The superiority of Brahmanas! | Anusasana-Parva-Section-33 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 33)
பதிவின் சுருக்கம் : ஒரு மன்னனின் முக்கியக் கடமை பிராமணர்களை வழிபடுவது என்பதையும், பிராமணர்களின் மேன்மையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஒரு மன்னனுக்காக விதிக்கப்பட்ட செயல்கள் அனைத்திலும் முதன்மையான செயல் எது? எந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் இம்மை மற்றும் மறுமை இரண்டிலும், இன்புறுவதில் வெல்கிறான்?" எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, முறையாக அரியணையில் நிறுவப்பட்ட ஒரு மன்னன் பெரும் மகிழ்ச்சியை அடைய விரும்பினால், செயல்கள் அனைத்திலும் பிராமணர்களை வழிபடுவதே அவனுக்கு முதன்மையானதாக விதிக்கப்பட்டிருக்கிறது.(2) முதன்மையான மன்னர்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதை நன்கறிவாயாக. வேத கல்வி பெற்றவர்களும், நீதிமிக்கவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் ஒரு மன்னன் எப்போதும் மதிப்புடன் வழிபட வேண்டும்.(3)
ஒரு மன்னன், விற்கள், ஆறுதலளிக்கும் பேச்சுகள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் கொடையாகக் கொடுத்து, தன் நகரம் அல்லது மாகாணங்களில் வசிக்கக்கூடியவர்களும், பெருங்கல்வியைக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் வழிபட வேண்டும்.(4) இதுவே மன்னர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில், ஒரு மன்னன் எப்போதும் தன் கண்களை இதில் நிலைநிறுத்தியிருக்க வண்டும். அவன், தன்னையும், தன் சொந்த பிள்ளைகளயும் பாதுகாப்பதைப் போல அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.(5) (கல்வி மற்றும் புனிதத்தன்மையில் தாங்கள் பெற்றிருக்கும் மேன்மைக்காக) பிராமணர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பவர்களை மன்னன் வழிபட வேண்டும். அத்தகைய மனிதர்கள் கவலையில் இருந்து விடுபடும்போது, மொத்த நாடும் அழகில் சுடர்விடுகிறது.(6)
அத்தகைய நபர்கள் துதிக்கப்படத்தக்கவராவர். மன்னன் அத்தகையோருக்குத் தலைவணங்க வேண்டும். உண்மையில் ஒருவன் தன் தந்தைமாரையோ, பாட்டன்மாரையோ எவ்வாறு மதிப்பானோ அதே வகையில் அவர்களை மதிக்க வேண்டும். உயிரினங்கள் அனைத்தின் இருப்பும் வாசவனைச் சார்ந்திருப்பதைப் போலவே மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்க வழிகள் அவர்களையே சார்ந்திருக்கின்றன.(7) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் சக்தியையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சீற்றமடைந்தால், தங்கள் விருப்பத்தால் மட்டுமே, அல்லது மந்திரங்களைச் சொல்வதால் மட்டுமே, அல்லது (தவச் சக்தியின் மூலம் பெறப்பட்ட) பிற வழிமுறைகளின் மூலம் மொத்த நாட்டையும் எரித்து விட வல்லவர்களாக இருப்பார்கள்.(8) அவர்களை அழித்துவிடக்கூடிய ஏதொன்றையும் நான் காணவில்லை. அவர்களது சக்தி அண்டத்தின் இறுதி எல்லையையும் அடையவல்ல நிலையில் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது. கோபத்தில் இருக்கும்போது, காட்டின் மீது விழும் சுடர்மிக்கத் தழலைப் போலவே மனிதர்கள் மற்றும் பொருட்களின் மீது அவர்களது பார்வைகள் விழும்.(9)
பெரும் துணிவுமிக்க மனிதர்களும் அவர்களது பெயரைக் கேட்டாலே அச்சத்தால் பீடிக்கப்படுவார்கள். அவர்களது குணங்களும், சக்திகளும் அளக்கமுடியாதனவும், இயல்புக்கு மீறியனவுமாகும். அவர்களில் சிலர், புற்கள் மற்றும் கொடிகளால் அமைக்கப்பட்ட வாய்களைக் கொண்ட கிணறுகள் மற்றும் குழிகளைப் போலவும், அதே வேளையில் வேறு சிலர், மேகங்களும் இருளும் அற்ற தெளிந்த வானம் போலவும் இருக்கிறார்கள்.(10) அவர்களில் (துர்வாசர் முதலியவர்களைப் போன்ற) சிலர் கடும் மனோநிலையைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களில் (கௌதமர் மற்றும் பிறரைப் போன்ற) சிலர் மென்மையான மனநிலை கொண்டவர்களும் இருக்கின்றனர். அவர்களில் (அசுரர் வாதாபியை விழுங்கிய அகஸ்தியரைப் போன்ற) சிலர் பெரும் தந்திரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புமிக்கோராக இருக்கிறார்கள்.(11) அவர்களில் (உத்தாலகரின் ஆசானைப் போல) உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் (ஆசானிடம் பணி செய்த உபமன்யுவைப் போல) பசுப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் பிச்சையெடுத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் (ஆதிகாலத்து வால்மீகி போலவும், பஞ்ச கால விஷ்வாமித்திரரைப் போலவும்) கள்வராகவும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் (நாரதரைப் போல) சச்சரவுகளை உண்டாக்குவதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர், (பரதரைப் போல) நடிகர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.(12)
அவர்களில் சிலர், (உள்ளங்கை நிறைய உள்ள நீரைப் போல மொத்த கடல்நீரையும் பருகிய அகஸ்தியரைப் போல) இயல்புக்குமீறிய செயல்கள் மற்றும் சாதாரணச் செயல்கள் அனைத்தையும் செய்யத்தகுந்தவர்களாவர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்கள் பல்வேறு இயல்புகளையும், நடத்தைகளையும் கொண்டவர்களாவர்.(13) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், அழமொழுகுபவர்களும், பல்வேறு செயல்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரத்தை அடைபவர்களுமான பிராமணர்களை எப்போதும் ஒருவன் புகழவே வேண்டும்.(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் (மூன்று வகை) மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரைவிட முதிய பிராமணர்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர்.(15)
தேவர்களாலோ, பித்ருக்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பிசாசங்களாலோ இந்த மறுபிறப்பாளர்களை வெல்ல முடியாது.(16) பிராமணர்கள், தேவனல்லாத ஒருவனையும் தேவனாக்கவல்லவர்களாவர். மேலும் தேவ நிலையில் உள்ளோரை அந்நிலையற்றவர்களாக்கவும் அவர்களால் இயலும். அவர்கள் எவனை மன்னனாக்க விரும்புவார்களோ அவனே மன்னனாவான். மறுபுறம், அவர்களால் விரும்பப்படாதவர்கள் {அனைத்தையும் தோற்று மீண்டும்} சுவற்றுக்கே செல்ல வேண்டும்.(17) ஓ! மன்னா, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், பிராமணர்களை இகழ்ந்து, அவர்களை நிந்திக்கும் மூடர்கள் நிச்சயம் அழிவையே அடைவார்கள்.(18)
ஓ! மன்னா, புகழ்வதிலும், இகழ்வதிலும் திறம் கொண்டவர்களும், பிறரின் புகழ் மற்றும் இழிவுக்குக் காரணம் அல்லது மூலமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், தங்களுக்குத் தீங்கிழைக்க முனைவோரிடம் எப்போதும் கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(19) பிராமணர்கள் எந்த மனிதனைப் புகழ்கிறார்களோ, அவன் செழிப்பில் வளர்வான். பிராமணர்களால் நிந்திக்கப்பட்டுக் கைவிடப்படும் மனிதன் விரைவில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.(20) சகர்கள், யவனர்கள், காம்போஜர்களில் பிராமணர்கள் இல்லாததன் விளைவால் க்ஷத்திரிய இனக்குழுக்களும் இழிந்த சூத்திர நிலையை அடைந்து வீழ்ச்சியடைந்தன.(21)
திராவிடர்கள் {திரவிடர்கள் / திரமிளர்கள்}[1], களிங்கர்கள், புலிந்தர்கள், உசீநரர்கள், கோலிஸர்ப்பர்கள், மாஹிஷர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு(22) மத்தியில் பிராமணர்கள் இல்லாததால், அவர்கள் சூத்திரர்களாக இழிநிலையை அடைந்தனர். ஓ! வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, அவர்களை {பிராமணர்களை} வெல்வதை விட அவர்களிடம் தோற்பதே ஏற்புடையது.(23) இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கொல்லும் எவனும், ஒற்றைப் பிராமணனைக் கொன்றதைப் போன்ற கொடிய பாவத்தை ஈட்டுவதில்லை.(24)
[1] கும்பகோணம் பதிப்பில் திரவிடர்கள் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் திரமிளர்கள் என்றும் இருக்கிறது.
ஒரு பிராமணனை இழித்தோ, பழித்தோ எவனும் ஒருபோதும் பேசக்கூடாது. எங்கே பிராமணர்கள் இகழப்படுகிறார்களோ, அங்கே (அதைச் சொல்பவனையும், அவனது வார்த்தைகளையும் தவிர்க்கும் வகையில்) ஒருவன் தன் தலையைத் தொங்கப் போட்டு அமர வேண்டும், அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல வேண்டும்.(25) எந்த மனிதன் பிராமணர்களோடு சச்சரவு செய்வானோ, அவன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை, அல்லது பிறந்தால் மகிழ்ச்சியாகத் தன் வாழ்நாளைக் கடத்துவதில்லை.(26) காற்றை எவனும் தன் கையால் பிடிக்க முடியாது. நிலவை எவனும் தன் கரத்தால் தீண்ட முடியாது. பூமியை எவனும் தன் கரங்களில் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போலவே, ஓ! மன்னா, எவனாலும் இவ்வுலகில் பிராமணர்களை வெல்ல முடியாது" என்றார் {பீஷ்மர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |