Penances and gifts! | Anusasana-Parva-Section-57 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 57)
பதிவின் சுருக்கம் : தவம், கொடை ஆகியவற்றின் சிறப்புக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, உமது சொற்களைக் கேட்டு நான் திகைப்படைகிறேன். பெருஞ்செழிப்பைக் கொண்டிருந்த எண்ணற்ற மன்னர்கள் அனைவரும் இப்போது இந்தப் பூமியில் இல்லாததை நினைத்து என் இதயம் துயரால் நிறைகிறது.(1) ஓ! பாரதரே, ஓ! பாட்டா, நான் பூமியை வென்று, நூற்றுக்கணக்கான நாடுகளை அடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருப்பதை நினைத்து துயரடைகிறேன்.(2) ஐயோ, எங்களால் கணவர்களையும், மகன்களையும், தாய்மாமன்களையும், சகோதரர்களையும் இழந்திருக்கும் முதன்மையான பெண்மணிகளின் அவலநிலை என்னவாக இருக்கும்?(3) எங்கள் உறவினர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளுமான குருக்களைக் கொன்றதால் நாங்கள் தலைகீழாக நரகில் மூழ்கப் போகிறோம். இதில் ஐயமேதும் கிடையாது.(4) ஓ! பாரதரே, நான் என் உடலைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்த விரும்புகிறேன். ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கதியை நோக்கில் கொண்டு நான் உம்மிடம் இருந்து போதனைகளைப் பெற விரும்புகிறேன்" என்றான்".(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம பீஷ்மர், யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தம் புத்தியின் துணையுடன் அவை குறித்துக் கூர்மையாகச் சிந்தித்து யுதிஷ்டிரனுக்கு மறுமொழி கூறினார்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. அது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாகவும், பெரும் புதிராகவும் இருக்கிறது. உயிரினங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது அவை பின்பற்றும் ஒழுக்க வழிகளின் வெகுமதியாக மரணத்திற்குப் பின்னால் அடையும் கதிகள் குறித்துச் சொல்லப் போகிறேன்.(7) ஒருவன் தவங்களின் மூலம் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் தவங்களின் மூலம் புகழை அடைகிறான். ஓ! பலமிக்க மன்னா, ஒருவன் தவங்களின் மூலம் நீண்ட வாழ்நாளையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்.(8) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவங்களின் மூலம் ஞானம், அறிவியல், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, மேனி அழகு, செழிப்பு, அருள் நிலை ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(9) தவங்களின் மூலம் ஒருவன் செல்வத்தை அடைகிறான். பேசாத அமைதி நோன்பை {மௌனவிரதம்} நோற்பதன் மூலம் ஒருவன் மொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான். கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய அனைத்துவகைப் பொருட்களையும் அடைகிறான். தீக்ஷை சடங்கைச் செய்வதன் {வேள்விதீக்ஷை செய்வதன்} மூலம் ஒருவன் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(10)
(சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு தங்கள் வாழ்வைக் கழிப்பவர்கள் நாட்டையும், அரசு உரிமையையும் அடைவதில் வெல்கிறார்கள். செடி மற்றும் மரங்களின் இலைகளைத் தங்கள் உணவாக உண்டு வாழ்வோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) நீரை மட்டுமே உண்டு வாழும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறான். ஒருவன் தனது ஆசானுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் கல்வியை அடைகிறான். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாள்தோறும் சிராத்தங்கள் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளை அடைகிறான்.(12) கீரை மற்றும் காய்கறிகளில் தீக்ஷை {சாக விரதம்} நோற்கும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களை அடைகிறான். புற்கள் மற்றும் துரும்புகளை உண்டு வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேவையான சடங்குகளுடன் மும்முறை நீராடும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான மனைவிகளை அடைகிறான். வெறும் காற்றை மட்டுமே குடிக்கும் ஒருவன் பிரஜாபதியின் உலகவாசத்தை அடைகிறான்.(13)
ஒவ்வொரு நாளும் நீராடி, இரு சந்தி வேளைகளிலும் புனித மந்திரங்களை உரைக்கும் பிராமணன், தக்ஷனின் நிலையை அடைகிறான் {நெடுங்காலம் உயிர்வாழ்வான்}. காடு மற்றும் பாலைவனத்தில் உள்ள தேவர்களை வழிபடுவதன் மூலம் ஒருவன் நாட்டையோ, அரசுரிமையையோ அடைகிறான். நீண்ட உண்ணா நோன்பின் மூலம் உடலைக் கைவிடும் நோன்பை நோற்கும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(14) தவச் செல்வத்துடன் கூடிய ஒருவன் எப்போதும் தன் நாட்களை யோகத்தில் கடத்துவதால், நல்ல படுக்கைகள், இருக்கைகள் மற்றும் வாகனங்களை அடைகிறான். சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைவதன் மூலம் உடலைக் கைவிடும் ஒருவன், பிரம்மலோகத்தில் மதிப்பிற்குரிய பொருளாகிறான்.(15) கடினமாக உள்ள வெறுந்தரையில் {கட்டாந்தரையில்} கிடப்பவர்கள், வீடுகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளை உடுத்துபவர்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணங்களை அடைகிறார்கள்.(16)
இனிமையான சுவைகள் பலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பை ஈட்டுவதில் வெல்கிறான். இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைக் கொண்ட பிள்ளைகளைப் பெறுகிறான்.(17) {நீரில் வசிக்கும்} உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் சில காலம் கழிக்கும் ஒருவன் சொர்க்கத்தின் தேவனாகவே ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வாய்மை பேசும் மனிதன், தேவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதில் வெல்கிறான்.(18) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன், தனது உயர்ந்த சாதனைகளின் விளைவால் பெரும் புகழை ஈட்டுகிறான். கொடூரம் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைகிறான். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், அரசுரிமையையும், பிராமணன் என்ற உயர்ந்த நிலையையும் அடைகிறான்.(19) நீரையும், பிற பானங்களையும் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் உயர்ந்த சாதனையின் விளைவாக ஒருவன் நித்தியமான புகழை ஈட்டுகிறான். உணவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களை அடைகிறான்.(20)
(தீங்கிழைக்காமல் தவிர்ப்பதன் மூலம்) உயிரினங்கள் அனைத்திற்கும் அமைதியான நிலையைக் கொடுக்கும் ஒருவன் ஒவ்வொரு துயரத்தில் இருந்து விடுபடுகிறான். தேவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், தெய்வீக அழகையும் அடைகிறான்.(21) மக்கள் அடிக்கடி செல்லக்கூடியவையும், இருளாக இருப்பவையுமான இடங்களுக்கு விளக்கை அளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல பார்வையை அடைகிறான். நல்ல மற்றும் அழகிய பொருட்களைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் நல்ல நினைவையும், புத்தியையும் அடைகிறான்.(22) நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் பெரும் பரப்பில் பரவியிருக்கும் புகழை அடைகிறான். தலைமுடி மற்றும் தாடிகளை மழிக்காமல் தவிர்ப்பவர்கள் சிறந்த பிள்ளைகளை அடைவதில் வெல்கிறார்கள்.(23) ஓ! பாரதா, நோன்புகள், தீக்ஷை மற்றும் நீராடல்களை (விதிப்படி) பனிரெண்டு ஆண்டுகள் நோற்கும் ஒருவன், திரும்பிவராத வீரர்களால் அடையப்படும் உலகத்தை விட மேன்மையான உலகத்தை அடைகிறான்.(24) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஒருவன் தன் மகளைத் தகுந்த மணமகனுக்குப் பிரம்ம வடிவத்தின் படி அளிப்பதன் மூலம் {திருமணம் செய்து கொடுப்பதன் மூலம்} அவன் ஆண், பெண் பணியாட்களையும், ஆபரணங்களையும், வயல்களையும், வீடுகளையும் அடைகிறான்.(25)
ஓ! பாரதா, வேள்விகள் செய்வது மற்றும் நோன்புகள் நோற்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். கனிகளையும், மலர்களையும் கொடையளிப்பவன் மங்கல ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(26) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய ஆயிரம் பசுக்களைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான். சொர்க்கத்தில் நடந்த தேவர்களின் கூட்டத்தில் இதுவே சொல்லப்பட்டது.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொண்டுகளுடன் கூடியதும், கன்றுடன் சேர்ந்ததுமான ஒரு கபிலைப் பசுவைப் பால் கறப்பதற்கான வெண்கலக் குடத்தோடு கொடையளிப்பவன் பல்வேறு சாதனைகளைச் செய்பவனாகி, அந்தப் பசுவிடம் இருந்து தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், தான் செய்த கொடையின் விளைவால், அந்தப் பசுவின் உடலில் உள்ள முடிகளுடைய எண்ணிக்கையின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து, மறுமையில் (நரகத் துன்பங்களிலிருந்து) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தன் குலத்தின் ஏழாம் தலைமுறை வரை மீட்கிறான்[1].(29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கொம்புளுடன் கூடிய பசுவையும், அதனுடன் சேர்த்து பால் கறப்பதற்கான வெங்கலக் குடத்தையும், தங்கத்தால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியையும், எள்ளையும் {திலதேனுவையும்}, ஒரு தொகை பணத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் மனிதன் வசுக்களின் உலகை அடைகிறான்[2].(30)
[1] "ஏழு தலைமுறை மூதாதையர்களும், ஏழுதலைமுறை வழித்தோன்றல்களும் சேர்த்து மீட்கப்படுவார்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், "பொன்னினால் அலங்கரிகப்பட்ட கொம்புள்ள பசுவைத் தக்ஷிணையோடும், கறக்கிற வெண்கலப் பாத்திரத்தோடும் விலைபெற்ற மேற்போர்வையோடும் பிராம்மணனுக்குக் கொடுப்பவனுக்கும், திலதேனுவை {பசுவின் வடிவிலான எள் குவியலைக்} கொடுப்பவனுக்கும் வஸுக்களின் லோகங்கள் எளிதில் கிடைக்கின்றன" என்றிருக்கிறது.
கடலில் மூழ்கும் மனிதனை ஒரு படகின் பாய்மரம் காற்றைப் பற்றிக் கொண்டு மீட்பதைப் போலவே, பசுவைக் கொடையளிப்பவன் மறுமையில் நரகத்தின் ஆழ்ந்த இருளில் வீழும்போது, இம்மையில் செய்த செயல்களால் அவன் தடுக்கப்படுவான்.(31) தன் மகளைப் பிரம்ம வடிவ திருமண முறையின்படி தகுந்த மனிதனுக்கு அளிக்கும் ஒருவன், அல்லது ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்கும் ஒருவன், அல்லது உரிய சடங்குகளின்படி (ஒரு பிராமணனுக்கு) உணவைக் கொடையளிக்கும் ஒருவன் புரந்தரலோகத்தை அடைவதில் வெல்கிறான்.(32) அனைத்துவகை அறைகலன்களுடன் ஒரு வீட்டை, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அனைத்து வகைச் சாதனைகளையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் உத்தரக் குருக்களின் நாட்டில் ஒரு வசிப்பிடத்தை அடைவான்.(33) வண்டியிழுக்கும் காளைகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான். தங்கத்தைக் கொடையளிப்பது சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. பசும்பொன்னைக் கொடையளிப்பது இன்னும் பெரிய பலனுக்கு வழிவகுக்கிறது.(34) குடையைக் கொடையளிக்கும் ஒருவன் மாட மாளிகையை அடைகிறான். காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல வாகனங்களை அடைகிறான். துணிகளைக் கொடையளிப்பது மேனி அழகைத் தருகிறது, நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் நறுமணமிக்க மனிதனாகிறான்.(35)
ஒரு பிராமணனுக்கு மலர்கள், கனிகள், செடிகள் மற்றும் மரங்களைக் கொடையளிப்பவன், எந்த உழைப்பும் இல்லாமலேயே, அழகிய பெண்கள் மற்றும் அபரிமிதமான செல்வத்துடன் கூடிய மாட மாளிகையை அடைவான்.(36) பல்வேறு வகைச் சுவைகளுடன் கூடிய உணவு மற்றும் பானங்களையும், இன்பத்திற்குரிய பிற பொருட்களையும் கொடையளிப்பவன், அத்தகைய பொருட்களை அபரிமிதமாக அடைவதில் வெல்கிறான். வீடுகள் மற்றும் துணிகளைக் கொடையளிப்பவன் அதே வகைப் பொருட்களைப் பெறுவான். இதில் ஐயமேதும் கிடையாது.(37) மலர்மாலைகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், நீராடலுக்குப் பிறகு மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், மலர் வளையங்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டு, மேனி அழகையும் அடைந்து, பெரும் மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்ட உலகத்தில் இன்பமாக விளையாடுவான்.(38) ஓ! மன்னா, தானியம் சேமித்து வைக்கப்பட்டதும், படுக்கைகள் அமைக்கப்பட்டும், செல்வங்கள் நிரம்பியதும், மங்கலமானதும், இனிமை நிறைந்ததுமான ஒரு வீட்டை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அரண்மனை போன்ற வசிப்பிடத்தை அடைகிறான்.(39) நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டதும், சிறந்த போர்வை விரிக்கப்பட்டதும், தலையணைகளுடன் கூடியதுமான ஒரு நல்ல படுக்கையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளும், இனிமையான குணங்களைக் கொண்டவளுமான ஓர் அழகிய மனைவியை எந்த முயற்சியுமின்றி அடைவதில் வெல்வான்.(30) போர்க்களத்தில் வீரனின் படுக்கையை {வீரசயனம்} ஏற்கும் மனிதன், பெரும்பாட்டனான பிரம்மனுக்கு இணையானவனாவான். இதைவிட உயர்ந்த கதி வேறேதும் இல்லை. இதையே பெரும் முனிவர்கள் அறிவித்திருக்கிறார்கள்" என்றார் {பீஷ்மர்}".(41)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன், தன் பாட்டனின் சொற்களைக் கேட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் கதியை விரும்பினாலும், ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதில் எந்த அருவருப்பையும் அதற்கு மேலும் வெளிக்காட்டவில்லை[3].(42) ஓ! மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு பாண்டுவின் பிற மகன்களிடம் பேசிய யுதிஷ்டிரன், "நமது பாட்டன் சொன்ன சொற்கள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்" என்றான்.(43) இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களுக்கு மத்தியில் இருந்த புகழ்பெற்ற திரௌபதியும் யுதிஷ்டிரனின் சொற்களை மெச்சி, "சரி" என்று சொன்னார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(44)
[3] கும்பகோணம் பதிப்பில், "அவருடைய அந்தச் சொல்லைக் கேட்டு மனமகிழ்ந்த யுதிஷ்டிரர் வீர மார்க்கத்திலேயே விருப்பமுற்றவராகிக் காட்டில் ஆஸ்ரமத்தில் வஸிப்பதைக் கருதவில்லை" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |