The fishes and Chyavana! | Anusasana-Parva-Section-50 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 50)
பதிவின் சுருக்கம் : தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இதுதொடர்பாக ஒரு பழங்கதையில் நஹுஷனுக்கும், முனிவர் சியவனருக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில், பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவருமான பெரும் முனிவர் சியவனர், உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைச் சில காலத்திற்கு வாழ விரும்பி அதன் படியே வாழவும் தொடங்கினார்.(3) செருக்கு, கோபம், இன்பதுன்பங்கள் ஆகியவற்றைக் கைவிட்ட அந்தத் தவசி அந்நோன்பு நோற்கும் உறுதியேற்றுக் கொண்டு, உதவாஸ விதிகளின் படி பனிரெண்டு ஆண்டுகள் வாழத் தொடங்கினார்[1].(4) அம்முனிவர் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதேபோலவே அவர் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்தப் பலமிக்கத் தவசி அனைவரும் நடந்து கொள்ளும் நடத்தையால் நிலவுக்கு ஒப்பானவராக இருந்தார்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகு வம்சத்தவரான ச்யவன மகரிஷி நீருக்குள் வஸித்துக் கொண்டு பெருந்தவம் செய்யத் தொடங்கினார். அம்முனிவர் கர்வத்தையும், கோபத்தையும், மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒழித்துப் பன்னிரண்டு வருஷ காலம் ஜலத்தில் வஸித்துக் கொண்டு தவம் செய்தார்" என்றிருக்கிறது.
தேவர்கள் அனைவரையும் வணங்கி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தம்மைத் தூய்மை செய்து கொண்ட அவர், கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்தில் உள்ள நீரில் நுழைந்து, உயிரற்ற ஒரு மரக்கட்டையைப் போல அங்கே நின்று கொண்டிருந்தார்.(6) காற்றுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்டவையும், சீற்றத்துடன் முழங்கி வருபவையுமான அவ்விரு ஆறுகளின் நீரோட்டத்தை எதிர்த்து அஃதை அவர் தமது தலையில் தாங்கினார்.(7) பிரயாகையில் கலக்கும் கங்கை, யமுனை, பிற ஆறுகள், தடாகங்கள் ஆகியன அந்த முனிவரைப் பீடிக்காமல் (அவருக்கான மதிப்பைக் காட்டி) அவரைக் கடந்து சென்றன.(8) ஒரு மரக்கட்டையின் தன்மையை அடைந்த அந்தப் பெரும் முனிவர் சில வேளைகளில் அந்த நீரிலேயே கிடந்து சுகமாக உறங்கினார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சில வேளைகளில் அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி நிமிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.(9) அந்த நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஏற்புடையவராக அவர் இருந்தார். இவை யாவும் சிறு அச்சமேதுமில்லாமல் அந்த முனிவரின் உதடுகளை முகர்ந்து பார்த்தனர்.(10)
அந்தப் பெரும் நீர்ச் சங்கமத்தில் அம்முனிவர் இவ்வழியிலேயே நெடுங்காலம் இருந்தார். ஒரு நாள், சில மீனவர்கள் அங்கே வந்தனர்.(11) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, அம்மனிதர்கள் கைகளில் வலைகளுடன் அம்முனிவர் இருந்த இடத்திற்கு வந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் அனைவரும் மீன் பிடிக்க விரும்பினர்.(12) நல்ல உடற்கட்டு, அகன்ற மார்பு, பெரும் பலம் தன்னுத் துணிவைக் கொண்டவர்களும், நீருக்கஞ்சி ஒருபோதும் திரும்பாதவர்களும், தங்கள் வலைகளின் மூலம் ஈட்டுவதைக் கொண்டு வாழ்பவர்களுமான அம்மனிதர்கள், மீன்பிடிக்கத் தீர்மானித்தனர்.(13) ஓ! பாரதர்களின் தலைவா, பல மீன்களைக் கொண்ட அந்த நீர்நிலைக்கு வந்த அந்த மீனவர்கள், தங்கள் வலைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டினர்.(14) மீனை விரும்பியவர்களும், எண்ணிக்கையில் பலராக இருந்தவர்களுமான அந்தக் கைவர்தர்கள் {செம்படவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் வலைகளுடன் கங்கை மற்றும் யமுனையின் நீரில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டனர்.(15)
உண்மையில் அவர்கள், புதுக் கயிறுகளால் அமைக்கப்பட்டதும், போதுமான அளவுக்கு நீள அகலங்களுடன் கூடிய ஒரு பெரிய இடத்தைக் கவரவல்லதுமான தங்கள் வலையை நீரில் வீசினர்.(16) நீருக்குள் இறங்கிய அவர்கள் அனைவரும், மிகப் பெரியதும், ஒரு பெரிய இடத்தில் நன்கு பரவியிருந்ததுமான தங்கள் வலையைப் பெரும்பலத்துடன் இழுக்கத் தொடங்கினர்.(17 அவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், ஒருவர் சொல்வதை மற்றவர் செய்ய முழுமையாகத் தீர்மானித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வலைக்குள் சிக்க வைப்பதில் வென்றனர்.(18) ஓ! மன்னா, அவ்வாறு அவர்கள் தங்கள் வலையை இழுத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மீன்களுடன் சேர்த்து பிருகுவின் மகனான சியவனரையும் எளிதாக இழுத்தனர்.(19) அவரது உடலில் ஆற்றுப் பாசிகள் அதிகம் வளர்ந்திருந்தன. அவரது தாடியும், சடாமுடியும் பச்சைநிறத்தில் இருந்தன. அவரது மேனி முழுவதும் சங்குகளும், தலைகளுடன் கூடிய வேறு மெல்லுடலிகளும் {பன்றிமுட்களும்} காணப்பட்டன.(20)
வேதங்களை நன்கறிந்தவரான அம்முனிவர் நீரில் இருந்து இவ்வாறு இழுக்கப்பட்டதைக் கண்ட அந்த மீனவர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் நின்று, நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்தும், மீண்டும் மீண்டும் தலைவணங்கினர்.(21) வலையில் அகப்பட்ட மீன்கள், வலை இழுக்கப்பட்டதன் மூலம் உண்டான அச்சம் மற்றும் துன்பத்தினாலும், நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாலும், தங்கள் உயிரை விட்டன.(22) மீன்களுக்கு நேர்ந்த இந்தப் பெரும் படுகொலையைக் கண்ட அந்தத் தவசி, கருணையால் நிறைந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டார்.(23)
மீனவர்கள், "அறியாமையின் மூலம் நாங்கள் (புனிதமானவரான உம்மை நீரில் இருந்து இழுத்து) இப்பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களிடம் நிறைவடைவீராக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் எது? ஓ !பெருந்தவசியே, எங்களுக்கு ஆணையிடுவீராக" என்று கேட்டனர்".(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தம்மைச் சுற்றிலும் மீன்குவியல்களுக்கு மத்தியில் இருந்த சியவனர், "நான் மிகவும் விரும்பும் விருப்பத்தைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக.(25) நான் இந்த மீன்களோடு இறக்கப் போகிறேன், அல்லது என்னை இவற்றோடு சேர்த்து விற்று விடுவீராக. நான் இவற்றோடு சேர்ந்து நீரில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். இத்தகைய நேரத்தில் நான் இவற்றைக் கைவிட விரும்பவில்லை" என்றார் {சியவனர்}.
அவர் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னதும், அந்த மீனவர்கள் பெரும் அச்சமடைந்தனர். வெளிறிய முகங்களுடன் கூடிய அவர்கள் மன்னன் நஹுஷனிடம் சென்று, நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர்" {என்றார் பீஷ்மர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |