Indra made himself invisible overwhelmed with shame! | Anusasana-Parva-Section-41 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 41)
பதிவின் சுருக்கம் : விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ! மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)
அந்த வேடத்தில் வந்திருக்கும் இந்திரனைக் கண்ட அந்தப் பெண்மணி (ருசி), எழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அவனது ஒப்பற்ற அழகால் ஆச்சரியத்தால் தூண்டப்பட்ட அவள், அவன் யார் என்பதைக் கேட்க விரும்பினாள்.(5) ஓ! மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, நான் உன்னிடம் வந்திருக்கிறேன். காலம் கடந்து செல்கிறது" என்றான்.(8)
இந்திரனால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் தவசி விபுலரால் கேட்கப்பட்டது. தமது ஆசான் மனைவியின் உடலுக்குள் இருந்த அவர், நேரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.(9) களங்கமில்லா அழகுடைய அப்பெண் (ருசி), இந்திரன் சொன்னதைக் கேட்டாலும், தேவர்கள் தலைவனை வரவேற்கவோ, கௌரவிக்கவோ அவளால் எழ முடியவில்லை. விபுலரால் அவளது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் மறுமொழியாக அவளால் ஒரு சொல்லையும் சொல்ல இயலவில்லை.(10) வலிமையும், சக்தியும் கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்து {விபுலர்}, தமது ஆசான் மனைவியின் உடல் தரும் குறியீடுகளைக் கொண்டு, அவள் இந்திரனை அன்புடன் வரவேற்க விரும்பாமலில்லை என்று தீர்மானித்து, தமது யோக சக்திகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி அவளது அங்கங்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார்.(11) சச்சியின் தலைவன் {இந்திரன்}, கலக்கத்திற்கான எந்தக் குறியீட்டையும் மேனியில் காட்டாமல் அமர்ந்திருக்கும் அவளைக் கண்டு நாணமடைந்து, தன் கணவரின் சீடனுடைய யோக சக்தியின் மூலம் மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பேசினான்.(12)
{இந்திரன்}, "ஓ! இனிய பெண்ணே, வா, வருவாயாக" என்றான். அப்போது அந்தப் பெண் {ருசி} அவனுக்கு {இந்திரனுக்குப்} பதிலளிக்க முயற்சி செய்தாள். எனினும், அவள் சொல்ல எண்ணிய சொற்களை விபுலர் கட்டுப்படுத்தினார்.(13) எனவே, (விபுலரின் ஆதிக்கத்தில் இருந்த) அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் உண்மையில் "நீ இங்கு வந்த காரணமென்ன?" என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ! ஏகாதிபதி, அந்த எதிர்பாராத விளைவைக் கண்டவனும், ஆயிரம் கண்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான தேவர்களின் தலைவன் அனைத்தையும் தன் ஆன்மப் பார்வையால் கண்டான்.(16)
[1] "பெண்கள் பிராகிருதம் பேசுவார்கள், சம்ஸ்க்ருதம் அல்ல. சம்ஸ்க்ருதம் தூய இலக்கணமுடையது, பிராகிருதம் அவ்வாறானதல்ல. எனவே, அந்தப் பெண்ணின் உதடுகளில் இருந்து உதிர்ந்த சம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் ஆச்சரியமடைந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இருக்கும் தவசியைக் கண்டான். உண்மையில், கண்ணாடியில் பிரதிபிம்பம் இருப்பது போலத் தன் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் அந்தத் தவசி இருந்தார்.(17) ஓ! ஏகாதிபதி, பயங்கரத் தவ வலிமை கொண்ட அந்தத் தவசியைக் கண்ட புரந்தரன், முனிவரின் சாபத்திற்கு அஞ்சி நடுக்கமடைந்தான்.(18) அப்போது, உயர்ந்த தவ வலிமையைக் கொண்ட விபுலர், தமது ஆசானுடைய மனைவியின் உடலைவிட்டு, அதன் அருகில் இருந்த தன் உடலுக்குத் திரும்பினார். பிறகு, பீதியடைந்திருந்த இந்திரனிடம் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)
விபுலர் {இந்திரனிடம்}, "ஓ! தீய ஆன்மா கொண்ட புரந்தரா, ஓ! புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ? அஃது உன் நினைவில் இல்லையா?(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ! மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ! இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ! மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ! வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ! சக்ரா, இது போல மீண்டும் செய்யாதே. பிராமணர்கள் உன்னால் மதிக்கப்பட வேண்டும். பிராமணர்களின் வலிமையால் பீடிக்கப்படுவதன் மூலம் உன் பிள்ளைகள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து அழிவடையாமல் இருப்பாயாக.(25) நீ அழிவற்றவன் என நினைத்து இது போல விரும்பியவாறு செயல்படுகிறாய். பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. தவத்தால் அடையப்பட முடியாதது எதுவும் கிடையாது" என்றார் {விபுலர்}".(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம விபுலரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் மூழ்கி, தன்னை {புலப்படாதவனாக} மறைத்துக் கொண்டான்.(27) அவன் சென்ற ஒரு கணத்தில் உயர்ந்த தவத்தகுதியைக் கொண்ட தேவசர்மன், தாம் நினைத்த வேள்வி நிறைவேற்றி விட்டுத் தமதாசிரமத்திற்குத் திரும்பினார்(28) ஏற்புடைய செயலைச் செய்திருந்த விபுலர், தமது ஆசான் திரும்பி வந்ததும், இந்திரனின் சதியில் இருந்து தம்மால் பாதுகாக்கப்பட்டவளும், களங்கமற்ற அழகைக் கொண்டவளுமான அவரது {தேவசர்மனின்} மனைவியை ஒப்படைத்தார்.(29) அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், தமது ஆசானிடம் பெரும் மதிப்பு கொண்டவருமான விபுலர், அவரை வணங்கி, அச்சமற்ற இதயத்துடன் அவரது முன்னிலையில் நின்றார்.(30)
அவரது ஆசான் சற்றே ஓய்வெடுத்து, தமது மனைவியுடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த போது, விபுலர் அவரிடம் சக்ரன் செய்தது அனைத்தையும் சொன்னார்.(31) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த முதன்மையான முனிவர் {தேவசர்மன்}, விபுலரின் சொற்களைக் கேட்டு, அவரது ஒழுக்கம், இயல்பு, தவம் மற்றும் நோன்புகளில் மிகவும் நிறைவடைந்தார்.(32) விபுலரின் ஆசானும், பலமிக்கவருமான தேவசர்மன், தம்மிடம் அவர் {விபுலர்} கொண்ட நடத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டும், அவரது அறவுறுதியைக் கவனித்தும், "நன்று, நன்று" என்று சொன்னார்.(33)
உயர் ஆன்ம தேவசர்மன், அறம்சார்ந்த தமது சீடரை நல்வரவு சொல்லி வரவேற்று, ஒரு வரத்தைக் கொடுத்து அவரைக் கௌரவித்தார்.(34) உண்மையில், அறவுறுதி கொண்ட விபுலர், அறவுறுதியில் இருந்து ஒருபோதும் தவறாத வரத்தைத் தமது ஆசானிடம் இருந்து பெற்றார். பிறகு தமது ஆசானால் விடைகொடுத்து அனுப்பப்பட்டுத் தமது வசிப்பிடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவங்களைப் பயின்றார்.(35) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனிடம் {இந்திரனிடம்} முற்றிலும் அச்சமற்று, அந்த நாளில் இருந்து தமது மனைவியுடன் அந்தத் தனிமையான காட்டில் வாழ்ந்து வந்தார்" {என்றார் பீஷ்மர்}.(36)
அநுசாஸனபர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |