Vipula! | Anusasana-Parva-Section-40 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 40)
பதிவின் சுருக்கம் : விபுலர் மற்றும் தேவசர்மர் ஆகியோருடைய கதையைச் சொன்ன பீஷ்மர்; தேவசர்மர் வேள்வி செய்ய வெளிய செல்ல எண்ணியது; தமது மனைவியை இந்திரனிடம் இருந்து காக்கும்படி தமது சீடரான விபுலரிடம் சொல்லிச் சென்றது; விபுலர் தம் ஆசானின் மனைவியுடைய உடலுக்குள் புகுந்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. ஓ! குரு குலத்தோனே, ஓ! ஏகாதிபதி, பெண்கள் குறித்து நீர் சொல்வது அனைத்திலும் பொய்யென்றேதும் இல்லை.(1) இது தொடர்பாகப் பழங்காலத்தில் உயர் ஆன்ம விபுலர், பெண்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு வென்றார் என்ற பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! மன்னா, மேலும் பெரும்பாட்டனான பிரம்மனால் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டனர்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அவனால் படைக்கப்பட்டனர்? என்பதையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஓ! மகனே, பெண்களைவிட அதிகப் பாவம் நிறைந்த வேறு எந்த உயிரினமும் கிடையாது. பெண் என்பவள் சுடர்மிக்க நெருப்பாவாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தைத்தியன் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள். நஞ்சவள். பாம்பவள். நெருப்பவள். உண்மையில் இவை அனைத்துமே கலந்திருப்பவள் அவள்.(4)
மனித குலத்தில் தோன்றிய அனைவரும் அறத்தன்மை கொண்டவர்களாக இருந்ததால் இயல்பான முன்னேற்றத்தின் போக்கில் அவர்கள் அனைவரும் தேவ நிலையை அடைந்து வந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழ்நிலை தேவர்களை அச்சுறுத்தியது.(5) எனவே, ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனிடம் சென்றனர். தங்கள் மனத்தில் இருந்ததை அவனிடம் {பிரம்மனிடம்} சொல்லிவிட்டு, கண்களைக் கீழே செலுத்தியவாறு அவர்கள் அமைதியாக அவனது முன்னிலையில் {தலைகுனிந்து} நின்று கொண்டிருந்தனர்.(6) பலமிக்கப் பெரும்பாட்டன், தேவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டு, ஓர் அதர்வணச் சடங்கின் உதவியுடன் பெண்களைப் படைத்தான்.(7) ஓ! குந்தியின் மகனே, முந்தைய படைப்பில் பெண்கள் அனைவரும் அறம்சார்ந்தவர்களாக இருந்தனர். எனினும், மாயையின் துணையுடன் பிரம்மனால் இப்போது படைக்கப்பட்டவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருந்தனர். பெரும்பாட்டன் {பிரம்மன்} உடல்சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கும் ஆசை அவர்களுக்கு அளித்தான்.(8)
அனுபவிக்கும் ஆசையில் மயங்கிய அவர்கள் வேறு பாலினத்தவரைத் தேடத் தொடங்கினர். பலமிக்கவனான தேவர்களின் தலைவன் காமத்தின் துணையாகக் கோபத்தைப் படைத்தான்.(9) காமம் மற்றும் கோபத்தின் சக்திக்கு வசப்பட்ட ஆடவர்கள் பெண்களின் துணையை நாடினார்கள். பெண்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்கள் என்று ஏதும் கிடையாது. இதுவே விதிக்கப்பட்ட விதியாகும்.(10) மிக வலிமையான புலன்களைக் கொண்டவர்கள் பெண்கள், பின்பற்ற வேண்டிய சாத்திரமேதுமில்லை, அவர்கள் வாழும் பொய்கள் {பொய் சொல்பவர்கள்} என்று ஸ்ருதி அறிவிக்கிறது. படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள், உணவு, பானம், மதிக்கத்தக்க, அறம்சார்ந்த அனைத்தும் இல்லாத நிலை,(11) ஏற்பில்லாத {இனிமையற்ற} சொல் பயன்பாடு, பாலியல் துணையில் விருப்பம் ஆகியவை பிரம்மனால் பெண்களுக்கு அளிக்கப்பட்டன. ஆண்கள் கிட்டத்தட்ட அவர்களைக் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(12)
முறையான வரையறைகளுக்குள் அவர்களைப் படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} கட்டுப்படுத்த இயலாது எனும்போது, ஆண்களைக் குறித்து என்ன சொல்வது?(13) ஓ! மனிதர்களின் தலைவா, பழங்காலத்தில் விபுலர் தமது ஆசானின் மனைவியைக் காப்பதில் எவ்வாறு வென்றார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(14) பழங்காலத்தில் உயர்ந்த அருளைக் கொண்டவரும், பெரும் புகழைக் கொண்டவருமாகத் தேவசர்மன் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். அவர், பூமியில் ஒப்பற்ற அழகுடன் கூடியவளும், ருசி என்ற பெயருடன் கூடியவளுமாக ஒரு மனைவியைக் கொண்டிருந்தார்.(15) தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்களில் காண்போர் ஒவ்வொருவரையும் அவளுடைய அழகானது மயக்கியது. ஓ! ஏகாதிபதி, பகனைத் தண்டித்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான இந்திரன், அவள் மீது குறிப்பிட்ட மயக்கத்துடனும், அவளது மேனியில் ஆசை கொண்டவனுமாக இருந்தான்.(16)
பெரும் தவசியான தேவசர்மன் பெண்களின் மனோநிலையை {இயல்பை} முழுமையாக அறிந்தவராக இருந்தார். எனவே, அவர் தமது சக்தி மற்றும் ஆற்றலில் சிறந்ததைப் பயன்படுத்தி, (அனைத்து வகைத் தீய ஆதிக்கத்தில் இருந்தும்) அவளைப் பாதுகாத்து வந்தார்.(17) அடுத்தவர் மனைவிகளின் துணையை நாடும் காரியத்தில் இந்திரன் எந்தத் தயக்கமும் கொண்டவன் அல்ல என்பதை அம்முனிவர் அறிந்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டு தன் மனைவியைப் பாதுகாத்து வந்தார்.(18) ஓ! மகனே, ஒரு காலத்தில், அந்த முனிவர் ஒரு வேள்வியைச் செய்யும் விருப்பத்தை அடைந்தார். (அவர் வீட்டில் இல்லாத போது) தமது மனைவியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.(19) உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டிருந்த அவர் இறுதியில் தாம் பின்பற்றவேண்டிய வழிமுறையைக் கண்டடைந்தார். பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், விபுலர் என்ற பெயரைக் கொண்டவரும், தமக்குப் பிடித்தவருமான சீடரை அழைத்துப் பின்வருவனவற்றைச் சொன்னார்.(20)
தேவசர்மன், "ஒரு வேள்வியைச் செய்வதற்காக நான் (சிறிது காலம்) வீட்டை விட்டுச் செல்லப் போகிறேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} எப்போதும் என் ருசியின் மீது பேராசை கொண்டிருக்கிறான். எனவே, நான் இல்லாதபோது, நீ உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி அவளைப் பாதுகாப்பாயாக.(21) புரந்தரனை {இந்திரனைக்} கருத்தில் கொண்டு நீ விழிப்புடன் உன் நேரத்தைக் கடத்துவாயாக. ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, அந்த இந்திரன் பல்வேறு வேடங்களைத் தரிப்பவனாவான்" என்றார்".(22)
பீஷ்மர் தொடர்ந்தார், "புலன்களைக் கட்டுப்படுத்தியவரும், கடுந்தவங்களில் ஈடுபடுபவரும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டவரும், அறக்கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், பேச்சில் வாய்மை நிறைந்தவரும், தவசியுமான விபுலர், தமது ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டதும் "அப்படியே ஆகட்டும்" என்றார். எனினும், தமது ஆசான் புறப்படும் நேரத்தில், விபுலர் மீண்டும் இந்த வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(23,24)
விபுலர், "ஓ! முனிவரே, சக்ரன் தோன்றும்போது என்னென்ன வடிவங்களை ஏற்பான் என்பதை எனக்குச் சொல்வீராக. அவனது உடல் எவ்வகையானது? அவனது சக்தி எப்படிப்பட்டது? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றார்".(25)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதா, அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர், சக்ரனின் மாயைகளை அனைத்தையும் குறித்து உயர் ஆன்ம விபுலரிடம் உண்மையில் விரிவாக எடுத்துச் சொன்னார்.(26)
தேவசர்மன், "ஓ! மறுபிறப்பாள முனிவனே, பாகனைத் தண்டித்த அந்தப் பலமிக்கவன் மாயை நிறைந்தவனாவான். தான் விரும்பும் வடிவங்களையே அவன் ஒவ்வொரு கணமும் ஏற்கிறான்.(27) சில வேளைகளில் அவன் ஒரு கிரீடத்தை அணிந்து கொண்டு, வஜ்ரதாரியாக இருக்கிறான். சில வேளைகளில் கையில் வஜ்ரத்துடன், தலையில் மகுடம் அணிந்து கொண்டு, காது குண்டலங்களால் அவன் தனைன அலங்கரித்துக் கொள்கிறான். ஒரே கணத்தில் அவன் அந்த வடிவத்தில் இருந்து ஒரு சண்டாளனின் வடிவத்தை ஏற்பான்.(28) சில வேளைகளில் அவன் தலையில் மணிமுடி தரித்தவனாகத் தோன்றுவான்; ஓ! மகனே, மிக விரைவில் அவன் சடாமுடி தரித்துக் கொண்டு, மேனியில் மரவுரி தரித்தவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். சில வேளைகளில் அவன் நல்ல பெரிய உடல்வடிவத்தை ஏற்கிறான். அடுத்தக் கணமே அவன் மெலிந்த உடலைக் கொண்டவனாகவும், மரவுரி உடுத்தியவனாகவும் மாறுகிறான்.(29) சில வேளைகளில் அவன் வெள்ளையாகவும், சில வேளைகளில் பச்சையாகவும், சில வேளைகளில் கருப்பு நிறம் கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் அழகற்றவனுமாகவும், சில வேளைகளில் பேரழகு கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் இளைஞனாகவும், சில வேளைகளில் முதிர்ந்தவனாகவும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(30)
சில வேளைகளில் ஒரு பிராமணனாகவும், சில வேளைகளில் க்ஷத்திரியனாகவும், சில வேளைகளில் வைசியனாகவும், சில வேளைகளில் ஒரு சூத்திரனாகவும் அவன் தோன்றுகிறான். உண்மையில் அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, மேன்மையான தந்தை, தாழ்ந்த வகைத் தாய், அல்லது தாழ்ந்தவகைத் தந்தை, மேலான வகைத் தாயின் மூலம் தூய்மையற்ற வகையில் தோன்றிய பிறவியாகிறான்.(31) சில வேளைகளில் கிளியாகவும், சில வேளைகளில் காக்கையாகவும், சில வேளைகளில் அன்னப்பறவையாகவும், சில வேளைகளில் கோகிலமாகவும் {குயிலாகவும்} அவன் தோன்றுகிறான். சிங்கம், புலி அல்லது யானையின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(32) சில வேளைகளில் தேவனாகவும், சில வேளைகளில் தைத்தியனாகவும், சில வேளைகளில் மன்னனின் வேடத்தையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் பருமனாகவும், குண்டாகவும், சில வேளைகளில் வாயுக் கோளாறால் முடங்கிய அங்கங்களைக் கொண்டவனாகவும், சில வேளைகளில் பறவையாகவும், சில வேளைகளில் கோரமான பண்புகளைக் கொண்ட ஒருவனாகவும் அவன் தோன்றுகிறான்.(33) சில வேளைகளில் அவன் நான்கு கால் உயிரினமாகவும் தோன்றுகிறான். எவ்வடிவத்தையும் ஏற்கவல்ல அவன், சில வேளைகளில் புத்தியிழந்த மூடனாகவும் தோன்றுகிறான். கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(34)
ஓ! விபுலா, அவன் எண்ணற்ற வேடங்களை ஏற்கவல்லவனாக இருப்பதன் விளைவால் யாராலும் அவனை அடையாளங்காண முடியாது. இந்த அண்டத்தைப் படைத்தவனாலேயே கூட அவற்றைச் செய்ய முடியாது.(35) அவன் வேண்டிய போதும் புலப்படாதவனாகி தன்னை மறைத்துக் கொள்கிறான். அறிவுக்கண்ணைத் தவிர வேறு எதனாலும் பார்க்க முடியாதவனாகிறான். தேவர்களின் தலைவன் {இந்திரன்} சில வேளைகளில் காற்றாகவும் மாறுகிறான்.(36) பாகனைத் தண்டித்தவன் இந்த வேடங்களை எப்போதும் ஏற்பான். எனவே, ஓ! விபுலா, மெலிந்த இடை கொண்டவளான என் மனைவியைப் பெருங்கவனத்துடன் பாதுகாப்பாயாக.(37) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, வேள்விக்காக வைக்கப்பட்டிருக்கும் ஹவிஸை நக்கும் ஓர் இழிந்த நாயைப் போல அந்தத் தேவர்களின் தலைவன் என் மனைவியைக் கெடுத்துவிடாமல் அனைத்து வகையிலும் கவனம் செலுத்துவாயாக" என்றார் {தேவசர்மன்}.(38)
உயர்ந்த அருளைக் கொண்ட முனிவரான தேவசர்மன், ஓ! பாரதர்களின் தலைவா, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஒரு வேள்வியைச் செய்ய எண்ணி தன் வசிப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(39) தன் ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விபுலர் தமது மனத்திற்குள், "நான் அந்தப் பலமிக்கத் தேவர்களின் தலைவனிடமிருந்து இந்தப் பெண்மணியை அனைத்து வகையிலும் நிச்சயம் காப்பேன்.(40) ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன? என் ஆசானின் மனைவியைக் காக்குங்காரியத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? தேவர்களின் தலைவன் பெரும் மாயசக்திகளைக் கொண்டவனாவான். பெருஞ்சக்தியைக் கொண்ட அவனைத் தடுப்பது மிகக் கடினமாகும்.(41) இந்திரனால் எண்ணற்ற வடிவங்களை ஏற்க முடியும் என்பதால் நமது ஆசிரமத்தை அடைப்பதாலோ, முற்றத்தில் வேலியடைப்பதாலோ, அவனை வெளியே நிறுத்த முடியாது.(42)
காற்றின் வடிவத்தை ஏற்றுத் தேவர்களின் தலைவனால் எனதாசானின் மனைவியை வலிய அபகரிக்க முடியும். எனவே, (யோக சக்தியின் மூலம்) இந்தப் பெண்மணிக்குள் நுழைந்து, நான் அங்கேயே இருப்பதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும்.(43) என் ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் என்னால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முடியாது, ஏனெனில், பாகனைத் தண்டித்த பலமிக்கவன், தான் விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவன் என்பதை நான் கேட்டிருக்கிறேன்.(44) எனவே, என் யோக சக்தியின் மூலம் நான் இவளை இந்திரனிடம் இருந்து காக்கப்போகிறேன். என் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நான் இந்தப் பெண்மணியின் உடலுக்குள் நுழையப் போகிறேன்.(46) என் ஆசான் திரும்பிவரும்போதும் அவரது மனைவி கெட்டுப்போனதைக் கண்டால், கோபத்தால் அவர் நிச்சயம் என்னைச் சபிப்பார். பெரும் தவசியான அவர் ஆன்மப் பார்வையையும் கொண்டவராவார்.(46)
தேவர்களின் தலைவன் பெரும் மாயா சக்திகளுடன் கூடியவனாக இருப்பதால், வேறு பெண்களை மனிதர்கள் காப்பதைப் போல இந்தப் பெண்ணைக் காக்க முடியாது. ஐயோ, நான் இருக்கும் சூழ்நிலை நெருக்கடிமிக்கதாய் இருக்கிறதே.(47) என் ஆசானின் ஆணைக்கு நான் கீழ்ப்படி வேண்டும். எனவே, நான் என் யோக சக்தியின் மூலம் அவளைப் பாதுகாத்தால் அக்காரியம் அற்புதமான ஒன்றாய் அனைவராலும் கருதப்படும்.(48) என் யோக சக்தியின் மூலம் நான் என் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் புகப் போகிறேன். தாமரையில் உள்ள நீர்த்துளி இலையை நனைக்காதிருப்பதைப் போல, நான் அவளுக்குள் இருந்தாலும், அவளது மேனியைத் தீண்டாமல் இருப்பேன்.(49) ஆசையின் கறையில் இருந்து விடுபட்டவனாக நான் இருந்தால், நான் செய்யும் காரியத்தால் எந்தக் களங்கமும் உண்டாகாது. ஒரு பயணி, தன் பயணத்தின் ஊடாக (சற்று நேரம்) வெற்று மாளிகையில் வசிப்பதைப் போலவே,(50) நானும் என் ஆசானுடைய மனைவியின் உடலில் இன்று வசிக்கப்போகிறேன். உண்மையில், யோகத்தில் குவிந்த மனத்துடன் நான் இன்று இந்தப் பெண்ணின் உடலில் வசிக்கப் போகிறேன்" என்று நினைக்கத் தொடங்கினார் {விபுலர்}.(51)
இந்த அறக் காரியங்களைச் சிறப்பாகக் கருத்தில் கொண்டு, தமது ஆசானும் தாமும் பேரளவில் கொண்டுள்ள தவத்தில் பார்வையைச் செலுத்தி, வேதங்கள் அனைத்தையும் சிந்தித்து,(52) (தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக) யோக சக்தியின் மூலம் பெண்ணின் மேனிக்குள் நுழைந்து அவளைப் பாதுகாப்பது குறித்து மனத்தில் ஒரு தீர்மனத்தை அடைவதில் அந்தப் பிருகு குல விபுலர் பெருங்கவனம் கொண்டார். ஓ! ஏகாதிபதி, அவர் என்ன செய்தார் என்று இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(53) பெருந்தவங்களைக் கொண்ட விபுலர், குற்றமற்ற பண்புகளுடன் குடிசையில் அமர்ந்திருந்த தமது ஆசானுடைய மனைவியின் அருகில் அமர்ந்தார். பிறகு, அறம் மற்றும் வாய்மையில் அவளை நிலை நிறுத்துவதற்காக விபுலர் அவளிடம் பேசத் தொடங்கினார்.(54) விபுலர், தமது கண்களை {பார்வையை} அவளுடைய கண்களில் செலுத்தி, அவளது பார்வைப் புலனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களுடன், தம் பார்வையின் ஒளிக்கதிர்களைக் கலந்து, காற்று எனும் பூதம், வெளி, அல்லது ஆகாயம் என்ற பூதத்துக்குள் நுழைவதைப் போலவே அந்தப் பெண்ணின் உடலுக்குள் (நுட்பமான வடிவில்) நுழைந்தார்.(55) விபுலர், தம் கண்களால் அவளுடைய கண்களையும், தம் முகத்தால் அவளுடைய முகத்தையும் ஊடுருவி, அவளுக்குள் புலப்படாமல் அவளது நிழலைப் போலவே அசைவற்றிருந்தார்.(56) இந்திரனிடம் இருந்து அவளைப் பாதுகாக்கும் நோக்கில் விபுலர் அவளது உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தியபடியே அவளுக்குள் தொடர்ந்து வசித்தார். அந்தப் பெண் இது குறித்து அறியாமல் இருந்தாள்.(57) ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் விபுலர், தமது உயர் ஆன்ம ஆசான் வேள்வி செய்துவிட்டுத் திரும்பி வரும் வரை அந்தப் பெண்ணை இவ்வாறே காப்பதில் தொடர்ந்தார்" என்றார் {பீஷ்மர்}.(58)
அநுசாஸனபர்வம் பகுதி – 40ல் உள்ள சுலோகங்கள் : 58
ஆங்கிலத்தில் | In English |