The transgression of Vipula! | Anusasana-Parva-Section-42 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 42)
பதிவின் சுருக்கம் : பதிவின் சுருக்கம்: கடுந்தவங்களைச் செய்த விபுலர்; ருசி தேவிக்குக் கிட்டிய தெய்வீக மலர்கள்; சம்பையில் உள்ள தன் சகோதரியின் வசிப்பிடத்திற்குச் சென்ற ருசி; சகோதரி அம்மலர்களை விரும்பவே ஆசானின் ஆணையின் பேரில் மலர் கொணரச் சென்ற விபுலர்; மலர் கொணர்ந்து திரும்புகையில் விபுலர் கண்ட காட்சிகளும், கேட்ட உறுதிமொழிகளும்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "விபுலர், தமது ஆசானின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, மிகக் கடும் தவங்களைச் செய்தார். பெரும் சக்தியைக் கொண்ட அவர் இறுதியாகப் போதுமான தவத்தகுதியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார்.(1) தாம் செய்திருக்கும் சாதனையில் செருக்கடைந்த அவர், ஓ! ஏகாதிபதி, தமது சாதனைக்கான பெரும் புகழால் அனைவராலும் மதிக்கப்பட்டு அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் உலகத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(2) அந்தப் பலமிக்கப் பார்க்கவர், தமது சாதனையாலும், கடுந்தவங்களாலும் இம்மையையும், மறுமையையும் தாம் வென்றுவிட்டதாகக் கருதினார்.(3)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சில காலம் கடந்ததும், ருசியின் சகோதரி செய்ய வேண்டிய கொடையளிக்கும் விழாவுக்கான {ஆதான விழாவுக்கான} தருணம் வந்தது. அபரிமிதமான செல்வமும், தானியங்களும் அதில் கொடுக்கப்பட வேண்டும்[1].(4) அதே வேளையில், பேரழகுடன் கூடிய ஒரு தெய்வீகக் காரிகை வானத்தினூடே சென்று கொண்டிருந்தாள்.(5) அவள் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது அவளது உடலில் இருந்து சில மலர்கள் பூமியில் விருந்தன. தெய்வீக நறுமணம் கமழ்ந்த அந்த மலர்கள் ருசியின் கணவருடைய {தேவர்சர்மனுடைய} ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் விழுந்தன.(6) தரையில் சிதறிக் கிடந்த அந்த மலர்கள், அழகிய கண்களைக் கொண்ட ருசியால் எடுக்கப்பட்டன. விரைவில் அங்க நாட்டில் இருந்து ருசிக்கு ஓர் அழைப்பு வந்தது {தூதன் வந்தான்}.(7)
[1] "ஆதானம்" என்றழைக்கப்படும் விழாவானது, அந்த விழாவைச் செய்பவர்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் கொடையளிக்க வேண்டிய சடங்கைக் கொண்டதாகும். புனிதநூல் தரிப்பது, திருமணம், ஆறு அல்லது ஒன்பதாம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு ஆகியன அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ருசிதேவியை அவள் ஸகோதரி மிகுதியான தனங்களையும், தான்யங்களையும் கொடுத்து அழைத்தாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ருசிதேவியின் ஸஹோதரியின் கிருகத்தில் தனதான்யங்கள் மிகுதியுள்ள விவாகம் வந்தது என்பது பழைய உரை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செல்வங்கள் மற்றும் தானியங்களை ருசியின் சகோதரிக்குக் கொடையளிக்க வேண்டிய தருணம் வந்தது" என்றிருக்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட ருசியின் சகோதரியுடைய பெயர் பிரபாவதியாகும். அவள் அங்கர்களின் ஆட்சியாளனான சித்திரரதனின் மனைவியாக இருந்தாள்[2].(8) மிக மேன்மையான நிறத்தைக் கொண்டவளான ருசி, அந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக் கொண்டு, தான் அழைக்கப்பட்ட அங்கர்களின் மன்னனுடைய அரண்மனைக்குச் சென்றாள்.(9) அவளது கூந்தலில் இருந்த மலர்களைக் கண்டவளும், அழகிய கண்களைக் கொண்டவளுமான அங்கர்களின் ராணி, தன் சகோதரியிடம் தனக்கும் சிலவற்றைத் தருமாறு கேட்டாள்.(10)
[2] இந்தச் சகோதரிகளில் ஒருவர் பிராமணரையும், மற்றொருவர் க்ஷத்திரியரையும் திருமணம் செய்திருக்கின்றனர்.
அழகிய முகத்தைக் கொண்ட ருசி, தன் சகோதரியின் கோரிக்கையைத் தன் கணவனிடம் {தேவர்சர்மனிடம்} விரைவாகத் தெரிவித்தாள். முனிவர் தமது மனைவின் சகோதரியுடைய {கொழுந்தியுடைய} வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.(11) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மன், தமது சீடரான விபுலரைத் தம் முன் அழைத்து, "செல், செல்வாயாக" என்று சொல்லி அவரிடம் அதே வகையைச் சார்ந்த சில மலர்களைக் கொண்டு வரச் சொன்னார்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் தமது ஆசானின் ஆணையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தவசியான விபுலர், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்துவிட்டு, ருசி தேவி தனது சகோதரி ஆசைப்பட்ட மலர்களை எங்கிருந்து எடுத்திருந்தாளோ அதே இடத்திற்குச் சென்றார்.(13) ஆகாயத்தில் இருந்து மலர்கள் விழுந்த (ருசியால் எடுக்கப்பட்ட மலர்கள் விழுந்த) இடத்திற்கு வந்த விபுலர், அங்கே இன்னும் சில மலர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அந்த மலர்கள் அனைத்தும், தாங்கள் வளர்ந்த செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்டவை போல இருந்தன. அவற்றில் எதுவும் கொஞ்சம்கூட வாடாமல் இருந்தன.(14)
அவர் பேரழகுடைய அந்தத் தெய்வீக மலர்களை எடுத்துக் கொண்டார். ஓ! பாரதா, தெய்வீக நறுமணத்தைக் கொண்ட அம்மலர்களைத் தமது கடும் தவங்களின் விளைவால் விபுலர் அடைந்தார்.(15) தமது ஆசானின் ஆணைகளை நிறைவேற்றி, அவற்றை அடைந்த அவர் பெரும் மகிழ்ச்சியுடன் சம்பக மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சம்பை {சம்பா} நகரத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.(16) அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வட்டமாக வலம் வந்து கொண்டிருந்தனர்.(17) அவர்களில் ஒருவன் அடிகளை வேகமாக வைத்து, அந்த இயக்கத்தின் இசைவைக் கெடுத்தான். ஓ மன்னா, இதன் காரணமாக அவர்களுக்குள் ஒரு சச்சரவு நேர்ந்தது.(18)
உண்மையில் அவர்களில் ஒருவன், "நீ வேகமாக அடி எடுத்து வைத்தாய்" என்று அடுத்தவனைக் குற்றஞ்சாட்டினான். மற்றவனோ, "இல்லை" என்றான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ஒவ்வொருவனும் அடுத்தவர் மறுத்ததை உறுதி செய்தும், அடுத்தவர் உறுதி செய்ததை மறுத்தும், தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தான்.(19) இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அவர்களுக்குள் சச்சரவு நடந்து வந்தபோது, அவர்களுக்கு மத்தியில் ஓர் உறுதிமொழி கேட்கப்பட்டது. உண்மையில், அவர்களில் ஒவ்வொருவனும் திடீரென விபுலரின் பெயரைச் சென்னான்.(20) அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இதுதான்: "நம்மிருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவன் மறுமையில் மறுபிறப்பாளனான விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்" என்றனர்.(21)
அவர்களுடைய இச்சொற்களைக் கேட்டதும் விபுலரின் முகம் உற்சாகத்தை இழந்தது. அவர் தமக்குள், "நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். இந்த இருவருக்கிடையிலான சச்சரவு கடுமையாக இருக்கிறது. மேலும் இஃது எனக்குத் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திற்காகவும் மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகவும் துன்பம் நிறைந்த கதியை நான் அடைவேன் என்று இவர்கள் இருவரும் குற்றஞ்சுமத்தும் வகையில் நான் என்ன பாவம் செய்தேன்?" என்று நினைத்தார்.(22,23) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, விபுலர், இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே, தமது தலையைத் தொங்கவிட்டு, உற்சாகமிழந்த மனத்துடன் தாம் என்ன பாவம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினார்.(24)
அவர் தமது வழியில் சிறிது தொலைவைக் கடந்து சென்றதும் தங்கம் மற்றும் வெள்ளியாலான பகடைக் காய்களைக் கொண்டு சூதாடிக் கொண்டிருக்கும் ஆறு மனிதர்களைக் கண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் ஏற்பட்டிருக்கும் மயிர்ச் சிலிர்ப்புடன் ஆவலோடு சூதாடுபவர்களாகத் தெரிந்தனர். (அவர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட்ட போது) அவர்களும் ஏற்கனவே முதல் இருவர் ஏற்ற உறுதிமொழியைப் போலவே ஏற்பதை விபுலர் கேட்டார். உண்மையில், அவர்களது சொற்களும் விபுலரை அதே வகையிலேயே குறிப்பிட்டன.(25,26) {அவர்கள்}, "நம்மில் எவன் பேராசையால் வழிநடத்தப்பட்டு முறையற்ற வழியில் செயல்படுகிறானோ அவன் மறுமையில் விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்" {என்றனர்}.(27)
எனினும், ஓ! குருகுலத்தோனே, எவ்வளவுதான் முயன்று நினைவுகூர்ந்தாலும், தமது சிறு வயதில் இருந்து கூடத் தாம் அத்துமீறலேதும் செய்ததாக விபுலரால் நினைவுகொள்ள முடியவில்லை.(28) உண்மையில், நெருப்புக்கு மத்தியில் உள்ள மற்றொரு நெருப்பைப் போல அவர் எரியத் தொடங்கினார். அந்தச் சாபத்தைக் கேட்டு அவரது மனம் துயரால் எரிந்தது.(29) இத்துன்ப நிலையிலேயே நீண்ட நேரம் கடந்து சென்றது. இறுதியாக, இந்திரனின் சதியில் இருந்து தமது ஆசானின் மனைவியைப் பாதுகாக்கத் தாம் மேற்கொண்ட வழிமுறைகளை நினைவுகூர்ந்தார்.(30) {அவர்}, "அங்கத்தோடும் அங்கமும், முகத்தோடு முகமும் வைத்து நான் அந்தப் பெண்ணின் உடலில் ஊடுருவினேன். இவ்வழியில் நான் செயல்பட்டிருந்தாலும் நான் இந்த உண்மையை என் ஆசானிடம் சொல்லவில்லையே" {என்று நினைத்தார்}.(31)
ஓ! குரு குலத்தோனே, விபுலர் தம்மிடம் கண்ட வரம்புமீறல் இதுவே. உண்மையில், ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி, அதுதான் அவர் செய்த அத்துமீறல் என்பதில் ஐயமில்லை.(32) அவர் சம்பை நகரத்திற்குத் திரும்பி தமது ஆசானிடம் மலர்களைக் கொடுத்தார். மூத்தோரிடமும், பெரியோரிடமும் அர்ப்பணிப்புமிக்க அவர், தமது ஆசானை முறையான வடிவில் வழிபட்டார்" என்றார் {பீஷ்மர்}.(33)
அநுசாஸனபர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |