Brahminicide! | Anusasana-Parva-Section-24 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 24)
பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே பிரம்மஹத்தி பாவம் பீடிக்கக்கூடிய சூழ்நிலைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் அரச மகனே, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் தருணங்கள் என்னென்ன?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, முன்பு ஒரு நாள் இதே காரியம் குறித்து விளக்கிச் சொல்லுமாறு வியாசரை வேண்டினேன். அத்தருணத்தில் வியாசர் சொன்னதை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2)
வியாசரிடம் சென்ற நான், "ஓ! பெருந்தவசியே, வசிஷ்டரின் நாலாம் தலைமுறை வழித்தோன்றல் {வாரிசு} நீர். இஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் {பிரம்மஹத்தி பீடித்தவனாகும்} தருணங்கள் என்னென்ன?" என்று கேட்டேன்.(3) ஓ! மன்னா, இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், பராசரர் மடியில் பிறந்த மகனும், அறநெறிகளில் திறம்பெற்றவருமான அவர், சிறப்பு நிறைந்த, உறுதியான பதிலை பின்வருமாறு அளித்தார்.(4)
{வியாசர்}, "அறமொழுகும் பிராமணர் ஒருவருக்குப் பிச்சை தருவதாக அவரைத் தானே அழைத்துவிட்டு, வீட்டில் ஏதுமில்லை என்ற பாசாங்குடன் ஏதும் கொடுக்க மறுக்கும் மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் {அவன் பிரம்மஹத்தி என்ற பாவத்தைச் செய்தவன்} என்பதை நீ அறிய வேண்டும்.(5)
ஓ! பாரதா, வேதங்களையும், அவற்றின் அங்கங்களை யாவையும் கற்றவரும், உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டவருமான ஒரு பிராமணருடைய வாழ்வாதாரங்களை அழிக்கும் ஒருவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(6)
ஓ! மன்னா, தாகம் தணித்துக் கொண்டிருக்கும் பசுவை தண்ணீர் அருந்த விடாமல் தடை செய்பவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(7)
காலகாலமாக ஆசான் மூலம் சீடனிடம் வரும் ஸ்ருதிகள், அல்லது முனிவர்களால் தொகுக்கப்பட்ட சாத்திரங்கள் ஆகியவற்றைப் படிக்காமலேயே அவற்றிடம் குறை காண்பவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ கருத வேண்டும்.(8)
அழகையும், பிற சிறப்புகளைக் கொண்ட தன் மகளைத் தகுந்த மணமகனுக்கு {திருமணம் செய்து கொடுக்காத} அளிக்காத மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(9)
இதயம்பிளக்கும் துன்பத்தைப் பிராமணர்களுக்கு அளிக்கும் பாவம் நிறைந்த ஒரு மூடனை பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(10) பார்வையற்றவர்கள், முடவர்கள், மூடர்கள் ஆகியோரின் செல்வங்கள் அனைத்தையும் களவாடுபவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(11) தவசிகளின் ஆசிரமங்களுக்கோ, காடுகளுக்கோ, கிராமத்திற்கோ, நகரத்திற்குத் தீ வைக்கும் மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்" என்றார் {என்றார் வியாசர் எனச் சொன்னார் பீஷ்மர்}.(12)
அநுசாஸனபர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |