Chyavana and Kusika! | Anusasana-Parva-Section-52 | Mahabharata In Tamil (அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 52)
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 43)
பதிவின் சுருக்கம் : பரசுராமர், விஷ்வாமித்ரர் பிறப்புக் காரியமாகச் சியவனர் குசிகனிடம் வசித்தது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனக்குக் கடலைப் போன்றொரு பெரிய ஐயம் உள்ளது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, அதைக் கேட்பீராக. அதை அறிந்து கொண்டு அதைக் குறித்து எனக்கு விளக்கம் அளிப்பீராக.(1) ஜமதக்னியின் மகனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்} குறித்து எனக்குப் பேராவல் இருக்கிறது. அந்த ஆவலை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(2) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட ராமர் {பரசுராமர்} எவ்வாறு பிறந்தார்? அவர் பிறப்பால் மறுபிறப்பாள முனிவர்களைச் சார்ந்தவர். அவர் எவ்வாறு க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவரானார்?(3) ஓ! மன்னா, ராமர் {பரசுராமரின்} பிறப்பு சூழ்நிலைகளைக் குறித்து எனக்கு விளக்கமாக உரைப்பீராக. மேலும் குசிக குலமகனான ஒரு க்ஷத்திரியன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு பிராமணர் ஆனார்?(4) ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} மற்றும் விஷ்வாமித்ரரின் பலம் நிச்சயம் பெரியதாகும்.(5) ரிசீகரின் மகனுக்கு {ஜமதக்னிக்குப்} பதிலாக அவரது பேரன் {பரசுராமர்} க்ஷத்திரிய ஒழுக்கத்தைக் கொண்டதேன்? மேலும் குசிகனின் பேரன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு ஒரு பிராமணரானார்? அவர்கள் இருவரின் மகன்களுக்குப் பதிலாக, அவர்களுடைய பேரர்களுக்கு இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்ததேன்? இந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் உண்மையை விளக்குவதே உமக்குத் தகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(6)
பீஷ்மர், "இது தொடர்பாகச் சியவனருக்கும், குசிகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவசிகளில் சிறந்தவரும், பிருகு குலத்தைச் சேர்ந்தவருமான சியவனர், இந்தக் களங்கம் (க்ஷத்திரிய நடைமுறைகளைச் செய்யும் தமது வழத்தோன்றலின் விளைவாக) தமது சொந்த குலத்தையும் பாதிக்கும் என்பதை (தமது ஆன்மப் பார்வையில்) கண்டார்.(8) அந்நிகழ்வின் நல்லது, கெட்டது, பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான சியவனர் குசிகர்களின் குலத்தை (அந்தக் குலத்தில் இருந்துதான் தமது குலம் க்ஷத்திரிய நடைமுறைகளின் களங்கத்தை அடையப்போகிறது என்பதால் அக்குலத்தை) எரிக்க விரும்பினார்.(9)
மன்னன் குசிகனிடம் சென்ற சியவனர், அவனிடம், "ஓ! பாவமற்றவனே, உன்னுடன் சில காலம் வசிக்கும் விருப்பம் என் இதயத்தில் எழுந்துள்ளது" என்றார்.(10)
குசிகன், "ஓ! புனிதமானவரே, பெண்கள் கொடுக்கப்படும்போது ஒன்றாக வசிப்பது குறித்துக் கல்விமான்கள் விதிக்கின்றனர். ஞானம் கொண்டவர்கள் இத்தகைய தொடர்பிலான நடைமுறையை மட்டுமே பேசுகின்றனர்.(11) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவரே, என்னுடன் வசிப்பதற்கு நீர் நாடும் காரியம் விதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. கடமை மற்றும் அறங்களின் விதிகளுக்கு முரணாக இருப்பினும், நீர் விரும்பி ஆணையிடுவதை நான் செய்வேன்" என்றான்".(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெரும் தவசியான சியவனரின் முன் ஓர் இருக்கையை வைக்க ஆணையிட்ட மன்னன் குசிகன், தன் மனைவயின் துணையுடன் அந்தத் தவசியின் முன்னிலையில் நின்றான்.(13) சிறு குடுவையில் உள்ள நீரைக் கொண்டு வந்த அந்த மன்னன், அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள அந்நீரை அளித்தான். பிறகு அவன் தன் உயர் ஆன்ம விருந்தினரைக் கௌரவிக்கும் வகையில் முறையான சடங்குகள் அனைத்தையும் செய்தான்.(14) நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பவனான உயர் ஆன்ம குசிகன், தேன் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய உரிய வடிவத்திலான பொருட்களை அந்தப் பெரும் முனிவருக்குக் கொடுத்து, அவரை ஏற்கச் செய்தான்.(15)
கல்விமானான அந்தப் பிராமணரை இவ்வழியில் வரவேற்றுக் கௌரவித்த அந்த மன்னன் {குசிகன்} மீண்டும் அவரிடம் {சியவனரிடம்}, "உமது ஆணைகளுக்காக நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். ஓ! புனிதமானவரே, உமக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ஆணையிடுவீராக.(16) ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவரே, நாடோ, செல்வமோ, பசுவோ, வேள்விகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமோ, அஃது உமக்கு வேண்டுமோ அந்தச் சொல்லை எங்களுக்கச் சொன்னால் அவை அனைத்தையும் நாங்கள் உமக்கு அளிப்போம்.(17) இந்த அரண்மனை, இந்த நாடு, நீதிமிக்க இந்த இருக்கை {சிம்மாசனம்} ஆகியவை உமது விருப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. நீரே இவை அனைத்தின் தலைவராவீர். பூமியை நீர் ஆள்வீராக. என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் நான் உம்மையே சார்ந்திருக்கிறேன்" என்றான்.(18)
மன்னனால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளில் பெரும் மகிழ்ச்சியடைந்த பிருகு குலத்தின் சியவனர், குசிகனிடம் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)
சியவனர் {குசிகரிடம்}, "ஓ! மன்னா, நான் உன் நாட்டிலோ, செல்வத்திலோ, நீ கொண்டிக்கும் கன்னிகையரிலோ, உன் பசுக்களிலோ, உன் மாகாணங்களிலோ, வேள்விக்குத் தேவையான பொருட்களிலோ பேராசை கொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்பாயாக.(20) உனக்கும், உன் மனைவிக்கும் விருப்பம் உண்டானால் நான் ஒரு குறிப்பிட்ட நோன்பை நோற்கத் தொடங்குவேன். அந்தக் காலத்தில் நீயும் உன் மனைவியும் எத்தயக்கமும் இல்லாமல் எனக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்" என்றார்.(21)
ஓ! பாரதா, முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும் ராணியும் மகிழ்ச்சியால் நிறைந்து, "ஓ! முனிவரே, அப்படியே ஆகட்டும்" என்று அவருக்குப் பதிலளித்தனர்.(22)
முனிவரின் சொற்களில் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரை அந்த அரண்மனையில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். அது காண்பதற்கினிய சிறப்பான ஒன்றாக இருந்தது. மன்னன் அந்த அறையில் உள்ள அனைத்தையும் அவருக்குக் காட்டினான்.(23)
மன்னன், "ஓ! புனிதமானவரே, இஃது என் படுக்கையாகும். நீர் விரும்பியவாறு இங்கே வாழலாம். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நானும், என் ராணியும் உமக்குத் தேவையான வசதிகள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் கொடுப்பதற்குச் சிறப்பாக முனைவோம்" என்றான்.(24)
அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே சூரியன் நடுவானைக் கடந்தான். முனிவர் மன்னனிடம் உணவும், பானமும் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.(25)
முனிவரை வணங்கிய மன்னன் குசிகன், "என்ன வகை உணவு உமக்கு ஏற்புடையது? உண்மையில் உமக்கு என்ன உணவை நான் கொண்டு வர வேண்டும்" என்று கேட்டான்.(26)
ஓ! பாரதா, மகிழ்ச்சியால் நிறைந்த அம்முனிவர் அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {குசிகனிடம்}, "சரியான உணவு எனக்குக் கொடுக்கப்பட வேண்டும்" என்று கேட்டார்[1].(27)
[1] கும்பகோணம் பதிப்பில், "உன்னுடைய செல்வத்திற்குத் தகுந்த ஆகாரத்தைக் கொடு" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தயாராக இருக்கும் தகுதியான உணவை எனக்கு அளிப்பாயாக" என்றிருக்கிறது.
இச்சொற்களை மதிப்புடன் ஏற்றுக் கொண்ட மன்னன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி உரிய வகை உணவை அம்முனிவருக்குக் கொடுத்தான்.(28)
கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான புனிதர் சியவனர், அவரது உணவை முடித்துக் கொண்டு, மன்னன் மற்றும் ராணியிடம், "நான் உறங்க விரும்புகிறேன். ஓ! பலமிக்கவனே, உறக்கம் எனை ஆட்கொள்கிறது" என்று சொன்னார்.(29)
பிறகு அந்த முனிவர்களில் சிறந்தவர், அவருக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஓர் அறைக்குச் சென்று, ஒரு படுக்கையில் தம்மைக் கிடத்திக் கொண்டார். மன்னனும், ராணியும் அங்கே அமர்ந்தனர்.(30)
முனிவர், "நான் உறங்கும் போது என்னை விழிப்படையச் செய்யாதீர். நீங்கள் விழித்திருந்து, நான் உறங்கும் வரை என் கால்களை அழுத்துவீராக" என்றார்.(31)
கடமைகள் அனைத்தையும் அறந்த குசிகன், சிறு தயக்கமும் கொள்ளாமல், "அப்படியே ஆகட்டும்" என்றான்.
உண்மையில் மன்னனும், ராணியும் அன்றிரவு முழுவதும் விழித்திருந்து,(32) முனிவர் சொன்ன வகையிலேயே அவரைப் பார்த்துக் கொண்டு தொண்டாற்றினர். ஓ! ஏகாதிபதி, அந்த அரச இணை, பெரும் ஊக்கத்துடனும், கவனத்துடனும் அந்த முனிவரின் ஆணையை நிறைவேற்றினர்.(33) அதே வேளையில், மன்னனிடம் இவ்வாறு ஆணையிட்ட அம்முனிவர், தன் நிலை மாறாமல், ஒரு முறை கூடத் திரும்பிப் படுக்காமல், தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.(34)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மன்னன் தன் மனைவியுடன் சேர்ந்து, அந்த மொத்த காலத்திற்கும் உணவனைத்தையும் கைவிட்டு, அம்முனிவரை பார்த்துக் கொண்டு தொண்டாற்றினான்.(35) இருபத்தோரு நான்கள் கழிந்ததும் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} தாமாக எழும்பினார். அந்தப் பெரும் தவசி, அவர்களை அழைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.(36) பட்டினியால் களைத்துப் போயிருந்த மன்னனும், ராணியும் அவரைப் பின்தொடர்ந்தாலும் அந்த முனிவர்களில் முதன்மையானவர் அவர்கள் மேல் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தவில்லை.(37) சிறிது தொலைவு சென்றதும், அந்த அரச இணையரின் பார்வையில் இருந்து அந்தப் பிருகுவின் மகன் (தமது யோக சக்தியால் தம்மை மறைத்துக் கொண்டு) மறைந்து போனார். இதனால் துயரால் பீடிக்கப்பட்ட மன்னன் பூமியில் விழுந்தான்.(38) பிறகு, பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி, ஆறுதலடைந்து விரைவாக எழுந்து, தன் ராணியின் துணையுடன், அந்த முனிவரை எங்கும் தேடத் தொடங்கினான்" என்றார் {பீஷ்மர்}.(39)
அநுசாஸனபர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் :39
ஆங்கிலத்தில் | In English |