Honour women! | Anusasana-Parva-Section-46 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 46)
பதிவின் சுருக்கம் : பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, "பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். "எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது" {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)
[1] "அந்தக் கன்னிகையே நேரடியாக ஆபரணங்களை ஏற்றுக் கொள்ளலாம். அஃது இந்தப் பரிவர்த்தனையை விற்பனையாக மாற்றிவிடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலோ, இத்தகைய விருப்பமின்மை மற்றும் இன்பமில்லாமையால் {அவள்} அவனை மகிழ்ச்சியடையச் செய்யத் தவறினாலோ, அந்தக் கணவன் தன் குலத்தைப் பெருக்க ஒருபோதும் சந்ததியைப் பெறக்கூடாது.(4) ஓ! மன்னா, பெண்கள் எப்போதும் வழிபடப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தேவர்களே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(5) எங்கே பெண்கள் வழிபடப்படவில்லையோ, அங்கே செயல்கள் அனைத்தும் கனியற்றவையாகின்றன. ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள், தாங்கள் நடத்தப்படும் விதத்தால் துன்பத்தை அடைந்து கண்ணீர் விட்டால், அந்தக் குடும்பம் விரைவில் அழிந்து போகும்.(6)
பெண்களால் சபிக்கப்படும் வீடுகள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப்பட்டதைப் போல அழிந்து, நிர்மூலமடையும். அத்தகைய வீடுகள் தங்கள் ஒளியை இழக்கும். ஓ! மன்னா, அவற்றின் வளர்ச்சியும், செழிப்பும் இல்லாமல் போகும்.(7) மனு, தாம் சொர்க்கத்திற்குச் செல்லுமுன், "பெண்கள் பலமில்லாதவர்கள், ஆண்களின் கவர்ச்சிமிக்க மயக்கும் தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிறவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் அன்பை ஏற்கும் இயல்புடையவர்கள், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்கள்" என்று சொல்லி ஆண்களின் பாதுகாப்பின்கீழ் அவர்களைக் கொண்டு வந்தார்.(8) அவர்களுக்கு மத்தியிலேயே வன்மம் நிறைந்தவர்களும், கௌரவங்களில் பேராசை கொண்டோரும், கொடிய மனம் கொண்டவர்களும், அன்பற்றவர்களும், ஊடுருவ முடியாத அறிவைக் கொண்டவர்களுமான சிலரும் இருக்கின்றனர். எனினும், பெண்கள் மதிக்கத் தகுந்தவர்களாவர். மனிதர்களே அவர்களை மதிப்பீராக.(9)
ஆண்களின் அறம் பெண்களையே சார்ந்திருக்கிறது. இன்பங்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்து, அவர்களை வழிபடுவீராக. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவர்களின் முன்னிலையில் தளர்த்துவீராக.(10) சந்ததியைப் பெறுதல், ஏற்கனவே பிறந்த பிள்ளைகளைப் பேணி வளர்த்தல், சமூகத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பெண்களையே தங்களுக்கான காரணமாகக் கொண்டிருக்கின்றன.(11) பெண்களைக் கௌரவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையை நிச்சயம் அடைவீர்கள்.
இது தொடர்பாக, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகனின் வீட்டைச் சார்ந்த ஓர் இளவரசி {சீதை} பாடிய ஸ்லோகம் ஒன்றிருக்கிறது. அது பின்வருமாறு:(12) "பெண்களுக்கென விதிக்கப்பட்ட வேள்விகள் ஏதுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய சிராத்தங்கள் ஏதுமில்லை. அவர்கள் நோற்க வேண்டிய நோன்புகள் ஏதுமில்லை. அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதும், விருப்பத்துடன் கீழ்ப்படிருந்திருப்பதும் மட்டுமே அவர்களுடைய ஒரே கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதன் மூலமே அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(13) குழந்தைப் பருவத்தில் தந்தை அவளைப் பாதுகாக்கிறான். இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். அவளது வாழ்வின் எக்காலத்திலும் பெண்ணானவள் விடுதலை பெறத் தகுந்தவளல்ல.(14) செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும், செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். ஓ! பாரதா, பெண்களைப் பேணிக் காப்பதன் மூலம் ஒருவன் செழிப்பின் தேவியையே பேணி வளர்க்கிறான் என்றும், அவளைப் பீடிப்பதன் மூலம் அவன் செழிப்பின் தேவியைத் துன்புறுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}.(15)
அநுசாஸனபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |