The state attained by Vipula! | Anusasana-Parva-Section-43 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 43)
பதிவின் சுருக்கம் : விபுலர் செய்த வரம்புமீறலை விளக்கிச் சொன்ன தேவசர்மன்; ஆசானால் மீட்கப்பட்ட விபுலர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, பெருஞ்சக்திமிக்கவரான தேவசர்மன், பணி செய்து திரும்பி வந்த தமது சீடரைக்{விபுலரைக்} கண்டு சொன்ன சொற்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1)
தேவசர்மன், "ஓ! விபுலா, ஓ! சீடா, பெருங்காட்டில் நீ பயணித்தபோது கண்டதென்ன? ஓ! விபுலா, நீ யாவரைக் காண்டாயோ அவர்கள் உன்னை அறிவர். ருசியைப் பாதுகாக்கும் காரியத்தில் நீ எவ்வாறு செயல்பட்டாய் என்பதை நானும், என் மனைவியான ருசியும் அறிவோம்" என்றார்.(2)
விபுலர், "ஓ! மறுபிறப்பாள முனிவரே, நான் முதலில் கண்ட அந்த இருவர் யாவர்? அதற்கடுத்து நான் கண்ட அறுவர் யாவர்? அவர்கள் யாவரும் என்னை அறிந்திருந்தனர். உண்மையில், உமது பேச்சினூடாகக் குறிப்பாகச் சொல்லும் அவர்கள் யாவர்?" என்று கேட்டார்.(3)
தேவசர்மன் {விபுலரிடம்}, "ஓ! மறுபிறப்பாளா, நீ முதலில் கண்ட இருவர் பகலும், இரவும் ஆவர். அவர்கள் இடையறாமல் ஒரு வட்டத்தைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் உன் குற்றத்தின் வரம்புமீறலை அறிவார்கள்.(4) ஓ! கல்விமானான பிராமணா, உற்சாகமாகப் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக (எண்ணிக்கையில் அறுவராக) நீ கண்ட வேறு மனிதர்கள் பருவ காலங்களாவர் {ருதுக்களாவர்}. அவர்களும் உன் வரம்புமீறல்களை அறிந்திருக்கின்றனர்.(5) கமுக்கத்தில் பாவமிழைத்த எந்தப் பாவியும், தன் வரம்புமீறலைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும், வேறு எவரும் அறியவில்லை என்பதாகவும் ஓர் உறுதியான எண்ணத்தை வளர்க்கக்கூடாது.(6) ஒரு மனிதன் கமுக்கத்தில் செய்யும் பாவச் செயலை பருவகாலங்களும் {ருதுக்களும்}, பகலும், இரவும் எப்போதும் காண்கின்றன.(7)
(நீ செய்த காரியத்திற்கு) பாவிகளுக்கான உலகமே உனதாகும். நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்லவில்லை. உன் பாவத்தை யாரும் அறியவில்லை என்பதே உன் நம்பிக்கையாக இருந்தது, அந்தத் தீர்மானமே உன்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(8) நீ உன் ஆசானிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரிடம் மறைத்தாய். நீ கேட்கும் வகையில் இவ்வாறு பேசிய பருவகாலங்களும், பகலும், இரவும், இந்த உன் வரம்புமீறலை உனக்கு நினைவூட்டுவது முறை என நினைத்தன.(9) பகல், இரவு மற்றும் பருவகாலங்கள், ஒரு மனிதன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் எப்போதும் அறிபவையாக இருக்கின்றன.(10) ஓ! மறுபிறப்பாளா, தவறு செய்ததாக அஞ்சி நீ என்னிடம் சொல்லத் துணியாததை முழுதும் அறிந்தவர்களாக இருந்ததால் அவர்கள் இவ்வழியில் உன்னிடம் பேசினார்கள்.(11) இதன் காரணமாகப் பாவிகளுக்கான உலகங்களே உனதாகும். நீ செய்ததை என்னிடம் நீ சொல்லவில்லையே.(12)
ஓ! மறுபிறப்பாளா {விபுலா}, இயற்கையாகவே பாவம் நிறைந்த இயல்பைக் கொண்ட என் மனைவியைப் பாதுகாக்க முழு வல்லமையுடன் நீ இருந்தாய். நீ செய்த காரியத்தில் பாவமேதும் இல்லை. இதனாலேயே நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன்.(13) ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நீ தீச்செயலேதும் செய்திருந்தால் எத்தாமதமுமின்றி உன்னை மொத்தமாகச் சபித்திருப்பேன்.(14) பெண்கள் ஆண்களுடன் கலக்கிறார்கள். ஆண்கள் இத்தகைய கலவியை மிகவும் விரும்புகின்றனர். எனினும், நீ வேறுபட்ட ஆவலுடன் {பாதுகாக்கும் நோக்கத்துடனே} என் மனைவியைப் பாதுகாத்தாய்[1]. நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு சாபம் கிட்டியிருக்கும். இதையே நான் நினைக்கிறேன்.(15) ஓ! மகனே, நீ என் மனைவியைப் பாதுகாத்தாய். நீ செய்த விதமும், நீ சொல்லியிருந்தால் எவ்வாறு அறிவேனோ அவ்வாறே என்னால் அறியப்பட்டது. ஓ! மகனே, நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விட்டு நீ சொர்க்கத்திற்குச் செல்வாயாக" என்றார் {தேவசர்மன்}.(16)
[1] கும்பகோணம் பதிப்பில், "நீ பிழையொன்றும் செய்யவில்லை. அதனால் உன்னிடத்தில் அன்புள்ளவனாயிருக்கிறேன். மனத்தில் குற்றமற்றவர்களுக்குப் பாவம் வராது. உனக்கும் அப்படியேதான். மனைவி வேறுவிதமான சிநேகத்தினால் தழுவிக் கொள்ளப்படுகிறாள். மகள் மற்றொருவித சிநேகத்தினால் தழுவிக் கொள்ளப்படுகிறாள். ஒரு பெண்ணின் உருவத்தில் ஸந்யாஸிக்கும் காமுகனுக்கும் எண்ணங்கள் வெவ்வேறு மனத்தையடக்காமையினால்தான் பெரும்பாலும் ஜனங்கள் மோசம் போகின்றனர். உலகத்தில் வாய் உமிழ் நீரை எச்சிலென்று அருவருப்பதும், பெண் வாயிலுள்ள கள்ளுக்கு ஆசைப்படுவதும் இருக்கின்றன. கட்டப்படாத கெட்ட மனமுள்ளவர்களுக்கு மந்திரமுமில்லை; ஆத்மாவுமில்லை; தெய்வமுமில்லை. பெண்ணாசை, எனது என்னும் பற்று, பொருளாசைகளினால் கண்மூடப்பட்டுக் கருமம் செய்பவர்களுக்கு அந்தப் பெரும்பலன் கிடைக்காது. உள்ளே களங்கமில்லாமல் பரிசுத்தனான நீ ருசியினுள் பிரவேசித்ததனால் கெடுக்கப்படவில்லை. பிராம்மணோத்தமனே, நீ கெட்ட நடையுள்ளவன் என்று கண்டிருப்பேனாயின் உன்னைக் கோபத்தினால் சபித்திருப்பேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெண்கள் ஆண்களுடன் கலவிபுரிகிறார்கள், ஆண்களும் அதைச் சிறந்த காரியமாகக் காண்கிறார்கள். எனினும், உன் நோக்கம் அவளைப் பாதுகாப்பதாக இருந்தது. வேறு வகையில் இருந்தால் சாபம் பெறும் கதியை நீ அடைந்திருப்பாய். ஓ மகனே, நீ அவளைப் பாதுகாத்தாய், நான் அதை அறிந்திருக்கிறேன். ஓ மகனே, நான் உன்னிடம் நிறைவை அடைந்தேன்" என்றிருக்கிறது.
பெரும் முனிவரான தேவசர்மன், விபுலரிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தமது மனைவியுடனும், தமது சீடருடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார்.(17) ஓ! மன்னா, இந்த வரலாற்றை முன்னொரு சந்தர்ப்பத்தில் கங்கைக்கரையில் வைத்து ஓர் உரையாடலின் போக்கில் பெரும் தவசியான மார்க்கண்டேயர் எனக்குச் சொன்னார்.(18) எனவே, நான் இஃதை உனக்குச் சொன்னேன். (அனைத்தை வகை மயக்கங்கள் மற்றும் வாய்ப்புகளில் இருந்தும்) பெண்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களில் அறம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் என்ற இருவகையினரும் காணப்படுகின்றனர்.(19)
அறம் சார்ந்த பெண்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர். (உயிரினங்கள் அனைத்தையும் எங்கும் பேணி வளர்ப்பதால்) அவர்களே இந்த அண்டத்தின் தாய்மார் {லோகமாதாக்கள்} ஆவர். நீர்நிலைகள் மற்றும் காடுகளோடு கூடிய இந்தப் பூமியைத் தாங்குபவர்கள் அவர்களே.(20) பாவம் நிறைந்தோரும், தீய நடத்தை கொண்டோரும், குலத்தை அழிப்போரும், பாவம் நிறைந்த செயல்களையே செய்யத் துணிந்தோருமான பெண்களை அவர்களின் உடல்களில் தோன்றி வெளிப்படும் தீய குறியீடுகளை {துர்லக்ஷணங்களைக்} கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.(21) உயர் ஆன்ம மனிதர்களாலும் இவ்வாறே பெண்களைப் பாதுகாக்க முடியும். ஓ! மன்னர்களில் புலியே, வேறு எந்த வகையிலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது.(22) ஓ! மனிதர்களின் தலைவா, பெண்கள் கொடியவர்களாவர். அவர்கள் கொடிய ஆற்றலைக் கொண்டவர்கள். அவர்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவர்களைவிட, அவர்களின் அன்புக்கோ, விருப்பத்திற்கோ உரியவர்கள் வேறு எவருமில்லை.(23) பெண்கள், உயிருக்கே அழிவை ஏற்படுத்தும் (அதர்வண) மந்திரங்களைப் போன்றவர்களாவர். ஒருவனோடு வாழ்வதாக உடன்பட்ட பிறகும், பிறரோடு செல்ல அவர்கள் அவனைக் கைவிடத் தயாராக இருப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவனிடம் ஒருபோதும் அவர்கள் நிறைவடைவதில்லை.(24)
மனிதர்கள் அவர்களிடம் அன்பேதும் உணர வேண்டியதில்லை. ஓ! மன்னா அவர்களிடம் பகைமையும் பாராட்ட வேண்டியதில்லை. அறத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துணையைத் தயக்கத்துடனும், பற்றில்லாமலும் அனுபவிக்க வேண்டுமேயன்றி ஊக்கத்துடனும், பற்றுடனும் {அனுபவிக்கக்}கூடாது.(25) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வேறுவகையில் செயற்படும் ஒரு மனிதன் நிச்சயம் அழிவையே அடைவான். ஓ! மன்னர்களில் புலியே, அனைத்துக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறிவே மதிப்பிற்குரியதாக இருக்கிறது.(26) பெண்ணைப் பாதுகாப்பதில் வென்ற ஒரே மனிதர் விபுலர் மட்டுமே. ஓ! மன்னா, மூவுலகிலும் பெண்களைப் பாதுகாக்கவல்லவர்களென வேறு எவரும் இல்லை" என்றார் {பீஷ்மர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |