The behaviour of women! | Anusasana-Parva-Section-39 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 39)
பதிவின் சுருக்கம் : பெண்கள் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, இவ்வுலகில் உள்ள மனிதர் அனைவரும், தெய்வீக இருப்பால் படைக்கப்பட்ட மாயையில் மூழ்கி பெண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வது {பெண்களிடம் பற்று கொள்வது} காணப்படுகிறது.(1) அதே போலவே பெண்களும், ஆண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வதும் காணப்படுகிறது. இவையனைத்தும் உலகமெங்கும் காணப்படுகின்றன. இக்காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, (பெண்கள் இவ்வளவு குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும்போது) ஆண்கள் ஏன் தங்களைப் பெண்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்? மேலும், பெண்களால் மிகவும் விரும்பப்படும் ஆடவர் யாவர்? அவர்கள் விரும்பாதவர்கள் யாவர்?(3) ஓ! மனிதர்களின் தலைவரே, மனிதர்கள் பெண்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தோடு யுதிஷ்டிரனின் கேள்வி முடிவடைந்து, அதன்பின்வருவது பீஷ்மரின் பதிலாக வருகிறது. கங்குலி மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் பின்வருவனவும் யுதிஷ்டிரனின் கேள்விகளாகவே தொடர்கின்றன.
மனிதர்கள் பெண்களிடம் மகிழ்ந்து, அவர்களுடன் விளையாடும்போது, பெண்கள் அவர்களை வஞ்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், ஒரு மனிதன் ஒருமுறை அவர்களது கைகளில் வீழ்ந்துவிட்டால், பிறகு அவன் அவர்களிடம் இருந்து தப்புவது அரிதாகிவிடுகிறது. புதிய புல்வெளிகளை எப்போதும் பீடிக்கும் பசுக்களைப் போலப் பெண்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய மனிதர்களைப் பீடிக்கின்றனர்.(5) அசுரன் சம்பரன் கொண்டிருந்த மாயை, அசுரன் நமுசி கொண்டிருந்த மாயை, பலி அல்லது கும்பிநசி {லவணன்} கொண்டிருந்த மாயை ஆகியவற்றின் மொத்த தொகையையும் பெண்கள் கொண்டிருக்கின்றனர் {அந்த அசுரர்கள் அறிந்த மாயைகள் அனைத்தையும் பெண்களும் அறிவர்}.(6) ஆண் சிரித்தால், பெண்களும் சிரிப்பர். ஆண் அழுதால், அவர்களும் அழுவர். வாய்ப்பும், தேவையும் அமைத்தால் அவர்கள் தங்களுக்கு ஏற்பில்லாத {தங்களுக்குப் பிடிக்காத} மனிதனையும், ஏற்புடைய {இனிய} சொற்களால் வரவேற்பர்.(7) அசுரர்களின் ஆசான் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதி அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், இயற்கையாகவே ஒரு பெண் கொண்டுள்ள நுண்ணறிவின் அளவுக்கு ஆழமானவையாகவோ, மிக நுட்பமானவையாகவோ கருத முடியாது. எனவே, உண்மையில், ஆண்களால் எவ்வாறு பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்?(8)
அவர்கள் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் தோன்றச் செய்வர். ஓ! வீரரே, நான் கேட்கிறேன், இதைச் செய்ய இயன்றவர்களை எதிர் பாலினத்தாரால் {ஆண்களால்} எவ்வாறு ஆள முடியும்?(9) ஓ! பகைவரை அழிப்பவரே, பெண்களின் புத்தியை அவதானித்தே {அவர்களின் புத்தியில் இருந்து தேடியெடுத்துத்தான்}, பிருஹஸ்பதியும், பெரும் சிந்தனையாளர்களும் அறிவியல் கோட்பாடுகளை {சாத்திரங்களைப்} படைத்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.(10) ஆண்களால் மதிப்புடன் நடத்தப்பட்டாலும், அசட்டையுடன் நடத்தப்பட்டாலும் பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் இதயங்களைக் கலங்கடிக்கின்றனர்[2].(11)
[2] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தோடு பீஷ்மரின் பதில் முடிந்து அதன்பின்வருவது யுதிஷ்டிரனின் கேள்வியாக அமைகிறது. கங்குலி மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் முதலில் சொன்னவாறே மொத்த பகுதியும் யுதிஷ்டிரனின் கேள்வியாகவே தொடர்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்த இடம், "பெண்கள் புருஷர்களினால் கௌரவிக்கப்பட்ட போதிலும், அந்தப் புருஷர்களிடம் மனத்தை வேறுபடுத்துகின்றனர்; நிராகரிக்கப்பட்ட போதிலும் அப்படியேதான் மனத்தை வேறு படுத்துகின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆண்களால் அவர்கள் வழிபடப்படும்போது, அவர்கள் ஆண்களிடம் இருந்து தங்கள் மனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். ஓ! மன்னா, பெண்கள் ஆண்களின் மனங்களைக் கலங்கடிக்கவும் செய்கின்றனர்" என்றிருக்கிறது.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வாழும் உயிரினங்கள் அறம்சார்ந்தவையாக இருக்கின்றன. இதுவே நம்மால் கேள்விப்படப்படுகிறது. (பிறகு, இஃது எவ்வாறு உண்மைகளுக்கு இணக்கமாக இருக்க முடியும்?) அன்பு, மதிப்பு ஆகியவற்றுடன் நடத்தப்படும் பெண்கள் (உயிரினங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளவர்களான இவர்கள்) ஆண்களிடம் தாங்கள் கொண்டுள்ள நடத்தைக்காக நிந்திக்கத்தகுந்தவர்களாக இருப்பதே காணப்படுகிறது.(12) அவர்களுடைய நடத்தை இவ்வாறு இருக்கும்போது, அவர்களை எந்த மனிதனால் அறக்கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் மனத்தில் பெரும் ஐயமாக நிறைகிறது.(13) ஓ! குருக்களின் தலைவரே, சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குள் உண்மையில் பெண்களைக் கட்டுப்படுத்திவைக்க முடியுமா? அல்லது நாம் வாழும் காலத்திற்கு முன்பு, அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவராவது உண்மையில் வென்றிருக்கிறார்களா?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(14)
அநுசாஸனபர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |