் விடவும் கூடாது. நீர் க்ஷேமமாக உமது இல்லம் செல்லலாம்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணரே, அந்தக் கன்னிகையை நீர் அடையப் போகிறீர். அவள் புத்ரஸந்ததியுள்ளவளாவாள். நீர் என்னைச் சபதத்தோடு கேட்டீர். அதனால், உமக்குப் பெண்களின் இயற்கையைப் பற்றிய இந்த மறுமொழி நான் சொன்னேன். பிராம்மணன் மேலாணையானது இம்மூவுலகங்களிலுமுள்ள எவரும் எக்காலமும் தாண்டக்கூடாதது. நீர் செல்லலாம். உமது காரியமாயிற்று" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மறுபிறப்பாளருமான அஷ்டவக்கிரர் மதிப்புமிக்க மனோநிலையில் தமது கரங்களைக் கூப்பினர். பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தாம் திரும்பிச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டார். வேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவர் தமது ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்.(12) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, அவர் தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, தம் உற்றார் உறவினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பிராமணரான வதான்யரை நோக்கி முறையான வழியில் சென்றார்.(13) வழக்கமான விசாரிப்புகளுடன் வதான்யரால் நல்வரவு கூறப்பட்ட முனிவர் அஷ்டவக்கிரர், (தாம் வடக்கே பயணம் மேற்கொண்டிருந்தபோது) கண்ட அனைத்தையும் நன்கு நிறைவடைந்த இதயத்துடன் உரைத்தார்.(14)
அவர், "உம்மால் ஆணையிடப்படியே நான் கந்தமாதன மலைகளுக்குச் சென்றேன். அம்மலைகளுக்கு வடக்கே கிடக்கும் பகுதியில் மிக மேன்மையான தேவி ஒருத்தியைக் கண்டேன்.(15) அவள் அன்போடு என்னை வரவேற்றாள். நான் கேட்க அவள் உமது பெயரைச் சொன்னாள், மேலும் பல்வேறு காரியங்களில் போதனையும் செய்தாள். ஓ! தலைவரே, நான் அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அங்கிருந்து திரும்பி வந்தேன்" என்றார்.(16)
இவ்வாறு சொன்ன அவரிடம் {அஷ்டவக்கிரரிடம்} வதான்யர், "நல்ல நட்சத்திர நாளில் உரிய சடங்குகளுடன் என் மகளின் கரத்தைப் பெறுவாயாக. என் பெண்ணுக்கு மணமகனாக நீயே தகுந்தவனாவாய்" என்றார்".(17)
பீஷ்மர் தொடர்ந்தார், "அஷ்டவக்கிரர், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்தப் பெண்ணின் கரத்தை ஏற்றார். உண்மையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அந்த நீதிமிக்க முனிவர் இன்பத்தால் நிறைந்தார்.(18) அந்த அழகிய கன்னிகையைத் தம் மனைவியாக அடைந்த அம்முனிவர், அனைத்து வகை (மன) நோயிலிருந்தும் விடுபட்டவராகத் தமது ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்" {என்றார் பீஷ்மர்}[3].(19)
[3] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பகுதியின் முடிவில் இக்கதையின் நோக்கம் சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: "ஒரு புருஷன் ஸ்திரீயை நல்லொழுக்கம் தவறாமலிருக்கும்படி காப்பதற்குச் சொன்ன வழியை அனுசரித்ததால் அந்த ஸ்திரீ சரியாக நடப்பவள். அப்படிப்பட்டவன் தான் நல்ல கதி பெறுவதுடன் தனது மனையாட்டியையும் நல்ல கதியிற்சேர்ப்பான். புருஷனோடு ஒத்திருப்பதைத் தவிரத் தனித்து வேறு தர்மம் பெண்ணுக்கில்லையென்பதினாலேதான் அவளை ஸஹதர்மையென்பது. கற்புள்ள பெண் ஒருவன் ஸுகத்திற்கும், தர்மத்திற்கும் இன்றியமையாத்துணை. ஆசார்யன் சிஷ்யனைச் சீர்திருத்துவது போலத் தன் துணையான மனைவியைச் சீர்திருத்தி நல்வழியில் நடத்துவது கணவன் கடமை என்னும் ஸமாதானத்தை இந்தக் கதையில் கண்டு கொள்க".
அநுசாஸனபர்வம் பகுதி – 21ல் சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |