Men worthy of reverent homage! | Anusasana-Parva-Section-31 | Mahabharata In Tamill
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 31)
பதிவின் சுருக்கம் : வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள் யாவர் என்பது குறித்து கிருஷ்ணனுக்கு நாரதர் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன், "ஓ பாரதக் குலத்தின் தலைவரே, மூவுலகிலும் மதிக்கத்தக்க வணக்கத்திற்குத் தகுந்த மனிதர்கள் யாவர்? உண்மையில் இக்காரியங்களைக் குறித்து நீர் பேசுவதைக் கேட்டு நான் ஒருபோதும் தணிவடைவதில்லை, இது குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர், "இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) "யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
பீஷ்மர், "இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) "யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
நாரதர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கோவிந்தா, ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, நான் யாரை வழிபடுகிறேன் என்பதைக் கேட்பாயாக. இவ்வுலகில் இதைக் கேட்கத் தகுந்தவன் வேறு யார் இருக்கிறான்?(5) ஓ! பலமிக்கவனே, வருணன், வாயு, ஆதித்தியன், பர்ஜன்யன் {மழை தேவனான இந்திரன்}, நெருப்பின் தேவன் {அக்நி}, ஸ்தாணு {சிவன்}, ஸ்கந்தன் {முருகன்}, லக்ஷ்மி, விஷ்ணு, பிராமணர்கள் {பிரம்மன்}, வாக்கின் தேவன் {வசஸ்பதி / பிருஹஸ்பதி}, சந்திரமாஸ் {சந்திரன்}, நீர், பூமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரைத் தொடர்ந்து வழிபடுபவர்களை நான் வழிபட்டு வருகிறேன்.(6,7) ஓ! விருஷ்ணி குலத்துப் புலியே, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், வேத கல்வியில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், உயர்ந்த தகுதியைக் கொண்டவர்களுமான பிராமணர்களை எப்போதும் நான் வழிபடுகிறேன்.(8) ஓ! பலமிக்கவனே, தற்பெருமையில் இருந்து விடுபட்டவர்களும், தேவர்களை மதிக்கும் சடங்குகளை வெறும் வயிற்றுடன் வழிபாடு செய்பவர்களும், தாங்கள் கொண்டுள்ளதில் எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடியவர்களுமான மனிதர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.(9) ஓ! யாதவா, வேள்விகளைச்செய்பவர்களும், மன்னிக்கும் மனோ நிலையைக் கொண்டவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், புலன்களை ஆள்பவர்களும், வாய்மை மற்றும் அறத்தை வழிபடுபவர்களும், நல்ல பிராமணர்களுக்கு நிலத்தையும், பசுக்களையும் கொடையளிப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(10)
ஓ! யாதவா, தவநோற்பில் அர்ப்பணிப்புள்ளவர்களும், காடுகளில் வசிப்பவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், நாளைக்கென ஒருபோதும் எதையும் சேமிக்காதவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(11) ஓ! யாதவா, தங்கள் பணியாட்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்ப்பவர்களும், விருந்தாளிகளை எப்போதும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட்ட மிச்சங்களை மட்டுமே உண்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(12) வேத கல்வயின் மூலம் தடுக்கப்பட முடியாதவர்களானவர்களும், சாத்திரங்களை உரையாடுவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவர்களும், பிறருக்கு வேள்விகளைச் செய்து கொடுப்பது மற்றும் சீடர்களுக்குப் போதிப்பது ஆகிய கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(13) அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவர்கும், சூரியன் முதுகைச் சுடும்வரை வேத கல்வியில் ஈடுபடுபவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(14) ஓ! யாதவா, தங்கள் ஆசான்களின் அருளை அடைய முனைபவர்களும், வேதங்களை அடைய உழைப்பவர்களும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(15)
ஓ! யாதவா, சிறந்த நோன்புகளை நோற்பவர்களும், எண்ணங்களை வெளியிடாமல் பேசாநோன்பு நோற்பவர்களும், பிரம்மஞானம் கொண்டவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், தெளிந்த நெய் ஆகுதிகளை {ஹவ்யங்களை} காணிக்கையளிப்பவர்களும், இறைச்சியை {கவ்யங்களை} படையல் செய்பவர்களுமான[1] மனிதர்களை நான் வணங்குகிறேன்.(16) ஓ! யாதவா, பிச்சையெடுத்து உண்டு வாழ்பவர்களும், போதுமான உணவும் பானமும் இல்லாமல் மெலிந்திருப்பவர்களும், தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்களும், இன்பங்களை வெறுப்பவர்களும், பூமி சார்ந்த பொருட்களை வறியவர்களுமானவர்கள் நான் வணங்குகிறேன்.(17) ஓ!யாதவா, பூமியில் உள்ள பொருட்களில் எந்தப் பற்றும் இல்லாதவர்களும், பிறரிடம் சச்சரவு செய்யாதவர்களும், ஆடை அணியாதவர்களும், எந்தத் தேவையுமற்றவர்களும், வேதங்களை அடைந்து தடுக்கப்பட முடியாதவர்களாக ஆனவர்களும், அறத்தை விளக்குவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மத்தைச் சொல்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(18) அனைத்து உயிரினங்களிடம் கருணை என்ற கடமையைப் பயில்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், வாய்மை பயில்வதில் உறுதியாக இருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், நடத்தையில் அமைதி நிறைந்தவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(19) ஓ! யாதவா, தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபடுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், இல்லற வாழ்வை நோற்பவர்களும், வாழ்வுக்கான காரியத்தில் புறாக்களின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்[2].(20)
[1] கும்பகோணம் பதிப்பில், "சொன்ன சொல் தவறாதவரும், ஹவ்யகவ்யங்களை எப்போதும் நடத்துகிறவருமான பிராம்மணர்களை நமஸ்கரிக்கிறேன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருந்து ஹவ்யகவ்யங்களைக் காணிக்கை அளிப்பவர்கள்" என்றிருக்கிறது.[2] "புறாக்கள் சிதறிக் கிடக்கும் தானியங்களை உண்டு வாழும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காது. சீலம் மற்றும் பிற நோன்புகளில், பயிர்களுக்குச் சொந்தக்காரர்கள் உழவுக்களங்களை விட்டு அகன்ற பிறகு அவர்கள் விட்டுச் சென்றவையும், சிதறிக் கிடப்பவையுமான தானியங்களை எடுப்பது வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வழிமுறையாகச் சொல்லப்பட்டுள்ளது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தங்கள் செயல்கள் எதனிலும் பலவீனப்படாமல் முத்தொகையை[3] {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச்} செய்பவர்களும், வாய்மை பயின்று அறமொழுகுபவர்களுமான மனிதர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(21) ஓ! கேசவா, பிரம்மத்தை அறிந்தவர்களும், வேதங்களின் அறிவைக் கொண்டவர்களும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகையில் கவனமாக இருப்பவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், நடத்தையில் நீதியுடன் செயல்படுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(22) ஓ! மாதவா, நீரை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது காற்றை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பட்ட உணவில் மிஞ்சியதை உண்டு வாழ்பவர்கள் பல்வேறு வகைச் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள் ஆகியோரை நான் வணங்குகிறேன்.(23) (தாங்கள் நோற்கும் மணம்செய்யா நோன்பின் விளைவால்) மனைவிகளற்றவர்களையும், (தாங்கள் வாழும் இல்லற வாழ்வின் விளைவால்) இல்லற நெருப்பையும், மனைவிகளையும் கொண்டவர்களையும், வேதங்களின் புகலிடமாக இருப்பவர்களையும், (தாங்கள் உணரும் கருணையின் விளைவால்) அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாக இருப்பவர்களையும் எப்போதும் நான் வணங்குகிறேன்.(24) ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைப்பவர்களும், அண்டத்தின் பெரியோர்களும், ஒரு குலம் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தோரும், அறியாமை எனும் இருளை அகற்றுபவர்களும், (அறவொழுக்கம் மற்றும் சாத்திரஞானம் ஆகியவற்றுக்காக) அண்டத்தில் உள்ள மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான முனிவர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(25)
[3] "இங்கே முத்தொகை என்று குறிப்பிடப்படுவது, அறம், பொருள் மற்றும் இன்பமாகும் {தர்மார்த்தகாமமாகும்}. தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் இந்த மூன்றின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளும் மனிதர்கள், தங்கள் செயல்கள் அனைத்திலும் இந்த முத்தொகையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! விருஷ்ணி குலத்தின் கொழுந்தே, இந்தக் காரணங்களுக்காக, நான் சொல்லும் இந்த மறுபிறப்பாளர்களை நாள்தோறும் நீயும் வழிபடுவாயாக. மதிப்புடன் வழிபடத்தகுந்த அவர்கள், ஓ! பாவமற்றவனே, வழிபடப்படும்போது, உனக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.(26) நான் சொல்லும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்கள் ஆவர். அனைவராலும் மதிக்கப்பட்டு இவ்வுலகில் திரியும் அவர்கள், உன்னால் வழிபடப்பட்டால் நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.(27) தம்மிடம் விருந்தினர்களாக வரும் மனிதர்கள் அனைவரையும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் (பேச்சு, ஒழுக்கத்தில்) வாய்மை ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(28) அமைதியான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களும், வேத கல்வியில் எப்போதும் கவனமாக இருப்பவர்களும், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(29) (எவரையும் முதன்மையாகக் கொள்ளாமல், சகிப்பை நிரூபிக்கும் வகையில்) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், வேதங்களில் ஒன்றைத் தங்கள் புகலிடமாகக் கொள்பவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான மனிதர்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(30)
பிராமணர்களில் முதன்மையானோரை மதிப்புடன் வழிபட்டு, சிறந்த நோன்பை நோற்பதிலும், ஈகையறம் பயில்வதிலும் உறுதியாக இருப்போர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(31) தவப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மணம்செய்யா நோன்பை எப்போதும் நோற்பவர்கள், தவங்களால் ஆன்மத் தூய்மை அடைந்தவர்கள் ஆகியோர் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(32) தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்தோர், பித்ருக்கள் ஆகியோரின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், சார்ந்தோர் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்போர் ஆகியோர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(33) இல்லற நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியச் செய்து, மதிப்புடன் அதை வழிபடுபவர்களும், சோம வேள்விகளில் (தேவர்களுக்கு) ஆகுதிகளை முறையாக ஊற்றியவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(34) நீ நடந்து கொள்வது போலவே, தங்கள் தாய்மார், தந்தைமார், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் நடந்து கொள்பவர்கள் (துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்)" என்றார் {நாரதர்}. இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினார் அந்தத் தெய்வீக முனிவர்
".(35)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காக, உன் மாளிகையில் தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களையும், விருந்தினர்களையும் எப்போதும் வழிபடுவாயாக. இத்தகைய நடத்தையின் விளைவால் நிச்சயம் நீ விரும்பிய கதியை அடைவாய்".(36)
அநுசாஸனபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |