Boon granted by Chyavana! | Anusasana-Parva-Section-55 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 55)
பதிவின் சுருக்கம் : தன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்...
சியவனர் {மன்னன் குசிகனிடம்}, "நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்றார்.(1)
குசிகன் {முனிவர் சியவனரிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பிருகுவின் மகனே, நீர் என்னிடம் நிறைவடைந்தீரானால், என் அரண்மனையில் சில காலம் நீர் வசித்த நோக்கத்தை எனக்குச் சொல்வீராக, அதை நான் கேட்க விரும்புகிறேன். என்னால் உமக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் பக்கம் திரும்பாமல் இருபத்தோரு நாட்கள் உறங்கியதில் உமது நோக்கம் என்ன?(2) மேலும், ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டுச் சென்றது ஏன்?(3) மேலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமல் ஏன் மறைந்தீர்? பிறகும் மீண்டும் ஏன் மறைந்தீர்? ஓ! கல்விமானான பிராமணரே, முன்பைப் போலவே மீண்டும் இருபத்தோரு நாட்கள் ஏன் படுக்கையில் கிடந்து உறங்கினீர்?(4) உமது நீராட்டத்திற்காக உம் மீது நாங்கள் எண்ணெய் பூசியதும் என்ன காரணத்தினால் நீர் சென்றுவிட்டீர்? பல்வேறு வகையான உணவு வகைகளை என் அரண்மனையில் திரட்டச் செய்துவிட்டு, அதன்பிறகு தீயின் துணையுடன் அவற்றை ஏன் எரித்தீர்?(5)
திடீரென என் தேரில் என் நகரில் நீர் செய்த பயணத்திற்கான காரணம் என்ன? அவ்வளவு செல்வத்தைக் கொடையளித்ததில் உமது நோக்கம் என்ன? உமது யோக பலத்தால் உண்டான காட்டில் உள்ள அதிசயங்களை எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(6) உண்மையில், ஓ! பெருந்தவசியே, பொன்னாலான மாட மாளிகைகள் பலவற்றையும், ரத்தினங்கள் மற்றும் கற்களாலான சட்டங்களால் தாங்கப்படும் படுக்கைக்ள பலவற்றையும் எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(7) அந்த அதிசயங்கள் அனைத்தும் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போனது ஏன்? இவை யாவற்றின் காரணங்களையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ!பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உமது செயல்கள் இவ்வளவையும் நினைத்து நான் மீண்டும் மீண்டும் திகைப்படைகிறேன்.(8) உம்மில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையும் நான் காணத்தவறுகிறேன். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, உமது செயல்கள் அனைத்தையும் குறித்த உண்மைகளை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {குசிகன்}.(9)
சியவனர் {மன்னன் குசிகனிடம்}, "நான் செய்த இச்செயல்கள் அனைத்தையும் என்னைச் செய்யத் தூண்டிய காரணங்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, உன்னால் கேட்கப்பட்டுப் பிறகு உன்னைத் தெளிவடையச் செய்ய என்னால் மறுக்க முடியாது.(10) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பெரும்பாட்டனான பிரம்மன் சில வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மன்னா, நான் அவற்றைக் கேட்டேன், அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(11) {பிரம்மன்}, "பிரம்ம, க்ஷத்திரிய சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவால் என் குலத்தில் கலப்பு நேரப் போகிறது" {என்றான் பிரம்மன்}[1]. ஓ! மன்னா, உன் பேரன் பெரும் சக்தியும் பலமும் கொண்டவனாக இருப்பான்.(12) இதைக் கேட்டதும், உன் குலத்தை அழிக்கும் தீர்மானத்துடன் நான் இங்கே வந்தேன். ஓ! குசிகா, உண்மையில் உன் குலத்தை முற்றாக அழித்து, உன் வழித்தோன்றல்கள் அனைவரையும் சாம்பலாக்கவே நான் வந்தேன்[2].(13) ஓ! ஏகாதிபதி, இந்நோக்கத்தால் தூண்டப்பட்டு உன் அரண்மனைக்கு வந்த நான் உன்னிடம், "நான் ஒரு நோன்பை நோற்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டு கடமையுணர்வுடன் தொண்டு செய்வாயாக" என்றேன்.(14) எனினும் உன் வீட்டில் நான் வசித்திருந்தபோது, உன்னிடம் நான் எந்தக் களங்கத்தையும் காணத் தவறினேன். ஓ! அரசமுனியே, அந்தக் காரணத்தினால்தான் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். இல்லையெனில் இறந்தோருடன் நீ ஏற்கனவே கணக்கிடப்பட்டிருப்பாய்.(15)
[1] "பிருகுவின் குலத்தில் யாரோ ஒருவன் க்ஷத்திரியனாகப் போகிறான் என்றும், மேலும் குசிகனின் குலத்தில் இருந்து வரும் களங்கத்தின் விளைவால் அந்நிகழ்வு ஏற்படும் என்பதையும் சொல்கிறான். இதுவே இங்குச் சொல்லப்படும் முழுமையான மறைகுறிப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், "முன்னம் தேவர்களின் கூட்டத்தில் பிரம்மா பேசினதை நான் கேட்டிருந்தேன். அதை நான் சொல்லுகிறேன்; கேள். பிராம்மணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் பகை நேர்ந்து இவ்விரு குலங்களுக்கும் கலப்பு நேரிடப்போகிறதாம். ராஜனே, உன் பேரன் பிரம்ம தேஜஸும் பராக்கிரமமுமுள்ளவனாக உண்டாகப் போகிறானாம். இதைக் கேட்ட பின் என் குலத்தைக் காப்பதற்காகக் குசிக வம்சத்தையழிக்கக் கருதி உன் குலத்தையெரிக்க எண்ணங்கொண்டு உன்னிடம் நான் வந்தேன்" என்றிருக்கிறது.
இந்தத் தீர்மானத்துடன், நானே எழுவதற்கு முன் யாராவது என்னை விழிப்படையச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இருபத்தோரு நாட்கள் உறங்கினேன்.(16) எனினும், நீயும் உன் மனைவியும் என்னை விழிப்படையச் செய்யவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன்.(17) படுக்கையில் இருந்து எழுந்து உங்களிடம் ஏதும் பேசாமலேயே நான் அந்த அறையை விட்டு வெளியே சென்றேன். ஓ! ஏகாதிபதி, நீ என்னைக் கேட்பாய், அதனால் உன்னைச் சபிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே நான் அதைச் செய்தேன்.(18) பிறகு நான் என்னை மறைத்துக் கொண்டு, உன் அரண்மனையின் ஓர் அறையில் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டு மீண்டும் இருபத்தோரு நாட்கள் யோகத்துயில் கொண்டேன்.(19) என்னைத் தூண்டிய நோக்கம் இதுதான். பசியாலும், களைப்பாலும் கோபமடையும் நீங்கள் இருவரும் நான் விரும்பாததைச் செய்வீர்கள் என்று நினைத்தேன். இந்த நோக்கத்துடன்தான் நான் உன்னையும் உன் மனைவியையும் பசியால் பீடிக்கச் செய்தேன்.(20)
எனினும், ஓ! மன்னா, உன் இதயத்தில் சிறு கோப உணர்ச்சியோ, எரிச்சலோ எழுவில்லை. ஓ! ஏகாதிபதி இதனால் நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.(21) பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றுக்குத் தீ மூட்டியபோது, அதைக் கண்டு நீயும் உன் மனைவியும் கோபமடைவீர்கள் என்று நினைத்தேன். எனினும், என்னுடைய அந்தச் செயலையும் நீங்கள் பொறுத்தீர்கள்.(22) பிறகு, ஓ! ஏகாதிபதி, தேரில் ஏறிக் கொண்டு உன்னிடம், "நீயும், உன் மனைவியும் என்னைச் சுமப்பீராக" என்றேன். ஓ! மன்னா, நான் சொன்னதை நீங்கள் சிறு தயக்கமுமின்றிச் செய்தீர்கள். இதனால் நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் கொடுத்த செல்வக் கொடைகளும் உங்கள் கோபத்தைத் தூண்டவில்லை.(23,24) ஓ! மன்னா, உன்னிடம் நிறைவடைந்த நான், நீயும் உன் மனைவியும் இங்கே கண்ட அந்தக் காட்டை என் யோக பலத்தின் உதவியால் உண்டாக்கினேன். ஓ! ஏகாதிபதி, நான் கொண்டிருந்த நோக்கத்தைக் கேட்பாயாக.(25)
உன்னையும், உன் ராணியையும் நிறைவடையச் செய்வதற்காக உன்னை நான் சொர்க்கத்தில் ஒரு பார்வை காணச் செய்தேன். ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டில் நீ கண்ட அனைத்துப் பொருட்களும் சொர்க்கத்தின் முன்சுவையாகும்.(26) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீயும் உன் மனைவியும் பூமிசார்ந்த உடல்களைக் கொண்டிருந்தாலும், உங்களைச் சில காலம் சொர்க்கத்தின் காட்சிகள் சிலவற்றைக் காணும்படி செய்தேன்.(27) தவங்களின் பலத்தையும், அறத்திற்காகச் சேமிப்பில் இருக்கும் வெகுமதியையும் காட்டுவதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. ஓ! ஏகாதிபதி, அந்த இனிமைநிறைந்த பொருட்களைக் கண்டதும் உன் இதயத்தில் எழுந்த ஆசையை நான் அறிவேன்.(28) ஓ! பூமியின் தலைவா, பூமியின் அரசுரிமையையும், சொர்க்கத்தின் அரசையும் அலட்சியம் செய்து, பிராமணத் தன்மையையும், தவங்களின் தகுதியையும் நீ அடைய விரும்பினாய்.(29) ஓ! மன்னா, இதையே நீ நினைத்தாய். பிராமண நிலையை அடைவது மிகக் கடினமாகும்; பிராமணனான பிறகு, ஒரு முனிவரின் நிலையை அடைவது மிகக் கடினமாகும்; முனிவரான பிறகு ஒரு தவசியாவது மிகக் கடினமாகும்.(30)
நான் உனக்குச் சொல்கிறேன், உன் ஆசை நிறைவடையும். ஓ! குசிகா, உன் பெயரால் {கௌசிகர் [விஷ்வாமித்ரர்] என்று} அழைக்கப்படும் பிராமணன் ஒருவன் உன்னில் இருந்து எழுவான். உன்னிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவன் பிராமண நிலையை அடைவான்.(31) ஓ! ஏகாதிபதி, உன் பேரன், பிருகுக்களின் சக்தியின் மூலம் நெருப்பின் காந்தியுடன் கூடிய ஒரு தவசியாக இருப்பான்.(32) அவன் மனிதர்கள் அனைவருக்கும், மூவுலகங்களில் வசிப்போருக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுவான். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(33) ஓ! அரச முனியே, உன் மனத்தில் இப்போது இருக்கும் அந்த வரத்தை ஏற்பாயாக. நான் விரைவில் புனித நீர்நிலைகள் அனைத்திற்கும் பயணம் புறப்பட {தீர்த்த யாத்திரை செல்ல} இருக்கிறேன். காலம் கடந்து போகிறது" என்றார் {சியவனர்}.(34)
குசிகன், "ஓ! பெருந்தவசியே, என் வழக்கில் நீர் என்னிடம் நிறைவடைந்திருப்பதே எனக்கு உயர்ந்த வரமாகும். நீர் சொன்னது நடக்கட்டும். ஓ! பாவமற்றவரே, என் பேரன் ஒரு பிராமணனாகட்டும்.(35) உண்மையில், ஓ! புனிதமானவரே, பிராமணத்வ நிலை என் குலத்தைப் பற்றட்டும். நான் இந்த வரத்தையே கேட்கிறேன். ஓ! புனிதமானவரே, மீண்டும் நான் உம்மை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(36) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, பிராமணத்வ நிலை எவ்வழியில் என் குலத்தைப் பற்றும்? எவன் என் நண்பனாக இருப்பான்? என் அன்பையும், மதிப்பையும் எவன் பெறுவான்?[3]" என்று கேட்டான் {குசிகன்}.(37)
[3] "பிருகு குலத்தைச் சார்ந்த எந்த மனிதன் தன் குலத்துக்கான இந்த உயர்ந்த நன்மையை அளிப்பார் என்பதை அறிய குசிகன் விரும்புவதாகவே இதன் பொருள் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "என் குலத்திற்குப் பிராம்மணத்வம் எப்படி வரும்? எவன் என்னுடைய குலத்தில் பிறக்கப் போகிறான்? உம்மால் பிராமணனென்று நினைக்கப்படுகிறவன் எவனென்பதை மறுபடியும் நீர் விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "என் குலம் பிராமணத்வ நிலையை எவ்வாறு அடையும்? எவன் என் உறவினனாவான்? நான் எவரைக் கௌரவிப்பேன்?" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |