Panchachuda! | Anusasana-Parva-Section-38 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 38)
பதிவின் சுருக்கம் : பெண்களின் இயல்பு குறித்து நாரதரிடம் பேசிய பஞ்சசூடையின் உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பெண்களின் மனோநிலை {இயல்பைக்} குறித்து நீர் உரையாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீமைகள் அனைத்திற்கும் வேராகப் பெண்களே சொல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமானவர்களாகவே கருதப்படுகிறார்கள்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக தெய்வீக முனிவர் நாரதருக்கும், (தேவலோக) அரசவை மங்கை {வேசி} பஞ்சசூடைக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்த போது, பிரம்மலோகத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டவளும், குற்றமற்ற அழகைக் கொண்ட அப்ஸரஸுமான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்தார்.(3) உடலின் ஒவ்வொரு அங்கமும் பேரழகுடன் இருக்கக்கூடிய அந்த அப்சரஸைக் கண்ட அந்தத் தவசி, அவளிடம், "ஓ! கொடியிடையாளே, என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது. அதை எனக்கு விளக்கிச் சொல்வாயாக" என்று கேட்டார்".(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அம்முனிவரால் {நாரதரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அப்சரஸ் அவரிடம், "{நீர் கேட்கும்} காரியம் நான் அறிந்ததாக இருந்தால், நான் அதைக் குறித்துப் பேசத் தகுந்தவள் என்று நீர் நினைத்தால், நிச்சயம் என் மனத்தில் இருப்பதை நான் சொல்வேன்" என்றாள்.(5)
நாரதர் {பஞ்சசூடையிடம்}, "ஓ! இனியவளே, உன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பணியிலும் நிச்சயம் நான் உன்னை ஈடுபடுத்த மாட்டேன். ஓ! அழகிய முகம் கொண்டவளே, பெண்களின் மனோநிலையை {இயல்பை} நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றார்".(6)
பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தத் தெய்வீக முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான அப்சரஸ் {பஞ்சசூடை}, அவரிடம், "நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களைக் குறித்துத் தவறாகப் பேச இயலாதவளாக இருக்கிறேன்.(7) பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய இயல்புடன் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். ஓ! தெய்வீக முனிவரே, இத்தகைய பணியில் என்னை ஈடுபடுத்துவது உமக்குத் தகாது" என்று மறுமொழி கூறினாள்.(8)
அவளிடம் அந்தத் தெய்வீக முனிவர், "ஓ! கொடியிடையாளே, அஃது உண்மைதான். பொய் பேசுவதன் மூலமே ஒருவர் குற்றமிழைத்தவராகிறார். எனினும், உண்மையைச் சொல்வதில் எக்குற்றமும் இருக்க முடியாது" என்றார்.(9)
அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அப்சரஸ் பஞ்சசூடை, நாரதரின் கேள்விக்குப் பதிலளிக்க உடன்பட்டாள். பெண்களிடம் நித்தியமாக {எப்போதும்} உள்ள உண்மையான குற்றங்களை அவள் சொல்லத் தொடங்கினாள்.
பஞ்சசூடை {நாரதரிடம்}, "பெண்கள், உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும், அழகுடன் கூடியவர்களாக இருந்தாலும், பாதுகாவலர்களை {கணவர்களைக்} கொண்டிருந்தாலும், அவர்கள் {பெண்கள்} தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறவே விரும்புகிறார்கள். ஓ! நாரதரே, இக்குற்றம் உண்மையில் அவர்களைக் களங்கப்படுத்துகிறது.(11) பெண்களைவிடப் பாவம் நிறைந்தது வேறு எதுவுமில்லை. உண்மையில் பெண்களே குற்றங்கள் அனைத்தின் வேராக இருக்கிறார்கள். ஓ! நாரதரே, அதை நிச்சயம் நீர் அறிவீர்.(12) பெண்கள், புகழுடனும், செல்வத்துடனும், அழகிய பண்புகளுடனும், முற்றிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உள்ள கணவர்களைப் பெற்றிருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களை அவமதிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்[1].(13) ஓ! பலமிக்கவரே, அடக்கத்தைக் கைவிட்டு, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்களையும், நோக்கங்களையும் கொண்ட மனிதர்களின் தோழமையை {துணையை} வளர்ப்பது, பெண்களாகிய நாங்கள் கொண்டுள்ள பாவம் நிறைந்த மனோநிலையாகும் {இயல்பாகும்}[2].(14) பெண்கள் தங்கள் முன்னிலையில் வந்து சிறிதளவு மதிப்புடன் பேசும் மனிதர்களையும் விரும்புகிறார்கள்.(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "பெண்கள் விருப்பம் வந்தபோது, ஐசுவரியமும், அழகுமுள்ளவர்களும் தங்களுக்குட்பட்டிருப்பவர்களுமான கணவர்களைத் தெரிந்து கொள்ளும்படி பொறுத்துப் பரிசோதிக்கத் திறமையற்றவர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புகழ்பெற்றவனாகவும், செழிப்பானவனாகவும், அழகானவனாகவும், கீழ்ப்படிபவனாகவும் ஒரு கணவன் இருக்கலாம். அப்போதும் பெண்ணானவள் அவனை அவமதிக்கக் காத்திருக்கிறாள்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "மிக்கப் பாவிகளான புருஷர்களையும் நாங்கள் வெட்கத்தைவிட்டு அடைகிறோம். பெண்களாகிய எங்களிடத்திலுள்ள பெரிய அதர்மம் இது." என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "பெண்கள் தீமைக்கும் அதர்மத்திற்கும் உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் வெட்கத்தைக் கைவிட்டு தீய மனிதர்களை ஈர்க்கிறோம்" என்றிருக்கிறது.
கட்டுப்பாடுகள் எதையும் இயல்பாகவே பொறுத்துக் கொள்ளாத பெண்களும், வேறு பாலினத்தைச் சேர்ந்தவரால் {ஆண்களால்} வேண்டப்படாததாலோ, உறவினர்களிடம் கொண்ட அச்சத்தாலோ தங்களுக்காக விதிக்கப்பட்டவற்றை {கட்டுப்பாடுகளை} மீறாமல் தங்கள் கணவர்களிடமே உள்ளனர்.(16) தங்கள் உதவிகளுக்காக {விருப்பங்களுக்காக} அனுமதிக்க இயலாதவர்கள் என அவர்களுக்கு எவரும் இல்லை. அவர்கள் யாருக்கு உதவத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மனிதனின் வயதை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவனாக மட்டும் இருந்தாலே பெண்கள் அவனது துணையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.(17) பாவத்தில் கொண்ட அச்சம், அல்லது கருணை, அல்லது செல்வம், அல்லது உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகளுக்காகத் தங்கள் நெஞ்சங்களில் எழும் அன்பு ஆகியவற்றுக்காகப் பெண்கள் தங்கள் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதில்லை.(18) மதிப்பிற்குரிய குடும்பங்களின் மத்தியில் வாழும் பெண்களும் {குலப் பெண்களும் கூட}, இளமையானவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், விடுதலையுடன் கூடிய வாழ்வை நோற்பவர்களுமான தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {வேசிகளின்} நிலையைக் கண்டு பொறாமை கொள்கின்றனர்.(19) கணவர்களால் காதலிக்கப்படுபவர்களும், பெரும் மதிப்புடன் நடத்தப்படுபவர்களுமான பெண்களும் கூட, கூனர்கள், குருடர்கள், மூடர்கள், அல்லது குள்ளர்களுக்கும் தங்கள் உதவிகளை அளிப்பது {அவர்களோடு சேர்வதும்} காணப்படுகிறது.(20)
நகரும் சக்தியை இழந்த மனிதர்கள் {முடவர்கள்}, அல்லது அழகற்ற இழிமனிதர்களின் துணையையும் பெண்கள் விரும்புவது காணப்படுகிறது. ஓ! பெரும் முனிவரே, பெண்கள், தங்களுக்குத் துணையாகக் கொள்ளத் தகாதவன் எனக் கருதப்படுபவன் இவ்வுலகில் எவனுமில்லை.(21) எனினும், பெண்கள் தங்கள் கணவனுக்காகக் காத்திராமல் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் தவறாகக் கலக்க முற்படுவார்கள்[3].(22) எதிர் பாலினத்தவனை அடைய இயலாமை, அல்லது உறவினர்களிடம் கொண்ட அச்சம், அல்லது மரணம் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சம் ஆகியவற்றின் மூலமே பெண்கள் தங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் நிலைத்திருக்கிறார்கள்.(23) எப்போதும் புதிய துணைகளிடம் மிகுந்த விருப்பம் கொண்டவர்களான அவர்கள் {துருதுருவென} மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத தங்கள் இயல்பின் விளைவால் அவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் கீழ்ப்படியச் செய்ய முடியாது. மீறும் எண்ணம் கொண்டிருக்கும்போது கட்டுபடுத்த முடியாதவர்களாகவே அவர்களது இயல்பு இருக்கிறது. உண்மையில் பெண்கள், ஞானிகளால் சொல்லப்படும் சொற்களைப் போன்றவர்களாவர்[4].(24) விறகால் நெருப்பு ஒருபோதும் தணிவடைவதில்லை. ஆறுகளின் நீரால் பெருங்கடல் ஒருபோதும் நிறைவை அடைவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதால் யமன் தணிவடைவதில்லை. அதே போலவே, பெண்களும் ஆண்களால் ஒருபோதும் தணிவடைவதில்லை.(25)
[3] கங்குலியின் புத்தகப்பதிப்பில் இந்த ஸ்லோகம் லத்தீன் மொழியில் "Si autem hominum societatem obstinere non possint, maritum longius exspectare nolentes, inter sese alia aliam petit" என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நமது தமிழ் மொழிபெயர்ப்பும் புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமாகவே இருக்கும். இணையப் பதிப்பில் இந்த ஸ்லோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "புருஷர்களை அடைவது எவ்வகையிலும் சரிப்படாமல் போகும்போது, பெண்களே ஒருவரிடம் ஒருவர் பிரவிருத்திக்கிறார்கள்; கணவர்களிடத்தில் கட்டுப்பட்டு நிற்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓர் ஆணை எவ்வழியிலாவது அடைய முடியும் எனும்போது ஒரு பெண் ஒருபோதும் தன் கணவனுடன் இருப்பதில்லை" என்றிருக்கிறது.[4] "அஃதாவது, அத்தகைய சொற்களை அளவிட முடியாது, மேலும் அவற்றின் பொருள் ஆழத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாது. அதே போலவே பெண்களும் அளவிடமுடியாதவர்களாகவும், புரிந்து கொள்ளப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! தெய்வீக முனிவரே, இது பெண்களுடன் தொடர்புடைய மற்றொரு புதிராகும். அவர்கள், அழகானவனாகவும், அழகிய பண்புகளைக் கொண்டவனாகவும் ஒரு மனிதனைக் கண்டால், அவர்களின் மேனியில் நிறைவில்லா ஆசையின் குறியீடுகள் தோன்றுகின்றன[5].(26) தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்களும், தங்களுக்கு ஏற்புடையவற்றை எப்போதும் செய்பவர்களும், ஆபத்து மற்றும் தேவைகளின் போது அவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருக்கும் கணவர்களுக்குக் கூட அவர்கள் போதுமான மதிப்பை ஒருபோதும் காட்டுவதில்லை.(27) பெண்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {ஆண்களின்} துணையைப் போல விருப்பத்திற்குரிய பொருட்களின் நிறைவையோ, ஆபரணங்களையோ, இனிய வகை உடைமைகளையோ கூட ஒருபோதும் உயர்வாகக் கருதுவதில்லை[6].(28) யமன், காற்று தேவன் {வாயு}, காலன், பாதாள லோகம், பெருங்கடலில் திரியும் இடையறாத நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரை வாய் {வடவாமுகம்}, கூரிய கத்தி, கடும் நஞ்சு, பாம்பு, நெருப்பு போன்ற இவை அனைத்தும் பெண்ணோடு கலந்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கின்றன.(29) ஐம்பெரும்பூதங்கள் எங்கிருந்து இருப்பில் உதித்தனவோ, படைப்பாளனான பிரம்மன் எங்கிருந்து அண்டத்தை விதித்தானோ, மனிதர்கள் எங்களிருந்து உதித்தனரோ அதே நித்திய பிரம்மத்தில் இருந்துதான் பெண்களும் இருப்பில் உதித்தனர். ஓ நாரதரே, பெண்கள் படைக்கப்பட்டபோதே, நான் பட்டியலிட்ட இந்தக் குற்றங்களும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டன" என்றாள் {பஞ்சசூடை}.(30)
[5] கும்பகோணம் பதிப்பில், "வேறு புருஷனைக் கண்டவுடன் பெண்களின் மனம் வேறுபடுகிறது"என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில் "மூலத்தில் வேறு விதமாய் இருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பெண் ஓர் ஆணைக் கண்டவுடன் அவளது யோனி {பெண்குறி} ஈரமாகிறது" என்றிருக்கிறது.[6] கும்பகோணம் பதிப்பில், "புணர்ச்சியினாலுண்டான ஸுகத்தை விரும்புவது போல மிக்க விருப்பமான பொருள் நிரம்பியிருப்பதையும், அலங்காரங்களையும், பொருட்குவியலையும், மதிப்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெண்கள், பாலினக் கலவியில் ஈடுபாடு கொள்வதைப் போல, இன்பப் பொருட்கள், பல ஆபரணங்கள் மற்றும் பெரிய உடைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |