Chyavana gratified with Kusika! | Anusasana-Parva-Section-54 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 54)
பதிவின் சுருக்கம் : மாய மாளிகையையும், பல அற்புதக் காட்சிகளையும் கண்ட மன்னன் குசிகன்; தன் மனைவியிடம் முனிவரின் பெருமைகளைச் சொன்னது; குசிகனின் எண்ணங்களை மனத்தால் அறிந்த சியவனர் அவனுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த இரவு கடந்ததும், விழித்தெழுந்த அந்த உயர் ஆன்ம மன்னன் {குசிகன்} தன் காலைச் சடங்குகளைச் செய்தான். தன் வசிப்பிடமாக முனிவரால் {சியவனரால்} தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காட்டுக்கு அவன் தன் மனைவியின் துணையுடன் சென்றான்.(1) அங்கே வந்ததும் அந்த ஏகாதிபதி {குசிகன்}, முற்றிலும் பொன்னாலானதும் அரண்மனை போன்றதுமான ஒரு மாளிகையைக் கண்டான். ரத்தினங்களாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் ஆன ஆயிரம் தூண்களைக் கொண்ட அது {மாளிகை} கந்தர்வர்களின் நீர்மாடக்கூடம் போல இருந்தது[1].(2) குசிகன், அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக வடிவமைப்புக்கான சான்றுகளைக் கண்டான். மேலும் அவன் அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைகளையும், தாமரைகளுடன் கூடிய தடாகங்களையும் அங்கே கண்டார்;(3) ஓ! பாரதா, விலைமதிப்புமிக்க, ஆச்சரியகரமான பொருட்கள் நிறைந்தவையும், வாயில்கள் மற்றும் தோரணங்களோடு கூடியவையுமான மாளிகைகளையும் கண்டான். பொன்வயல்களுக்கு ஒப்பான வகையில் செழித்து வளர்ந்த புற்களுடன் கூடிய திறந்தவெளிகளையும், இடங்களையும் அங்கே கண்டான்.(4)
[1] "எப்போதும் மாறிக் கொண்டிருப்பவையும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நொடிக்கும் ஒரு வடிவத்தை வெளிப்படுத்துபவையும், பிற்பகலிலும், மாலையிலும் தோன்றுபவையுமான அழகிய மேகத்திரள்களே கந்தர்வர்களின் வசிப்பிடங்கள் அல்லது மாடமாளிகைகள் என்று கருதப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஹகாரங்கள் {ஒட்டுமாமரங்கள்}, கேதகங்கள் {தாழைகள்}, உத்தாலகங்கள் {குறும்பலா}, தவங்கள், அசோகங்கள், மலரும்நிலையில் உள்ள குந்தங்கள் {குறுக்கத்தி மரங்கள்}, அதிமுகங்களையும் {முல்லைக்கொடிகள்} அவன் கண்டான்.(5) சம்பகங்கள் {சண்பக மரங்கள்}, திலகங்கள் {திலகமரங்கள்}, பவ்யங்கள் {பலா மரங்கள்}, பனசங்கள் {மகிழ மரங்கள்}, வியாஞ்ஜுலங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணீகாரங்களையும் {கொன்றைமரங்கள்} அவன் அங்கே கண்டான்.(6) அழகாக வளர்ந்திருக்கும் சியாமங்கள், வாரணபுஷ்பங்கள் அஷ்டபடிகம் என்றழைக்கப்படும் கொடிகள் பலவற்றையும் மன்னன் கண்டான்.(7) மேலும் அம்மன்னன், பல்வேறு வகைத் தாமரங்களைப் பேரழகுடன் மலரும் மரங்களையும் (!), ஒவ்வொரு பருவகாலத்திற்கும் உரிய மலர்களையும் சுமக்கும் சில மரங்களையும் அங்கே கண்டான்[2]. தெய்வீகத்தேர்களையோ, அழகிய மலைகளையோ போலத் தெரிந்த பல மாளிகைகளையும் அவன் கவனித்தான்.(8)
[2] கும்பகோணம் பதிப்பில், "எக்காலத்திலும் பூத்திருக்கும் தாமரைக் குளங்களையும், கருநெய்தல் குளங்களையும், தேவவிமானங்களுக்கும், மலைகளுக்கும் ஒப்பான மாளிகைகளையும் கண்டான்" என்றிருக்கிறது.
ஓ! பாரதா சில இடங்களில் குளிர்ந்த நீர் நிறைந்த தடாகங்களும், வேறு சில இடங்களில் வெண்ணீர் நிறைந்த தடாகங்களும் இருப்பதைக் கண்டான். பல்வேறு வகைச் சிறந்த இருக்கைகளும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளும்,(9) பொன் மற்றும் இரத்தினங்களால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான துணிகள் மற்றும் போர்வைகள் விரிக்கப்பட்டவையுமான கட்டில்களும் அங்கே இருந்தன. நன்கு சமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஆயத்தமாக உணவு வகைகளும், பானங்களும் அங்கே இருந்தன.(10) பேசும் கிளிகள், பெண் கிளிகள், பிரிஞ்சராஜங்கள் {வண்டுகள்}, கோகிலங்கள் {குயில்கள்}, சதபத்ரங்கள் {மரங்குத்திகள்}, கோயஷ்டிகங்கள் {நாரைகள்}, குக்குபங்கள் {காட்டுக் கோழிகள்},(11) மயில்கள், சேவல்கள், தாத்யுஹங்கள் {குருட்டுக் காக்கைகள்}, ஜீவஜீவகங்கள் {கவுதாரிகள்}, சக்கோரங்கள், குரங்குகள், அன்னங்கள், சாரசங்கள் {கொக்குகள்}, சக்கரவாகங்கள் {வாத்துகள்} ஆகியன அங்கே இருந்தன.(12)
ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியாக இருக்கும் அப்சரஸ்களும், மகிழ்ச்சியான கந்தர்வக்கூட்டங்களும் ஆங்காங்கே இருப்பதை அவன் கண்டான்.(13) வேறு சில கந்தர்வர்கள் தங்கள் அன்புக்குரிய மனைவிகளுடன் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். மன்னன் சில வேளைகளில் இந்தக் காட்சிகளைக் கண்டான், சில வேளைகளில் அவனால் காண முடியவில்லை (ஏனெனில் அவை அவனது கண்களுக்கு முன்னால் தோன்றி மறைபவையாக இருந்தன).(14) மென்மையான குரலிசைகளையும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களைத் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் ஆசான்களின் இனிய குரல்களையும் அந்த ஏகாதிபதி கேட்டான். தடாகங்களில் விளையாடும் வாத்துகளின் இணக்கமான கொக்கரிப்புகளையும் கேட்டான்.(15)
இத்தகைய அழகிய காட்சிகளைக் கண்ட மன்னன் தனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினான், "இது கனவா? இவை யாவும் என் மனத்தின் மயக்கத்தால் ஏற்படுகின்றனவா? அல்லது இவையனைத்தும் உண்மைதானா?(16) ஓ!, நான் என் பூலோகவாசத்தைக் கைவிடாமலேயே சொர்க்கத்தின் இன்பத்தை அடைந்துவிட்டேன். ஒருவேளை இஃது உத்தரக் குருக்களின் புண்ணிய நாடா? அல்லது அமராவதி என்றழைக்கப்படும் தேவர்த்தலைவனின் வசிப்பிடமா?(17) ஓ! காண்பதற்கினிய அற்புதக் காட்சிகளைப் பார்க்கிறேன்" {என்று நினைக்கத் தொடங்கினான்}. இவ்வகையில் நினைத்த அந்த ஏகாதிபதி இறுதியாக அந்த முதன்மையான முனிவரை {சியவனரைக்} கண்டான்.(18) ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அமைக்கப்பட்ட தூண்களுடன் கூடிய அந்தப் பொன்மாளிகையில் ஒரு விலைமதிப்புமிக்கச் சிறந்த படுக்கையில் பிருகுவின் மகன் {சியவனர்} கிடந்தார்.(19) தன் மனைவியுடன் கூடிய மன்னன், மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் முனிவர் கிடந்த படுக்கைக்குச் சென்றான். எனினும், சியவனர் தாம் கிடந்த படுக்கையுடன் சேர்ந்து விரைவில் மறைந்துபோனார்.(20)
மன்னன் காட்டின் மற்றொரு பகுதியில், அம்முனிவர் குசப்புல்லாலான விரிப்பில் {தர்ப்பாஸனத்தில்} அமர்ந்து கொண்டு, மனத்தில் சில உயர்ந்த மந்திரங்களை உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(21) இவ்வாறே அம்முனிவர் தமது யோக சக்தியால் மன்னனை மலைப்படையச் செய்தார். அந்தக் கணத்திலேயே அந்த இனிய காட்டில் இருந்த அப்சரஸ் கூட்டங்களும், கந்தர்வக்கூட்டங்களும், அந்த அழகிய மரங்கள் அனைத்தும் மறைந்தன.(22) கங்கையின் கரை எப்போதும் போன்ற அமைதியை அடைந்து, குசப்புற்களாலும், எரும்புப்புற்றுகளாலும் மறைந்திருக்கும் பழைய தன்மையை அடைந்தது.(23) மன்னன் குசிகன், அந்த அற்புதக் காட்சியையும், உடனே அது மறைந்து போனதையும் தன் மனைவியுடன் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(24)
மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்கூடிய அம்மன்னன் தன் மனைவியிடம், "ஓ! இனியவளே, எங்கும் காண முடியாத இனிமையான காட்சிகள் பலவற்றை நாமிருவரும் கண்டோம்.(25) இவையனைத்தும் பிருகு மகனின் {சியவனரின்} அருளாலும், அவருடைய தவப் பலத்தாலும் நடைபெறுகிறது. ஒருவன் தன் கற்பனையில் காணும் அனைத்தையும் தவங்களின் மூலம் அடைய முடிகிறது.(26) மூவுலகங்களின் ஆட்சியுரிமையைவிடத் தவங்கள் மேன்மையானவை. நன்கு செய்யப்பட்ட தவங்களின் மூலம் விடுதலையையே {முக்தியையே} அடைய முடியும். உயர் ஆன்மா கொண்டவரும், தெய்வீகமானவருமான முனிவர் சியவனருடைய தவங்களின் வலிமையைப் பார். அவர் விரும்பினால் (இப்போது இருப்பதைத் தவிர இன்னும்) வேறு உலகங்களையும் உண்டாக்க முடியும்.(27,28) புனிதமான வாக்கு, புத்தி மற்றும் செயல்களை அடைவதற்காக மட்டுமே இவ்வுலகில் பிராமணர்கள் பிறக்கிறார்கள். சியவனரைத் தவிர வேறு யாரால் இவை அனைத்தையும் செய்ய முடியும்?(29) அரசுரிமையை எளிதில் அடைந்துவிடலாம். ஆனால் பிராமண நிலையானது அடைய முடியாததாகும். ஒரு பிராமணரின் பலத்தின் மூலமே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளைப் போல நாம் ஒரு தேரில் பூட்டப்பட்டோம்" என்றான்.(30)
மன்னனின் மூளையில் தோன்றிய இந்நினைவுகளைச் சியவனர் அறிந்தார். மன்னனின் சிந்தனைகளை உறுதி செய்து கொண்ட முனிவர் அவனிடம் {குசிகனிடம்} "விரைவாக இங்கே வா" என்று சொன்னார்.(31)
இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும், ராணியும் பெரும் தவசியை அணுகி வழிபாட்டுக்குத்தகுந்த அவரிடம் தலைவணங்கி நின்றனர்.(32) ஓ! மனிதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு ஆசிகூறி அம்மன்னனுக்கு ஆறுதல் அளித்து, "இந்த இருக்கையில் அமர்வாயாக" என்றார்.(33)
இதன் பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பிருகுமகன் {சியவனர்} எவ்வகை வஞ்சனையோ, பொய்மையோ இன்றி மென்மையான சொற்கள் பலவற்றால் மன்னனை நிறைவடையச் செய்து,(34) "ஓ! மன்னா, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட அறிவுப்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும் நீ முற்றிலும் அடக்கியிருக்கிறாய். அதன் காரணமாகவே நான் உனக்காகத் தயாரித்த கடுஞ்சோதனைகளில் இருந்து சிறுதீங்குமின்றி நீ வெளியேறியிருக்கிறாய்.(35) ஓ! மகனே, வாக்குடைய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டுத் துதிக்கப்பட்டேன். உன்னிடம் எப்பாவமும் இல்லை, மிகச் சிறிய பாவமும் உன்னிடம் இல்லை.(36) ஓ! மன்னா, எனக்கு விடை கொடுப்பாயாக, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே இப்போது திரும்பிச் செல்லப் போகிறேன். ஓ! ஏகாதிபதி, நான் உன்னிடம் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குத் தரத் தயராக இருக்கும் வரத்தை ஏற்பாயாக" என்றார்.(37)
குசிகன் {சியவனரிட, "ஓ! புனிதமானவரே, நெருப்புக்கு மத்தியில் வசிப்பவனைப் போலவே நான் உமது முன்னிலையில் இருந்தேன். ஓ! பிருகு குலத்தின் தலைவரே, நான் இன்னும் எரியாமல் இருப்பதே போதுமானதாகும்.(38) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, இதுவே நான் அடைந்த உயர்ந்த வரமாகும். ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததும், நானும் என் குலம் அழியாமல் மீட்டதும் என் வழக்கில் சிறந்த வரங்களாகும்.(39) ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளுக்கான குறிப்பிடத்தகுந்த சான்றாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்வின் இலக்கு நிறைவேறியது. என் அரசுரிமைக்கான கதியாகவும் இதையே நான் கருதுகிறேன். என் தவங்களின் உயர்ந்த கனியாகவும் நான் இதையே கருதுகிறேன்.(40) ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, நீர் என்னிடம் நிறைவடைந்திருந்தால் என் மனத்தில் உள்ள ஐயங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(41)
அநுசாஸனபர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |