Qualification for gifts! | Anusasana-Parva-Section-22 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 22)
பதிவின் சுருக்கம் : கொடைக்குத் தகுந்த தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கொடைகளுக்குத் தகுந்தவரென நித்திய பிராமணர்கள் யாரை அழைக்கிறார்கள்? வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா? அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா?" என்று கேட்டான்[1].(1)
[1] "{மூலத்தில் இங்கே குறிப்பிடப்படும்} லிங்கம் என்பது அடையாளங்கள் அல்லது குறியீடுகளாகும். லிங்கின் என்பது குறியீடுகளைத் தரிப்பவர் என்ற பொருளைத் தரும். (ஈரிடங்களில் தோன்றும்) பிராமணம் என்பது பிரம்மத்தை அறிந்தவரைக் குறிக்கிறது. முதலில் குறிப்பிடப்படும் லிங்கின் என்பது வாழ்வு முறை {ஆசிரமக்} குறியீடுகளை எப்போதும் சுமக்கும் ஒரு பிரம்மசாரியையோ, சந்நியாசியையோ குறிக்கும். அலிங்கின் என்பது அத்தகைய குறியீடுகளற்றவனைக் குறிக்கும். கொடைகளுக்குத் தகுந்தவராக இவர்களில் எவர் கருதப்பட வேண்டும் என்பதே யுதிஷ்டிரனின் கேள்வியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தானத்திற்குப் பாத்திரரென்று பிராம்மணர்களால் நெடுநாளாகச் சொல்லப்படும் பிராம்மணன் ஸந்யாஸியா? கிருஹஸ்தனா? யார்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கொடைபெறச் சிறந்தவரெனப் பிராமணர்கள் யாரை எப்போதும் குறிப்பிடுகிறார்கள்? குறியீடுகளுடன் கூடிய பிராமணனையா? குறியீடுகள் அற்ற பிராமணனையா?" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "குறியீடுகளுடன் கூடிய பிராமணர் என்பது பிரம்மச்சரியம் அல்லது சந்நியாச நிலையைப் பின்பற்றும் ஒருவரைக் குறிக்கும். வேறு பிராமணர்கள் அந்தக் குறியீடுகள் ஏதுமற்றவர்களாவர்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றும் ஒரு பிராமணன், குறியீடுகளைச் சுமப்பவனாக இருந்தாலும், அவை அற்றவனாக இருந்தாலும், இரண்டும் குற்றமற்ற நிலைகளே என்பதால் அவன் பிரம்மச்சரியக் குறியீடுகளைத் தரித்திருக்கிறானோ இல்லையோ, அவனுக்குக் கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது" என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தூய்மையடையாத ஒருவன் வேள்வி நெய்யையோ, உணவையோ பெரும் அர்ப்பணிப்புடன் மறுபிறப்பாள வகையினருக்குக் கொடையாகக் கொடுத்தால் என்ன குற்றமேற்படும்?" என்று கேட்டான்[2].(3)
[2] கும்பகோணம் பதிப்பில், "(மற்றச் சுத்தம் இல்லாமல்) அதிகச் சிரத்தையினால் மாத்திரம் பரிசுத்தனாயிருக்கும் ஒருவன் ஹவ்யகவ்யங்களையும், தானத்தையும் பிராம்மணனுக்குக் கொடுத்தால் என்ன குற்றம்?" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்], "தற்கட்டுப்பாடென்பதே சிறிதும் அற்றவனும்கூட அர்ப்பணிப்பின் மூலம் நிச்சயம் தூய்மையடைகிறான். ஓ! பெருங்காந்தி கொண்டவனே, அத்தகைய மனிதன், (கொடைகளால் மட்டுமல்லாமல்) அவன் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் தூய்மையடைகிறான்" என்றார்[3].(4)
[3] கும்பகோணம் பதிப்பில், "சிரத்தையினால் தூய்மைபெற்ற மனிதன் கெட்டவனாயிருந்தாலும் எல்லா விஷயங்களிலும் பரிசுத்தனாகிறான்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தேவர்கள் சார்ந்த ஒரு செயலில் ஈடுபட ஒரு பிராமணன் முனையும்போது அவன் ஒருபோதும் சோதிக்கப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், பித்ருக்கள் சார்ந்த அத்தகைய செயல்களில் ஈடுபட அந்தப் பிராமணன் முனையும்போது (ஒழுக்கம் மற்றும் தகுதி காரியங்களில்) அவன் சோதிக்கப்பட வேண்டும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர்" என்றான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தேவர்களைக் குறிக்கும் செயல்களைப் பொறுத்தவரையில் அவற்றைச் செய்வதில் ஈடுபடும் பிராமணரின் விளைவால் அல்லாமல், தேவர்களின் அருளாலேயே கனிதருகின்றன. வேள்விகளைச் செய்பவர்கள், அச்செயல்களுடன் பற்றியிருக்கும் தகுதியைத் தேவர்களின் மூலம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை[4].(6) ஓ! பாரதர்களின் தலைவா, பிராமணர்கள் எப்போதும் பிரம்மத்தை ஓதுபவர்களாவர். நுண்ணறிவுடன் கூடிய முனிவர் மார்க்கண்டேயர், உலகங்கள் அனைத்திலும் இதையே பழங்காலத்தில் சொன்னார்" என்றார்[5].(7)
[4] "பித்ருக்களை மட்டுமே சார்ந்த செயல்களில் பிராமணர்களின் ஒழுக்கமும், தகுதியும் சோதிக்கப்பட வேண்டும் என்ற பொருள் இங்கே மறைந்திருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "தேவர்களின் ஹவிஸைப் பிராம்மணன் உண்டாக்குவதில்லை. அது தேவர்களின் சக்தியினாலேயே உண்டாகிறது. யாகம் செய்பவர்கள் தேவர்களின் அனுக்கிரகத்தினாலேதான் அவர்களை ஆராதிக்கின்றனர்; ஸந்தேகமில்லை. உலகங்களில் சிறந்த அறிவுள்ள மார்க்கண்டேயர், ’பிராம்மணர்கள் எப்போதும் பிரம்ம நிஷ்டர்கள்’ என்று முன்னே சொல்லியிருக்கிறார். ஆதலால் பிராம்மணர்கள் தேவகார்யங்களில் தகுதியுள்ளவர்களும் பரிசுத்தர்களுமானவர்; பித்ரு கார்யங்களில் அப்படியாவதில்லை" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறிமுகமற்றவன் {பழகாதவன்}, (தன் வகைக்கான கடமைகளுடன் தொடர்புடைய) கல்விமான், திருமணத்தின் மூலம் தொடர்புடையவன் {சுற்றத்தான்}, தவங்களுடன் கூடியவன், வேள்விச் செயல்களில் வேட்கை கொண்டவன் ஆகிய இந்த ஐவரும் ஏன் {கொடைக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்?" என்று கேட்டான்.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறிமுகமற்றவர்கள், உறவினர்கள், தவசிகள் ஆகிய முதல் மூவரும், தூய பிறவி, அறச்செயல்களில் வேட்கை, கல்வி, கருணை, பணிவு, நேர்மை, வாய்மை ஆகிய குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவராவர். கல்விமான்கள் மற்றும் வேள்விகளில் வேட்கை கொண்டோர் ஆகிய வேறு இருவரும், தூய பிறவி, கருணை, பணிவு, நேர்மை மற்றும் வாய்மை ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவர்களாவர்.(9) ஓ! பிருதையின் மகனே, வலிமையும், சக்தியும் கொண்டவர்களான பூமாதேவி, முனிவர் காசியபர், நெருப்பு தேவன் {அக்னி}, தவசி மார்க்கண்டேயர் ஆகிய நால்வரின் கருத்துகளை இப்போது சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(10)
பூமியானவள், "பெருங்கடலில் போடப்பட்ட மண்கட்டி விரைவாகக் கரைந்துவிடுவதைப் போலவே, வேள்வி செய்யத் துணைபுரிதல், கல்வி கற்பித்தல் மற்றும் கொடை ஆகிய மூன்று உயர்ந்த குணங்களில் அனைத்து வகைப் பாவங்களும் மறைந்து போகின்றன" என்றாள்[6].(11)
[6] கும்பகோணம் பதிப்பில், "எல்லாப்பாவங்களும் வேதத்தை விடாமலிருப்பவனிடத்தில் மறைந்து போகின்றன" என்றிருக்கிறது.
காசியபர், "ஒரு மறுபிறப்பாளன் நற்குணத்தில் இருந்து வீழ்ந்தால், ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்கள், சாங்கிய தத்துவம், புராணங்கள், உயர் குடி பிறப்பு ஆகியவற்றாலும் அவனைக் காக்க முடியாது" என்றார்.(12)
அக்னி, "கல்வியில் ஈடுபட்டு, தன்னைக் கல்விமானாகக் கருதும் பிராமணன், தன் கல்வியின் மூலம் பிறரின் மதிப்பை அழிக்க முனைந்தால், அறம்வீழ்ந்தவனாகி, வாய்மையிலிருந்து தொடர்பறுந்தவனாகக் கருதப்படுகிறான். இத்தகைய அழிவு மேதையான ஒருவனால் மறுமையில் இன்ப உலகங்களை ஒருபோதும் அடையமுடியாது" என்றான்.(13)
மார்க்கண்டேயர், "ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் தராசில் எடை பார்க்கப்பட்டால், முன்னது பின்னதின் பாதி எடைக்காவது நிற்குமா என்பதை நான் அறியவில்லை" என்றார்".(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அளவிலா சக்தி கொண்டவர்களான பூமாதேவி, காசியபர், அக்னி மற்றும் ஆயுததாரியான பிருகுவின் மகன் {மார்க்கண்டேயர்} ஆகிய நால்வரும் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டனர்".(15)
யுதிஷ்டிரன், "இவ்வுலகில் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்கள், (இறந்து போன மூதாதையருக்குச் சிராத்தங்களில்) ஒருவன் அளிக்கும் காணிக்கைகளை {உணவை} வேண்டி உண்டால், சிராத்தங்களைச் செய்பவன் அத்தகைய பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பதால், அவற்றை {அந்த சிராத்தங்கள்} நன்கு செய்யப்பட்டவையாகக் கருத முடியுமா?" என்று கேட்டான்[7].(16)
[7] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் போஜன நியமம் வைத்துக் கொண்ட பிராம்மணர்கள், பிராம்மணன் வேண்டுகோளுக்காக அவன் தங்களுக்குப் போட்ட அன்னத்தைப் புஜிப்பாராயின் அவர்களுக்குப் புண்ணியம் எப்படி உண்டாகும்?" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "குறிப்பிட்ட கால அளவுக்கு (பனிரெண்டு ஆண்டுகள்) பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் திறமைடைந்த ஒரு பிராமணன், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை வேண்டி உண்டால், அவன் தன் நோன்பில் இருந்து வீழ்ந்தவனாகக் கருதப்படுவான். எனினும், அந்தச் சிராத்தம், எவ்வழியிலும் களங்கமடைந்ததாகக் கருதப்படமுடியாது" என்றார்.(17)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறம் அல்லது கடமைக்குப் பல கதிகளும், எண்ணற்ற வாயில்களும் இருப்பதாக ஞானிகள் சொல்கின்றனர். எனினும், ஓ! பாட்டா, இக்காரியத்தில் முடிவான தீர்மானங்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (மனிக்கும் தன்மை), கருணை, தற்கட்டுப்பாடு, நேர்மை ஆகியவை அறத்தின் குறியீடுகளாகும்.(19) ஓ!! மன்னா, அறத்தைப் புகழ்ந்தாலும், அதன்படி செயல்படாமல், எப்போதும் பாவத்தில் ஈடுபட்டபடியே பூமியில் திரியும் மனிதர்கள் உண்டு.(20) அத்தகைய மனிதர்களுக்கு, தங்கமோ, ரத்தினங்களோ, பசுக்களோ, குதிரைகளோ கொடுப்பவன், இறந்து போன பசுக்கள் மற்றும் எருமைகளின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வெளியில் வாழ்பவர்களும், புகாசர்கள் என்றழைக்கப்படுபவர்களுமான மனிதர்கள் மற்றும் பிறர் செய்யும் செயல்களையும், செய்யாதவற்றையும் கோபம், மடமையின் ஆதிக்கத்தில் வெளியிடும் மனிதர்கள் ஆகியோரின் மலத்தை உண்டபடியே பத்துவருடங்கள் பாழ்நரகில் மூழ்கியிருப்பார்கள்[8].(21,22) ஓ! ஏகாதிபதி, பிரம்மச்சரிய நோன்பு நோற்கும் பிராமணன் ஒருவனுக்கு, (இறந்து போன மூதாதையருக்குச் செய்யும்) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடுக்காத மூடர்கள், பெரும் துன்பம் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்" என்றார்.(23)
[8] கும்பகோணம் பதிப்பில், "அப்படிப்பட்டவர்களுக்குப் பொன்னையும், ரத்னத்தையும், பசுவையும், குதிரையையும் தானஞ்செய்பவன் நரகம் போய்ப் பத்து வருஷ காலம் மலத்தைத் தின்று கொண்டிருப்பான். சண்டாளர்கள், சக்கிலியர்கள் ஆசையினாலுண்டான அறிவின்மையினால் பிதற்றுகிறவர்கள் இவர்களின் தனத்தில் செய்ததும் செய்யப்படாததுமான கர்மம் ஒன்றுதான்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது எது? உயர்ந்த அறக் குறியீடு எது? உயர்ந்த வகைத் தூய்மை எது" என்று கேட்டான்.(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்த்தல் பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது என நான் சொல்வேன். அறமானது எல்லைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குள் கிடக்கிறது. துறவே சிறந்த அறக்குறியீடாகும் (அஃது உயர்வகைத் தூய்மையுமாகும்)" என்றார்.(25)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவன் எக்காலத்தில் அறம்பயில வேண்டும்? எக்காலத்தில் செல்வம் நாடப்பட வேண்டும்? எக்காலத்தில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரன், "ஒருவன் தன் வாழ்நாளின் முதற்பாகத்தில் {காலையில்} செல்வமீட்ட வேண்டும். பிறகு அறமீட்ட வேண்டும். அதன் பிறகு {இரவில்} இன்பத்தை அனுபவிக்க வேண்டும். எனினும், அவன் இவை எவற்றிலும் பற்றுக் கொள்ளக் கூடாது.(27) அவன் பிராமணர்களை மதிக்க வேண்டும், ஆசான்களையும், பெரியோரையும் வழிபட வேண்டும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும், மென்மனோநிலையுடனும், ஏற்புடைய வாக்குடனும் இருக்க வேண்டும்.(28) நீதிமன்றத்தில் பொய்யுரைப்பது, மன்னனை வஞ்சிப்பது, ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் போலியாக நடந்து கொள்வது ஆகியவை பிராமணக்கொலைக்கு {பிரம்மஹத்திக்கு} இணையானதாக (இணையான கொடுமையாகக்) கருதப்படுகின்றன.(29) அவன் மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது. பசுவை ஒருபோதும் அடிக்கக்கூடாது. இவ்விரு குற்றங்களும் கருக்கொலைக்கு இணையான பாவங்களாகும்.(30) அவன் தன் (ஹோம) நெருப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது. வேத கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவன் ஒரு பிராமணனைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக்கூடாது. இவை அனைத்தும் பிராமணக்கொலைக்கு இணையான குற்றங்கள் ஆகும்" என்றார்.(31)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எவ்வகைப் பிராமணர்கள் நல்லோராகக் கருதப்பட வேண்டும்? எந்தப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் ஒருவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்ட முடியும்? எவ்வகைப் பிராமணர்களுக்கு ஒருவன் உணவூட்ட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கோபத்தில் இருந்து விடுபட்டவர்களும், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வாய்மையில் உறுதியுள்ளவர்ளும், தற்கட்டுப்பாட்டைப் பயில்பவர்களும் நல்ல பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(33) செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் நோக்கத்தை அடைவதில் உறுதியுள்ளவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், அனைவரிடமும் நட்பு மனோநிலையுடன் இருப்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(34) பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், தூய இதயம் கொண்டவர்களும், ஒழுக்கத் தூய்மை கொண்டவர்களும், கல்வி மற்றும் பணிவு கொண்டவர்களும், வாக்கில் வாய்மை கொண்டவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தங்கள் கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(35) நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் கற்பவனும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனுமான பிராமணனே கொடைகளுக்குத் தகுந்தவன் என முனிவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். அத்தகைய தகுதிகளைக் கொண்ட பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(36)
தகுந்த பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் தன் தகுதியைப் பல்லாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்கிறான். ஞானமும், வேத அறிவும் கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்பவனும், ஒழுக்கத் தூய்மைக்காகப் புகழப்படுபவனும், அறம் சார்ந்தவனுமான தனியொரு பிராமணன், மொத்த குலத்தையும் மீட்கும் வல்லமை கொண்டவனாவான்[9].(37) ஒருவன், அத்தகைய தகுதிகளையுடைய பிராமணனுக்கு, பசுக்கள், குதிரைகள், செல்வம், உணவு மற்றும் பிறவகைப் பொருட்களைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய மனிதர்களுக்கு அத்தகு கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைகிறான்.(38) நான் ஏற்கனவே சொன்னது போல, அத்தகைய ஒரே ஒரு பிராமணன் கூட, கொடையாளியின் மொத்த குலத்தையும் மீட்கவல்லவனாவான். எனவே, ஓ! அன்பு மகனே, அத்தகைய தகுதிகளைக் கொண்ட பல பிராமணர்களுக்குக் கொடுப்பதற்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒருவன் கொடையளிக்கும்போது அந்தக் கொடைக்குத் தகுந்தவனையே எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(39) சரியான தகுதிகளைக் கொண்டவனும், நன்மக்கள் அனைவராலும் மதிப்புடன் கருதப்படுபவனுமான ஒரு பிராமணனைக் குறித்துக் கேள்விப்படும் ஒருவன், அவன் தொலைவில் வசித்தாலும் அழைத்து, அவன் வரும்போது வரவேற்று, தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் அவனை வழிபட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(40)
[9] "அஃதாவது, அத்தகைய ஒரே பிராமணனுக்குக் கொடையளித்தால்கூட, அவன் {அந்தப் பிராமணன்} ஒருவனுடைய {கொடையளித்தவனின்} மூதாதையர்கள் மற்றும் அவனது குலத்தின் வழித்தோன்றல்கள் அனைவரையும் மீட்க வல்லவனாவான் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |