Friday, March 22, 2019

கங்கையின் மகிமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 26

The glory of Ganga! | Anusasana-Parva-Section-26 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 26)


பதிவின் சுருக்கம் : தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும், சீல நோன்புடன் கூடிய உஞ்சவிருத்தி செய்து வந்த ஒரு பிராமணருக்குமிடையில் கங்கையின் மகிமையைக் குறித்து நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கும், மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பிரம்மனுக்கும் இணையானவரும், ஆற்றலில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சக்தியில் சூரியனுக்கும் ஒப்பானவரும்,(1) அளவிலா வலிமை கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மர், போரில் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார். மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் பல மக்கள் சூழ இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.(2) வீரர்கள் விரும்பும் படுக்கையில் கிடந்த அந்த முதிய வீரர், தமது உடலில் இருந்து விடுபெறும் மங்கல நேரத்திற்காகக் காத்திருந்தார். பாரதக் குலத்தில் முதன்மையானவரான அவரைக் காணப் பெரும் முனிவர்கள் பலர் அங்கே வந்தனர்.(3)


அவர்களில் அத்ரி, வசிஷ்டர், பிருகு, புலஸ்தியர், புலக்ஷர் மற்றும் கிரது ஆகியோரும் இருந்தனர். அங்கிரஸ், கௌதமர், அகஸ்தியர், நன்கு அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஸுமதி,(4) விஷ்வாமித்திரர், ஸ்தூலசிரஸ், ஸம்வர்த்தர், பிரமதி, தமர் ஆகியோரும் அங்கிருந்தனர். பிருஹஸ்பதி, உசானஸ் {சுக்ராசாரியர்}, வியாசர், சியவனர், காசியபர், துருவர்,(5) துர்வாஸர், ஜமதக்நி, மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், ரைப்யர், யவக்ரீதர், திரிதர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(6) ஸ்தூலாக்ஷர், சுபலாக்ஷர், கண்வர், மோதாதிதி, கிருசர், நாரதர், பர்வதர், ஸுதன்வா, ஏகதர், துவிதர்,(7) நிதம்பூ, புவனர், தௌம்யர், சதானந்தர், அக்ரதவ்ரணர், பரசுராமர், கசர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(8) உயர் ஆன்மா கொண்டவர்களான இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரைக் காண வந்தனர். தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன், ஒருவர் பின் ஒருவரா அங்கே வந்த உயர் ஆன்ம முனிவர்களை வழிபட்டான். அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அந்த முதன்மையான முனிவர்கள் அங்கே அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடத் தொடங்கினர்.(9,10)

பீஷ்மர் தொடர்பான அவர்களது உரையாடல் மிக இனிமையானதாகவும், புலன்கள் அனைத்திற்கும் ஏற்புடையதாகவும் இருந்தது. அவர்கள் தம்மைக் குறித்துப் பேசுவதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஏற்கனவே தாம் சொர்க்கத்தில் இருப்பதாகக் கருதினார்.(11) அப்போது அந்த முனிவர்கள் பீஷ்மரிடமும், பாண்டவ இளவரசர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, காண்போர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து மறைந்தனர்.(12) பாண்டவர்கள் அந்தப் பேரருள் கொண்ட முனிவர்கள் மறைந்த பிறகும் அவர்களை மீண்டும் மீண்டும் துதித்துக் கொண்டிருந்தனர்.(13) பிறகு உற்சாகமிக்க ஆன்மாக்களுடன் கூடிய அவர்கள், உதிக்கும் சூரியனுக்காகக் காத்திருக்கும் மந்திரங்களில் திறன்மிக்கப் பிராமணர்களைப் போலக் கங்கையின் மைந்தரிடம் காத்திருந்தனர்.(14) அவர்களது தவசக்தியின் விளைவால் திசைப்புள்ளிகள் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அக்காட்சியைக் கண்டு பாண்டவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அம்முனிவர்கள் பெற்றிருந்த பேரருளையும், பலத்தையும் நினைத்துப் பார்த்த பாண்டவ இளவரசர்கள், அக்காரியம் குறித்துத் தங்கள் பாட்டனான பீஷ்மரிடம் உரையாடத் தொடங்கினர்".(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவ்வுரையாடல் முடிந்த பிறகு, பாண்டுவின் மகனான நீதிமான் யுதிஷ்டிரன், பீஷ்மரின் பாதங்களைத் தன் தலையால் தொட்டு, அதன் பிறகு அறம் மற்றும் நெறிகள் தொடர்பான தன் கேள்விகளை மீண்டும் கேட்கத் தொடங்கினான்.(17)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்த நாடுகள், எந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்த மலைகள், எந்த ஆறுகள் முதன்மையானவை?" என்று கேட்டான்.(18)

சீலம் மற்றும் உஞ்ச {சீலோஞ்சவிருத்தி} நோன்புகளை ஒரு பிராமணருக்கும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும் இடையில் இது தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் தென்படுகிறது.(19) ஒரு காலத்தில், மலைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த ஒரு முதன்மையான மனிதன், இறுதியாகச் சீல {சீல விருத்தி} நோன்புக்கு இணக்கமான இல்லறவாழ்வு முறையைப் பின்பற்றி வாழும் ஒரு முதன்மையான மனிதரின் இல்லத்திற்கு {ஒரு கிருஹஸ்தனின் வீட்டுக்கு} வந்தார்.(20) பின்னவர் தமது விருந்தினரை உரிய சடங்குகளுடன் வரவேற்றார். இத்தகைய விருந்தோம்பலைப் பெற்று மகிழ்ந்த அந்த முனிவர், தமக்கு விருந்தளிப்பவரின் இல்லத்திலேயே அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினார்.(21) அடுத்தநாள் காலையில் சீல நோன்பை நோற்கும் அந்தப் பிராமணர், காலையில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் சடங்குகளை முடித்து, தம்மை முறையாகத் தூய்மை செய்து கொண்டு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் தமது விருந்தினரை உற்சாகமாக அணுகினார்.(22) ஒருவரையொருவர் சந்தித்துச் சுகமாக அமர்ந்த அவ்விருவரும், வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் தொடர்பான இனிமையான உரையாடலைத் தொடங்கினர்.(23) அந்த உரையாடலின் முடிவில் சீல நோன்பை நோற்கும் பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவரிடம் மதிப்புடன் பேசினார். ஓ! யுதிஷ்டிரா, நுண்ணறிவுடன் கூடிய அவர், நீ என்னிடம் கேட்ட அதே கேள்வியை முன்வைத்தார்.(24)

அந்த வறிய பிராமணர், "புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்தெந்த நாடுகள், எந்தெந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்தெந்த மலைகள், எந்தெந்த ஆறுகள் முதன்மையானவையாகக் கருதப்பட வேண்டும்? இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(25)

தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர், "ஆறுகள் அனைத்திலும் முதன்மையான பாகீரதி {கங்கை} பாயும் கரைகளுக்கு அருகே உள்ள நாடுகள், மாகாணங்கள், ஆசிரமங்கள், மலைகள் ஆகியவையே முதன்மையான புனிதம் கொண்டவை.(26) தவங்கள், பிரம்மச்சரியம், வேள்விகள், துறவு, ஆகியவற்றின் மூலம் ஓர் உயிரினம் அடையவல்ல கதியைப் பாகீரதியின் புனித நீரில் நீராடி அதன் அருகில் வாழ்வதால் மட்டுமே ஒருவன் நிச்சயம் அடைவான்.(27) மேனியில் பாகீரதியின் புனித நீர் தெளிக்கப்பட்டவை, அல்லது அந்தப் புனித ஆற்றில் எலும்புகள் இடப்பட்டவையான உயிரினங்கள் எக்காலத்திலும் சொர்க்கத்தில் இருந்து வீழ நேராது.(28) ஓ! கல்விமானான பிராமணரே, தங்கள் செயல்கள் அனைத்திலும் பாகீரதியின் நீரைப் பயன்படுத்தும் மனிதர்கள், இவ்வுலகில் இருந்து சென்றதும் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(29) தங்கள் வாழ்வின் முதல் பகுதியில் பாவம் நிறைந்த செயல்கள் பலவற்றைச் செய்த மனிதர்களும் கூட, வருடக்கணக்கில் கங்கையில் அருகில் வசிப்பதன் மூலம் மேன்மைமிக்கக் கதியை அடைவதில் வெல்வார்கள்.(30)

கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவதன் மூலம் விளையும் பலனை நூறு வேள்விகளாலும் உண்டாக்க முடியாது.(31) கங்கையின் ஓடையில் ஒரு மனிதனின் எலும்புகள் கிடக்கும் காலம் வரை அவன் சொர்க்கத்தில் மதித்து வழிபடப்படுவான்.(32) நாள் புலர்கையில் இருளை அகற்றி, காந்தியில் சுடர்விட்டு எழும் சூரியனைப் போலவே, கங்கை நீரில் நீராடிய மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து காந்தியில் ஒளிர்வது காணப்படுகிறது.(33) கங்கையின் புனித நீர் இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும் நிலவற்ற இரவுகள் போன்றவையோ, மலர்களற்ற மரங்களையோ போன்றவையாகும்.(34) உண்மையில், கங்கையில்லாத உலகம் என்பது, அறமற்ற பல்வேறு வகையினரையும், வாழ்முறைகளைக் கொண்டவர்களையும், அல்லது சோமமற்ற வேள்விகளைப் போன்றதாகும்.(35)

கங்கை இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும், சூரியனற்ற ஆகாயத்தையோ, மலைகளற்ற பூமியையோ, காற்றில்லாத வெளியையோ போன்றவை என்பதில் ஐயமில்லை.(36) மூவுலகங்களில் உள்ள மொத்த உயிரினங்களும் கங்கையின் மங்கல நீரால் தொண்டாற்றப்பட்டால் {தர்ப்பணம் செய்யப்பட்டால்} எந்த ஆதாரத்தில் இருந்தும் அடையப்பட இயலாத இன்பத்தை அவை அடையும்.(37) சூரியனின் கதிர்களால் வெப்பமூட்டப்பட்ட கங்கையின் நீரைப் பருகும் ஒருவன், மாட்டுச் சாணத்தில் இருந்து சேகரிக்கப்படும் கோதுமை, அல்லது வேறு எந்தத் தானியத்தையும் உண்டு வாழும் நோன்பு தருவதை விடப் பெரும்பலனை அடைவான்.(38) தன்னுடலைத் தூய்மை செய்து கொள்ள ஓராயிரம் சாந்திராயணச் சடங்குகளைச் செய்யும் ஒருவன், கங்கை நீரைப் பருகும் ஒருவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது.(39) ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நிற்பவன், கங்கையின் கரையில் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்தவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது[1].(40)

[1] கும்பகோணம் பதிப்பில், "ஆயிரம் சாந்திராயணம் செய்து தேகசுத்தி செய்கிறவனும், கங்கை ஜலத்தைக் குடிப்பவனும் ஒப்பாயிருப்பரோ; இராரோ. ஆயிரம் யுகங்கள் ஒற்றைக்காலால் நின்று தவம் செய்யும் மனிதனும் ஒரு மாஸம் கங்கையில் ஸ்நானம் செய்பவனும் ஸரியாயிருப்பரோ; இராரோ" என்றிருக்கிறது.

கங்கையின் கரையில் நிரந்தரமாக வாழும் ஒருவன், பத்தாயிரம் யுகங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பவனை விடத் தகுதியில் மேம்பட்டவனாவான்.(41) நெருப்புடன் தொடர்பேற்படுகையில் மிச்சமில்லாமல் எரியும் பஞ்சைப் போலவே, கங்கையில் நீராடும் மனிதனின் பாவங்களும் மிச்சமில்லாமல் எரிக்கப்படுகின்றன.(42) துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயங்களுடன் தங்கள் சோகத்தை விலக்கும் கதியை அடைய முனையும் உயிரினங்களுக்குக் கங்கையைவிட மேன்மையான கதி வேறேதும் இல்லை.(43) கருடனைக் கண்டதும் தங்கள் நஞ்சை இழக்கும் பாம்புகளைப் போலவே, கங்கையின் புனித ஓடையைக் கண்ட உடனேயே ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(44) அறப்புகழற்றவர்கள், பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஆகியோர் கங்கையில் தங்கள் புகழையும், பாதுகாப்பையும், மீட்புக்கான வழிகளையும், தங்கள் புகலிடத்தையும், மறைவிடத்தையும் கொண்டுள்ளனர்[2].(45)

[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் நிலையும், கவசமும், ஆதரவுமற்றவர்கள் எவரோ, அவர்களுக்குக் கங்கை நிலையாகவும், கவசமாகவும், ஆதரவாகவும், ஸுகமாகவும் இருக்கின்றது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அதர்மத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் எவரும், நிலையேதுமற்றவர்களாவர். அவர்கள் கங்கையில் இருந்து புகலிடத்தையும், செழிப்பையும், பாதுகாப்பையும் அடைவார்கள்" என்றிருக்கிறது.

கொடிய இயல்புடன் கூடிய பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இழிந்தவர்கள் பலர், நரகத்தில் மூழ்கப் போகும்போது (பாவிகளாக இருந்தாலும், அவர்கள் கங்கையின் துணையை நாடினால்) மறுமையில் கங்கையால் அவர்கள் மீட்கப்படுவார்கள் {கங்கை அவர்களைக் கரையேற்றுவாள்}.(46) ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, கங்கையின் புனித நீரில் நாள்தோறும் மூழ்குபவர்கள், பெரும் முனிவர்களுக்கும், வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களுக்கும் இணையானவர்களாவார்கள்.(47) ஓ! பிராமணரே, பணிவோ, அடக்கமான நடத்தையோ இல்லாத மனிதர்களில் இழிந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களும், கங்கையில் அருகில் செல்வதால் அறவோராகவும், நல்லோராகவும் மாறுவார்கள்.(48) தேவர்களுக்கு அமுதம் போலவும், பித்ருக்களுக்கு ஸ்வதா போலவும், நாகர்களுக்குச் ஸுதா[3] போலவும் மனிதர்களுக்கு உள்ளதே கங்கையின் நீராகும்.(49) பசியால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் அன்னையரிடம் உணவை வேண்டுவதைப் போலவே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பும் மனிதர்களும் கங்கையிடம் செல்கிறார்கள்.(50)

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சுதா என்பது பால் எனக் கொள்ளப்பட வேண்டும்; அமுதம் என்றல்ல" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "தேவர்களுக்கு ஹவ்யமும், பித்ருக்களுக்குக் குக்கவ்யமும், நாகர்களுக்கு அமிர்தமும் எப்படியோ அப்படியே மனிதர்களுக்குக் கங்காஜலம்" என்றிருக்கிறது.

சுயம்புவான பிரம்மனின் உலகமே இடங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பதைப் போல, நீராட விரும்புவோருக்கு ஆறுகள் அனைத்திலும் முதன்மையான கங்கையே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.(51) தேவர்களுக்குத் தலைமை ஆதாரங்களாகப் பூமியும், பசுக்களும் சொல்லப்படுவதைப் போலவே, வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கங்கையே தலைமை ஆதாரமாக இருக்கிறாள்[4].(52) சூரியனிலும், சந்திரனிலும் தோன்றும் அமுதத்தைக் கொண்டு தங்களை ஆதரித்துக் கொள்ளும் தேவர்களைப் போலவே மனிதர்கள் ஆதரித்துக் கொள்ளத்தக்கது கங்கையின் நீராகும்.(53) கங்கைக் கரைகளில் உள்ள மண்ணை எடுத்துப் பூசிக் கொள்பவன், தேவ களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் இருக்கும் சொர்க்கவாசியைப் போலத் தன்னைக் கருதிக் கொள்ளலாம்.(54) கங்கைக் கரையில் உள்ள சேற்றைத் தன் தலையில் பூசிக் கொள்பவன், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் சூரியனுக்கு இணையான பிரகாசத்தை அடைவான்.(55)

[4] "தேவர்கள், வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளால் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் காணிக்கைகள் பூமியில் உண்டான விளைச்சலையும், பசுவின் மூலம் உண்டான நெய்யையும் கொண்டதாகும். எனவே, தேவர்கள் பூமியாலும், பசுவாலும் முக்கியமாக ஆதரிக்கப்படுகின்றனர். அசுரர்கள் பூமியைப் பீடிப்பதன் மூலமும், பசுவைக் கொல்வதன் மூலமும் தேவர்களைப் பலவீனப்படுத்துவார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகங்களுக்குப் பசுவும் பிராம்மணனும் எப்படியோ, ஹோமம் செயப்படுவனவற்றுள் ஸோமரஸம் எப்படியோ அப்படியே பாவந்தீரச் செய்பவற்றுள் கங்கை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உள்ளது.

கங்கை நீர்த்துகள்களால் ஈரமூறிய காற்று ஒருவனைத் தீண்டிய உடனேயே அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(56) துன்பங்களால் பீடிக்கப்பட்ட மனிதன் கனம் தாங்காமல் மூழ்கப்போகும் நிலையில் அந்தப் புனித ஓடையைக் கண்டதும், இதயத்தில் எழும் இன்பத்தால் தன் துன்பங்கள் அனைத்தும் விலகுவதைக் காண்கிறான்.(57) கங்கையானவள், அன்னங்கள், கோகங்கள் மற்றும் தன் மார்பில் விளையாடும் பிற நீர்க்கோழிகளின் {சக்ரவாகங்களின்} இனிய ஒலியின் மூலம் கந்தர்வர்களையும், தன் உயர்ந்த கரைகளால் {மணல் மூடுகளினால்} பூமியில் உள்ள மலைகளையும் கங்கை அறைகூவி அழைக்கிறாள்[5].(58) அவளது பரப்பில் மொய்க்கும் அன்னங்கள் மற்றும் பிற வகை நீர்க்கோழிகளையும், பசுக்கள் மேயும் மேய்ச்சல் நிலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கரைகளைக் கொண்டிருப்பதையும் கண்டு சொர்க்கதேவி தன் செருக்கை அழிக்கிறாள்.(59) கங்கைக்கரையில் வசிப்பதின் மூலம் ஒருவன் அனுபவிக்கும் உயர்ந்த இன்பமானது சொர்க்கத்தில் வசிக்கும் ஒருவனுக்குக்கூடக் கிட்டாது.(60)

[5] கும்பகோணம் பதிப்பில், "கங்கையானது அன்னம், சக்ரவாகம் என்னும் பக்ஷிகளின் கூவுதல்களினால் கந்தர்வர்களையும், மணல்மேடுகளினால் மலைகளையும் வென்றது" என்றிருக்கிறது.

வாக்கு, எண்ணம் மற்றும் வெளிப்படையான செயல் ஆகியவற்றின் மூலம் செய்த பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதனும் கங்கையைக் கண்ட உடனே தூய்மையடைவான் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(61) அந்தப் புனித ஓடையைக் கண்டு, அதைத் தொட்டு, அதன் நீரில் நீராடும் ஒருவன், தன்னுடைய ஏழு தலைமுறை மூதாதையர்களையும், ஏழு தலைமுறை வழித்தோன்றல்களையும் {வாரிசுகளையும்} இன்னும் அதிக மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் காப்பாற்றுவான்.(62) கங்கைக் குறித்துக் கேட்டு, அந்த ஆற்றுக்குச் செல்ல விரும்பி, அதன் நீரைப் பருகி, அதன் நீரைத் தொட்டு, அதனில் நீராடும் ஒரு மனிதன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழி குலங்கள் இரண்டையும் காப்பாற்றுகிறான்.(63) கங்கையின் நீரைக் கண்டு, தொட்டுப் பருவதன் மூலமோ, அதைப் புகழ்வதன் மூலமோ, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாவிகள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகின்றனர்.(64) பிறவி, வாழ்வு, கல்வி ஆகியவற்றைக் கனிநிறைந்ததாக்க விரும்புபவர்கள், கங்கைக்குச் சென்று, நீர்க்காணிக்கைகளை வழங்குவதன் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.(65)

கங்கையில் நீராடுவதன் மூலம் ஒருவன் ஈட்டும் தகுதியானது, மகன்களைப் பெறுவதாலோ செல்வத்தைப் பெறுவதாலோ, தகுதிமிக்கச் செயல்களைச் செய்வதாலோ ஈட்ட இயலாததாகும்.(66) உடல் திறனிருந்தும், புனித ஓடையான மங்கலக் கங்கையைக் காண முனையாதவர்களை, பிறவிக் குருடர்களாகவோ, இறந்தவர்களாகவோ, வாதம் அல்லது முடத்தன்மையின் மூலம் நகரும் சக்தியற்றவர்களாகவோ நிச்சயம் கருதலாம்.(67) நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த பெரும் முனிவர்களாலும், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் கூடத் துதிக்கப்படும் இந்தப் புனித ஓடையை எந்த மனிதன் மதிக்க மாட்டான்?(68) காட்டுத்துறவிகள், இல்லறவாசிகள், யதிகள், பிரம்மச்சாரிகள் போன்றோரால் பாதுகாப்பு நாடப்படும் கங்கையிடம் எந்த மனிதன் பாதுகாப்பை நாட மாட்டான்?(69) தன் உயிர் மூச்சானது தன் உடலை விட்டு வெளியேறப்போகும் காலத்தில் குவிந்த ஆன்மாவுடன் கங்கையை நினைக்கும் அறவொழுக்கம் கொண்ட மனிதன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்வான்.(70)

மரணகாலத்தில் கங்கையின் அருகில் வசித்து, மதிப்புடன் அவளைத் துதிக்கும் மனிதன், அனைத்து வகைத் துயரங்கள், பாவம் மற்றும் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(71) மிகப்புனிதமான அந்த ஓடை {கங்கை} ஆகாயத்தில் இருந்து பாய்ந்த போது, மஹேஸ்வரன் அவளைத் தன் தலையில் தாங்கினான். இந்த ஓடையே சொர்க்கத்திலும் துதிக்கப்படுகிறது[6].(72) இந்தப் புனித ஓடையின் மூன்று பாதைகளால் மூவுலகங்களும் (பூமி, சொர்க்கம் மற்றும் பாதாள லோகங்களும்) அலங்கரிகப்பட்டிருக்கின்றன. அந்த ஓடையின் நீரைப் பயன்படுத்தும் மனிதன் நிச்சயம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்.(73) சொர்க்கத்தில் தேவர்களுக்குச் சூரியக் கதிரைப் போலவும், பித்ருக்களுக்குச் சந்திரமாஸைப் போலவும், மனிதர்களுக்கு மன்னனைப் போலவும், அனைத்து ஓடைகளுக்கும் கங்கை இருக்கிறது.(74) கங்கையை இழக்கும்போது ஒருவன் அடையும் துயரத்தின் அளவுக்கு, தாயையோ, தந்தையையோ, மகன்களையோ, மனைவிகளையோ, செல்வத்தையோ இழப்பவன் துயரை உணர மாட்டான்.(75)

[6] கங்கையாறு மூன்று வழிகளைக் கொண்டுள்ளது. பூமியில் பாகீரதி அல்லது கங்கையென்றும்; சொர்க்கத்தில் மந்தாகினி என்றும்; பாதாள லோகத்தில் போகவதி என்ற பெயரிலும் அஃது அறியப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கங்கையைக் காணும் ஒருவன் அடையும் இன்பத்தின் அளவுக்கு எவனும் பிரம்ம லோகத்திற்கு வழிவகுக்கும் செயல்களைச் செய்வதன் மூலமோ, சொர்க்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய வேள்விகள் மற்றும் சடங்குகளின் மூலமோ, பிள்ளைகள் அல்லது செல்வத்தின் மூலமோ அஃதை {இன்பத்தை} அடைய மாட்டான்.(76) கங்கையைக் காண்பதன் மூலம் மனிதர்கள் அடையும் மகிழ்ச்சியானது, அவர்கள் முழு நிலவைக் காணும் போது அடைவதற்கு {அடையும் மகிழ்ச்சிக்கு} இணையானதாகும்.(77) கங்கையிடம் முழுமையாக நிலைபெறச் செய்த மனத்துடனும், ஒப்பற்ற மதிப்புடனும், அவளைத் தவிர அண்டத்தில் துதிக்கத்தக்க வேறேதும் இல்லை {அவளே ஆதாரம், அவளே பரகதி} என்ற உணர்வுடனும், வீழாத உறுதியுடனும் உள்ள மனிதன் கங்கையின் அன்புக்குரியவனாகிறான் {அவளது அனுக்கிரகத்திற்குப் பாத்திரனாவான்}.(78) பூமி, ஆகாயம், அல்லது சொர்க்கத்தில் வாழும் உயிரினங்களும், உண்மையில் மிக மேன்மையானவர்களும் எப்போதும் கங்கையில் நீராட வேண்டும். உண்மையில், கடமைகள் அனைத்திலும் அறவோருக்கு இதுவே முதன்மையான கடமையாகும்.(79) சாம்பலாக்கப்பட்ட சாகரனின் மகன்கள் அனைவரையும் அடித்துச் சென்றதாலும் புனிதமான கங்கையின் புகழ் உம்மையில் இருந்து சொர்க்கம் வரை மொத்த அண்டத்திலும் பரவியிருக்கிறது[7].(80)

[7] "இங்கே சொல்லப்படும் கதை: சூரிய குலத்தின் மன்னன் சாகரனின் அறுபதினாயிரம் மகன்களும் கபிலரின் சாபம் மூலம் சம்பலாக்கப்பட்டனர். அதன் பிறகு, அதே குலத்தைச் சேர்ந்த ஓர் இளவரசனான பகீரதன், அவர்களை மீட்பதற்காகச் சொர்க்கத்தில் இருந்து கங்கையைக் கீழே கொண்டு வந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கங்கையில் காற்றால் எழுப்பப்படுபவையும், பிரகாசமானவையும், அழகியவையும், உயர்ந்தவையும், வேகமாகப் பாய்பவையுமான அலைகளால் கழுவப்பட்ட மனிதர்கள், தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, ஆயிரங்கதிர் கொண்ட பகல் நட்சத்திரத்திற்கு ஒப்பான காந்தியைப் பெறுவார்கள்.(81) வேள்விகளில் ஊற்றப்படும் நெய் மற்றும் பிற பானங்களைப் போன்ற பெருமையும், புனிதமும் கொண்டதும், பெரும் வேள்விகளின் பலன்களைத் தரவல்லதுமான கங்கையின் நீரில் தங்கள் உடல்களை விட்டவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள், நிச்சயம் தேவர்களுக்கு இணையான நிலையை அடைவார்கள்.(82) உண்மையில், புகழையும், பெரும் பரப்பையும் கொண்டவளும், மொத்த அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவளும், மனிதர்களாலும், முனிவர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் மதிக்கப்படுபவளான கங்கையானவள், குருடர்கள், மூடர்கள், அனைத்தையும் இழந்தவர்கள் ஆகியோரின் விருப்பங்கள் அனைத்தையும் கனியும் நிலையை அளிக்கவல்லவளாவாள்.(83) அண்டமனைத்தையும் காப்பவளும், மூவோடைகளாகப் பாய்பவளும், அனைத்து வகை நன்மைகளை உண்டாக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதும், தேனைப் போன்று இனியதுமான நீரால் எப்போதும் நிறைந்திருப்பவளுமான கங்கையைத் தஞ்சமடைந்தவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவதில் வெல்வார்கள்.(84) கங்கையின் அருகில் வசிப்பவனும், நாள்தோறும் அவளைக் காண்பவளுமான மனிதன், அவளைப் பார்ப்பதன் மூலமும், தொடுவதன் மூலமும் தூய்மையடைகிறான். தேவர்கள் அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து வகை மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.(85)

ஒவ்வொரு உயிரினத்தையும் பாவத்தில் இருந்து பாதுகாத்து, சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவகுக்கவல்லவளாகக் கங்கை கருதப்படுகிறாள். அவள் விஷ்ணுவின் தாயான பிருச்நியாகக்[8] கருதப்படுகிறாள். சொல் அல்லது வாக்காக அவளே கருதப்படுகிறாள். அவள் வெகு தொலைவுக்குச் செல்வபவளாகவும், எளியதில் அடையப்பட முடியாதவளுமாக இருக்கிறாள். அவள் மங்கலத்தன்மை மற்றும் செழிப்பின் உடல் வடிவம் ஆவாள். அவள், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொடுக்க வல்லவளாவாள். அவள் எப்போதும் தன் அருளை வழங்குகிக் கொண்டிருக்கிறாள். அவளே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களை வெளிக்காட்டுபவளும், அனைத்து உயிரினங்களின் உயர்ந்த புகலிடமும் ஆவாள். இம்மையில் அவளது பாதுகாப்பை நாடுபவர்கள், நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள்.(86) கங்கையின் புகழானது, ஆகாயம், சொர்க்கம், பூமி, திசைகள் மற்றும் துணைத்திசைகளின் புள்ளிகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. அந்த முதன்மையான ஓடையின் நீரைப் பயன்படுத்தவதுன் மூலம் மனிதர்கள் எப்போதும் உயர்ந்த வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள்.(87) கங்கையைக் கண்டு, அவளைப் பிறருக்குச் சுட்டிக் காட்டும் மனிதன், கங்கையானவள் தன்னை மறுபிறவியில் இருந்து மீட்பதையும், தனக்கு முக்தியை அருள்வதையும் காண்கிறான். கங்கையானவள், தேவர்களின் படைத்தலைவனான குஹனைத் தன் கருவறையில் சுமந்தாள். உலகங்களில் விலைமதிப்புமிக்கத் தங்கத்தையும் அவள் தன் கருவறையில் சுமக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில், அவளது நீரில் நீராடுபவர்கள், அறம் பொருள் இன்பமென்ற முத்தொகையையும் அடைவதில் வெல்கிறார்கள். மேலும் அந்த நீரானது, வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யின் புனிதத்துக்கு இணையானதாக இருக்கிறது. பாவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்ல அவள், தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளாவாள், மேலும் அவளது ஓடையானது ஒவ்வொருவராலும் உயர்வாக மதிக்கப்படுகிறது.(88) கங்கையானவள், இமயத்தின் மகளும், ஹரனின் மனைவியும், சொர்க்கம் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஆபரணமுமாவாள். அவள் மங்கலமான அனைத்தையும் வழங்குபவளும், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களை அளிக்கவல்லவளும் ஆவாள்.(89) உண்மையில், ஓ! ஏகாதிபதி, கங்கையானவள் அறத்தின் நீர் வடிவமாவாள். அவள் பூமியில் நீர் வடிவில் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியுமாவாள். அவள், வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யுடைய காந்தியைக் கொண்டவள் ஆவாள். அவள் எப்போதும் பேரலைகளாலும், அவளது நீரில் தூய்மைச் சடங்குகளைச் செய்யும் பிராமணர்களாலும் எப்போதும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். சொர்க்கத்தில் இருந்து பாய்ந்த அவளைச் சிவன் தன் தலையில் தாங்கினான். உண்மையில் சொர்க்கங்களின் தாயான அவள், சம வெளிகளில் பாய்ந்து, பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மதிப்புமிக்க நன்மைகளை வழங்குவதற்காகவும் உயர்ந்த மலையில் உதித்தாள்.(90)

[8] கும்பகோணம் பதிப்பில், "இஷ்டங்களைக் கொடுக்கச் சக்தியுள்ளதும், அடுத்தவர்களை விசாரிப்பதும், பெரிதும் வெகுதூரம் செல்வதும், க்ஷேமத்தையும், ஸம்பத்தையும் தருவதும், பாக்கியமுள்ளதும், மிக்க அனுக்கிரகமுள்ளதும், தேஜஸைக் கொடுப்பதும், எல்லாப் பிராணிகளுக்கும் ஆதாரமுமான கங்கையை அடைந்தவர்கள் ஸ்வர்க்கத்தை அடைந்தவர்கள்தாம்" என்றிருக்கிறது. இதில் "அடுத்தவர்களை விசாரிப்பதும்" என்ற இடத்தில் அடிக்குறிப்பாக, "’பிருச்நி’ என்பது மூலம்; ‘விஷ்ணுவின் தாய்’ என்பது பழைய உரை" என்றிருக்கிறது.

அவளே அனைத்துப் பொருட்களின் உயர்ந்த காரணமாகவும்; முற்றிலும் களங்கமற்றவளாகவும் இருக்கிறாள். அவள் பிரம்மத்தைப் போல நுட்பமானவளாக இருக்கிறாள். அவள் சிறந்த மரணப் படுக்கையை அளிக்கிறாள். அவள் உயிரினங்களை மிக விரைவில் சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறாள். பேரளவு நீருடன் அவள் பாய்கிறாள். அவள் அனைவருக்கும் பெரும்புகை அளிக்கிறாள். அவள் அனைத்து வடிவங்களுடனும் அடையாளம் காணப்படுகிறாள். வெற்றியால் மகுடம் சூட்டபட்ட மனிதர்களால் அவள் பெரிதும் விரும்பப்படுகிறாள். கங்கையில் நீராடியவர்களுக்கு அவளே சொர்க்கத்தின் பாதையாக இருக்கிறாள்.(91) கங்கையானவள் மன்னிக்கும் தன்மையில், பாதுகாப்பதில், தன்னால் வாழ்பவர்களை ஆதரிப்பதில் பூமாதேவிக்கு இணையானவள் என்றும், சக்தியிலும், காந்தியிலும் நெருப்புக்கும், சூரியனுக்கும் இணையானவள் என்றும், மறுபிறப்பாளர்களுக்குக் கருணை காட்டும் காரியத்தில் எப்போதும் குஹனுக்கு இணையானவள் என்றும் பிராமணர்கள் கருதுகிறார்கள்.(92) முனிவர்களால் புகழப்படுபவளும், விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உண்டாகுபவளும், மிகப் பழமையானவளும், மிகப் புனிதமானவளுமான அந்த ஓடையை இம்மையில் தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் மனத்தாலும் நாடும் மனிதர்கள், பிரம்மலோகம் செல்வதில் வெல்வார்கள்.(93) பிள்ளைகள், பிற உடைமைகள், அனைத்து வகை இன்ப நிலைகளையும் கொண்ட உலகங்கள் ஆகியவை நிலையற்றவை, அல்லது அழியத்தக்கவை என்று முழுமையாக நம்புபவர்களும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும், பிரம்மத்துடன் அடையாளம் காணப்படும் நிலையில் எப்போதும் நீடித்திருக்கும் நிலையை அடைய விரும்புபவர்களுமான மனிதர்கள், தாயிடம் மகன் கொள்ளும் அன்பையும், மதிப்பையும் கொண்டு கங்கைக்குத் தங்கள் துதிகளை எப்போதும் செலுத்துகின்றனர்.(94) வெற்றியை அடைய விரும்பும் தூய ஆன்மா கொண்ட மனிதன், சாதாரணப் பாலுக்குப் பதிலாக அமுதத்தைக் கொடுக்கும் பசுவைப் போன்றவளும், செழிப்பின் உடல் வடிவம் போன்றவளும், எங்கும் இருப்பவளும், உயிரினங்களின் மொத்த அண்டத்தில் இருப்பவளும், அனைத்து வகை உணவுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பவளும், மலைகள் அனைத்தின் அன்னையும், அறவோர் அனைவரின் புகலிடமும், அளவிலா பலமும், சக்தியும் கொண்டவளும், பிரம்மனின் இதயத்திற்கு இன்பமளிப்பவளுமான கங்கையின் பாதுகாப்பை நாட வேண்டும்.(95)

பகீரதன் கடுந்தவங்களைச் செய்து, பரமத்தலைவனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய தேவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்து, கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவளிடம் செல்லும் மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் உள்ள அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவதில் வெல்கிறார்கள்.(96) கங்கை தரும் பலன்களில் சிறு பகுதியை மட்டுமே என் புத்தியின் துணையால் கண்டு நான் உமக்குச் சொல்லியிருக்கிறேன். எனினும், அந்தப் புனித ஆற்றின் தகுதிகள் அனைத்தையும், அல்லது உண்மையில் அவளது பலம் மற்றும் புனிதத்தன்மை அனைத்தையும் உரைக்க எனக்குச் சக்தி கிடையாது.(97) ஒருவனால் தன் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தி மேரு மலையில் உள்ள கற்களை எண்ணி விடவும், பெருங்கடலில் உள்ள நீரை அளந்துவிடவும் முடியலாம். ஆனால் கங்கை நீரின் பலன்கள் அனைத்தையும் அவன் எண்ணிவிட முடியாது.(98) எனவே, பெரும் அர்ப்பணிப்புடன் நான் சொன்ன கங்கையில் சில குறிப்பிட்ட பலன்களைக் கேட்ட ஒருவன், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை அவற்றை மதிக்க வேண்டும்.(99) நான் சொன்ன பலன்களைக் கேட்டதன் விளைவால், நீர் மூவுலகங்களையும் உமது புகழால் நிறைத்து, எந்த மனிதனும் அடைவதற்கரியதும், அளவில் பெரியதுமான வெற்றியை நிச்சயம் அடைவீர். தன்னை மதிப்பவர்களுக்குக் கங்கையால் உண்டாக்கப்பட்ட இன்பமிக்கப் பல பகுதிகளை நீர் மிக விரைவில் அடைந்து, நிச்சயம் இன்பத்தில் திளைப்பீர்.(100) இதயப்பணிவுடன் தன்னிடம் அர்ப்பணிப்பு கொள்வோருக்குக் கங்கை எப்போதும் அருள்புரிவாள். தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோருக்கு அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அவள் அளிப்பாள். உயர்ந்த அருளைக் கொண்டவளான கங்கை, உமது இதயத்தையும் என் இதயத்தையும் அறம் நிறைந்த குணங்களில் ஈர்க்க வேண்டுகிறேன்" என்றார் {முனிவர்}".(101)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மாவையும், பெருங்காந்தியையும் கொண்டவரும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், கல்விமானுமான அந்தத் தவசி, சீல நோன்பு நோற்கும் அந்த வறிய பிராமணரிடம் இவ்வகையில் கங்கையின் முடிவிலா பலன்களைக் குறித்துப் பேசி ஆகாயத்தில் உயர்ந்தார்.(102) சீல நோன்பை நோற்கும் அந்த வறிய பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசியின் சொற்களால் விழிப்படைந்து, கங்கையின் பாதுகாப்பை முறையாகப் பெற்று உயர்ந்த வெற்றியை அடைந்தார்.(103) ஓ! குந்தியின் மகனே, நீயும் பேரர்ப்பணிப்புடன் கங்கையை நாடி, அதன் மூலம் வெகுமதியையும், உயர்ந்த சிறப்பான வெற்றியையும் அடைவாயாக" {என்றார் பீஷ்மர்}.(104)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கங்கையின் புகழ் நிறைந்த இவ்வுரையைப் பீஷ்மரிடம் இருந்து கேட்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து பெருமகிழ்ச்சியடைந்தான்.(105) கங்கையின் புகழ் நிறைந்த இந்தப் புனித உரையைச் சொல்லும், அல்லது கேட்கும் எந்த மனிதனும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்" {என்றார் வைசம்பாயனர்}.(106)

அநுசாஸனபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 106

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top