King Sibi! | Anusasana-Parva-Section-32 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 32)
பதிவின் சுருக்கம் : பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓ!பாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின் பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, "ஓ! பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது? நீ என்ன செய்தாய்? எங்கே செய்தாய்? எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்?(6) ஓ! அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ! புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக" என்றான் {விருஷதர்பன்}.(9)
பருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, "இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ! மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ! மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்கும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே" என்றது {பருந்து}".(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், "பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)
மன்னன் {விருஷதர்பன்}, "ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ! பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக" என்றான்.(19)
பருந்து, "ஓ! ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது? என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும்? பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ! பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக" என்றது.(22)
மன்னன், "நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்" என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)
இறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)
[1] சிபியின் கதை வனபர்வம் பகுதி 196லும், உத்யோக பர்வம் பகுதி 118லும் மற்றும் துரோண பர்வம் பகுதி 58லும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(39)
அநுசாஸனபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |