Chyavana afflicted Kusika! | Anusasana-Parva-Section-53 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 53)
பதிவின் சுருக்கம் : மீண்டும் இருபத்தோரு நாட்கள் உறங்கிய சியவனர்;. நீராடச் சென்று மீண்டும் மறைந்தது; தனக்குப் பரிமாறப்பட்ட உணவை எரித்தது; மன்னனையும் அவனது மனைவியையும் தேரில் பூட்டி தம்மை இழுக்கச் செய்தது; சாட்டையால் அவர்களை அடித்தது; மன்னனின் அவல நிலையைக் கண்டு துயருற்ற குடிமக்கள்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "முனிவர் {சியவனர்} மறைந்ததும் மன்னன் {குசிகன்} என்ன செய்தான்? உயர்ந்த அருளைக் கொண்ட அவனது மனைவி என்ன செய்தாள்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த முனிவரை {சியவனரைக்} காணாத மன்னன் {குசிகர்}, களைத்துப் போனவனாக, பொறிகலங்கியவனாக, வெட்கமடைந்தவனாகத் தன் ராணியின் துணையுடன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.(2) உற்சாகமற்ற மனநிலையில் தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாதிருந்தான். அவன் சியவனரின் நடத்தையை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.(3) பிறகு நம்பிக்கை இழந்த இதயத்துடன் தன் அறைக்குச் சென்றான். அங்கே அவன் {குசிகன்} தன் படுக்கைக்கு எதிரில் படுத்திருக்கும் பிருகுவின் மகனை {சியவனரைக்} கண்டான்.(4) அம்முனிவரை அங்கே கண்ட அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். உண்மையில் அவர்கள், அந்த ஆச்சரியகரமான நிகழ்வைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். முனிவரைக் கண்டதும் அவர்களது களைப்பு மறைந்து போனது.(5)
அவரது அருகில் உள்ள தங்கள் இருக்கைகள் மீண்டும் அமர்ந்த அவர்கள், முன்பைப் போலவே அவரது பாதங்களை மெதுவாக அழுத்த {பிடித்துவிடத்} தொடங்கினர். அதே வேளையில் அந்தப் பெருந்தவசி முன்பைப் போலவே தமது ஆழ்ந்த உறக்கத்தைத் தொடர்ந்தார். இப்போது அவர் மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தது மட்டுமே வேறுபாடு.(6) பெரும் சக்தியைக் கொண்ட அவர் மீண்டும் இருபத்தோரு நாட்களை இவ்வாறு கழித்தார். அச்சத்தால் கலக்கமடைந்திருந்த அந்த அரச இணையர் அம்முனிவர் குறித்த தங்கள் மனநிலையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.(7) தமது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அந்தத் தவசி, மன்னன் மற்றும் ராணியிடம், "என் உடலில் எண்ணெய் பூசுங்கள். நாங்கள் நீராட விரும்புகிறேன்" என்றார்.(8) அவர்கள் களைத்துப் போனவர்களாக இருந்தாலும், உடனே சம்மதித்து, நூறு முறை கொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க எண்ணெயுடன் {சதபாகத் தைலத்துடன்} அம்முனிவரை அணுகினர்.(9) அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருந்தபோது, அந்த மன்னனும், ராணியும், பேசாமல் அவருக்குப் பூசிவிடுவதைத் தொடர்ந்தனர். உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட அந்தப் பிருகுவின் மகன் போதும் என்ற சொல்லை ஒருமுறையேனும் சொல்லவில்லை.(10)
எனினும் அந்த அரச இணையர் முற்றிலும் வெறுப்பற்றவர்களாக இருப்பதைக் கண்டார். அவர், திடீரென எழுந்து, நீராடும் அறைக்குச் சென்றார்.(11), மன்னனின் பயன்பாட்டுக்குத் தகுந்தவையும், நீராடலுக்குத் தேவையானவையுமான பல்வேறு பொருட்கள் அங்கே தயாராக இருந்தன. எனினும், அந்தப் பொருட்களை எடுக்காமல், அவற்றிற்கு எம்மதிப்பையும் காட்டாமல் அந்த முனிவர் மன்னன் குசிகன் ({குசிகனும்} அவனது மனைவியும்) பார்த்துக் கொண்டிருக்கும்போதே தமது யோக சக்தியால் மீண்டும் அங்கேயே அப்போதே மறைந்து போனார். எனினும், ஓ! பாரதர்களின் தலைவா, இஃது அந்த அரச இணையரின் உள்ளச்சமநிலையைக் குலைக்கவில்லை.(12,13) அடுத்து அந்தப் பலமிக்க முனிவர், நீராடி முடித்து அரியணையில் அமர்ந்திருப்பவராகத் தென்பட்டார். உண்மையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, இந்த இடத்தில் தான் அவர் தம்மை அரசனுக்கும், அரசிக்கும் வெளிப்படுத்திக் கொண்டார்.(14) உற்சாகமிக்க முகத்துடன் கூடிய மன்னன் குசிகன் தன் மனைவியுடன் சேர்ந்து, பெரும் மதிப்புடன் சமைக்கப்பட்ட உணவை அம்முனிவருக்கு அளித்தான். ஞானத்துடனும், முற்றிலும் மனக்கலக்கம் ஏதும் இல்லாமலும் குசிகன் இந்தக் காணிக்கையை அளித்தான்.(15)
அந்தத் தவசி, "உணவு கொண்டவரப்படலாம்" என்ற சொற்களைச் சொன்னார். மன்னன் தன் மனைவியின் துணையுடன் விரைவில் அங்கே உணவைக் கொண்டு வந்தான்.(16) பல்வேறு வகை இறைச்சிகளும், அது போன்ற வெவ்வேறு தயாரிப்புகளும் அதில் இருந்தன. பல வகைக் காய்கறிகளும், கீரைகளும் அதில் இருந்தன.(17) பாகுகள், மாப்பண்டங்கள், ரஸாலை[1] ஆகியவை இருந்தன. அப்பம், பல்வேறு சுவைகளுடன் கூடிய மோதகங்களும் அதில் இருந்தன. முனிவர்கள் உண்ணும் காட்டு உணவுகள் அதில் இருந்தன.(18) மன்னர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் பலவகைக் கனிகள், இலந்து, புன்கம், காஸ்மரியம் {பெருங்குமிழம்பழம்}, பல்லாதகம் {சேங்கொட்டை} ஆகியவையும் இருந்தன.(19) இல்லற வாழ்வை நோற்பவர்கள் {கிருகஸ்தர்கள்} உண்ணத்தக்கவை, காட்டில் வசிப்பவர்களால் {வானப்ரஸ்தர்கள்} உண்ணத்தக்கவை ஆகியவையும் அதில் இருந்தன. இவ்வாறு அனைத்து வகை உணவுகளையும் முனிவரின் சாபத்திற்கு அஞ்சி மன்னன் கொண்டு வந்து, தன் விருந்தினரின் முன்பு வைத்தான்.(20)
[1] கும்பகோணம் பதிப்பில் இதன் அடிக்குறிப்பில், "புளிப்புத் தயிர், கற்கண்டு, நெய், தேன், மிளகு, சுக்கு, பச்சைக்கர்ப்பூரம் இவற்றைச் சேர்த்துச் செய்யும் ஒரு பாகு; பீமசேனன் செய்து கிருஷ்ணன் அமுது செய்ததாகப் பாகசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
சமையலறையில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவனைத்தும் சியவனரின் முன்பு வைக்கப்பட்டது. அவருக்காக ஓர் இருக்கை வைக்கப்பட்டது, ஒரு படுக்கையும் விரிக்கப்பட்டது. உணவுவகைகள் வெண் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், பிருகு குலத்தின் சியவனர் அந்தப் பொருட்கள் அனைத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைச் சாம்பலாகக் குறைத்தார்.(21,22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த அரச இணையர் முனிவரின் இந்த நடத்தையினால் கோபமேதும் அடையாதிருந்தனர். முனிவரும் முன்பைப் போலவே மன்னன் மற்றும் ராணியின் கண்களுக்கு முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(23) அரச முனியான குசிகன், ஒரு வார்த்தையும் பேசாமல் தன் அருகில் உள்ள தன் மனைவியுடன் அதே நிலையில் அந்த இரவு முழுவதும் அங்கேயே நின்றிருந்தான். பெருஞ்செழிப்புடன் கூடிய அவன் கோபவசப்படாமல் இருந்தான்.(24) பல்வேறு வகையிலான தூய மற்றும் நல்ல உணவுகளும், சிறந்த படுக்கைகளும், நீராடலுக்கு வேண்டிய அபரிமிதமான பொருட்களும், பல்வேறு வகைத் துணிகளும் ஒவ்வொரு நாளும் திரட்டப்பட்டு, முனிவருக்காக அந்த அரண்மனையில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் சியவனரால் அந்த மன்னனின் நடத்தையில் எந்தக் களங்கத்தையும் காண முடியவில்லை.(25,26)
அப்போது அந்த மறுபிறப்பாள முனிவர், மன்னன் குசிகனிடம், "நீயும் உன் மனைவியும் ஒரு தேரில் உங்களைப் பூட்டிக் கொண்டு, நான் சொல்லும் இடங்களுக்கு என்னைச் சுமந்து செல்வீராக" என்றார்.(27) அம்மன்னன் {குசிகன்}, தவத்தையே செல்வமாகக் கொண்ட சியவனரிடம், "அப்படியே ஆகட்டும்" எனத் தயக்கமேதுமின்றிச் சொன்னான். மேலும் அவன் முனிவரிடம், "எந்தத் தேரை நான் கொண்டு வர வேண்டும்? இன்பமான பயணத்திற்குரிய தேர் வேண்டுமா? அல்லது என்னுடைய போர்த்தேரைக் கொண்டு வரவா?" என்று கேட்டான்.(28)
மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்ட மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தத் தவசி அவனிடம், "பகை நகரங்களை ஊடுருவ நீ பயன்படுத்தும் தேரை முறையாக ஆயத்தம் செய்வாயாக. உண்மையில், ஆயுதங்கள், கொடிமரங்கள், கொடிகள், ஈட்டிகள், கணைகள், தங்கத் தூண்கள், தடிகள், ஆகியவற்றுடன் உன் போர்த்தேரை ஆயத்தம் செய்வாயாக.(29,30) அதன் சடசடப்பொலி மணியோசைக்கு ஒப்பானதாகும். பசும்பொன்னாலான எண்ணற்ற வளைவுகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் எப்போதும் அதில் இருக்கின்றன" என்றார்.
மன்னன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தன் பெரிய போர்த்தேரைத் தயார் செய்தான்.(31) பிறகு அவன் தன் மனைவியை {அத்தேரின்} இடதுபுறத்திலும், தன்னை வலப்புறத்திலும் பூட்டிக் கொண்டான். மூன்று கைப்பிடிகளைக் கொண்டதும், ஒரே நேரத்தில் வஜ்ரம்போன்ற கடினத்தையும், ஊசிபோன்ற கூர்மையையும் கொண்ட முனையுடன் கூடியதுமான சாட்டையை அந்தத் தேரில் வைத்தான்[2].(32)
[2] "வஜ்ரசூச்யக்ரம் என்பது வைரங்கள் மற்றும் கடினமான பிற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊசி போன்ற முனை கொண்ட சாட்டை" என்றும் பொருள் கொள்ளலாம். கும்பகோணம் பதிப்பில், "மூன்று கழிகள் சேர்ந்ததும், முனையில் வஜ்ரஊசி வைக்கப்பட்டதுமாகிய சாட்டையை அந்தத் தேரில் வைத்தான்" என்றிருக்கிறது.
தேவையான அனைத்தையும் அந்தத் தேரில் வைத்த மன்னன், அம்முனிவரிடம், "ஓ! புனிதமானவரே, தேர் எங்கே செல்ல வேண்டும்? ஓ!, பிருகுவின் மகன் {சியவனர்} ஆணையிடட்டும்.(33) நீர் குறிப்பிட விரும்பும் இடத்திற்கு உமது தேர் செல்லும்" என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தப் புனிதர் அம்மன்னனிடம் {குசிகனிடம்},(34) "இங்கிருந்து படிப்படியாக மிக மெதுவாக இந்தத் தேர் இழுக்கப்பட வேண்டும். நீங்கள் இருவரும் என் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, களைப்பேதும் நான் உணராத வகையில் செல்ல வேண்டும்.(35) மிக இனிமையான வகையில் நான் சுமக்கப்பட வேண்டும். உன் மக்கள் அனைவரும் அவர்களுக்கு மத்தியில் செல்லும் போது இதைப் பார்க்க வேண்டும். நான் சாலையில் செல்லும்போது என்னிடம் வரும் எந்த மனிதனும் விரட்டப்படக்கூடாது. நான் அனைவருக்கும் செல்வக் கொடை கொடுப்பேன்.(36) வழியில் என்னை அணுகும் பிராமணர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களையும், ரத்தினங்களையும், செல்வத்தையும் மிச்சமில்லாமல் கொடுப்பேன்.(37) ஓ! மன்னா, எத்தயக்கத்திற்கு இடமின்றி இவை அனைத்தையும் நிறைவேற்றுவாயாக" என்றார்.
முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தன் பணியாட்களை அழைத்து அவர்களிடம்,(38) "இந்தத் தவசி ஆணையிடும் எதையும் நீங்கள் அச்சமில்லாமல் கொடுக்க வேண்டும்" என்றான்.
முனிவர் அந்தத் தேரில் சுமக்கப்பட்டபோது, அபரிமிதமான ரத்தினங்கள், தங்கம், அழகிய பெண்கள், ஆடுகள்,(39) நாணயமாக்கப்பட்ட மற்றும் ஆக்கப்படாத தங்கம், குன்றுகள் அல்லது மலைச்சிகரங்களுக்கு ஒப்பான பெரும் யானைகள், மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தன.(40) இயல்புக்கு மீறிய இக்காட்சியைக் கண்டு துயரடைந்த அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் அலறல்கள் எழுந்தன. கூர்முனை கொண்ட அந்தச் சாட்டையைக் கொண்டு முனிவர் திடீரென மன்னனையும், ராணியையும் தாக்கினார்.(41) முதுகிலும், கன்னங்களிலும் இவ்வாறு தாக்கப்பட்டாலும் அந்த அரச இணையர் கலக்கத்திற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மறுபுறம் அவர்கள் அம்முனிவரை முன்பு போலவே தொடர்ந்து சுமந்தனர்.(42) ஐம்பது இரவுகளாக உணவேதும் அவர்களது உதடுகளைக் கடக்கவில்லை என்பதால் தலை முதல் பாதம் வரை நடுங்கியபடியே மிகப் பலவீனமாக இருந்த அந்த வீர இணை எவ்வாறோ அந்தச் சிறந்த தேரை இழுத்துக் கொண்டிருந்தனர்.(43) சாட்டையால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு ஆழமான வெட்டுக் காயங்களை அடைந்த அந்த அரச இணையர் குருதியால் நனைந்தவர்களாகினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, பூவுண்டாகுங்காலத்தைச் சேர்ந்த இரு கின்சுக {பலாச} மரங்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(44)
தங்கள் மன்னனும், ராணியும் அடைந்திருக்கும் அவல நிலையைக் கண்ட குடிமக்கள் பெரும் துயரால் பீடிக்கப்பட்டனர். முனிவர் தங்களைச் சபித்துவிடப் போகிறார் என்ற அச்சத்தில் நிறைந்திருந்த அவர்கள் துன்பத்திலும் அமைதி காத்தனர்.(45) ஈரிருவராக ஒன்று சேர்ந்த அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், "தவங்களின் வலிமையைப் பார். நாம் அனைவரும் கோபமடைந்திருந்தாலும் இந்த முனிவரைப் பார்க்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.(46) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட இந்தப் புனித முனிவர் பெரும் சக்திமிக்கவராக இருக்கிறார். அரசன் மற்றும் அரசியின் பொறையை {உறுதியான தாங்கும் திறனைப்} பார்.(47) களைப்பு மற்றும் பசியில் சோர்வுற்றிருந்தாலும் அவர்கள் இன்னும் தேரை இழுத்துக் கொண்டிருக்கின்றனர்" என்றனர். பிருகுவின் மகன் {சியவனர்}, குசிகனுக்கும் அவனது ராணிக்கும் இந்தத் துயரை உண்டாக்கினாலும், அவர்களிடம் நிறைவின்மை அல்லது கலக்கத்தின் எந்தக் குறியீட்டையும் காணத் தவறினார்".(48)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவர் {சியவனர்}, அரசனும், அரசியும் கலங்கமடையாதிருப்பதைக் கண்டு, தாமே இரண்டாவது கருவூலத் தலைவன் {குபேரன்} என்பதைப் போல (மன்னனின் கருவூலத்தில் இருந்து அடையப்பட்ட செல்வத்தை) பெரிய அளவில் கொடையளிக்கத் தொடங்கினார்.(49) இச்செயலாலும் மன்னன் குசிகன் நிறைவின்மைக்கான எந்தக் குறியீட்டையும் காட்டவில்லை. (அந்தக் கொடைகளின் காரியத்தில்) முனிவர் ஆணையிட்டவாறே அவனும் செயல்பட்டான். இவை யாவற்றையும் கண்ட அந்தச் சிறந்த தவசி (அந்த அரச இணையரிடம்) மகிழ்ச்சியடைந்தார்.(50) அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே இறங்கிய அவர், அந்த அரச இணையரைப் பூட்டுகளில் இருந்து விடுவித்தார்.(51)
உண்மையில் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்}, மென்மையான, ஆழமான, மகிழ்ச்சி மிக்கக் குரலில், "உங்கள் இருவருக்கும் நான் ஒரு சிறந்த வரத்தைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்" என்றார்.(52)
அவர்களுடைய உடல்கள் சாட்டையால் துளைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மின் மென்மையானவர்களாக இருந்தனர். அன்பால் உந்தப்பட்ட அந்தச் சிறந்த தவசி, ஓ! பாரதர்களின் தலைவா, அமுதத்துக்கு ஒப்பாகக் குணம் செய்யும் அறங்களைக் கொண்ட தமது கரங்களால் அவர்களை மென்மையாகத் தீண்டினார்.(53)
பிறகு அம்மன்னன் {குசிகன்}, "நானும், என் மனைவியும் களைப்பேதும் உணரவில்லை" என்றான். உண்மையில் அவர்களது களைப்பனைத்தும் முனிவரின் பலத்தால் விலகின, அதனால்தான் மன்னனால் முனிவரிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது.(54)
அவர்களுடைய நடத்தையில் மகிழ்ச்சியடைந்த சிறப்புமிக்கச் சியவனர், அவர்களிடம், "நான் இதற்கு முன்பு ஒருபோதும் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் சொல்வது போல்தான் நடக்க வேண்டும்.(55) கங்கையின் கரையிலுள் உள்ள இவ்விடம் மிக இனிமை நிறைந்ததும், மங்கலமிக்கதாகவும் இருக்கிறது. ஓ! மன்னா, நான் ஒரு நோன்பிருந்து சிறிதுகாலம் இங்கே வசிக்கப் போகிறேன்.(56) நீ உன் நகரத்திற்குத் திரும்பிச் செல். நீ களைத்திருக்கிறாய். நீ மீண்டும் இங்கு வரலாம். ஓ! மன்னா, நாளை உன் மனைவியுடன் இங்கே மீண்டும் வந்து என்னைக் காண்பாயாக.(57) கோபம் அல்லது துயரத்தின் வசப்படாதே. பெரும் வெகுமதியை நீ அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. எது உன்னால் விரும்பப்படுகிறதோ, எது உன் இதயத்தில் இருக்கிறதோ, அது நிச்சயம் நிறைவேறும்" என்றார்.(58)
முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் குசிகன், முக்கியப் பொருள் கொண்ட இந்த வார்த்தைகளை அந்த முனிவருக்கு மறுமொழியாகச் சொன்னான்.(59) {குசிகன்}, "ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, நான் கோபத்தையோ, துன்பத்தையோ வளர்ப்பதில்லை. ஓ! புனிதமானவரே, நாங்கள் உம்மால் தூய்மையடையச் செய்யப்பட்டு, உம்மால் புனிதமடைந்தோம். நாங்கள் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறோம். எங்கள் உடல்கள் அதிக அழகையும், பெரும் பலத்தையும் கொண்டிருப்பதைப் பாரும்.(60) உம்மால் சாட்டையைக் கொண்ட உண்டாக்கப்பட்ட காயங்களையும், தழும்புகளையும் காண முடியவில்லை. உண்மையில் என் மனைவியுடன் கூடிய நான் மிக நல்ல உடல்நிலையில் இருக்கிறேன்.(61) என் தேவி ஓர் அப்ரசஸைப் போன்ற அழகிய உடல்படைத்தவளாகிவிட்டதைப் பார்க்கிறேன். உண்மையில் அவள் இதற்கும் முன்பு கொண்டிருந்த இனிமையையும் காந்தியையும் கொண்டிருக்கிறாள்.(62) ஓ! பெரும் தவசியே, இவை அனைத்தும் உமது அருளால் ஏற்பட்டது. உண்மையில், ஓ கலங்கடிக்க முடியாத பலத்தைக் கொண்ட புனிதமான முனிவரே, இவையாவற்றிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை" என்றான்.(63)
மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட சியவனர், அவனிடம், "ஓ! ஏகாதிபதி, நாளை மீண்டும் இங்கே உன் மனைவியுடன் வருவாயாக" என்றார்.(64)
இந்த வார்த்தைகளுடன் அரசமுனியான குசிகன் விடைகொடுத்து அனுப்பப்பட்டான். அழகிய உடலைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அந்த முனிவரை வணங்கிவிட்டு தேவர்களின் இரண்டாம் தலைவனை {இரண்டாம் இந்திரனைப்} போலத் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றான்.(65) அமைச்சர்களும், புரோகிதரும் அவனை வரவேற்க வெளியே வந்தனர். அவனது துருப்பினரும், ஆடல் மகளிரும், அவனது குடிமக்கள் அனைவரும் அவ்வாறே வந்தனர்.(66) அவர்கள் அனைவராலும் சூழப்பட்டவனும், அழகு மற்றும் காந்தியால் சுடர்விடுபவனுமான மன்னன் குசிகன், வந்திகளும், மாகதர்களும் அவனது புகழ்பாட, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(67)
தன் நகரத்திற்குள் நுழைந்து, காலைச் சடங்குகள் அனைத்தையும் செய்து, தன் மனைவியுடன் சேர்ந்து உண்டான். பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினான்.(68) அவர்கள் ஒவ்வொருவரும் தங்களில் மற்றவரை புது இளமை பெற்றவராகக் கண்டனர். துன்பங்கள் மற்றும் கவலைகள் ஏதுமற்ற அவர்கள் தங்களில் ஒவ்வொருவரையும் ஒரு தேவராகக் கண்டனர். அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து வரமாகப் பெற்ற காந்தியுடனும், தாங்கள் கொண்டிருந்த அழகிய, இனிமையான வடிவங்களுடனும் அவர்கள் இருவரும் அவ்விரவைத் தங்கள் படுக்கையில் மகிழ்ச்சியாகக் கடத்தினர்.(69) அதே வேளையில், பிருகு குலத்தின் புகழைப் பெருகச் செய்பவரான அந்த முனிவர் {சியவனர்}, தமது யோக சக்தியினால், கங்கைக்கரையில் உள்ள அந்த இனிய காட்டை, அனைத்து வகைச் செல்வங்களும் நிறைந்ததும், தேவர்களின் தலைவனுடைய வசிப்பிடத்தின் அழகையும், காந்தியையும் விஞ்சும் வகையில் பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இடமாக மாற்றினார்" {என்றார் பீஷ்மர்}.(70)
அநுசாஸனபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 70
ஆங்கிலத்தில் | In English |