Castes born in Intermixture of orders! | Anusasana-Parva-Section-48 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 48)
பதிவின் சுருக்கம் : கலப்பு வர்ண சாதிகளின் வரலாறு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "செல்வத்தின் தூண்டல் மூலமோ, வெறும் காமத்தின் மூலமோ, (ஆண், பெண் இருவரின்) உண்மையான பிறப்பு வகைக் குறித்த அறியாமையின் மூலமோ, அல்லது மடமையின் மூலமோ பல்வேறு வகையான கலப்புகள் {வர்ணங்களில் பல்வேறு வகை கலப்புகள்} ஏற்படுகின்றன.(1) ஓ! பாட்டா, கலப்பு வகுப்புகளில் பிறந்த மனிதர்களின் கடமைகள் மற்றும் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தொடக்கத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் நான்கு வகைகளைப் படைத்து, வேள்வியின் நிமித்தம் அவரவருக்குரிய செயல்களையும், கடமைகளையும் விதித்தான்[1].(3) பிராமணன், நான்கு வகைகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றென நான்கு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {பிராமண வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களின் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). எனினும், அடுத்தடுத்த வகைகளில் (வைசிய மற்றும் சூத்திர வகைகளில்) அவன் கொள்ளும் இரு மனைவிகளிடம் பிறக்கும் மகன்கள், தந்தையுடைய நிலையால் தீர்மானிக்கப்படாமல், அவர்களுடைய தாய்மாரின் நிலையால் தீர்மானிக்கப்படுவதால் தாழ்ந்தவர்களாவர்.(4)
[1] "அஃதாவது, இந்த வகைகள் ஒவ்வொன்றும் வேள்விகள் செய்வதற்காகவே படைக்கப்பட்டன. சூத்திரன் வேள்வி செய்வதற்குத் தகுந்தவன் ஆகான். வேறு மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வது மட்டுமே அவனுடைய வேள்வியாக இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சூத்திரப் பெண்ணின் உடலானது சடலத்தைப் போல மங்கலமற்றது என்பதால், ஒரு பிராமணனால் ஒரு சூத்திர மனைவியிடம் பெறப்படும் மகனானவன், சடலத்தைக் குறிக்கும் வகையில் அவன் பாராசவன் என்றழைக்கப்படுகிறான். அவன் தன் (தந்தையின்) குலத்தைச் சேர்ந்த மனிதர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். உண்மையில், அவனுக்காக விதிக்கப்பட்டிருக்கும் தொண்டெனும் கடமையைக் கைவிடுதல் அவனுக்கு முறையாகாது.(5) அவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றித் தன் குடும்பச் சுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். வயதால் அவனே மூத்தவனாக இருப்பினும், தன் தந்தைக்குப் பிறந்தவர்களும், தன்னிலும் வயது குறைந்தவர்களுமான வேறு பிள்ளைகளுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றி, தான் ஈட்ட நேர்வதையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(6)
ஒரு க்ஷத்திரியன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {வைசிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {க்ஷத்திரிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). சூத்திர வகையைச் சார்ந்த அவனது மூன்றாவது மனைவி மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படுகிறாள். அவளிடம் அவன் பெறும் மகனானவன், ஓர் உக்ரன் என்றழைக்கப்படுகிறான்.(7)
வைசியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {வைசிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {சூத்திர வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வைசிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்).
சூத்திரன், தன் சொந்த வகையில் மட்டுமே ஒரே ஒரு மனைவியைக் கொள்ளலாம். அவனால் பெறப்படும் மகனும் சூத்திரனாகிறான்.(8)
வைசியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {வைசிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {சூத்திர வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வைசிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்).
சூத்திரன், தன் சொந்த வகையில் மட்டுமே ஒரே ஒரு மனைவியைக் கொள்ளலாம். அவனால் பெறப்படும் மகனும் சூத்திரனாகிறான்.(8)
மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் பிறக்கும் ஒரு மகன் மிகத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன், மேன்மையான வகையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால் அத்தகைய மகன், நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள வகையாகக் கருதப்படுவான். உண்மையில், அத்தகைய மகன், அடிப்படையான நான்கு வகைகளோடு பார்க்கப்படும்போது இகழத்தக்கவனாகிறான்.(9)
ஒரு க்ஷத்திரியன் ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால், அத்தகைய மகன், நான்கு தூய வகைகள் {வர்ணங்கள்} எதனிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒரு சூதனாகவே கருதப்படுவான். ஒரு சூதனின் கடமைகள் அனைத்தும், மன்னர்கள் மற்றும் வேறு பெரும் மனிதர்களின் புகழ்மாலைகள் மற்றும் துதிகளை உரைப்பது தொடர்புடையனவாகும்.
ஒரு வைசியனால், பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வைதேஹகன் எனக் கருதப்படுகிறான். அவனுக்கான கடமைகள், மதிக்கத்தக்க குடும்பங்களின் பெண்களின் தனிமையைப் பாதுகாக்கும் வகையில் தடிகளைத் தாங்குதல் மற்றும் அவர்கள் பின்னால் ஓடுதல் போன்ற பொறுப்புகளாகும்[2]. அத்தகைய மகன்களுக்குத் தூய்மைச் சடங்குகள் ஏதும் விதிக்கப்படவில்லை[3].(10)
ஒரு க்ஷத்திரியன் ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால், அத்தகைய மகன், நான்கு தூய வகைகள் {வர்ணங்கள்} எதனிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒரு சூதனாகவே கருதப்படுவான். ஒரு சூதனின் கடமைகள் அனைத்தும், மன்னர்கள் மற்றும் வேறு பெரும் மனிதர்களின் புகழ்மாலைகள் மற்றும் துதிகளை உரைப்பது தொடர்புடையனவாகும்.
ஒரு வைசியனால், பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வைதேஹகன் எனக் கருதப்படுகிறான். அவனுக்கான கடமைகள், மதிக்கத்தக்க குடும்பங்களின் பெண்களின் தனிமையைப் பாதுகாக்கும் வகையில் தடிகளைத் தாங்குதல் மற்றும் அவர்கள் பின்னால் ஓடுதல் போன்ற பொறுப்புகளாகும்[2]. அத்தகைய மகன்களுக்குத் தூய்மைச் சடங்குகள் ஏதும் விதிக்கப்படவில்லை[3].(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணஸ்த்ரீயினிடம் க்ஷத்திரியன் யாகத்திற்கும், உபநயனத்திற்கும் தகாததும் அரசர்களிடத்தில் ஸ்தோத்திரம் செய்வதே தொழிலாகவுடையதுமான ஸூத ஜாதியையும், வைசியன் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட மௌத்கல்யமென்று சொல்லப்பட்ட வைதேஹஜாதியையும், சூத்திரன் கொலைத்தொழிலிலிருப்பதும், ஊருக்கு வெளியில் வஸிப்பதுமாகிய சண்டாள ஜாதியையும் உற்பத்தி செய்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், வைசியர்களுக்குப் {பிராமண மனைவியிடம்} பிறப்பவர்கள், "மௌத்கல்யம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மௌத்கல்யம் செய்து வாழ வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. முத்கலம் என்பது ஒரு வகைப் புல்லாகும். இருப்பினும் இங்கே இதன் பொருள் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை" எனப் பிபேக்திப்ராய் விளக்குகிறார்.
[3] "அவர்களுக்குப் புனித நூல் {பூணூல்} தரிக்கும் கடமை விதிக்கப்படவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு சூத்திரன், நான்கு வகைகளில் முதன்மையான வகை {பிராமண வர்ணப்} பெண்ணுடன் கலப்பதால் பெறப்படும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். கடும் இயல்புகளுடன் கூடிய அவன், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் வெளியில் வாழ வேண்டும். அவன் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் மரணதண்டனைகளை நிறைவேற்றும் தொழிலைச் செய்ய வேண்டும். இத்தகைய மகன்கள் தங்கள் குலத்தில் இழிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் கலப்புவர்ண சந்ததியாவர்.(11)
ஒரு வைசியனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வந்தியாகவோ, மாகதனாகவோ ஆகிறான். அவனுக்கான கடமைகள் சொற்திறமிக்கப் புகழுரைகளை உரைப்பதாகும் {பாடுவதாகும்}. வரம்புமீறப்பட்டு, ஒரு சூத்திரனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் ஒரு நிஷாதனாகிறான். அவனுக்கான கடமைகள் மீன் பிடித்தலாகும்.(12)
ஒரு சூத்திரன் ஒரு வைசியப்பெண்ணிடம் கலந்து அவளிடம் பெறப்பட்ட மகன் ஆயோகவன் என்றழைக்கப்படுகிறான். அத்தகைய ஒரு மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட கடமையானது தக்ஷனுக்குரியதாகும் (தச்சனுக்குரியதாகும்) {தச்சு வேலையாகும்}. அவர்கள் எவ்வகைச் செல்வத்தை வைத்துக் கொள்ள உரிமையற்றவர்களாவர்.(13)
கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனிதர்கள், தங்கள் சொந்த கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனைவிகளிடம் பெறும் பிள்ளைகள் அதே வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதிகளுக்குக் கீழான சாதி பெண்களிடம் பெறும் பிள்ளைகள், தங்கள் தாய் சார்ந்த நிலையை அடைவதால் தங்கள் தந்தையை விட இழிந்தவர்களாகிறார்கள்.(14)
நான்கு தூய வகைகளைப் பொறுத்தவரையில், மனிதர்கள் தங்கள் வகைகளிலும், தங்களுக்கு அடுத்த வகைகளிலும் மனைவிகளைக் கொண்டு பெறும் பிள்ளைகள் தங்கள் சொந்த வகைகளையே {வர்ணங்களையே} அடைகிறார்கள். எனினும், வேறு மனைவிகளிடம் பெறப்படும் சந்ததி, அடிப்படையான நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள நிலையைக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.(15) அத்தகைய பிள்ளைகள் தங்கள் சொந்த வகுப்புப் பெண்களிடம் மகன்களைப் பெறும்போது, அந்த மகன்கள் தங்கள் தந்தைமாரின் நிலையை {வர்ணத்தையே} அடைகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்கு {வர்ணத்திற்கு} வெளியே மனைவிகளைக் கொள்ளும்போது மட்டுமே, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தாழ்ந்த நிலையை அடைகின்றனர்.(16)
ஒரு சூத்திரன், மிக மேன்மையான வகையை {பிராமண வர்ணத்தைச்} சார்ந்த ஒரு பெண்ணிடம் நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையில் ஒரு மகனைப் பெறுவது (அத்தகைய மகன் மிகத் தாழ்ந்த சண்டாளனாகக் கருதப்படுவதால்) இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையைச் சார்ந்த மகன், அடிப்படையான நான்கு வகைகளைச் சார்ந்த பெண்களிடம் கலப்பதன் மூலம், மிகத் தாழ்ந்த, இழிந்த நிலை கொண்ட சந்ததியை உண்டாக்குகின்றனர்.(17) நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த மற்றும், அவ்வகைகளுக்கும் வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த பிள்ளைகள் தங்களை விட மேன்மையான வகுப்புகளைச் சார்ந்த பெண்களுடன் கலப்பதால் பெருகுகிறார்கள். இவ்வழியில் தாழ்ந்த நிலை வகுப்புகளைச் சார்ந்த மனிதர்களிடம் இருந்து பதினைந்து மிக இழிந்த நிலை கொண்ட வகுப்புகள் உண்டாகின்றன[4].(18)
[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும், சூத்திரனுக்கும், மேற்குலத்துப் பெண்களிடம் பிறந்தவைகள் மூன்று. ஆயோகவனுக்கும், வைதேஹகனுக்கும், நிஷாதனுக்கும், சண்டாளனுக்கும், க்ஷத்திரிய ஜாதிப் பெண்களிடம் பிறந்தவை நான்கு. வைதேஹகனுக்கும், நிஷாதனுக்கும்,சண்டாளனுக்கும், மாகதஜாதிப் பெண்களிடம் பிறந்தவை மூன்று, வைதேஹகனுக்கு ஆயோகவப் பெண்ணினிடமும், நிஷாதஜாதிப் பெண்ணினிடமும் பிறந்தவை இரண்டு. சண்டாளனுக்கு நிஷாதஜாதிப் பெண்ணினிடம் பிறந்தது ஒன்று. நிஷாதனுக்கும், சண்டாளனுக்கும் வைதேஹக ஜாதிப்பெண்ணினிடம் பிறந்தவை இரண்டு. ‘ஸைரந்த்ரியினிடம், ஆயோகவனுக்கு வலைபோட்டு ஜீவிப்பவனும், வைதேஹகனுக்கு மாதுகனும், நிஷாதனுக்கு மத்குரனும், சண்டாளனுக்கு ஸ்வபாகனும், ஆயோகவியினிடம், வைதேஹகனுக்கு க்ரூரனும், நிஷாதனுக்கு மத்ரநாபனும், சண்டாளனுக்குப் புல்கஸனும், நிஷாதியினிடம், சண்டாளனுக்குப் பாண்டுஸௌபாகனும், அந்தேவஸாயியும், வைதேஹகனுக்கு க்ஷுத்ரனும், வைதேஹஜாதிப் பெண்ணினிடம், சண்டாளனுக்கு ஸௌபாகனும், நிஷாதனுக்கு ஆஹிண்டகனும், நிஷாதியினிடம் சூத்திரனுக்குக் குக்குடகனும், அம்பஷ்டையினிடம் வைதேஹகனுக்கு வேனனும், வ்ராத்யனும் பிறக்கின்றனர்’ எனப் பதினைந்தாகக் கூறுவது பழைய உரை" என்றிருக்கிறது.
கலக்கத்தகாத பெண்களுடன் பாலினக் கலவி கொள்வதால் மட்டுமே கலப்பு வகுப்புகள் உண்டாகின்றன. அடிப்படையான அல்லது தூய்மையான நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகுப்புகளின் மத்தியில், சைரந்திரி என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த பெண்களிடம், {வைசிய தந்தைக்கும், க்ஷத்திரிய தாய்க்கும் பிறந்த} மாகதன் என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த ஆண்களால் பிள்ளைகள் பெறப்படுகின்றனர்.(19) அத்தகைய சந்ததியின் தொழிலானது, மன்னர்கள் மற்றும் பிறரின் மேனிகளை அலங்கரிப்பதாகும். அவர்கள் களிம்புகள் {மருந்துகள்} தயாரிப்பது, மலர்மாலைகள் தயாரிப்பது, மேனி அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றை நன்கறிந்தவர்களாவர். அவர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் சுதந்திரமானவர்களாக இருப்பினும், தொண்டுக்குரிய வாழ்வையே அவர்கள் நோற்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை மாகதர்கள் மற்றும் சைரந்திரி என்றழைக்கப்படும் பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் கலப்பில் ஆயோகவம் என்றழைக்கப்படும் மற்றொரு சாதி உண்டாகிறது. அவர்களது தொழில் (மீன், நீர்க்கோழி மற்றும் விலங்குகளைப் பிடிக்க உதவும்) வலைகளை உண்டாக்குவதாகும். சைரந்திரி சாதி பெண்களிடம் வைதேஹகர்கள் கலப்பதன் மூலம், மது மற்றும் சாராயம் உற்பத்தி செய்யும் மைரேயகர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.(20)
நிஷாதர்களில் இருந்து மத்குரன் என்றழைக்கப்படும் சாதியும், ஓடம் செலுத்துவதைத் தொழிலாகக் கொண்ட தாஸர்கள் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு சாதியும் உண்டாகிறது. சண்டாளனிலிருந்தும், பிணங்களைக் காக்கும் தொழிலைக் கொண்ட ஸ்வபாகன் என்றழைக்கப்படும் குலம் உண்டாகிறது.(21) மாகதி சாதிப் பெண்கள், தீய நிலைகளைக் கொண்ட இந்த நான்கு சாதிகளுடன் கலப்பதன் மூலம் வஞ்சத்தையே பயின்று வாழ்வை நடத்தும் இன்னும் மூன்று சாதிகளை உண்டாக்குகின்றனர். அவர்கள் மாம்ஸன் {இறைச்சி விற்பனை செய்பவர்கள்}, ஸ்வாதுகரன் {ருசிமிக்க உணவுவகைகளைச் செய்பவர்கள்}, க்ஷௌத்ரன் {தேனெடுப்பவர்கள்}, ஸௌகந்தன் {நறுமணப் பொருள் செய்பவர்கள்} ஆகியோராவர்.(22)
வைதேஹனிலிருந்து வஞ்சகத்தைப் பயின்றும் வாழும் கொடுமையும், பாவமும் நிறைந்த சாதி தோன்றுகிறது. நிஷாதர்களில் இருந்து, கழுதை பூட்டப்பட்ட தேரில் பயணிப்பவர்களான மத்ரநாப சாதியினர் தோன்றுகின்றனர்.(23)
சண்டாளர்களில் இருந்து, கழுதைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் இறைச்சியை உண்பவர்களான புல்கஸன் என்ற சாதி உண்டாகிறது. இவர்கள் மனித சடலங்களின் தோலுரிப்பதால் கிடைக்கும் ஆடைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். உடைந்த மண்கலங்களில் அவர்கள் உண்பதும் காணப்படுகிறது.(24) மிக இழிந்த இந்த மூன்று சாதிகளும் ஆயோகவ சாதிப் பெண்களிடம் (வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைகள் மூலம்) பிறக்கின்றன.
க்ஷுத்ரன் என்றழைக்கப்படும் சாதி வைதேஹகனிலிருந்து உண்டாகிறது. புறநகரங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வசிப்பவர்களான ஆந்திரன் என்றழைக்கப்படும் சாதியும் (வைதேஹகர்களிலிருந்து) உண்டாகிறது.(25)
ஒரு சர்மகாரன், ஒரு நிஷாத சாதி பெண்ணிடம் கலப்பதன் மூலம் காராவரன் என்றழைக்கப்படும் வகுப்பை உண்டாக்குகிறான். மேலும் ஒரு சண்டாளனில் இருந்து, கூடைகள் மற்றும் மூங்கில் வேலைப்பாடுகள் செய்யும் பாண்டுசௌபாகன் என்ற பெயரால் அறியப்படும் சாதி உண்டாகிறது.(26)
ஒரு நிஷாதன், வைதேஹி சாதிப் பெண்ணுடன் கலப்பதன் மூலம் ஆஹிண்டகன் என்ற பெயரில் அழைக்கப்படும் சாதி உண்டாகிறது. ஒரு சண்டாளன், ஒரு சௌபாகப் பெண்ணிடம் பெறும் மகன், சண்டாளன் என்ற நிலை அல்லது தொழிலில் இருந்து வேறுபடாதவனாக இருக்கிறான்.(27)
ஒரு நிஷாதிப் பெண், ஒரு சண்டாளனுடன் கலப்பதன் மூலம் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வாழும் {அந்தேவஸாயி {பாண்டுஸௌபகன்}-ஆன) ஒரு மகனைப் பெறுகிறாள். அத்தகைய சாதிக்காரர்கள் சுடலையில் வாழ்கிறார்கள். அவர்கள் மிக இழிந்த வகையினராகக் கருதப்படுகின்றனர்.(28)
இவ்வாறே வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைமார் மற்றும் தாய்மாரின் முறையற்ற, பாவம் நிறைந்த கலவியின் மூலம் இந்தக் கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவர்கள் மறைந்து வாழ்ந்தாலும், வெளிப்படையாக வாழ்ந்தாலும், அவர்களை அவர்களின் தொழில் கொண்டு அறிய வேண்டும்.(29)
அடிப்படையான நான்கு வகையினருக்கு {வர்க்கத்தினருக்கு} மட்டுமே சாத்திரங்களில் கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பிறரைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் முற்றிலும் அமைதியாக இருக்கின்றன. அனைத்து வகையினருக்கு மத்தியிலும், சாத்திரங்களில் கடமைகள் நிர்ணயிக்கப்படாத சாதிகளுக்கு, (தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட) என்ன செய்ய வேண்டும் என்பதில் அச்சங்கள் ஏதும் கிடையாது.(30)
வேள்வி செய்யும் வழக்கமில்லாத, அல்லது வேள்விகள் விதிக்கப்படாத மனிதர்களும், அடிப்படையான நான்கு வகைகள் {வர்ணங்களில்} இருந்தாலும், அவற்றுக்கு வெளியே இருந்தாலும், அறவோரின் தோழமையும், போதனையும் இல்லாதவர்களும், அறக்கருத்து ஏதுமின்றிக் கட்டுப்படுத்தப்பட முடியாத காமத்தினால் பிற சாதிப் பெண்களுடன் கலப்பதன் மூலம், எண்ணற்ற கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவற்றின் தொழிலும், வசிப்பிடங்களும் முறையற்ற கலவியின் மூலம் உண்டாகும் அவற்றின் பிறப்பைச் சார்ந்திருக்கின்றன.(31) நான்கு சாலைகள் சந்திக்கும் இடம், அல்லது சுடலை, அல்லது மலைகள் மற்றும் குன்றுகள், அல்லது காடுகள் மற்றும் மரங்கள் சார்ந்த இடங்களில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இரும்பாலான ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர்.(32) அத்தகைய இடங்களில் வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான தொழில்களை வெளிப்படையாகச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் மேனியை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பல்வேறு வகை வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வருவது காணப்படுகிறது.(33) பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், கொடுமையின்மை, கருணை, பேச்சில் வாய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகிய அறங்களைப் பயில்வதன் மூலமும்,(34) பிறருக்காகத் தங்களின் உயிர்களையே விடுவதன் மூலமும் கலப்பு சாதி மனிதர்கள் நிச்சயம் தங்கள் வெற்றியைத் தேடிக் கொள்கின்றனர். ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வறங்களே அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அமைகின்றன என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(35)
புத்தியைக் கொண்ட ஒருவன், அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாத்திர விதிகளின் படி தனக்குத் தகுந்த அல்லது முறையெனத் தீர்மானிக்கப்பட்ட பெண்களிடம் சந்ததியை உண்டாக்க வேண்டும். இழிந்த சாதியைச் சார்ந்த பெண்ணிடம் பெறப்படும் மகன், நீர்நிலையைக் கடக்க விரும்பும் நீச்சற்காரனுக்குப் பெருங்கனத்தைப் போலவே தன் தந்தையைக் காப்பதற்குப் பதிலாகத் துயரைக் கொண்டு வருகிறான்.(36) ஒரு மனிதன் கல்விமானாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் காமமும், கோபமும் மனிதனுக்கு இயற்கையான குணங்களாகவே அமைகின்றன. எனவே, பெண்கள் ஆண்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்வதே எப்போதும் காணப்படுகிறது.(37) ஆண்கள் தொடர்பு கொண்டால் துன்பத்தை விளைவித்துக் கெடுப்பதே பெண்களின் இயல்பான மனப்பான்மையாக இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட மனிதர்கள், பெண்களிடம் பெரும்பற்று கொள்வதில்லை" என்றார் {பீஷ்மர்}.(38)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கலப்புசாதிகளைச் சார்ந்த, தூய்மையற்ற பிறப்பைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்சங்களைப் பார்க்கையில், அவர்கள் உண்மையில் மதிக்கத்தகுந்தவர்களாக இல்லை. இந்தப் புறத் தன்மைகளின் விளைவாக அவர்களுடைய பிறப்பைக் குறித்த உண்மையை நாம் அறிய முடியாது. ஓ! பாட்டா, இத்தகைய பிறப்பைக் கொண்ட மனிதர்களைக் குறித்த உண்மையை அறிய ஏதேனும் குறியீடுகள் இருக்கின்றனவா?" என்று கேட்டான்.(39)
பீஷ்மர், "முறையற்ற கலவியின் மூலம் பிறந்த ஒருவன், பல்வேறு குண இயல்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மேலும், நல்லோராகவும், அறவோராகவும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின் செயல்களுடன் ஒருவனுடைய செயல்களை ஒப்பிடுவதன் மூலம் அவனது பிறப்பின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.(40) மதிப்பில்லா நடத்தை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்று எதிரான செயல்கள், நேர்மையின்மை, கொடூரத்தன்மை, வேள்விகள் மற்றும் புண்ணியத்திற்கு வழிவகுக்கும் வேறு சாத்திரச் செயல்களைச் செய்யாமை ஆகியவை ஒருவனுடைய தூய்மையற்ற பிறப்பை அறிவிக்கும்.(41) ஒரு மகன் தன் இயல்புகளைத் தந்தையிடமிருந்தோ, தாயிடமிருந்தோ பெறுகிறான். சில வேளைகள் அவன் அவற்றை இருவரிடமிருந்தும் பெறுகிறான். தூய்மையற்ற பிறப்பைக் கொண்டவனால் ஒருபோதும் தன் உண்மை இயல்பை மறைக்க முடியாது.(42) ஒரு புலி அல்லது ஒரு சிறுத்தையின் குட்டி, மேனியில் உள்ள வரிகள் அல்லது புள்ளிகளில் தன் தந்தையையோ, தாயையோ பிரதிபலிப்பதைப் போலவே ஒரு மனிதனால் தன் பிறப்புச் சூழ்நிலைகளைக் குறித்து ஒருபோதும் வஞ்சனை செய்ய முடியாது. (43) ஒருவனுடைய பிறப்பின் வழியை எவ்வளவுதான் மறைத்தாலும், அந்தப் பிறப்புத் தூய்மையற்றதாக இருந்தால், அதன் குணமோ, இயல்போ, சிறிதாகவோ, பெரிதாகவோ நிச்சயம் வெளிப்படும்.(44) அறவொழுக்கம் பயில்பவனைப் போல ஒரு மனிதன் நேர்மையாற்ற பாதையில் நடக்கக்கூடும். எனினும், அவன் அந்தச் செயல்களைச் செய்யும் காரியத்தில், அவன் நல்ல வகையைச் சேர்ந்தவனா {ஆரியனா}, வேறு வகையானவனா என்று தன் இயல்பை எப்போதும் அவன் அறிவிக்கிறான்.(45)
இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன. இவ்வாறு உள்ள உயிரினங்களுக்கு மத்தியில், தூய பிறப்பு மற்றும் அறவொழுக்கம் ஆகியவற்றைப் போன்ற நன்மை, அல்லது மதிப்பு வேறு எதனிலும் இல்லை.(46) ஒரு மனிதன் இழிந்த வகையில் பிறந்தவனாக இருந்தால், சாத்திரக் கல்வியின் மூலம் எழும் நற்புத்தியானது, இழிந்த செயல்களில் இருந்து அவனது உடலைப் பாதுகாப்பதில் தவறுகிறது. முற்றான நற்புத்தி பல்வேறு அளவுகளில் இருக்கிறது. அஃது உயர்வாகவோ, நடுத்தரமாகவும், தாழ்வாகவோ இருக்கலாம். தாழ்ந்த வகை மனிதனிடம் அஃது இருந்தாலும், எவ்விளைவையும் உண்டாக்காமல் கூதிர் கால மேகங்களைப் போல அது மறைந்து போகும். மறுபுறம் நற்புத்தியானது, பிறந்திருக்கும் மனிதனிடம் உள்ள தன் அளவுக்கு ஏற்ப அவனது செயல்களில் வெளிப்படுகிறது[5].(47) ஒரு மனிதன் மேன்மையான வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனாக இருந்தாலும், அவன் நன்னடத்தையற்றவனாக இருந்தால், எந்த மதிப்பையோ, வழிபாட்டையோ அவன் பெறத்தகுந்தவனல்ல. கடமைகளை அறிந்தவனும், நன்னடத்தைக் கொண்டவனுமான ஒரு சூத்திரனைக் கூட ஒருவன் வழிபடலாம்.(48) ஒரு மனிதன், தான் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமும், தான் கொண்ட நல்ல அல்லது தீய இயல்களின் மூலமும், பிறந்த குலத்தின் மூலமும் தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறான். ஒருவன் பிறந்த குலமானது எக்காரணத்தினாலும் தாழ்ந்ததாக இருந்தால், அவன் தனது செயல்களின் மூலம் அதை விரைவில் உயர்த்தி, பிரகாசிக்கச் செய்து புகழடையச் செய்கிறான்.(49) ஞானம் கொண்ட மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காவே பலவகைக் கலப்புச் சாதிகள் மற்றும் தூய சாதிகளைச் சார்ந்த பெண்களில், தங்கள் சந்ததி உண்டாக்கத் தகாதவர்களைத் தவிர்க்க வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(50)
[5] "இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது வரி மிகக் கடினமானதாக இருக்கிறது. பின்வருவதே பொருளாகத் தெரிகிறது: இழிந்த பிறப்பைக் கொண்ட ஒருவன் இயல்பாகவே இழிந்தவனாகவே இருக்கிறான். முற்றான நன்மை அவனது இதயத்தில் எழக்கூடும், ஆனால் அஃது எவ்விளைவையும் உண்டாக்காமல் உடனே மறைந்து போகும். எனவே, சாத்திரக் கல்வியை அத்தகைய மனிதனால் பெறவே முடியாது. மறுபுறம், ஒருவனுக்கு விதிக்கப்பட்டுள்ள அளவின்படியான நன்மைகளான (1) மனித நிலை மற்றும் (2) அந்நிலையில் உள்ள தகுதி ஆகியவை அவனது செயல்களில் வெளிப்படுவது காணப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் "பல நடத்தைகளும், பலவிதத்தொழிலில் ஊக்கங்களுமுள்ள மனிதர்களுக்கு அவர்களின் ஒழுக்கத்திற்குத் தகுதியான ஜாதியானது உலகத்தில் மிகப் பொருந்துகிறது. அது மாறுவதில்லை. இவ்வுலகத்தில் அவன் தேகமானது இயற்கைக்கு விலக்காவதில்லை. உயர்ந்ததும், நடுத்தரமும், தாழ்ந்ததுமான இயற்கைகள் உண்டாகின்றன. ஸமமான குணங்களுள்ள தேகந்தான் விருத்தியாகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு மனிதன் தன் உடலாலும் மன ஊக்கத்தாலும் பாதிக்கப்படுகிறது. அந்த ஊக்கம் மேன்மையானதாகவோ, நடுத்தரமானதாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கலாம். அந்த ஊக்கதைச் சார்ந்தே ஒருவன் தனக்கு எது இன்பத்தைக் கொண்டு வரும் என்பதைத் தீர்மானிக்கிறான்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |