Best people for making gifts! | Anusasana-Parva-Section-37 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 21)
பதிவின் சுருக்கம் : கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்" என்றார் {பீஷ்மர்}.(4)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்" என்றான்[1].(5)
[1] "தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும்போது உணவோ, பிற பொருட்களோ குறைவடைகின்றன என்று சொல்லப்படுகிறது. கொடை பெறுவதற்குச் சரியான தகுந்த மனிதன் யார் என்பதே யுதிஷ்டிரனின் கேள்வி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)
ஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)
கல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)
சமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்" என்றார் {பீஷ்மர்}.(17,18)
அநுசாஸனபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |