Five types of weddings! | Anusasana-Parva-Section-44 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 44)
பதிவின் சுருக்கம் : எவ்வகை மனிதனுக்கு ஒருவன் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; திருமண வகைகள்; திருமணம் முழுமை பெற அவசியமானவை எவை; திருமணம் குறித்துப் பாஹ்லீகர் மற்றும் சத்தியவான் ஆகியோர் சொன்ன நீதிகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடமைகள் அனைத்தின் வேர் எது? உற்றார் உறவினரின் வேரெது? இல்லத்தின் வேரெது? பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களின் வேர்களெவை? என்பவை குறித்து எனக்குச் சொல்வீராக.(1) இந்தக் காரியமே (ஒருவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதே) கடமைகள் அனைத்திலும் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மன்னா, ஒருவன் எவ்வகை மனிதனுக்குத் தன் மகளைக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நன்மக்கள், ஒரு மனிதனின் ஒழுக்கம், இயல்பு {குணம்}, அவனது கல்வி, ஈட்டம் {சாதனைகள்}, அவனது பிறப்பு {குலம்} மற்றும் அவனது செயல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகே தேர்ந்த ஒரு மணமகனுக்குத் தங்கள் மகளைத் கொடுப்பார்கள்.(3) ஓ! யுதிஷ்டிரா, அறம் சார்ந்த பிராமணர்கள் அனைவரும் (தங்கள் மகள்களை {திருமணம் செய்து} கொடுக்கும் காரியத்தில்) இவ்வழியிலேயே செயல்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, இது பிரம்மத் திருமணம் {பிரம்ம விவாகம்} என்று அறியப்படுகிறது.(4) ஒரு பெண்ணின் தந்தையானவன், தகுந்த மணமகனைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு வகைப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் அந்த மணமகனைத் தூண்டி, தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வகைத் திருமணமானது {பிராஜாபத்ய / க்ஷத்ர விவாகமானது}, நல்ல க்ஷத்திரியர்கள் அனைவரின் நித்திய நடைமுறையாக இருக்கிறது.(5) ஒரு பெண்ணின் தந்தையானவன், தன் சொந்த விருப்பங்களை அலட்சியம் செய்து, தன் மகளால் விரும்பப்படுபவனும், அந்தப் பெண்ணின் அவ்வுணர்வை ஏற்பவனுமான ஒருவனுக்குத் தன் மகளை அளிக்கும்போது, ஓ! யுதிஷ்டிரா, அவ்வகைத் திருமணமானது காந்தர்வம் {காந்தர்வ விவாகம்} என்று வேதங்களை அறிந்தோரால் அழைக்கப்படுகிறது.(6)
ஒரு பெண்ணின் உறவினர்களுடைய பேராசையை நிறைவடையச் செய்து, பெரும் விலை கொடுத்து அவளை வாங்கித் திருமணம் செய்து கொள்வது அசுரர்களின் நடைமுறை {இவ்வகைத் திருமணத்தை ஆசுர விவாகம்} என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.(7) சில வேளைகளில் ஒரு மணமகன், அழுது கொண்டிருக்கும் உறவினர்களின் தலைகளைக் கொய்து, அவர்களைக் கொன்று, அவர்களது பெண்ணை வலுக்கட்டாயமாக அபகரித்துச் செல்றான். ஓ! மகனே, அத்தகைய திருமணம் ராட்சசம் {ராக்ஷஸ விவாகம்} என்ற பெயரில் அழைக்கப்படுகிறது[1].(8) ஓ! யுதிஷ்டிரா, இவ்வைந்தில் (பிரம்மம், க்ஷத்ரம், காந்தர்வம், ஆசுரம், ராட்சசம் ஆகியவற்றில்) அறம்சார்ந்தவை {தர்மம்} மூன்றும், அறமற்றவை {அதர்மம்} இரண்டும் என இருக்கின்றன. பைசாச மற்றும் ஆசுர வகைகளை ஒருபோதும் செய்யக்கூடாது[2].(9) ஓ! மனிதர்களின் இளவரசே, பிரம்ம, க்ஷத்ர, காந்தர்வ வடிவங்கள் {திருமண வகைகள்} அறம்சார்ந்தவை ஆகும். இவற்றைத் தனித்தனியாகவும், சேர்த்தும் செய்யலாம் என்பதில் ஐயமில்லை.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "கொன்றும், சிரங்களைக் கொய்தும் பந்துக்கள் அழத் தானும் அழுது கொண்டிருக்கும் கன்னிகையை வீட்டிலிருந்து வலிந்து கொண்டு போவது ராக்ஷஸ விவாகமென்று சொல்லப்படுகிறது. இரவில் தூங்கியும், குடியால் மயங்கியும் ஜாக்ரதையில்லாமலுமிருக்கும் கன்னிகையை ரகஸ்யமாகச் சேருவது விவாகங்களுள் மிக்கப் பாவமும், இழிவுமான பைசாச விவாகமென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. இதில் ராட்சச மற்றும் பைசாச விவாகங்கள் தனித்தனியான இரண்டு வகைத் திருமணங்களாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அழுது கொண்டிருக்கும் உறவினர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கொய்யப்பட்டு, அழுது கொண்டிருக்கும் கன்னிகையை அவளது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துச் செல்லும் வகைத் தர்மம் ராட்சசக் குறியீடுகளைக் கொண்டதாகும்" என்றிருக்கிறது. இதிலும், கங்குலியின் பதிப்பிலும், ராட்சச மற்றும் பைசாச என இரு விவாகங்கள் சொல்லப்படவில்லை. அவற்றை இரண்டாகக் கொண்டால் அடுத்த வரியில் வரும் ஐவகைத் திருமணங்கள் என்பது பொருளற்றுப் போகும்.
[2] "மனுவால் சொல்லப்பட்ட எண்வகைத் திருமணங்களுக்குள் உரையாசிரியர் நீலகண்டர் இந்த ஐவகைத் திருமணங்களையும் அடக்குகிறார். மஹாபாரதத்தில் வரும் இத்தகைய பகுதிகள் மனுவைவிட மிகப் பழைமையானவை என்பது கேள்விக்கப்பாற்பட்டது. மனு இங்கே குறிப்பிடப்படுவது இடைசெருகலாக இருக்க வேண்டும், அல்லது பழைய மனு யாராவது இருந்திருக்க வேண்டும். அதனடிப்படையில் புதிய மனு எண்வகைத் திருமணங்களை வகுத்திருக்கலாம். ஆசுர மற்றும் ராட்சச வகைத் திருமணங்கள் இருபொருளின்றி {மாற்றுக்கருத்தின்றி} கண்டிக்கப்படுகின்றன. இருப்பினும் உரையாசிரியர், ராட்சச வகைத் திருமணம் க்ஷத்திரியர்களுக்குரியது எனச் சொல்லத் துணிகிறார். ராட்சசம் என்பது சில வேளைகளில் பைசாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு வகைகளுக்குள் உள்ள வேறுபாடு நிச்சயம் பிற்காலத்திலேயே நேர்ந்திருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு பிராமணன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். ஒரு க்ஷத்திரியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். வைசியனைப் பொறுத்தவரையில், அவன் தன் வகையைச் சார்ந்த ஒரு மனைவியைக் கொள்ள வேண்டும். இந்த மனைவிகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்[3].(11) ஒரு பிராமணன் கொள்ளும் மூன்று மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு பிராமணி} முதன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். அதே போல ஒரு க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு க்ஷத்திரியப் பெண்ணே} மேன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். உயர் வகையைச் சார்ந்தவர்கள் மூவரும் {முதல் மூன்று வர்ணத்தாரும்}, (அறத்திற்காக அல்லாமல்) இன்ப காரியங்களுக்காக மட்டும் தாழ்ந்த, அல்லது சூத்திர வகையில் மனைவிகளைக் கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள், எனினும், வேறு சிலர் இந்த நடைமுறையைத் தடை செய்கின்றனர்.(12) சூத்திரப் பெண்களிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நல்லோர் கண்டிக்கின்றனர். ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிள்ளைகளைப் பெறுவதன் மூலம், ஈடு செய்யக்கூடிய {பரிகாரத்தோடு கூடிய} பாவத்தை ஈட்டுகிறான்.(13) முப்பது வயதுடைய ஒரு மனிதன், நக்நிகாம்[4] என்றழைக்கப்படும் பத்து வயதுடைய பெண்ணை மணக்கலாம். அல்லது இருபத்தோரு வயதுடைய ஒருவன், ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சகோதரனோ, தந்தையோ இல்லாத ஒரு பெண், தன் தகப்பனுக்குப் புத்ரிகையாகக் கருதப்படலாம் என்பதால், அத்தகையவளை மணந்து கொள்ளக்கூடாது[5].(15)
[3] "பழங்காலத்தில் ஒரு பிராமணி, ஒரு க்ஷத்திரிய அல்லது ஒரு வைசியத் தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கிடையில் எவ்வித வேறுபாடும் இருக்கவில்லை. இந்நிலையில் வேறுபாடானது பிற்காலத்தில் தோன்றியதாகவே இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணனுக்கு மூன்று வர்ணத்துப் பெண்களும் மனைவிகளாகலாம்; க்ஷத்திரியனுகெகு இரண்டு வர்ணத்தவர்களுமாகலாம். வைசியன் தன் ஜாதியிலேயே மனைவியை அடைய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பின் கருத்தே இங்கே சரியாக இருக்க வேண்டும்.
[4] "ஒற்றையாடை அணிபவள் நக்நிகாம் என்றழைக்கப்படுகிறாள். பூப்பெய்திய குறியீடுகள் ஏதும் இல்லாத ஒரு பெண்ணுக்கு ஒற்றையாடைக்கு மேல் தன்னை மறைத்துக் கொள்ள வேறு ஆடை தேவையில்லை. இங்கே நக்நிகாம் குறிப்பிடப்படுவது, பூப்பெய்தாத பத்து வயது பெண்ணை மணப்பதற்கான தடையால் சொல்லப்படுகிறது என உரையாசிரியர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், இதற்கு முன்பே சில வரிகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு, "ஸந்ததியை விரும்புகிறவர்கள் தேகம் நிலையற்றதாதலின் மிகச் சிறிய பெண்ணை விவாகம் செய்து கொள்ளுவதில்லை. ஆசிரம தர்மத்தையனுஷ்டிப்பவர்கள் அவளுக்கு உள்ளம் சுத்தமாயிருக்குமென்று நினைத்து வேறு கோத்திரத்தில் பிறந்தவளும், அதிக நித்திரை முதலிய குற்றங்களில்லாதவளுமான மிகச் சிறிய பெண்ணையும் விவாகம் செய்து கொள்கின்றனர். காம போகத்திற்குச் சாஸ்திரத்தினால் விலக்கப்பட்டவளையும், வேறு பெண் நேரிடாதபோது சிலர் அங்கீகரிக்கின்றனர். முப்பது பிராயமுள்ள புருஷன் பெண்ணின் லக்ஷணங்கள் வெளிப்படாத பத்துப் பிராயமுள்ள பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருபத்தொரு வயதுள்ளவன் ஏழு வயது பெண்ணையும் விவாகம் செய்யலாம்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "முப்பது வயதான மனிதன் நக்நிகாம் என்று அறியப்படும் பத்து வயுடைய பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக இருபத்தோரு வயதுடைய ஒருவன் ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்" என்றிருக்கிற்றது.
[5] "ஒரு தந்தைக்கு ஒரே மகள் இருக்கும்போது, தனக்கான சிராத்தச் சடங்குகளைச் செய்வதற்கும், வாரிசுரிமைகளுக்கும், தன் மகளுக்குப் பிறக்கும் மகன் உரியவனாவான் என்ற புரிந்துணர்வுடன் அவளை ஒரு தகுந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுப்பான். அத்தகைய ஒப்பந்தம், திருமணக் காலத்தில் சொல்லப்பட்டாலும், சொல்லப்படாவிட்டாலும் சரியானதாகும். திருமணக் காலத்தில் சொல்லாவிட்டாலும், ஒரு பெண்ணின் தந்தையுடைய விருப்பமானது, அவளுடைய மகனை ஈன்ற தந்தைக்கு அல்லாமல், தன் தந்தைக்கே உரியவனாக மாற்றிவிடும். இத்தகைய நோக்கத்திற்காக உள்ள மகன் "புத்ரிகாதர்மினி", அல்லது "ஒரு மகனின் தன்மையைக் கொண்டவள்" என்று சொல்லப்படுகிறாள். அத்தகைய பெண்ணை மணப்பது மதிப்பிற்குரியதல்ல. அது திருமணத்தால் உண்டாகும் கனிகளைக் கைவிடச் செய்யக்கூடியதாகும். திருமணக் காலத்தின் போது அவளது தந்தை இறந்திருந்தாலும், உயிருடன் இருக்கும்போது அவ்வாறு விரும்பியிருந்தால், அதுவே அப்பெண்ணைப் புத்திரிகாதர்மனியாக மாற்றிவிடும். தந்தை மற்றும் சகோதரர்கள் இல்லாத பெண்களை மணப்பது இந்த நாள் வரை வெறுப்புக்குரியதாகவே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பூப்பெய்திய பிறகு (திருமணமாகாத) ஒரு பெண் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான்காம் ஆண்டில், (உறவினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனக் காத்திருக்காமல்) தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.(16) அத்தகைய ஒரு பெண்ணின் வாரிசு {சமூக} மதிப்பை இழப்பதில்லை, அத்தகைய பெண்ணுடனான கலவியும் இழிவாவதில்லை. தானே கணவனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வேறுவகையில் செயல்பட்டால், அவள் பிரஜாபதியின் பழிமொழியை ஈட்டுகிறாள் {பிரம்மனால் இகழத்தக்கவள் ஆகிறாள்}.(17) ஒருவன், தன் அன்னைக்கு ஸபிண்டையாக[6] இல்லாத, அல்லது தன் தந்தையின் கோத்ரத்தையே கொண்டவளாக {ஸகோத்ரையாக} இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுவே மனு அறிவித்திருக்கும் (புனித விதிக்கு இணக்கமாக) நடைமுறையாகும்" என்றார் {பீஷ்மர்}.(18)
[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், ஸபிண்டை என்பதற்கு, "இரத்த ஸம்பந்தமுள்ளவள்" என்றும், ஸகோத்ரை என்பதற்கு, "ஒரு கோத்ரமுள்ளவள்" என்றும் விளக்கங்கள் இருக்கின்றன.
யுதிஷ்டிரன், "திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒருவன், பெண்ணின் உறவினர்களுக்கு மணக்கொடை {கன்னிகாசுல்கம்} அளிக்கிறான்; வேறொருவன் பெண்ணின் உறவினர்களிடம் மணக்கொடை தருவதாக உறுதியளிக்கிறான்; வேறொருவன், "நான் இந்தப் பெண்ணைப் பலவந்தமாக அபகரிக்கப் போகிறேன்" என்கிறான்; வேறொருவன் தன் செல்வத்தை (அந்தப் பெண்ணுக்குத் தன் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு மணக்கொடை அளிக்கும் நோக்கில் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அவற்றை) வெளிக்காட்டுகிறான்;(19) மற்றொருவன் உண்மையில் திருமணச் சடங்குகளுடன் அப்பெண்ணின் கரத்தைப் பற்றுகிறான் {பாணிக்ரகணம் செய்கிறான்}. ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், உண்மையில் அந்தப் பெண் {இவர்களில்} யாருடைய மனைவியாவாள்? உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் எங்களுக்குப் பார்வையைத் தரும் கண்ணாக நீரே இருக்கிறீர்" என்றான்.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஞானிகள் ஆலோசித்து, அங்கீகரித்த அல்லது தீர்மானித்த மனித செயல்கள் எவையும் நன்மையை உண்டாக்குபவையாகவே காணப்படுகின்றன. எனினும், பொய் பேசுவது எப்போதும் பாவம் நிறைந்ததாகும்[7].(21) ஒரு பெண்ணானவள், தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவனைத் தவிர வேறு ஒருவனிடம் தன் கரத்தைக் கொடுத்தால், {அவ்வாறு} மனைவியாகும் அந்தப் பெண், அவளுக்குப் பிறக்கும் மகன்கள், ரித்விஜர்கள், ஆசான்கள் {குருமார்}, சீடர்கள், அந்தத் திருமணத்தின் போது உள்ள உபாத்யாயர்கள் அனைவரும் பாவக்கழிவு {பிராயச்சித்தம்} செய்ய வேண்டியவர்களாகிறார்கள். அத்தகைய நடத்தைக்குப் பாவக்கழிவேதும் செய்ய வேண்டியதில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.(22) மனு, ஒரு பெண் தான் விரும்பாத ஒருவனுடன் வாழும் நடைமுறையை மெச்சவில்லை[8]. அவள் விரும்பாத ஒருவனுடன் மனைவியாக வாழ்வது இழுக்குக்கும், பாவத்திற்கும் வழிவகுக்கும். பின்வரும் வழக்குகள் எதனிலும் எவனும் அதிகப் பாவமீட்டுவதில்லை.(23) திருமணத்திற்காக ஒரு பெண் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படும் போது, பெண்ணின் உறவினர்கள் மூலம் உரிய சடங்குகளுடன் அப்பெண்ணானவள் கடத்தியவனுக்கே கொடுக்கப்படும் காரியத்திலும், மணக்கொடை கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் காரியத்திலும் பெரும் பாவமேதும் இல்லை.(24)
[7] "இந்த ஸ்லோகம் புரிந்து கொள்ள மிகக் கடினமானதாக இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது சூழ்நிலைகளில் பெண்ணைக் கொடுப்பவன் எந்தப் பாவத்தையும் ஈட்டுவதில்லை. இரண்டாம் தருணத்தில், (தான் உறுதியளித்தவனுக்கில்லாமல் வேறு ஒருவனுக்குத் தன்) பெண்ணைக் கொடுப்பவன் குற்றவாளியாகிறான். எனினும் மனைவி என்ற நிலையானது, மணக்கொடை உறுதி அளித்தவனுக்கு வெறுமனே அவன் அளித்த உறுமொழிக்காகக் கொடுக்கப்பட முடியாது. கணவன் மனைவி என்ற உறவுமுறை உண்மையான திருமணத்தின் மூலமே எழுகிறது. உறவினர்கள் சேர்ந்து, "இந்தப் பெண் இவனுடைய மனைவியாவாள்" என்று உரிய சடங்குகளுடன் சொன்னால் அத்திருமணம் நிறைவடைகிறது. பெண்ணைக் கொடுப்பவன், தான் உறுதியளித்த மனிதனுக்கே அவளைக் கொடுக்காததால் மட்டுமே பாவத்தை ஈட்டுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மானிடலோகத்தில் மந்திரங்களுடன் ஸங்கல்பித்துச் செய்த எந்த ஒரு கருமம் நல்ல கதிக்குரியதாகக் காணப்படுகிறதோ அதில் பொய் சொல்வது பாதகமாகும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "மனிதர்கள் தங்கள் நிலையில் இருக்கும் வரை, மந்திரங்களுடனோ, மந்திரங்களில்லாமலோ அவர்கள் செய்யும் எந்தச் செயலும் நன்மையையே கொடுக்கும். எனினும், பொய் சொல்வது கொடும்பாவமாகும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஒரு கன்னிகை கொடுக்கப்படுவாள் என்ற உறுதிமொழியிருந்து, அதை மீறினால் அது கொடும்பாவமாகும்" என்றிருக்கிறது.[8] "எனவே, அத்தக்கைய ஒருவனை மணந்து கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தாலும், அவனைக் கைவிட்டு, தான் விரும்பும் மற்றொருவனை மணந்து கொள்ளும் சுதந்திரம் அவளுக்கு இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பெண்ணின் உறவினர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்த பிறகே மந்திரங்களும், ஹோமங்களும் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மந்திரங்களே உண்மையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. உறவினர்களால் கொடுக்கப்படாத ஒரு பெண்ணின் வழக்கில் சொல்லப்படும் மந்திரங்களும், செய்யப்படும் ஹோமங்களும் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை.(25) ஒரு பெண்ணின் உறவினர்கள் மூலம் செய்யப்படும் ஏற்பாடுதான் கட்டமைப்புடன் கூடியதும், புனிதமிக்கதும் ஆகும் என்பதில் ஐயமில்லை. மந்திரங்களின் துணையுடன் திருமணம் செய்து கொடுப்பவர் மற்றும் திருமணம் செய்து கொள்பவர் ஆகியோர் செய்து கொள்ளும் ஏற்பாடு (கணவன் மனைவி என்ற உறவுமுறையை உண்மையில் உண்டாக்குவதால் இந்த ஏற்பாடே) மிகப் புனிதமானதாகும்.(26) சாத்திரவிதிகளின்படி, ஒரு கணவன், தன் முற்பிறவி செயல்கள், அல்லது கடவுளால் விதிக்கப்பட்டதன் விளைவாக அடைந்த உரிய உடைமையாகத் தன் மனைவியைக் கருத வேண்டும். எனவே, உறவினரால் மற்றொருவனுக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்பதன் மூலமோ, எந்தப் பெண்ணுக்காக மற்றொருவனிடம் இருந்து அவர்கள் {உறவினர்கள்} மணக்கொடை பெற்றார்களோ, அந்தப் பெண்ணைத் தன் மனைவியாக ஏற்பதன் மூலமோ ஒருவன் எந்தப் பழியையும் ஈட்டுவதில்லை" என்றார் {பீஷ்மர்}.(27)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கான மணக்கொடையை {ஒருவனிடமிருந்து} பெற்ற பிறகு, தகுதிமிக்கவனும், சரியான விகிதங்களில் முத்தொகையை {அறம், பொருள் மற்றும் இன்பத்தைக்} கொண்டவனுமான மற்றொருவன் அவளது கரத்தைப் பெற முன்வந்தால், அந்தத் தகுதிமிக்கவனை ஏற்பதற்காக, {ஏற்கனவே} மணக்கொடை அளித்தவனை மறுப்பதன் மூலம் அந்தப் பெண்ணின் தந்தை பழியை ஈட்டுவானா?(28) இத்தகைய வழக்கில், பெண்ணைக் கொடுப்பதாக உறுதிமொழி அளித்துவிட்டு அவனை மறுப்பது மதிப்பிற்குரியதாகாது, அதே வேளையில் (மிகவும் தகுதி வாய்ந்த ஒருவனுக்குத் தன் மகளை அளிக்க வேண்டும் என்ற கடமையைக் கருத்தில் கொள்ளும்போது) தகுதிமிக்க ஒருவனை மறுப்பதும் ஒருபோதும் நன்மையைத் தராது என்பதால், இவ்விரண்டு நிலைகளும் குற்றம் நிறைந்தவையாகவே தெரிகின்றன. நான் கேட்கிறேன், அந்தத் தந்தை என்ன செய்தால் நன்மை செய்தவனாகச் சொல்லப்படுவான்? கடமைகள் அனைத்திலும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கையாக நமக்கு இது தெரிகிறது.(29) உண்மையை உறுதி செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். உண்மையில், நீரே எங்கள் கண்களாவீர். இதை நீர் எங்களுக்கு விளக்குவீராக. நீர் சொல்வதைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை" என்றான்.(30)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மணக்கொடையானது {கன்யாசுல்கம்} அப்பெண்ணை மனைவியின் நிலையை அடையச் செய்யாது. அதை {மணக்கொடையைச்} செலுத்தும் மனிதனும் இதை நன்கறிவான். அவன் அந்தப் பெண்ணுக்கான விலையாகவே அதைச் செலுத்துகிறான். மேலும், பிறர் கொடுக்கும் மணக்கொடைகளுக்காக நல்லோர் ஒருபோதும் தங்கள் மகள்களை அவர்களுக்கு அளிக்கமாட்டார்கள்.(31) திருமணத்தை விரும்பும் மனிதன் {முதுமை முதலிய} விரும்பாத குணங்களைக் கொண்டிருக்கும்போதே, பெண்ணின் உறவினர்கள் அவனிடம் மணக்கொடையைக் கோருகின்றனர். எனினும், ஒருவனுடைய சாதனைகளால் கவரப்பட்டு, "நீ என் மகளைத் தங்கம் மற்றும் ரத்தின ஆபரணங்களாக முறையாக அலங்கரித்து, அவளைத் திருமணம் செய்து கொள்வாயாக" என்று சொல்லும் மனிதனும்,(32) இந்த வேண்டுகோளுக்கு இணங்கும் மனிதனும், உண்மையில் இத்தகைய பரிமாற்றத்தால் விற்பனையில் ஈடுபடவில்லை என்பதால், அவர்களை மணக்கொடை கொடுத்தவர்களாகவோ, பெற்றவர்களாகவோ சொல்ல முடியாது. (அன்பினாலும், பாசத்தினாலும் கொடுக்கப்படும்) கொடைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மகளை அளிப்பது நித்திய நடைமுறையே.(33) திருமணக் காரியங்களில் சில தந்தைமார், "இத்தகைய, இத்தகைய மனிதனுக்கு நான் என் மகளை அளிப்பேன்" என்று சொல்கிறார்கள்; சிலர், "இத்தகைய ஒருவனுக்கு என் மகளை அளிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்; மேலும் சிலர், "இத்தகைய ஒருவனுக்கே நான் என் மகளை அளிப்பேன்" என்று உணர்ச்சித்துடிப்புடன் சொல்கிறார்கள்.(34)
இத்தகைய அறிவிப்புகள் உண்மையில் திருமணமாகாது. கன்னிகையரின் கரங்களுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் வேண்டுவது (உறுதிமொழி கொடுப்பதும், பின்வாங்குவதும்) காணப்படுகிறது. உரிய சடங்குகளுடன் உண்மையில் கரங்களை ஏற்காதவரையில் திருமணம் நடந்ததாகச் சொல்ல முடியாது. கன்னிகையரைப் பொறுத்தவரையில், பழங்காலத்தில் மருத்துகளால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வரம் இதுவேன் என்று நாம் கேள்விப்படுகிறோம்[9].(35) மனிதர்கள் மிகத் தகுந்தவர்களாக இல்லாதவரையில் அவர்களுக்குக் கன்னிகையரை அளிக்கக்கூடாது என மனிதர்கள் அனைவருக்கும் முனிவர்கள் ஒரு கட்டளையை விதித்திருக்கின்றனர். ஒரு மகள் என்பவள், ஆசை மற்றும் இடையுறவு வழித்தோன்றல்களின் வேராக இருக்கிறாள். இதையே நான் நினைக்கிறேன்[10].(36) மகளை விற்பது மற்றும் வாங்குவது என்ற நடைமுறை மனிதர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக இருக்கிறது. இந்நடைமுறைக்கு இத்தகைய பரிச்சயம் இருக்கும் விளைவால், கவனமிக்க ஆய்வில் அதில் எண்ணற்ற குற்றங்களை உன்னால் கண்டுபிடிக்க முடியும். மணக்கொடை கொடுப்பது, அல்லது ஏற்பது என்பவை மட்டுமே கணவன் மற்றும் மனைவி என்ற நிலையை உண்டாக்குவதாக ஒருபோதும் கருத முடியாது. இது குறித்து நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக.(37)
[9] "இந்த வரத்தின் விளைவால், மிகத் தகுதிவாய்ந்த கணவனைப் பெறும் நோக்கில் தன் மகளை அளிப்பதாகச் சொன்ன உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கும் ஒருவன் எந்தப் பாவத்தையும் ஈட்டியவனாகான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "எனவே, தகுதியில்லாத ஒருவனுக்கு எவனும் தன் மகளை அளிக்கக்கூடாது. ஏனெனில், அத்தகைய திருமணத்தின் மூலம் உண்டாகும் வாரிசுகள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் அத்தகைய திருமணமானது பெண்ணின் தந்தையையோ, உறவினர்களையோ ஒருபோதும் மகிழ்ச்சியடையச் செய்யாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முன்பொரு காலத்தில், மாகதர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள் அனைவரையும் வீழ்த்தி, விசித்திரவீரியனுக்காக இரு கன்னிகைகளை {அம்பிகை, அம்பாலிகை மற்றும் அம்பை ஆகிய மூவரை} நான் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தேன்.(38) அந்தக் கன்னிகையர் இருவரில் ஒருத்தி {அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய இருவரும்} உரிய சடங்குகளுடன் திருமணம் செய்யப்பட்டாள்[11]. மற்றொரு கன்னிகை {அம்பை} களத்தில் வீரம் என்ற வடிவில் மணக்கொடை கொடுக்கப்பட்டவள் ஆதலால் முறையாக மணக்கப்படவில்லை. குருகுலத்தைச் சேர்ந்தவரும் என் தந்தையின் சகோதரருமான மன்னர் பாஹ்லீகர், இவ்வாறு கொண்டு வரப்பட்ட கன்னிகை உரிய சடங்குகளுடன் மணக்கப்படவில்லையெனில் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்று சொன்னார். எனவே, அந்தக் கன்னிகையை முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ளும்படி விசித்திரவீரியனுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.(39) என் தந்தையின் {தந்தையின் சகோதரரான பாஹ்லீகரின்} சொற்களில் ஐயம் கொண்டு நான் பிறரிடம் கருத்துக் கேட்டேன். அறநெறி குறித்த காரியங்கள் என் தந்தை {பாஹ்லீகர்} அதீத கவனத்துடன் இருந்தார் என நான் நினைத்தேன்.(40)
[11] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "அம்பாலிகை, அம்பிகை இருவரும் ஒருவகைக் குணம் பற்றி ஒன்றாகச் சொல்லப்பட்டனர்" என்றும், "பீஷ்மர் ஜயித்துக் கொணர்ந்தமையால் அம்பைக்குச் சுல்கமாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது" என்றும் இருக்கிறது.
ஓ! மன்னா, பிறகு திருமணம் குறித்த காரியங்களில் அறவோரின் நடைமுறை என்ன என்பதை அறியும் விருப்பத்தில் நான் என் தந்தையிடமே சென்று, இந்தச் சொற்களைச் சொன்னேன்: "ஓ! தந்தையே {தந்தையின் சஹோதரரான பாஹ்லீகரே}, அறம்சார்ந்த மக்களின் நடைமுறைகள் என்ன என்பதை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்டேன். என் ஆவலும் ஊக்கமும் அதிகமாக இருந்ததால் என் விருப்பத்தை நான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தினேன்.(41) நான் இச்சொற்களைச் சொன்னதும், அறவோரில் முதன்மையானவரும், எனக்குத் தந்தை முறையுமான பாஹ்லீகர்,(42) "உண்மையில் உரிய சடங்குகளுடன் கன்னிகையின் கரத்தைப் பற்றாமல், மணகொடைக் கொடுப்பது மற்றும் ஏற்பதால் கணவன் மனைவி என்ற நிலை அடையப்படுவதாக நீ கருதினால், (மணக்கொடை அளித்தவனுடன் தன் மகளைச் செல்ல அனுமதிப்பதன் மூலம்) அந்தக் கன்னிகையின் தந்தையானவன் தன் குல நடைமுறையைப் பின்பற்றுவதாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளலாமேயன்றி சாத்திர நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் சாத்திரங்களை இதையே அறிவிக்கின்றன.(43) அறநெறி மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள், உரிய சடங்குகளுடன் கரத்தைப் பற்றாமல், மணக்கொடை கொடுப்பது மற்றும் ஏற்பதில் கணவன் மனைவி என்ற நிலை ஏற்படுகின்றது என்று சொல்பவர்களின் சொற்களை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(44)
ஒரு தந்தையால் அவனது மகள் கொடுக்கப்படும்போது (உரிய சடங்குகளுடன் அவளைக் கணவன் ஏற்றுக் கொள்ளும்போது) தான் கணவன் மற்றும் மனைவி என்ற நிலை ஏற்படுகிறது என்பது நன்கறியப்பட்ட சொலவடையாகும். விற்பனை அல்லது கொள்முதலின் மூலம் கன்னிகையர் மனைவி என்ற நிலையை அடைய முடியாது. விற்பனை, மணக்கொடை ஆகியவற்றின் மூலம் அத்தகைய நிலையை அடைவதாகக் கருதுவோர் நிச்சயம் சாத்திரங்களை அறிந்தோரல்ல.(45) எவரும் தம் மகளை இத்தகைய மனிதர்களுக்கு அளிக்கக்கூடாது. உண்மையில், அவர்கள் அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபர்கள் அல்ல. ஒரு மனைவியானவள் ஒருபோதும் விலைக்கு வாங்கப்படக்கூடாது. அதே போல் ஒரு தந்தையும் தன் மகளை விற்பனை செய்யக்கூடாது.(46) பேராசையால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களைப் பணிப்பெண்களாக அவர்களை அடிமைகளாக விற்பவர்களும், வாங்குபவர்களும் மட்டுமே, மணக்கொடை கொடுப்பது மற்றும் பெறுவதன் மூலம் மனைவி என்ற நிலை அடையப்படுவதாகக் கருதுகிறார்கள்.(47)
ஒரு சந்தர்ப்பத்தில் இதே காரியம் குறித்துச் சில மக்கள் இளவரசன் சத்யவானிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டனர். {அவர்கள்}, "கன்னிகையின் உறவினரிடம் மணக்கொடை கொடுப்பவன் திருமணத்திற்கு முன்பே மாண்டு போனால்,(48) வேறொருவன் அந்தக் கன்னிகையின் கரத்தைப் பற்றித் திருமணம் செய்து கொள்ளலாமா? இக்காரியத்தில் எங்களுக்கு ஐயம் இருக்கிறது. நீ பெரும் ஞானம் கொண்டவனாக இருப்பதாலும், ஞானிகளால் மதிக்கப்படுவதாலும் எங்களுடைய இந்த ஐயங்களை அகற்றுவாயாக.(49) வாய்மை கற்க விரும்பும் எங்களுக்கு நீ பார்வைப் புலனாக {கண்களாக} இருப்பாயாக" {என்று கேட்டனர்}. இளவரசன் சத்யவான், இச்சொற்களைச் சொன்னவர்களிடம்,(50) "கன்னிகையின் உறவினர்கள், எவனைத் தகுந்தவனாகக் கருதுகிறார்களோ அவனுக்கே அவளை அளிக்க வேண்டும். இதில் எத்தயக்கமும் வேண்டியதில்லை. மணக்கொடை அளித்தவன் உயிருடன் இருந்தாலே அறவோர் இவ்வழியில் செயல்படுவார்கள் எனும்போது, கொடை கொடுத்தவன் இறந்திருந்தால் இக்காரியத்தில் சிறு ஐயமும் கொள்ள வேண்டியதில்லை.(51) கணவன் இல்லாததாலோ, அவன் மாண்டுவிட்டதாலோ உண்மையில் பாலினக்கலவி மூலம் மணவுறவு ஏதும் நிகழாமல் கன்னி மனைவியாகவோ, விதவையாகவோ உள்ள ஒருத்தியை, அவளுடைய கணவனுடைய தம்பி, அல்லது அத்தகைய பிற உறவினருடன் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். மணவுறவுக்கு முன்பே கணவன் இறந்த கன்னி விதவையானவள் தன்னை அவனது தம்பியிடம் ஒப்படைக்கலாம் அல்லது தவப்பயிற்சிகளில் ஈடுபடலாம்.(52)
கணவனின் தம்பி அல்லது அத்தகைய உறவினர், இவ்வாறு விதவையானவளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலரோ, இத்தகைய நடத்தை பரவலாக இருந்தாலும், சாத்திய விதியின் படி இல்லாமல் ஆசையில் இருந்து எழுந்ததாகவே இருக்கிறது என்கின்றனர். அவ்வாறு சொல்பவர்கள், மற்றொருவனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மற்றும் ஏற்கப்பட்ட மணக்கொடையை அலட்சியம் செய்து, அவளை எந்தத் தகுந்தவனுக்கும் அளிக்க ஒரு கன்னிகையின் தந்தைக்கு உரிமையுண்டு என்ற தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.(53) கன்னிகையின் கரத்தைக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு, திருமணத்திற்கு முன்பான தொடக்கச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தாலும், வாக்களிக்கப்பட்டவனுக்கல்லாமல் அந்தக் கன்னிகையை வேறு ஒருவனுக்கும் கொடுக்கலாம். கொடையளிப்பவனே பொய்மையின் பாவத்தை ஈட்டுகிறான்; எனினும், மனைவி என்ற நிலையைப் பொறுத்தவரையில் இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.(54) திருமண மந்திரங்கள் ஏழாவது அடியிலேயே பிரிக்க முடியாத திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் நீர்க்கொடையுடன் ஒருவனுக்கு அளிக்கப்படும்போதே அந்தக் கன்னிகை அவனது மனைவியாகிறாள்[12].(55) கன்னிகைகளைக் கொடையளிப்பது {கன்னிகாதானம் செய்வது} பின்வரும் வழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞானிகள் இதை நிச்சயம் அறிவார்கள். மேன்மையான பிராமணன் ஒருவன், விருப்பமுள்ளவளும், தன் குடும்பத்திற்கு இணையான தூய்மையும், நிலையும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவளும், சகோதரனால் கொடுக்கப்படுபவளுமான ஒரு கன்னிகையை மணக்க வேண்டும். அத்தகைய பெண்ணையும், நெருப்பின் முன்னிலையில் வைத்து, உரிய சடங்குகளுடன், வழக்கமான எண்ணிக்கையில் தன்னை வலம்வரச் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றான் {சத்தியாவன்}" என்றார் {பீஷ்மர்}.(56)
[12] "வலம் வருவது திருமணத்தின் மிக முக்கியச் சடங்காகும். பெண்ணானவள் மணமகனைச் சுற்றிலும் அவளது உறவினர்களால் சுமக்கப்படுகிறாள். முன்பெல்லாம் அவள் தானே நடப்பதே வழக்கம். மேலும் கொடைகள் அனைத்தும் நீரைக் கொண்டே கொடுக்கப்படுகின்றன. ஒரு பொருள் கொடுக்கப்படும்போது கொடையாளி ஒரு மந்திரத்தைச் சொல்லி, அதன் மேல் குசப்புற்களின் நுனையில் இருந்து நீர்த்துளிகளைத் தெளிக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |