The Birth of Vishwamithra and Parasurama! | Anusasana-Parva-Section-56 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 56)
பதிவின் சுருக்கம் : பிருகு குலத்திலும், குசிக குலத்திலும் நேரப்போகும் வர்ணக் கலப்புக் குறித்துக் குசிகனிடம் சொன்ன சியவனர்; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பை முன்கூட்டியே அறிவித்தது...
சியவனர் {மன்னன் குசிகனிடம்*}, "ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! ஏகாதிபதி, உன் குலத்தை அழிப்பதற்காக நான் இங்கே வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நிச்சயம் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.(1) ஓ! மன்னா, வேள்விக் காரியங்களில் க்ஷத்திரியர்களுக்குப் பிருகு மகன்களின் துணை எப்போதும் வேண்டும் என்பது நன்கறியப்பட்டதே. தடுக்கப்பட முடியாத அளவுக்கான விதியின் மூலம் க்ஷத்திரியர்களும், பார்க்கவர்களும் வீழப் போகிறார்கள்.(2) ஓ! மன்னா, பிருகுவின் வழித்தோன்றல்கள் அனைவரையும் க்ஷத்திரியர்கள் கொல்லப் போகிறார்கள். விதி விதிக்கும் விதியால் பீடிக்கப்படும் அவர்கள் தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளையும் விட்டுவிடாமல் பிருகு குலத்தை அழிக்கப் போகிறார்கள்.(3)
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்
அவுர்வன் {ஔர்வன்} என்ற பெயரில் பிருகு குலத்தில் ஒரு முனிவன் தோன்றுவான். பெருஞ்சக்தியுடன் கூடிய அவன் நிச்சயம் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் இருப்பான்.(4) அவன் மூன்று உலகங்களையும் எரிக்கப் போதுமான அளவுக்குக் கோபத்தை வளர்ப்பான். மலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய மொத்த உலகத்தையும் சாம்பலாகக் குறைக்கத்தக்கவனாக அவன் இருப்பான்.(5) சிறிது காலத்திற்குப் பிறகு அந்தக் கோப நெருப்பின் தழல்களை, கடலில் உலவும் குதிரையின் {வடவையின்} வாயில் வீசித் தணிக்கப் போகிறான்.(6) அவன் {ஔர்வன்} ரிசீகன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். ஓ! பாவமற்றவனே, மொத்த ஆயுத அறிவியலும் உடல்கொண்ட வடிவத்துடன் அவனிடம் வந்து சேரும்.(7) விதி விதிக்கும் விதியின்படி மொத்த க்ஷத்திரிய குலத்தையும் அழிப்பதற்காக அவனிடம் வந்து சேரும். உள்ளொளியின் மூலம் அந்த அறிவியலைப் பெற்றுக் கொள்ளும் அவன், உயர் ஆன்மா கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான அவனது மகன் ஜமதக்னிக்குத் தன் யோக பலத்தின் மூலம் அதை {அந்த ஆயுத அறிவியலைக்} கொடுப்பான். அந்தப் பிருகு குலப் புலியும் {ஜமதக்னியும்} அதைத் தன் மனத்தில் தாங்குவான்.(8,9)
ஓ! அற ஆன்மா கொண்டவனே, ஓ! பாரதர்களின் தலைவனே, ஜமதக்னி உன் குலத்தின் {குசிக குலத்தின்} மகிமையைப் பரவச் செய்வதற்காக அக்குலத்தில் ஒரு பெண்ணை மணப்பான்.(10) காதியின் மகளும், உன் பேத்தியுமானவளைத் தன் மனைவியாகக் கொள்ளும் அந்தப் பெரும் தவசி {ஜமதக்னி}, க்ஷத்திரிய வித்தகங்களுடன் கூடிய ஒரு மறுபிறப்பாள மகனை {பரசுமாரமனைப்} பெறுவான்.(11) உன் குலத்தில் பிராமணக் குணங்களுடன் கூடிய க்ஷத்திரியனாக ஒரு மகன் {விஷ்வாமித்திரன்} பிறப்பான். பேரறத்துடன் கூடிய அவன் காதியின் மகனாக {விஷ்வாமித்ரனாக} இருப்பான். விஷ்வாமித்ரன் என்ற பெயரில் அறியப்படும் அவன், தேவர்க்காசானான பிருஹஸ்பதிக்கு இணையான சக்தி கொண்டவனாகக் கருதப்படுவான்.(12) சிறப்புமிக்க ரிசீகனே, பெரும் தவங்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியனை {விஷ்வாமித்ரனை} உன் குலத்திற்குக் கொடுப்பான். (பிருகு குலத்தில் ஒரு க்ஷத்திரியன் மற்றும் உன் குலத்தில் ஒரு பிராமணன் என்று) மகன்களைப் பரிமாறிக் கொள்ளும் இக்காரியத்திற்கு இரு பெண்களே காரணமாக இருப்பார்கள்.(13) இவை யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணைப்படியே நடந்தேறும். இஃது ஒருபோதும் வேறுவகையாகாது. உன்னில் இருந்து மூன்றாம் வழித்தோன்றலைப் பிராமணத்வம் என்ற நிலை பற்றும். (திருமண உறவின் மூலம்) நீ பார்க்கவர்களுக்கு உறவினனாவாய்" என்றார் {சியவனர்}".(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம தவசியான சியவனர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் குசிகன் இன்பத்தால் நிறைந்து பின்வரும் சொற்களில் பதிலுரைத்தான்.(15) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உண்மையில் அவன், "அப்படியே ஆகட்டும்" என்றான். பெருஞ்சக்தியுடன் கூடிய சியவனர் மீண்டும் மன்னனிடம் பேசி,(16) ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவனைத் தூண்டினார். மன்னன், "மிக்க நன்று. ஓ! பெரும் தவசியே, என் விருப்பம் கனியும் நிலையை நான் உம்மிடம் இருந்து பெறுவேன்.(17) என் குலம் பிராமணத்வ நிலை கொண்டதாகட்டும். அஃது எப்போதும் தன் இதயத்தில் அறத்தை நிலைநிறுத்திக் கொள்ளட்டும்" என்றான். இவ்வாறு வேண்டப்பட்ட தவசி சியவனர், மன்னனின் வேண்டுதலை அருளி,(18) அந்த ஏகாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு தாம் எண்ணியிருந்த புனிதநீர்நிலைகளுக்கான பயணத்திற்குப் புறப்பட்டார். ஓ! பாரதா, பிருகுக்களும், குசிகர்களும் {கௌசிகர்களும்} எவ்வாறு திருமணத்தின் மூலம் இணைந்தனர் என்பது குறித்த உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! மன்னா, முனிவர் சியவனர் சொன்னவாரே அனைத்தும் நடந்தன. (பிருகு குலத்தில்) ராமர் {பரசுராமர்} பிறப்பும், (குசிக (கௌசிக) குலத்தில்) விஷ்வாமித்ரர் பிறப்பும் சியவனர் குறிப்பிட்ட வழியிலேயே நடந்தேறின" {என்றார் பீஷ்மர்}.(20)
அநுசாஸனபர்வம் பகுதி – 56ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |