The fishes and the fishermen! | Anusasana-Parva-Section-51 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 51)
பதிவின் சுருக்கம் : சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)
நஹுஷன் {சியவனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, "உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன? ஓ! புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது" என்றான்.(4)
சியவனர், "மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக" என்றார்.(5)
நஹுஷன், "இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்" என்றான்.(6)
சியவனர், "ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]" என்றார்.(7)
[1] கும்பகோணம் பதிப்பில், "தன் விலையைத் தான் சொல்லலாகாது. அதை உலகம் சிலாகிக்காது. எனக்கு ஆத்மஸ்துதியைச் செய்யவும் இஷ்டமில்லை. ஆதலால், ஆயிரம் பொன்னுக்குத் தகுதியுள்ளவனல்லேனென்பதை மட்டும் நான் சொல்வேன்அல்லது, நீ என்ன நினைக்கிறாய்? எனக்குச் சரியான விலையைக் கொடு; உன் புத்தியினால் நிச்சயம் செய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! மன்னா, ஆயிரம் நாணயங்களைவிட நான் மதிப்புமிக்கவன். நீ என்ன நினைக்கிறாய்? என்ன விலை கொடுப்பது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க உன் புத்தியைப் பயன்படுத்துவாயாக" என்றிருக்கிறது.
நஹுஷன், "ஓ! கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ! புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா? அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா?" என்று கேட்டான்.(8)
சியவனர், "ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்.(9)
நஹுஷன், " இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்றான்.(10)
சியவனர், "ஓ! மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தகுந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்.(11)
நஹுஷன், "என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்?" என்று கேட்டான்.(12)
சியவனர், "ஓ! மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்".(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)
ஓ! மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், "நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்" என்றார்.(17)
நஹுஷன், "ஓ! சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா?(19) ஓ! பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக" என்று கேட்டான்".(20)
பீஷ்மர், "பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) "ஓ! மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக" என்றார்.(22)
ஓ! மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ! ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)
நஹுஷன், "ஓ! மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ! பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்" என்றான்.(25)
சியவனர், "சரி, ஓ! மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ! பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்தை விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது" என்றார்".(33)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)
நிஷாதர்கள், "ஓ! தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ! பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக" என்றனர்.(37)
சியவனர், "வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்டு, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக" என்றார்".(39)
பீஷ்மர் தொடர்ந்தார், "இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)
அப்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, "போதும்" என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ! ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ! மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ! யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ! வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(47,48)
அநுசாஸனபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 48
ஆங்கிலத்தில் | In English |