Making gifts and manner of giving them! | Anusasana-Parva-Section-23 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 23)
பதிவின் சுருக்கம் : தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆகியோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்" எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் (நீராடல் மற்றும் தூய்மையடையச்செய்யும் பிற செயல்களின் மூலம்) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நன்கறியப்பட்ட மங்கலச் சடங்குகளைச் செய்த பிறகே, அவன் தேவர்களுக்குரிய காரியங்களை முற்பகலிலும், பித்ருக்களுக்குரிய காரியங்கள் அனைத்தையும் பிற்பகலிலும் செய்ய வேண்டும்.(2) மனிதர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவற்றை அன்பு மற்றும் மதிப்புடன் நடுப்பகலில் கொடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது[1].(3) எவராலும் தாண்டப்பட்ட, அல்லது நக்கப்பட்ட, அல்லது உறிஞ்சப்பட்ட, அமைதியற்ற நிலையில் கொடுக்கப்பட்ட, பருவகாலத்தின் விளைவால் தூய்மையற்றிருக்கும் பெண்களால் காணப்பட்டவையுமான கொடைகள் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும் / பலனையும்} உண்டாக்குவதில்லை. அத்தகைய கொடைகள் ராட்சசர்களின் பங்காகக் கருதப்படுகின்றன.(4) பலருக்கு முன்னிலையில் அறிவிக்கப்பட்ட, அல்லது ஒரு சூத்திரன் உண்டதில் ஒரு பகுதியாக உள்ள, அல்லது நாயால் பார்க்கப்பட்ட அல்லது நக்கப்பட்ட கொடைப் பொருட்கள் ராட்சசர்களின் பங்குகளாக அமைகின்றன.(5)
[1] "ஒருவன் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், மனிதர்களுக்கும் கொடையளிக்கிறான். ஒவ்வொரு வகைக் கொடைக்கும் ஒரு காலமிருக்கிறது. பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது, தகுதியை உண்டாக்குவதற்குப் பதில் பாவமாகவில்லையென்றால் முற்றிலும் பலனற்றுப் போகிறது. பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடைகளை ராட்சசர்கள் அபகரிக்கிறார்கள். பொருத்தமற்ற காலத்தில் உண்ணும் உணவு கூட உடலுக்குப் பலத்தையூட்டாமல், ராட்சசர்களையும், வேறு தீயவற்றையும் வளர்க்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முடியோ புழுவோ விழுந்த, அல்லது எச்சிலால் களங்கமடைந்த, அல்லது நாயால் பார்க்கப்பட்ட, அல்லது கண்ணீர் துளிகள் விழுந்த, அல்லது மிதிபட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(6) ஓ! பாரதா, ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவர்களால் உண்ணப்பட்ட, அல்லது ஆயுததாரிகளால் உண்ணப்பட்ட, அல்லது தீய மனிதனால் உண்ணப்பட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்[2].(7) வேறொருவரால் ஏற்கனவே உண்ணப்பட்ட, அல்லது தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் உண்ணப்படும் உணவானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது. அத்தகைய களங்கமடைந்த உணவை தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கும்போது, அஃது அவர்களால் ஏற்கபடாமல் ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது.(8) மந்திரங்கள் சொல்லப்படாத, அல்லது முறையாகச் சொல்லப்படாதவையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காதவையும் சிராத்தங்களில் மூவகை மறுபிறப்பாளர்களால் கொடுக்கப்படும் உணவை, விருந்தினர்களுக்கும், பிற மக்களுக்கும் பரிமாறினால் அது ராட்சசர்களால் அபகரிக்கப்படும்.(9) புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளின் துணையுடன் தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அர்ப்பணிக்கப்படாத, அல்லது அறவொழுக்கமற்ற தீய மனிதனால் உண்ணப்பட்டதன் விளைவால் களங்கமடைந்த உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டால், அது ராட்சசர்களின் பாங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(10)
[2] "இவ்வகை மனிதர்களால் உண்ணப்பட்ட எந்த உணவும் கொடைக்குத் தகாதவையாகும். அவை கொடுக்கப்பட்டால் ராட்சசர்களால் அபகரித்துக் கொள்ளப்படும். ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவன் சூத்திரனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதப்பில், "வேதமோதாதவன், ஆயுதம்பிடித்தவன், கெட்ட மனமுள்ளவன் இவர்கள் புசித்ததும், ராக்ஷஸர்கள் பாகங்களென்று நினைக்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தகாத மனிதர்களால் சுவைக்கப்பட்டதோ, ஆயுதம் தரித்தவனால் சுவைக்கப்பட்டதோ, தீய ஆன்மா கொண்டவனால் சுவைக்கப்பட்டதோவான உணவை ராட்சசர்கள் தங்கள் பங்காக அடைகின்றனர் எனக் கல்விமான்கள் சொல்கின்றனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சரியான மொழிபெயர்ப்பானது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு நீதி செய்யாது. இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் நிரோம்காரா என்ற சொல்லானது, ஓம் என்ற சொல்லை உச்சரிக்கத்தகாத மனிதன் என்ற பொருளைத் தரும்" என்றிருக்கிறது.
எவை ராட்சசர்களின் பங்காகின்றன என்று நான் உனக்குச் சொன்னேன். இனி, கொடைகளுக்குத் தகுந்த பிராமணனை உறுதி செய்யும் விதிகளை விதிக்கப் போகிறேன் கேட்பாயாக.(11) (கொடும்பாவம் செய்த குற்றத்தால்) விலக்கப்பட்ட பிராமணர்கள் {பிரஷ்டப்ராமணர்கள்}, மூடர்களாகவும், பித்தர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் ஆகியோர், தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அளிக்கப்படும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல.(12) ஓ! மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ! மன்னா, தொழிலால் பாடகராக, நர்த்தகராக, விளையாட்டுவீரராக, இசைக்கருவி இசைப்பவராக, புனித நூல்களை உரைப்பவர்களாக, போர்வீரர்களாக, தடகள வீரராக உள்ள பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(15)
சூத்திரர்களின் புனித நெருப்பில் ஆகுதி ஊற்றுபவர்களும், சூத்திரர்களின் ஆசான்களும், சூத்திரத் தலைவர்களுக்குப் பணியாட்களாக இருப்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(16) ஆசானாகப் பணிபுரிவதற்கு ஊதியம் வழங்கப்படுபவர்களும், ஊதியம் பெற்றுக் கொண்டு சில ஆசான்களிடம் சீடனாக இருப்பவர்களுமான பிராமணர்கள் வேதங்களை விற்பவர்களாகக் கருதப்படுவதால் அவ்விரு வகையினரும் அழைக்கபடத் தகுந்தவர்களல்ல.(17) சிராத்தத்தின் தொடக்கத்திலேயே கொடையளிக்கப்பட்டவனும், சூத்திரப் பெண்ணை மனைவியாக மணந்து கொண்டவனுமான பிராமணன் அனைத்து வகை ஞானத்தையும் கொண்டிருந்தாலும் அவன் அழைக்கப்படத்தகுந்தவனல்ல[3].(18) ஓ! மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ! மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ! மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ! மன்னா, மனைவிகளுக்கு அடங்கியவர்களும், கற்பற்ற பெண்களுக்குக் கள்ளக் காதலனாக வாழ்பவர்களும், காலை மாலை துதிகளைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகாதவர்களாவர்.(22)
[3] "அக்ரனி, அல்லது அக்ரதானி என்பவன், முதல் சிராதத்தத்தில் பிரேதத்திற்குக் கொடுக்கப்படும் காணிக்கையைப் பெற்றுக் கொண்ட பிராமணனாவான். அத்தகைய மனிதன் வீழ்ந்துவிட்டவனாகக் கருதத்தக்கவனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் வேறுவகையில், "ஒரு காரியத்தில் தலைமையாக நியமிக்கப்பட்டவரும், கீழ்ஜாதிப்பெண்ணை விவாகம் செய்துகொண்டவருமான பிராம்மணர் எல்லா வித்தைகளையும் தெரிந்தவராயிருப்பினும் சிராத்தத்தில் வரிக்கத்தகாதவர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பிராமணர் முதன்மையானவராகவும், சாத்தியமுள்ள அனைத்து வகையிலும் கல்விமானாகவும் இருந்தாலும், அவர் தாழ்ந்த வர்ணப் பெண்ணை மணந்து கொண்டவராக இருந்தால் ஒரு மன்னன் அவனை ஒருபோதும் {சிராத்தத்திற்கு} அழைக்கக்கூடாது" என்றிருக்கிறது.[4] "சடலங்கள் சுடலைக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அவற்றை எரிப்பதற்கு முன்பு சில சடங்குகள் செய்யப்பட வேண்டும். அந்தச் சடங்குகளைச் செய்வதில் துணைபுரியும் பிராமணர்கள் வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(பார்யையில்லாமல்) அக்கினியில்லாதவரும், பிணமெடுப்பவரும், திருடரும், பிரஷ்டருமான பிராம்மணர்களும் சிராத்தத்தில் வரிக்கத்தகாதவர்கள்" என்றிருக்கிறது.[5] "சில வேளைகளில் ஒரு மகளைப் பெற்ற தந்தை அவளை மணமகனிடம் அளிக்கும்போது, அவளது கணவன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த மகளின் தந்தைக்கு {தனக்கு} மகனாக வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் தன் பெண்ணை அளிக்கிறார். தன் தந்தையின் குலத்தில் இருந்து தொடர்பறுந்த அத்தகைய மகனே புத்ரிகாபுத்திரன் என்றழைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இனி, தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் செய்யும் செயல்களுக்காக விதிக்கப்பட்ட பிராமணனைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், (மேற்கண்ட களங்கங்கள் இருந்தாலும்) ஒருவன் எதன் விளைவால் சிராத்தங்களில் கொடையளிப்பவனாகவோ, கொடையேற்பவனாகவோ ஆவானோ அந்தத் தகுதிகளை {சிறப்புகளை} உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ! மகனே, வாழ்வை நடத்துவதற்காக வணிகத்தில் ஈடுபடும் பிராமணன் (தகுதி கொண்டவனாகவே இருப்பினும்) அவன் {சிராத்தங்களில்} நிராகரிக்கப்பட வேண்டும்.(25)
ஓ! மன்னா, தினமும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், அல்லது வசிக்கத்தக்க நிலையான இடங்களில் {கிராமங்களில்} வசிப்பவனும், கள்வனல்லாதவனும், தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(26) ஓ! பாரதக் குலத் தலைவா, ஓ! மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(30)
[6] கும்பகோணம் பதிப்பில், "வாழ்ந்து கெட்டிருப்பவனும், கெட்டு வாழ்கிறவனும், பிறரைப் பீடியாதவனும், குற்றங்கள் குறைந்திருப்பவனும் வரிப்பதற்குரியவர்" என்றிருக்கிறது.
குற்ற வழிமுறைகள், அல்லது கொடிய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைந்து, அடுத்தடுத்த தேவர்களைத் துதிக்கவும், விருந்தோம்பல் கடமைகளைச் செய்தும் வந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான காணிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ! பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ! யுதிஷ்டிரா, ஒரு நல்ல பிராமணன், தயிர், நெய், புது நிலவின் {அமாவாசை எனும்} புனித நாள், மான் மற்றும் காட்டு விலங்குகள் பிறவற்றின் இறைச்சி ஆகியவை கிட்டும் நேரமே சிராத்தம் செய்யப்பட வேண்டிய நேரமாகும்[8].(34)
[7] "ஒரு சிராத்தம் நிறைவடையும்போது, அதைச் செய்து கொடுக்கும் பிராமணன் நன்கு பயன்படுத்தப்பட்டது என்ற பொருளைத் தரும் யுக்த சொற்களைச் சொல்ல வேண்டும். ஸ்வதா முதலிய வேறு குறிப்பிட்ட சொற்களும் சொல்லப்பட வேண்டும். மந்திரங்களைச் சொல்வதன் மூலம், சிராத்தம் செய்தவனுக்குத் துணை புரியும் பிராமணன், சிராத்த நிறைவின் போது, அது நன்கு பயன்படுத்தப்பட்டது என்று அந்தச் சிராத்தத்தைச் செய்தவனிடம் சொல்ல வேண்டும். இன்றும் சிராத்தங்களைச் செய்யும் ஒவ்வொரு பிராமணரும் இவ்வார்த்தைகளைச் சொல்வது வழக்கமாகவே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணன், அபரான்னகாலம், தயிர், நெய், காட்டு மாம்ஸம், அமாவாசை இவை சிராதத்ததிற்கு யோக்கியமானவை" என்றிருக்கிறது.
ஒரு பிராமணனால் செய்யப்படும் ஒரு சிராத்தம் நிறைவடையும் போது, ஸ்வதா என்ற சொல் சொல்லப்பட வேண்டும். ஒரு க்ஷத்திரியனால் செய்யப்பட்டால், "உன் பித்ருக்கள் நிறைவடையட்டும்" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்.(35) ஒரு வைசியனால் செய்யப்பட்ட சிராத்தம் நிறைவடையும்போது, "அனைத்தும் வற்றாதிருக்கட்டும்" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். அதே போல, ஒரு சூத்திரனால் செய்யப்படும் சிராத்தம் நிறைவடையும்போது, ஸ்வஸ்தி என்ற சொல் சொல்லப்பட வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரையில், புண்யாஹத் தீர்மானம் ஓம் என்ற அசையுடன் சொல்லப்பட வேண்டும். க்ஷத்திரியன் வழக்கில், அத்தகைய தீர்மானத்தை ஓம் என்ற அசையைச் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒரு வைசியனால் செய்யப்படும் செயல்களில் {சிராத்தம் அல்லது வேள்விகளில்}, ஓம் என்ற அசைக்குப் பதிலாக "தேவர்கள் நிறைவடையட்டும்" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்[9]. (அனைத்து வகையினரின்) விதிகளுக்கு இணக்கமாகச் செய்யப்பட வேண்டிய சடங்குகளை உனக்கு ஒன்றபின் ஒன்றாகச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(36-38)
[9] "சிராத்தம், அல்லது வேறு சடங்குகளின் நிறைவின் போது, அதைச் செய்யும் பிராமணன், அத்தருணத்தில் அழைக்கப்பட்டிருக்கும் பிராமணர்களிடம், "புண்யாஹம் சொல்வீர்" எனச் சொல்ல வேண்டும். அந்தப் பிராமணர்கள், "ஓ, இது புண்யாஹமாகட்டும்" என்று சொல்ல வேண்டும். புண்யாஹம் என்பது புனித நாள் என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இன்னும் சற்று விரிவாக, "ஒரு பகலில் முதல் மூன்று முகூர்த்தங்கள் பிராதக் காலமென்று சொல்லப்படுகின்றன. அந்தக் காலத்தில் பிராம்மணர்கள் ஜபம் தியானமுதலியவற்றினால் நல்ல அனுஷ்டானங்களைச் செய்தல் வேண்டும். அதன் பிறகு, மூன்று முகூர்த்தம் ஸங்கவமென்று பெயருள்ளது. அதன் பிறகு, மூன்று முகூர்த்தங்கள் மத்யான்னம் என்று சொல்லப்படும். பணத்தைச் சேர்ந்த லௌகிக காரியங்களை ஸங்கவ காலத்திலும், ஸ்நாந முதலில் மாத்யான்னிக காரியங்களை மத்தியான்னத்திலும், பித்ரு காரியங்கள் நான்கவாது அபரான்னமாகிய மூன்று முகூர்த்தங்களிலும் செய்ய வேண்டும். பிறகு, மூன்று முகூர்த்தங்கள் ஸாயான்னம் எனப்படும். தெரிந்தவர்கள் அதை இரண்டாந்தரமாகச் சொல்லுகின்றனர். ராஜனே, அபரான்னமென்று பெயருள்ள நாலாவது காலத்தில் எப்போதும் சிராத்தம் செய்ய வேண்டும். பிராம்மணர்கள் கிழக்கு முகமாகவும், வடக்கு முகமாகவும் போஜனத்திற்கு இருக்க வேண்டும். விசுவேதேவர்கள் மட்டும் தெற்கு முகமாயிருக்க வேண்டும். பிராம்மணர்கள் நன்றாகத் திருப்தியானதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, தக்ஷிணை கொடுத்துப் பிண்டதானம் செய்ய வேண்டும். பாரதனே, சிராத்தம் முடியும்போது பிராம்மணனுக்கு, "(தாதாரோவ:) உங்களுக்குக் கொடுப்பவர்கள் உண்டாக வேண்டும்" என்றும், க்ஷத்திரியனுக்கு, "(ப்ரியந்தாம் பிதர:) பித்ருக்கள் திருப்தியடையக்கடவன்" என்றும், வைசியனுக்கு, "(அக்ஷயம்) குறையாத செல்வமிருக்கக்கடவது" என்றும், சூத்திரனுக்கு, "(ஸ்வஸ்தி) க்ஷேமமுண்டாகக் கடவது" என்றும், புசித்தவர்கள் சொல்ல வேண்டும். தேவகாரியங்களில் பிராம்மணனுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிப் புண்யாஹவாசம் விதிக்கப்படுகின்றது. க்ஷத்திரியனுக்கு இதுவே, "ஓம்" என்னும் பிரணவமில்லாமல் விதிக்கப்படுகிறது. வைசியனுடைய தேவகாரியத்தில், "(ப்ரியந்தாம் தேவதா:) தேவர்கள் திருப்தியடையக்கடவன்" என்பதைச் சொல்ல வேண்டும். {ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகையாகும்" என்றிருக்கிறது.
ஓ! பாரதா, ஜாதகர்மம் என்ற பெயரில் உள்ள சடங்குகள் அனைத்தும் (மறுபிறப்பாளர்களான) மூவகையினருக்கும் தவிர்க்கப்படக்கூடாததாகும். ஓ யுதிஷ்டிரா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரின் வழக்கில் இந்தச் சடங்குகள் அனைத்தும் மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட வேண்டும்.(39) ஒரு பிராமணன் இடைக்கச்சை {உபநயனத்தில் இடையிற்கட்டும் கயிறு} முஞ்சப் புற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அரச வகையினுக்கு வில்லின் நாண்கயிறால் {மௌர்வி புற்களால்} ஆனதாக இருக்க வேண்டும். வைசியர்களின் இடைக்கச்சை, பல்பஜி புற்களால் {பல்பஜமென்னும் சணல் நாரினால்} ஆனதாக இருக்க வேண்டும். இவ்வாறே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(40)
கொடையளிப்பவர் மற்றும் கொடையளிப்பவரின் குறைநிறைகளை இப்போது விளக்கிச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(41) ஒரு பிராமணன் ஒரு பொய்யைச் சொல்வதால் கடமைதவறும் குற்றம்புரிந்தவனாகிறான். அவன் பங்குக்கு அத்தகைய செயல் பாவம் நிறைந்ததாகும். பொய் சொல்வதால் ஒரு பிராமணன் ஈட்டும் பாவத்தைப் போல ஒரு க்ஷத்திரியன் நான்கு மடங்கும், வைசியன் எட்டு மடங்கும் பாவத்தை ஈட்டுகிறான்.(42) உண்பதற்கு ஒரு பிராமணனால் முன்பே அழைக்கப்பட்ட மற்றொரு பிராமணன் {இவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு} வேறெங்கும் உண்ணச் செல்லக்கூடாது. காலத்தால் பிந்தி அழைத்தவனின் வீட்டில் உண்பதன் மூலம் அவன் கீழ்மையடைகிறான், மேலும், வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தையும் ஈட்டுகிறான்[10].(43) அதே போலவே, அரச வகையைச் சார்ந்த ஒருவன் {க்ஷத்திரியன்} அல்லது ஒரு வைசியனால் அழைக்கப்பட்ட பிறகு அவன் வேறு எங்கும் உண்டால், அவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்து, வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தில் பாதி அளவை ஈட்டுகிறான்.(44) ஓ! மன்னா, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்களாலும், க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் செய்யப்படும் நிகழ்வுகளில், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் உண்ணும் பிராமணன், ஒரு பசுவுக்காக {ஒரு பசுவைக் கொடையாகப் பெறுவதற்காகப்} பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(45)
[10] "இங்கே செய்தி என்னவென்றால், ஒரு வேள்வியில் விலங்குகளைக் கொல்வது எந்தப் பாவத்திற்கும் வழிவகுக்காது, ஆனால் ஏதுமில்லாமல் (உணவுக்காக மட்டுமே) கொல்லப்பட்டால் அத்தகைய கொலை நிச்சயம் பாவத்திற்கே வழிவகுக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன் இனம் சார்ந்தோர் மத்தியில் உண்டான பிறப்பு, அல்லது இறப்பின் விளைவால் தூய்மையற்றவனாக இருந்து, தான் தூய்மையற்றிருப்பதை அறிந்தோ, சபலத்தினாலோ மூன்று உயர்வகையைச் சார்ந்தவர் எவராலும் செய்யப்படும் அத்தகைய நிகழ்வுகளில் உண்ணும் பிராமணனும், அதே பாவத்தையே ஈட்டுகிறான்[11].(46) ஓ! ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ! யுதிஷ்டிரா, மூன்று உயர் வகையினரில் எவரும், சிராத்தங்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் மந்திரங்களில் உதவியுடன் உணவைப் பகிரும் போது, வேதங்கல்லாத, அல்லது நோன்பு நோற்காத, அல்லது ஒழுக்கத் தூய்மையற்ற பிராமணர்களுக்கு {உணவை} வழங்கினால் நிச்சயம் பாவத்தையே ஈட்டுவர்" என்றார் {பீஷ்மர்}.(48)
[11] "ஒருவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் பிறப்போ, இறப்போ நேரும்போது ஒருவன் தூய்மையற்றவனாவதாகச் சொல்லப்படுகிறது. பிராமணர்களுக்கு அந்தத் தூய்மையின்மை ஒன்றிலிருந்து பத்து நாள் வரை நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது. வேறு வகையினருக்கு வெவ்வேறு கால அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்தத் தூய்மையற்ற காலத்தில் அவன் தனது தினசரி வழிபாட்டுச் செயல்கள் முதலியவற்றைச் செய்யக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை எவருக்குக் கொடையாகக் கொடுத்தால் ஒருவனால் பேரளவு வெகுமதியை ஈட்ட முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(49)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, காலத்திற்கு ஏற்ற மழையை எதிர்பார்த்து மதிப்புடன் காத்திருக்கும் உழவர்களைப் போலவே, தங்கள் கணவர்கள் உண்ட மிச்சத்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு நீ உணவூட்டுவாயாக.(50) ஓ! மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் மூலமோ, பகைவர்களின் மூலமோ அனைத்தையும் தொலைத்தவர்களும், கொடுப்பவர்களை அணுகுபவர்களுமான மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(53) பிறரிடம் ஏதும் பெறும் தங்கள் வகையைச் சார்ந்த ஏழையின் கரங்களில் இருந்து உணவை வேண்டும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(54) உலகளாவிய பேரிடரின் போது தங்களுக்குச்சொந்தமான அனைத்தையும் இழந்தவர்களும், அத்தகைய நிகழ்வின் போது தங்கள் மனைவிகளை இழந்தவர்களும், பிச்சை கேட்டு வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(55)
நோன்புகளை நோற்பவர்களும், துன்பம் நிறைந்த விதிகள் மற்றும் வகைமுறைகளுக்குள் வலியத் தங்களை நிறுத்திக் கொள்பவர்களும், வேதங்களில் விதிக்கப்பட்டுள தீர்மானங்களுக்கு இணங்ககமாகத் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்பவர்களும், தங்கள் நோன்புகள் அல்லது நியமங்களின் நிறைவுக்குத் தேவைப்படும் சடங்குகளுக்கான செலவுக்காகச் செல்வத்தை வேண்டி வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(56) பாவிகள் மற்றும் தீயோரால் செய்யப்படும் செயல்களுக்குப் பெருந்தொலைவில் வாழ்பவர்களும், போதுமான ஆதரவில்லாமல் பலவீனமாக இருப்பவர்களும், உலகம் சார் உடைமைகளில் மிக வறியவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(57) முற்றிலும் அப்பாவிகளாக இருந்தும் வலிமையான மனிதர்களால் உடைமைகள் அனைத்தும் களவாடப்பட்டவர்களும், உணவின் தரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் {உணவு} எவ்வாறிருந்தாலும் தங்கள் வயிறுகளை நிறைத்துக் கொள்ள விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(58) தவங்கள் நோற்பவர்கள் மற்றும் தங்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் சார்பில் பிச்சையெடுப்பவர்களும், சிறு கொடையிலும் நிறைவடைபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கொடையளிப்பதன் மூலம் பெருந்தகுதியை ஈட்டுவது தொடர்பான சாத்திரத் தீர்மானங்களையே நீ இப்போது கேட்டாய். இனி, நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ வழிவகுக்கும் செயல்களை விளக்கப் போகிறேன், கேட்பாயாக.(60)
ஆசானின் காரியத்திற்குத் தொண்டாற்றுவதற்காக, அல்லது உயிருக்கான அச்சத்திலிருக்கும் மனிதனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் பொய்களைத் தவிர வேறு தருணங்களில் பொய் பேசுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(61) பிறர் மனைவிகளைக் கெடுப்பவர்கள், அல்லது அவர்களுடன் பாலினக்கலவியில் ஈடுபடுபவர்கள், அல்லது அத்தகைய தீச்செயல்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(62) பிறரின் செல்வத்தைக் களவாடுபவர்கள், அல்லது பிறரின் செல்வத்தையும், உடைமைகளையும் அழிப்பவர்கள், அல்லது பிறரின் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(63) தாகந்தணிக்கக் கால்நடையால் பயன்படுத்தப்படும் நீர்நிலைகளின் கரைகள், பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படும் மண்டபங்கள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் {சுமைதாங்கிகள்} ஆகியவற்றை இடிப்பவர்கள், வசிப்பதற்குப் பயன்படும் வீடுகளை இடிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(64) ஆதரவற்ற பெண்கள், அல்லது சிறுமிகள், அல்லது முதிய பெண்கள், அல்லது அச்சத்திலிருக்கும் அத்தகைய பெண்களை ஏமாற்றி வஞ்சிப்போர் நரகில் மூழ்குவார்கள்.(65)
பிறரின் வாழ்வுக்குத் தேவையானவற்றை அழிப்பவர்கள், பிறரின் வசிப்பிடங்களை அழிப்பவர்கள், பிறர் மனைவிகளைக் களவாடுபவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வேற்றுமையை விதைப்பவர்கள், பிறரின் நம்பிக்கை அழிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(66) பிறரின் குறைகளை அறிக்கையிடுபவர்கள், மேம்பாலங்கள் அல்லது தரைப்பாலங்களை {சுமைதாங்கிகளை} உடைப்பவர்கள், பிறருக்காக விதிக்கப்பட்ட பிழைப்புத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவர்கள், நண்பர்களின் தொண்டு பெற்றும் நன்றிமறந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(67) வேதங்களில் நம்பிக்கையற்று, அவற்றை மதிக்காதவர்கள், தங்கள் உறுதிமொழிகளைப் பிளப்பவர்கள், அல்லது பிறரைக் கொண்டு பிளக்கச் செய்பவர்கள், பாவத்தால் தங்கள் நிலையில் இருந்து வீழ்ந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(68) ஒழுக்கத்தில் முறையற்றவர்கள், மிகை வட்டி வாங்குபவர்கள், விற்பனையில் முறையற்ற வகையில் பெரும் லாபம் மீட்டுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(69) சூதாடிகள், ஐயுணர்வேதுமின்றித் தீச்செயல்களில் ஈடுபடுபவர்களும், உயிரினங்களைக் கொல்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(70)
வெகுமதிகளை, அல்லது அவசியத் தேவைக்கானவற்றை, அல்லது கூலியையோ, ஊதியத்தையோ, அல்லது தான் செய்த மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கான பதில் உதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் பணியாட்களைப் பணிநீக்கம் செய்யும்படி முதலாளிகளைச் செயல்பட வைப்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்[12].(71) தங்கள் மனைவிகளுக்கு, அல்லது புனித நெருப்புக்கு, அல்லது பணியாட்களுக்கு, அல்லது தங்கள் விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களை மதிப்பதற்காகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவிர்ப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(72) வேதங்களை விற்பனை செய்வோர், வேதங்களில் குறை காண்போர், வேதங்களை எழுத்தாக்கி அவற்றைத் தாழ்த்துவோர் ஆகியோரனைவரும் நரகில் மூழ்குவார்கள்[13].(73) நன்கறியப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} சேராதவர்கள், ஸ்ருதிகள் மற்றும் சாத்திரங்களால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துபவர்கள், தீய, அல்லது பாவம் நிறைந்த, அல்லது தங்கள் பிறப்பின் வகையைச் சாராத செயல்களைச் செய்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(74) தலைமயிரை விற்று வாழ்பவர்கள், நஞ்சை விற்று வாழ்பவர்கள், பாலை விற்று வாழ்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(75)
[12] கும்பகோணம் பதிப்பில், "வேதனமும், சாப்பாடும் குறிப்பிடப்பட்டும், விருப்பமுண்டாக்கப்பட்டும் வேலை செய்து கொண்டு வரும் வேலைக்காரனைக் கலைத்து இழுத்துக் கொள்ளுகிறவர் நரகம் போகிறவர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "பிரிவினைகள் உண்டாக்குபவர்களும், பணி செய்தவர்களின் பங்குகளை அபகரித்துக் கொள்பவர்களும் நரகத்திற்குச் செல்வார்கள்" என்றிருக்கிறது.[13] "வேதங்களை விற்பது என்பது அவற்றைப் போதிப்பதற்குக் கட்டணம் வசூலிப்பது என்பது பொருள். வேதங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களின் தடையாணையானது, அவற்றை நினைவில் கொள்ளச் செய்யவும், வாய்மூலம் அவற்றைச் சொல்லவும் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. அவற்றை எழுதித் தாழ்த்துவது ஒரு வரம்புமீறலாகக் கருதப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதத்தை விற்பவரும், வேதத்தைத் தூஷிப்பவரும், வேதத்தையெழுதி வைப்பவரும் நரகம் போகிறவர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேதத்தை எழுத்தில் வடிப்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள், பசுக்கள் மற்றும் கன்னிகைகளின் பாதையில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் {அவர்களின் குறுக்கே செல்பவர்கள்} நரகில் மூழ்குவார்கள்.(76) ஆயுதங்களை விற்பவர்கள், ஆயுதங்களைச் செய்பவர்கள், கணைகளைச் செய்பவர்கள், விற்களைச் செய்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(77) கற்களாலும், முட்களாலும், குழிகளாலும் பாதைகள் மற்றும் சாலைகளில் தடையேற்படுத்துபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(78) போதிய வயதை அடையாத இளங்காளைகளைப் பணியில் ஈடுபடுத்துவோர், பணியில் ஈடுபடுத்தும்போது இளங்காளைகள் மற்றும் பிற விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் மூக்குகளில் துளையிடுபவர்கள், விலங்குகளை எப்போதும் கட்டியே வைத்திருப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(80)
வயல் விளைச்சலில் ஆறிலொரு பங்கை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டும் தங்கள் குடிமக்களைக் காக்காத மன்னர்களும், இயன்றவர்களாக இருந்தும், வளமிருந்தும் கொடையளிப்பதைத் தவிர்ப்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(81) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தற்கட்டுப்பாடு, ஞானம் கொண்ட மனிதர்களையும், பல வருடங்களாகத் துணைபுரிந்தவர்களாக இருந்தும் அதற்கு மேலும் பணி செய்ய இயலாத மனிதர்களையும் கைவிடுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(82) சிறுவர்கள், முதியவர்கள், பணியாட்கள் ஆகியோருக்கு உணவைக் கொடுக்காமல் உண்ணும் மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(83)
மேற்குறிப்பிடப்பட்ட மனிதர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்வார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ! யுதிஷ்டிரா, சாத்திரங்களில் தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, ஈகை, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகிய அறங்களைப் பயிலும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(86) தங்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து பணிகள் செய்வதன் மூலம் அறிவை ஈட்டி, கடுந்தவங்களை நோற்று, கொடையேற்கும் விருப்பமற்றவர்களானவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(87)
அச்சம், பாவம், நிறைவேற்ற விரும்புவதற்குரிய வழியில் கிடக்கும் தடைகள், வறுமை, நோயின் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிறரை விடுவிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(88) மன்னிக்கும் மனோ நிலை, பொறுமை ஆகியவற்றைக் கொண்டவர்களும், அறச்செயல்கள் யாவையும் உடனே செய்பவர்களும், மங்கலவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(89) தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவர்களும், பிறன் மனைவியருடன் பாலினக் கலவியைத் தவிர்ப்பவர்களும், மது, சாராயங்களைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(90) ஓ! பாரதா, தவசிகளுக்கான ஆசிரமங்களை நிறுவுவதில் உதவி செய்பவர்களும், குடும்பங்களை நிறுவுபவர்களும், மனிதர்கள் வசிக்கப் புதிய நாடுகளை உண்டாக்குபவர்களும், நகரங்கள் மற்றும் ஊர்களைப் பதிப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(91) உடைகள், ஆபரணங்கள், உணவு, பானம் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களும், பிறர் {ஆதரவற்றவர்கள்} திருமணம் செய்து கொள்ள உதவி செய்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(92)
உயிரினங்கள் அனைத்திற்கும் எவ்வகைத் தீங்கைச் செய்வதையும் தவிர்ப்பவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும், அனைத்து உயிரினங்களின் புகலிடமாகத் தங்களை அமைத்துக் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(93) தங்கள் தந்தையர் மற்றும் தாய்மாரிடம் பணிவுடன் காத்திருப்பவர்களும், தங்கள் புலன்களை அடக்கியவர்களும், உடன்பிறந்தோரிடம் அன்புடன் நடந்து கொள்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(94) உலகம் சார்ந்த பொருட்களுடன் வளமாகவும், வலிமையும், பலமும் கொண்டவர்களாகவும், இளமை இன்பத்தில் இருப்பவர்களாகவும் இருந்தாலும், தங்கள் புலன்களை அடக்கிய மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(95) தங்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களிடமும் அன்பாக நடந்து கொள்பவர்களும், மென்மையான மனநிலை கொண்டவர்களும், மென்னடத்தைக் கொண்டோர் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களும், பணிவுடன் அனைத்து வகைத் தொண்டையும் செய்து பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(96)
ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடையளிப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களைத் துயரில் இருந்து மீட்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(97) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ! பாரதா, பொதுமக்களுக்கான மகிழ்மன்றங்கள், தோட்டங்கள், கிணறுகள், ஓய்வில்லங்கள், பொதுக்கூட்டங்களுக்கான கட்டடங்கள், கால்நடை மற்றும் மனிதர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளக்கூடிய குளங்கள், உழவுக்களங்கள் {வயல்கள்} ஆகியவற்றை அமைக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(100)
வேண்டி வரும் மனிதர்களுக்கு வீடுகள், களங்கள் {வயல்கள்}, கிராமங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(101) இன்சுவை கொண்ட கனிச்சாறுகள், வித்துகள், நெல் அல்லது அரசி {தானியங்கள்} ஆகியவற்றைப் பிறருக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(102) உயர்குடியில் அல்லது கீழ்க்குடியில் பிறந்தும், நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து, கருணை பயின்று, கோபத்தை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(103) ஓ! பாரதா, மறுமைக்காகத் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவிக்கும் வகையில் மக்களால் செய்யப்படும் சடங்குகள், கொடைகள் குறித்த விதிகளையும், கொடைகள் மற்றும் அவற்றை அளிக்கும் செயல்முறைகள் ஆகியவற்றைக் குறித்த பழங்காலத்து முனிவர்களின் பார்வைகளையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}.(104)
அநுசாஸனபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 104
ஆங்கிலத்தில் | In English |