The ordinace of the creator! | Anusasana-Parva-Section-35 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 35)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் சிறப்பு; அவர்களுக்கான விதிகளைப் பிரம்மன் சொன்னது; பிராமணர்களின் சக்தி ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! அருளப்பட்ட மன்னா, ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படும் தகுதியையும், சமைக்கப்பட்ட உணவின் முதல் பங்கை உண்ணும் விருந்தினரெனும் தகுதியையும் அடைகிறான்.(1) (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) பெரும் நோக்கங்கள் அனைத்தும் அவர்களில் இருந்தே உண்டாகின்றன. அவர்கள் {பிராமணர்கள்} அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாவர். மேலும் (அவர்களின் வாயில் ஊற்றப்படும் உணவை தேவர்களே உண்பதால்) அவர்கள் தேவர்களின் வாயாகவும் இருக்கின்றனர். மதிப்புடன் வழிபட்டப்படும் அவர்கள், மங்கலம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் செழிப்படையும்படி வாழ்த்துகின்றனர்.(2) நம் எதிரிகளால் அலட்சியம் செய்யப்படும் அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களிடம் {எதிரிகளிடம்} சினம்கொண்டு, கடும் சாபங்களை இட்டுத் அவர்களுக்குத் தீமையை விரும்பட்டும்[1].(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்கள் எல்லாருக்கும் அன்பர்கள்; நல்ல மனமும், வாக்குமுள்ளவர்கள். பிராம்மணர்கள் கோபித்தால், எல்லாரையும் கொன்றுவிடுவார். அவர்கள் பூஜிக்கப்பெற்றால் மங்களமான சொற்களினால் ஆசீர்வதிப்பார். அப்பா, பிராம்மணர்கள் பூஜிக்கப்படாமற் போனால் கோபங்கொண்டு கொடுஞ்சொற்களினால் அவர்களைப் பகைக்கும் நம்மனைவரையும் கொன்றுவிடுவார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் சிறந்த மனங்களையும், வாய்களையும் கொண்டவர்களாவர். அவர்கள் வழிபடப்படும்போது நன்மை நிறைந்த மங்கலச் சொற்களைச் சொல்வார்கள். ஓ! மகனே, பிராமணர்களை வெறுத்து, அவர்களது பிறப்பு வகையை அவமதிப்போரும் உள்ளனர். அவர்கள் முறையாக வழிபடப்படவில்லையென்றால், இவர்கள் மீது அவர்கள் கொடுஞ்சாபங்களைப் பயன்படுத்த வேண்டும்" என்றிருக்கிறது. மூன்று பதிப்புகளும் இந்த ஸ்லோகத்தை வெவ்வேறு வகையில் விளக்கியிருக்கின்றன. மூன்றையும் படித்தால் தான் ஒரு சித்திரம் கிடைக்கிறது.
பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள், பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களையும், அவர்களது கடமைகளைப் படைத்தபோது சொன்ன பின்வரும் பழைய ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {அந்த ஸ்லோகங்கள்}, "ஒரு பிராமணன், தனக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பை அடைந்திருக்கும் அவர்கள், பிறரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வழியில் நடப்பதால் அவர்கள் தங்களுக்கு உயர்ந்த பயனைத் தரும் கதியை நிச்சயம் அடைவார்கள்.(5) தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் நிச்சயம் பிரம்ம செழிப்பை அடைவார்கள். நீங்களே அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்களாகவும் இருப்பீர்கள்.(6) கல்விமானான ஒரு பிராமணன், சூத்திரர்களுக்காக விதிக்கப்பட்டவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் தகுதியை இழக்கிறான். வேத கல்வியின் மூலம் அவன் செழிப்பையும், புத்தியையும், சக்தியையும், அனைத்தையும் எரிக்கவல்ல சக்தியையும், மிக மேலான மகிமையையும் அவன் நிச்சயம் அடைவான்.(8) தேவர்களுக்குத் தெளிந்த நெய் ஆகுதிகளைக் காணிக்கையாக அளிப்பதன் மூலம் உயர்ந்த அருளை அடையும் பிராமணர்கள், பிரம்ம செழிப்புடன் சமைக்கப்படும் அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு முன்பே உண்ணக் கூடிய தகுதியைப் பெறுகிறார்கள்[2].(9) அனைத்து உயிரினங்களிடமும் கருணையால் நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாடு மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் கூடியவர்களுமான நீங்கள் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவீர்கள்.(10) மனிதர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, தேவர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும், தவங்கள் மற்றும் அறிவின் துணையுடனும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பதன் மூலமும் {உங்களால்} அடையப்படும்" {என்று சொல்கின்றன}.(11) ஓ! பாவமற்றவனே, பிரம்மனால் பாடப்பட்ட ஸ்லோகங்களையே நான் இவ்வாறு உனக்கு உரைத்தேன். உயர்ந்த நுண்ணறிவையும் ஞானத்தையும் கொண்ட படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களிடம் கொண்ட கருணையின் மூலம் இவற்றை விதித்தான்.(12)
[2] "இந்நாட்டில், இந்த நாள் வரையும், வீட்டிற்கு வரப்போகும் விருந்தாளிக்காகச் சமைக்கப்படும் உணவை தேவர்களுக்குக் காணிக்கையளிக்காமல், குறிப்பிட்ட விருந்தாளிகளுக்குக் கொடுக்காமல் ஒரு பகுதியைக் கூட வேறு எவருக்கும் கொடுக்க மாட்டார்கள். எனினும், குழந்தைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. இந்த ஸ்லோகம் சொல்வது என்னவென்றால், நல்ல பிராமணன் அந்தப் பிள்ளைகள் உண்பதற்கும் முன்பு உண்ணலாம் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்களில் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்தோரின் பலம், மன்னர்களின் வலிமைக்கு நிகரானதாகும். அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாகவும், சீற்றமிக்கவர்களாகவும், மின்னலின் வேகத்தைக் கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை மிக விரைவாகச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) அவர்களில் சிங்கத்தின் வலிமையைக் கொண்டவர்களும், புலியின் வலிமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். காட்டுப்பன்றியின் பலத்தைக் கொண்ட சிலரும், மான் மற்றும் முதலைகளின் பலங்களைக் கொண்ட சிலரும் இருக்கின்றனர்.(14) கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சிலரும், சுறாக்களுக்கு ஒப்பாகக் கடிக்கும் {சுறாக்களின் கடிக்கு ஒப்பான வலியைத் தரும்} சிலரும் இருக்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்களைத் தங்கள் வாக்கால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும், தங்கள் கண்களின் பார்வையால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும் இருக்கிறார்கள்.(15) ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலச் சிலரும், மிக மென்மையான மனநிலை கொண்ட சிலரும் இருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள் பல்வேறு மனோநிலைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(16)
மேகலர்கள், திராவிடர்கள் {திரமிடர்கள்}[3], லாடர்கள், பௌண்டரர்கள், கொன்வசிரர்கள், சௌண்டிகர்கள், தரதர்கள், தார்வர்கள், சௌரர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள்,(17) கிராதர்கள், யவனர்கள் மற்றும் எண்ணற்ற க்ஷத்திரிய இனக்குழுக்கள், பிராமணர்களின் கோபத்தின் மூலம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்திருக்கிறார்கள்[4].(18) பிராமணர்களை அலட்சியம் செய்ததன் விளைவால் அசுரர்கள் ஆழ்கடலைத் தஞ்சமாகக் கொள்ளும் நிலையை அடைந்தனர். பிராமணர்களுடைய அருளில் மூலமே தேவர்களும் சொர்க்த்தின் இன்பலோகவாசிகளாகும் நிலையை அடைந்தன்ர.(19)
[3] கங்குலியில் "திராவிடர்கள்" என்றிருப்பது, பிபேக்திப்ராயின் பதிப்பில், "திரமிடர்கள்" என்றிருக்கிறது. அநுசாஸன பர்வம் பகுதி 33 ஸ்லோகம் எண்.22ல் உள்ள "திராவிடர்கள்" என்ற சொல், கும்பகோணம் பதிப்பில், "திரவிடர்கள்" என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில், "திரமிளர்கள்" என்றும் இருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "மேகலர்,... யவனர் முதலான க்ஷத்ரிய ஜாதியர்களெல்லாரும் பிராம்மணர்களைக் காணாமல் சூத்ரராயினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தங்களுக்கு மத்தியில் பிராமணர்கள் இல்லாததனால் மேக்கலர்கள்.... ...யவனர்கள் முதலிய க்ஷத்திரிய இனக்குழுக்கள் விருஷலர்களின் நிலைக்குத் தாழ்ந்தனர்" என்றிருக்கிறது.
வெளி, அல்லது ஆகாயமென்ற பூதம் தீண்டப்பட முடியாதது. இமய மலைகள் தங்கள் நிலைகளில் இருந்து அசைக்கப்பட முடியாதன. கங்கையின் நீரோட்டம் அணைக்கு அடங்காதது. பிராமணர்கள் அடக்கப்பட இயலாதவர்களாவர்.(20) பிராமணர்களின் நல்விருப்பங்களை விளைவிக்காத {பேணி வளர்க்காத} க்ஷத்திரியர்கள் எவரும் பூமியை ஆள இயலாதவர்களாவர் {ஆளும் தகுதியற்றவர்களாவர்}. பிராமணர்கள் உயர் ஆன்மா கொண்டவர்களாவர் {மகாத்மாக்களாவர்}. அவர்கள் தேவர்களுக்கே தேவராவர்.(21) கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியின் அரசுரிமையை நீ உண்மையில் அனுபவிக்க விரும்பினால், கொடைகளாலும், கீழ்ப்படிந்த தொண்டுகளாலும் அவர்களை {பிராமணர்களை} எப்போதும் வழிபடுவாயாக.(22) ஓ! பாவமற்றவனே, பிராமணர்கள் கொடைகளை ஏற்பதன் விளைவால், அவர்களது சக்தியும், வலிமையும் குன்றுகின்றன. ஓ!மன்னா, கொடைகளை ஏற்க விரும்பாத பிராமணர்களிடம் இருந்து நீ உன் குலத்தைப் பாதுகாத்துக் கொள்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(23)
அநுசாஸனபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |