Inheritance! | Anusasana-Parva-Section-45 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 45)
பதிவின் சுருக்கம் : மணக்கொடை கொடுக்கப்பட்ட கன்னிகைக்குக் கணவனில்லாத போது செய்ய வேண்டிய விதியும், பெண்களுக்கு உரிய தாய்ப்பாகம் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்], "ஒரு மனிதன், ஒரு கன்னிகைக்காக மணக்கொடையைக் கொடுத்த பிறகு சென்றுவிட்டால் {காணாமல் போய்விட்டால்}, அந்தக் கன்னிகையின் தந்தையோ, அவளை {பிறருக்குக்} கொடுக்கத்தகுந்த வேறு உறவினரோ எவ்வாறு செயல்பட வேண்டும்?[1] ஓ பாட்டா, அதனை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுல்கம் கொடுத்தவன் தேசாந்தரம் சென்றிருந்து, அவனுக்குப் பயந்து வேறு யாரும் கன்னிகையை வரியாமலிருந்தால் தகப்பன் செய்ய வேண்டியதென்னவென்பது கேள்வியின் கருத்து" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அத்தகைய கன்னிகை, மகனற்றவனும், வளமிக்கவனுமான ஒரு தந்தையின் மகளாக இருந்தால், (மணக்கொடை அளித்தவன் திரும்பட்டும் என்ற நோக்கில்) அந்தத் தந்தையே அவளைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், அந்தத் தந்தை அந்த மணக்கொடையைக் கொடுத்தவனின் உறவினர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில், அந்தக் கன்னிகை மணக்கொடை கொடுத்தவனுக்கு உரியவள் என்றே கருதப்பட வேண்டும்.(2) அவள், (கொடையளித்தவன் இல்லாதபோதும்) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எதனைக் கொண்டும் அவனுக்காக {கொடையளித்தவனுக்காக} வாரிசை உண்டாக்கலாம். எனினும், முறையான சடங்குகளுடன் அவளை மணந்து கொள்ளத் தகுந்தவன் வேறு யாரும் கிடையாது.(3) பழங்காலத்தில், தந்தையால் ஆணையிடப்பட்ட இளவரசி சாவித்ரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்திருந்தாள். அவளுடைய இச்செயல் சிலரால் மெச்சப்படுகிறது; ஆனால் சாத்திரங்களை அறிந்த பிறர் இதைக் கண்டிக்கின்றனர்.(4) அறவோரான வேறு சிலர் இவ்வழியில் செயல்படுவதில்லை. வேறு சிலர், அறவோரின் நடத்தையே, கடமை அல்லது அறநெறிக்கான முதன்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்[2].(5)
[2] "எனவே, தந்தையின் ஆணையின் பேரில் சாவித்ரி செய்தது கடமை அல்லது அறநெறியின் போக்குக்கு எதிரானதாகாது. பர்துவான் மொழிபெயர்ப்பாளர் இந்த இரண்டாம் வரியைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதே வேளையில் கே.பி.சிங்கா இதை முழுமையாகத் தவிர்த்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், சாவித்ரி குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. "தகப்பனிடத்திலேயே அந்தக் கன்னிகையைக் கேட்க அவன் கட்டளையினால் அவள் அதை ஒத்துக் கொண்டவள். தர்மந்தெரிந்த சிலர் அந்தப் பிதா செய்த காரியத்தை ஒப்புக் கொள்ளுகின்றனர்; மற்றும் சிலர் ஒப்புவதில்லை. சில யோக்கியர்கள் இப்படிச் செய்யவில்லை; மற்றும் சிலர் ஒரு காலத்தில் செய்துமிருக்கின்றனர். ஸாதுக்களுடைய ஆசாரந்தான் தர்மத்தையறியும் வகைகளில் மிகச் சிறந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "எனினும், இக்காரியத்தில் எம்மனிதனும் மந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. சாவித்ரி தன் தந்தையின் அறிவுரையின் பேரில் தானே இதைச் செய்திருக்கிறாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "தன் தந்தையான அஸ்வபதியின் அறிவுரையின் பேரில் சாவித்ரியானவள் சத்யவானைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்" என்றிருக்கிறது.
விதேஹர்களின் ஆட்சியாளனான உயர் ஆன்ம ஜனகனின் பேரனான சுக்ரது, இக்காரியத்தில் பின்வரும் கருத்தை அறிவித்தான்:(6) {சுக்ரது}, "பெண்கள், தங்கள் வாழ்வின் எக்காலத்திலும் விடுதலையை அனுபவிக்கத் தகுந்தவர்களில்லை என்ற நன்கறியப்பட்ட சாத்திரங்களின் தீர்மானம் இருக்கிறது. இஃது அறவோர் நடக்கும் பாதையாக இல்லாதிருந்தால், இந்தச் சாத்திரத் தீர்மானம் எவ்வாறு இருக்கும்? எனவே, அறவோரைப் பொறுத்தவரையில், இக்காரியத்தில் அவர்களுக்குக் கேள்வி என்றோ, ஐயம் என்றோ ஏது இருக்க முடியும்? வேறுவகையில் நடக்கத் தீர்மானிக்கும் மக்கள் எவ்வாறு அந்தத் தீர்மானத்தைக் கண்டிப்பார்கள்?[3](7) நித்திய வழக்கில் இருந்து அறமற்ற வகையில் தவறுதலே அசுரர்களின் நடைமுறையாகக் கருதப்படுகிறது. இத்தகையை நடைமுறையைப் பழங்கால ஒழுக்கமுறையில் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை[4].(8) (விதியால் பெறப்படுவதும், அதன் காரணமாக, சாத்திரத் தீர்மானங்களில் உள்ள ஈர்ப்பின் துணையால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடியதுமான) கணவன், மனைவி என்ற உறவுமுறை மிக நுட்பமானதாகும். இஃது, ஆண் பெண் பாலியல் இன்ப விருப்பத்தை மட்டுமே உள்ளடக்கிய இயற்கை உறவுமுறையில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்" {என்றான் சுக்ரது}. ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னனால் {சுக்ரதுவால்} சொல்லப்பட்டது இதுவே[5]" என்றார் {பீஷ்மர்}.(9)
[3] "இந்த ஸ்லோகம் புரிந்து கொள்ள மிகக் கடினமானதாக இருக்கிறது. எனவே, புரிந்து கொள்ளும் வகையில் சற்றை நான் அதை விரித்திருக்கிறேன்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "தர்மஸ்ய என்பது உண்மையான, சரியான, அல்லது நித்தி ஆரிய வழக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்களுக்குச் சுதந்திரமளிப்பது ஓர் அசுர நடைமுறையாகும் என்பதே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "எனவே, எவரும் ஆசையால் வழிநடத்தப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கன்னிகையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் அனுமதிக்கக்கூடாது. அவள் உடல் இன்பம் தொடர்புடைய முறையற்ற கருத்துகளால் தன் தேர்வை செய்யக்கூடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், சுக்ரதுவின் பேச்சு முழுவதும், "அயோக்கியர்களால் அனுஷ்டிக்கப்பட்ட வழியைப் பற்றிச் சொல்வதும், கேட்பதும், ஸந்தேகப்படுவதும் எப்படிக் கூடும்? யோக்கியர்களுடைய மார்க்கத்தையே இப்படிப்பட்டதென்று கண்டறிய வேண்டும் ஆஸுர விவாகத்தினால் கன்னிகையைக் கொடுப்பதென்னும் தர்மமானது தர்மத்திற்கு விரோதந்தான். முந்தினவர்கள் செய்த காரியத்திலும் இந்த விஷயத்தை நாம் கேட்டிலம். மனைவி, கணவன் என்னும் ஸம்பந்தமானது பெண் ஆண் இருவருக்கும் ஒன்றுதான். சேர்க்கையின்பமும், தர்மமும் இருவருக்கும் ஒன்றுதான்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில் சுக்ரதுவின் பேச்சு முழுவதும், "தீயோரால் பின்பற்றப்படும் பாதையின் நடத்தையை ஒருவனால் எவ்வாறு புகழ முடியும்? அறவோரின் ஒழுக்கம் குறித்து எந்தக் கேள்வியோ, ஐயமோ இருக்க முடியாது. தீயோரின் தர்மம், அசுரர்களின் தர்மத்தோடு சேர்த்துக் குழப்பப்படுகிறது. நமக்கு முன்பு இருந்தோரின் வாழ்வுகளில் இது போன்ற எதையும் நாம் கேள்விப்பட்டதில்லை" என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போலப் பெண் சுதந்திரம் குறித்த செய்தி ஏதும் கும்பகோணம் பதிப்பிலும் இல்லை, பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை.
யுதிஷ்டிரன், "மனிதர்களின் செல்வமானது, (அவர்களுக்கு மகள்கள் இருக்கும்போது, பிறரால்) எந்த அதிகாரத்தின் பேரில் மரபுரிமையாகப் பெறப்படுகிறது? மகளானவள், அவளது தந்தையைப் பொறுத்தவரையில் மகனைப் போலவே கருதப்பட வேண்டும்" என்றான்.(10)
பீஷ்மர், "மகன் என்பவன் தன் சுயத்தைப் போன்றவனாவான், மகளும் ஒரு மகனைப் போன்றவள்தான். எனவே, ஒருவன் தன் மகளின் வடிவில் வாழும்போது, வேறு எவராலும் அவனது செல்வத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும்? தாயின் யௌதுக உடைமை {சீர்வரிசை} என்று அழைக்கப்படும் செல்வம் எதுவும் {தாயின் ஸ்த்ரீதனமெல்லாம்}, கன்னிகையான மகளின் பங்காகிறது. தாய்வழி பாட்டனானவன், மகன்கள் இல்லாமல் இறந்தால், மகளின் மகனே அதை மரபுரிமையாகப் பெற வேண்டும்.(12) மகளின் மகன், தன் தந்தைக்கும், தன் தாயின் தந்தைக்கும் பிண்டங்களை அளிக்கிறான். எனவே, நீதியின் கருத்துக்கிணங்க மகனுக்கும், மகளின் மகனுக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.(13) ஒரு மனிதன் ஒரு மகளை மட்டுமே பெற்றிருந்து, அவளே மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைப் பெற நேர்ந்தால், அத்தகைய மகன் (தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக) மரபுரிமையை அந்த மகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்[6]. மேலும், ஒரு மனிதன் ஒரு மகளைப் பெற்றிருந்து, அவள் மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டாலும், விலைக்கு வாங்கினாலும், அப்போது அந்த மகளே அத்தகைய மகனைவிட மேன்மையானவளாகக் கருதப்படுவாள் (அப்போது அவள் தன் தந்தையின் செல்வத்தில் {ஐந்தில்} மூன்று பங்கையும், அந்த மகன் இரண்டு பங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும்).(14)
[6] "இந்தச் சூழ்நிலையில் உடைமைகளை ஐந்து பாகங்களாகப் பிரித்து, இரண்டு பாகங்களை மகளும், மூன்று பாகங்களை மகனும் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பின் வரும் வழக்கில், மகளுடைய மகனின் நிலையானது, ஒருவனுடைய மகளின் மகன்களுடன் {உண்மையில்} ஏன் தொடர்புப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. தந்தையால் விற்கப்பட்ட மகளைக் குறித்ததே அவ்வழக்கு. உண்மையாகத் தந்தையால் விலைக்கு விற்கப்பட்ட மகளுக்குப் பிறந்த மகன்கள், (அவர்களுடைய தந்தை தானே அவர்களைப் பெறாமல், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிறர் மூலம் சந்ததியைப் பெற்றிருந்தாலும்) அவர்களின் தந்தைக்கே முற்றிலும் உரியவர்கள் ஆவர். அத்தகைய மகன்கள், தங்கள் தாய் விலைக்கு விற்கப்பட்டதன் விளைவால் தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழப்பதால், அவர்கள் தங்கள் தாய்வழி பாட்டனுக்கு மகள்களின் பிள்ளைகளாக ஒருபோதும் கருதப்படமாட்டார்கள்[7].(15) மேலும் அத்தகைய மகன்கள், வன்மம் நிறைந்தவர்களாகவும், அறமற்ற ஒழுக்கம் கொண்டவர்களாகவும், அடுத்தவரின் சொத்துகளை அபகரிப்பவர்களாகவும், வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆசுரம் என்றழைக்கப்படும் பாவம் நிறைந்த திருமண வகையில் பிறந்த பிள்ளைகள் நடத்தையில் தீமையானவர்கள் ஆகின்றனர்.(16)
[7] பிபேக்திப்ராயின் பதிப்பில், "தந்தையால் விற்கப்பட்ட மகளின் வழக்கில், அந்த மகளின் மகன்கள் மரபுரிமையைப் பெற அனுமதிப்பதில் எந்தத் தர்மத்தையும் நான் காணவில்லை. அத்தகைய மகன்கள் தீமையானவர்கள், அதர்மத்திற்கு அடிமையானவர்கள்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "விக்கிரயம் செய்யப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் அவள் தந்தையைச் சேர்ந்தவர்களாகவே ஆகின்றனர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் நேரெதிரான கருத்துச் சொல்லப்படுகிறது.
பழங்கால வரலாறுகளை அறிந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அவற்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் உறுதியானவர்களுமான மனிதர்கள், இது தொடர்பாகப் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட சுலோகங்களைச் சொல்கின்றனர்.(17) யமன் பாடியது இதுவே. "தன் மகளை விற்றதன் மூலம் எவன் செல்வமீட்டுவானோ, அல்லது தன் வாழ்வாதாரத்திற்காக மணக்கொடையை ஏற்ற பிறகு எவன் தன் மகளை அளிக்கிறானோ,(18) அவன் காலஸம் {காலஸூத்ரம்} என்ற பெயரில் அறியப்படும் பயங்கரமான ஏழு நரகங்களில் அடுத்தடுத்து மூழ்குவான். அங்கே அந்த இழிந்தவன், முழு நேரமும் வியர்வையையும், சிறுநீரையும், மலத்தையும் உண்டு கொண்டிருப்பான்" {என்பதே யமன் பாடிய ஸ்லோகம்}.(19)
ஆர்ஷம் என்றழைக்கப்படும் திருமண வகையில், திருமணம் செய்து கொள்ளும் ஒருவன், கன்னிகையின் தந்தைக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையாக அளிக்க வேண்டும். சிலர் இந்தக் கொடையை மணக்கொடையாக (அல்லது விலையாக) கருதுகின்றனர், அதே வேளையில், அஃதை அவ்வாறு கருதக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். எனினும், ஓ மன்னா, அத்தகைய ஒரு நோக்கத்திற்காகக் கொடுக்கப்படும் கொடையானது, சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது மணக்கொடையாகவோ, விலையாகவோ கருதப்படும், அத்தகைய சூழ்நிலையில் மகளை அளிப்பது விற்பனையாகவே பார்க்கப்படும் என்பதே உண்மையான கருத்தாகும்.(20) சில மனிதர்களால் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், இதை ஒருபோதும் நித்திய வழக்கமாகக் கொள்ள முடியாது. உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற பிறகு அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வேறு திருமண வடிவங்களும் மனிதர்களால் செய்யப்படுகின்றன.(21) ஒரு கன்னிகையைப் பலத்தால் ஒடுக்கி அவளுடன் பாலினக் கலவியில் ஈடுபடும் மனிதர்கள், பாவமிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருள் நிறைந்த நரகத்தில் மூழ்குவார்கள்[8].(22) குருதியுறவு இல்லாத மனிதன் எவனும் விற்பனைக்குரியவனாக மாட்டான். அவ்வாறிருக்கையில் ஒருவனுடைய சந்ததியைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் அடையப்படும் செல்வத்தைக் கொண்டு, புண்ணியத்திற்கு வழிவகுக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாது" என்றார் {பீஷ்மர்}.(23)
[8] கும்பகோணம் பதிப்பில், "அநேகர் லோகத்தினால் பிரவிருத்திப்பதைக் காண்கிறோம். தம் வசத்திலுள்ள சிறுமியைப் பலவந்தமாக அனுபவிப்பவரும் பாவம் செய்பவர்கள். அவர்கள் குருட்டிருள் என்னும் நரகத்தில் விழுந்து கிடக்கின்றனர்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |