The status of being a Brahmana! | Anusasana-Parva-Section-27 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 27)
பதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ! மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு? அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா? அறச்செயல்களா? சாத்திரங்களில் உள்ள ஞானத்தாலா? ஓ! பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, மூன்றில் எந்த வகையைச் சார்ந்த எந்த மனிதரும் பிராமணநிலையை அடைய இயலாதவராவர். உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலை அது.(5) மறுபிறவிகளுக்கு உட்பட்டு மீண்டும் மீண்டும் எண்ணற்ற வகை இருப்புகளில் பயணிப்பதன் மூலமே ஒருவன் இறுதியாக ஏதாவதொரு பிறவியில் பிராமணனாகப் பிறக்கிறான்.(6) ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவனது தந்தை, அச்செயலுக்குத் தேவைப்படும் பொருட்களைத் திரட்டி வருமாறு அவனைப் பணித்தார். தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, காரியத்தை நிறைவேற்றப் புறப்பட்ட அவன், ஒரு கழுதையால் இழுக்கப்பட்ட தேரை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.(9) அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த கழுதையானது வயதில் இளையதாக இருந்தது. எனவே, அந்த விலங்கு கடிவாளத்திற்குக் கட்டுப்படாமல், தன்னை ஈன்ற தாயான பெண்கழுதையின் அருகில் தேரைக் கொண்டு சென்றது. இதனால் பொறுப்பு நிறைவேற்படாத மந்தங்கன் சாட்டையினால் அந்த விலங்கின் மூக்கில் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஒரு ப்ராம்மணனுக்கு ஒத்த வர்ணப் பெண்ணினிடத்தில் எல்லாக்குணங்களுக்கு நிரம்பினவனாகிய மதங்கன் என்னும் பெயருள்ள ஒரு புதல்வன் பிறந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பிராமணன் இருந்தான், அவன் தன் வர்ணத்திற்கு இணையல்லாதவர் மூலம் ஒரு மகனை அடைந்தான். மதங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன் அனைத்து குணங்களையும் கொண்டவனாக இருந்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இது பின்னர் விளக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
தன் பிள்ளையின் மூக்கில் உள்ள வன்முறைக் குறியீடுகளைக் கண்ட அந்தப் பெண் கழுதை அதனிடம் அன்பால் நிறைந்து, "ஓ! குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா?(12) எனினும் இவன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய உயிரினத்திடமும் அவன் கருணை காட்டவில்லை. இவ்வழியில் நடப்பதால் அவன் தன் பிறப்பின் வகையையே உறுதி செய்து கொண்டிருக்கிறான். தன் தந்தையிடம் இருந்து இவன் அடைந்திருக்கும் இயல்பானது, பிராமண இயல்பான கருணை, அன்பு ஆகியவை எழுவதைத் தடுக்கிறது" என்றது.(13)
[2] கும்பகோணம் பதிப்பில், "மைந்தனே, வ்யஸனப்படாதே. சண்டாளன் உன்னை அடிக்கிறான். ப்ராம்மணன் கொடியவனாயிருப்பதில்லை. பிராம்மணன் எல்லாப் ப்ராணிகளுக்கும் அன்பனென்று சொல்லப்படுகிறான்" என்றிருக்கிறது.
பெண் கழுதையின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட மதங்கன், தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையிடம், "ஓ! அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள்?(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய்? தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ! பெரும் ஞானியே, தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக" என்று கேட்டான்.(16)
அதற்கு அந்தப் பெண் கழுதை {மதங்கனிடம்}, "சவரத்தொழில் செய்யும் ஒரு சூத்திரன் மூலம் ஆசையால் தூண்டப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். எனவே, பிறப்பால் நீ ஒரு சண்டாளனாவாய். உனக்குப் பிராமண நிலை எப்போதும் கிடையாது" என்றது"[3].(17)
[3] கும்பகோணம் பதிப்பில், "நீ கள் மயக்கமுள்ள ப்ராம்மணப் பெண்ணிடம் சூத்ரனான நாவிதனுக்குப் பிறந்தவன். அதனால், நீ சண்டாளனாகிறாய். அதனால், உன் ப்ராம்மணத்வம் போயிற்று" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு பிராமணப் பெண் இருந்தாள், சவரத் தொழில் செய்யும் ஒரு விருஷலனுக்கு நீ பிறந்தாய். நீ சண்டாளனாகப் பிறந்ததற்கும், உன் பிராமண நிலை அழிந்ததற்கும் அதுவே காரணம்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெண் கழுதையால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் தான் வந்த சுவடுகளின் வழியே மீண்டும் தன் இல்லம் நோக்கி சென்றான். அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது தந்தை,(18) "நான் செய்ய நினைத்த வேள்விக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் கடினமான பணியில் நான் உன்னை ஈடுபடுத்தினேன். உன் பொறுப்பை நிறைவேற்றாமல் நீ ஏன் திரும்பி வந்தாய்? உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா?" என்று கேட்டார்.(19)
மதங்கன், "எவ்வித உறுதியுமற்ற வகையில், அல்லது மிகத் தாழ்ந்த வகையில் பிறந்த ஒருவன், சரியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எவ்வாறு கருதமுடியும்? ஓ! தந்தையே, களங்கமுள்ள தாயைக் கொண்ட ஒருவனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(20) ஓ! தந்தையே, மனிதர்களைவிட மேலானதாகத் தெரியும் இந்தப் பெண் கழுதை, நான் ஒரு சூத்திரனால் ஒரு பிராமணிப் பெண்ணிடம் பெறப்பட்டவன் என்று சொல்கிறது. இக்காரணத்தினால் நான் கடுந்தவங்களைச் செய்யப் போகிறேன்" என்றான்.(21)
அவன், தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தான் சொன்னதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பெருங்காட்டிற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(22) மகிழ்ச்சியாகப் பிராமண நிலையை அடையும் நோக்கத்திற்காகத் தவங்களைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்ட மதங்கன், தன் தவத்தின் கடுமையால் தேவர்களை எரிக்கத் தொடங்கினான்.(23)
இவ்வாறு தவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவனிடம் தேவர்களின் தலைவனான இந்திரன் தோன்றி, "ஓ! மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய்?(24) நான் உனக்கு வரமளிக்கப் போகிறேன். நீ விரும்பும் வரங்களைச் சொல்வாயாக. தாமதிக்காமல் உன் நெஞ்சில் இருப்பதைச் சொல்வாயாக. அடைவதற்கரிதாக இருந்தாலும் நான் அஃதை உனக்களிப்பேன்" என்றான்.(25)
மதங்கன், "பிராமண நிலையை அடைய விரும்பியே நான் இந்தத் தவங்களைச் செய்யத் தொடங்கினேன். அஃதை அடைந்ததும் நான் இல்லந்திரும்புவேன். இதுவே என்னால் வேண்டப்படும் வரமாகும்" என்றான்".(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன், அவனிடம், "ஓ! மதங்கா, நீ அடைய விரும்பும் பிராமண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ! மூடப்புத்தி கொண்டவனே, நீ இந்நாட்டத்தில் பிடிவாதமாயிருந்தால் நிச்சயம் அழிவையே அடைவாய். எனவே தாமதிக்காமல் இந்த வீண்முயற்சியில் இருந்து விலகுவாயாக.(28) அனைத்திலும் முதன்மையான பிராமண நிலையை அடைய விரும்பும் இந்த உனது நோக்கமானது, தவங்களால் வெல்லப்பட இயலாததாகும். எனவே, அந்த முதன்மையான நிலையை அடைய ஆசைப்படுவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடைவாய்.(29) சண்டாளனாகப் பிறந்த ஒருவனால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் மிகப் புனிதமாகக் கருதப்படும் அந்நிலையை {பிராமண நிலையை} ஒருபோதும் அடைய முடியாது" என்றான் {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}".(30)
அநுசாஸனபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |