Tanks and Trees! | Anusasana-Parva-Section-58 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 58)
பதிவின் சுருக்கம் : மரங்களை நடுதல் மற்றும் குளம் வெட்டல் ஆகியவற்றால் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! குருக்களில் சிறந்தவரே, மரங்களை நடுதல் {தோட்டம் வைத்தல்} மற்றும் குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களை நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பார்வைக்கு இனிமையானதும், வளமிக்கதும், பல்வேறு வகை உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட {காவிக் கற்களினால் விளங்கிக் கொண்டு} இனிமை நிறைந்த காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதும், அனைத்து வகை உயிரினங்கள் வசிப்பதுமான ஒரு நிலமே முதன்மையான இடமாகக் கருதப்படுகிறது.(2) அத்தகைய நிலத்தில ஒரு குறிப்பிட்ட பகுதியே ஒரு குளத்தைத் தோண்டத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்வேறு வகைக் குளங்களை முறையான வரிசையில் நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் (அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நீரைப் பெருகச் செய்யும் நோக்கில்) குளங்களைத் தோண்டுவதால் உண்டாகும் பலன்களையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஒரு குளத்தைத் தோண்டச் செய்யும் மனிதன் மூவுலகங்களிலும் மதிப்புக்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவனாகிறான்.(4) நீர் நிறைந்த ஒரு குளமானது, ஒரு நண்பனின் வீட்டைப் போல ஏற்புடையதும், நன்மையானதும் ஆகும். அது சூரியனையே நிறைவடையச் செய்வதாகும். தேவர்களின் வளர்ச்சியிலும் அது பங்காற்றுகிறது. (தோண்டச் செய்பவனின்) புகழுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அனைத்திலும் அதுவே {குளம் வெட்டுதலே} முதன்மையானதாகும்.(5)
குளம் வெட்டுதல், அறம், பொருள், இன்பம் என்ற முத்தொகைக்கும் பங்காற்றுகிறது[1]. மதிப்பிற்குரிய மனிதர்கள் வசிக்கும் நிலத்தில் ஏற்படுத்தப்படுவதையே முறையாகத் தோண்டப்பட்ட குளமாக ஞானிகள் சொல்கின்றனர். உயரினங்களுக்குத் தேவையான நான்கு காரியங்களுக்கும் தொண்டாற்றுவதே ஒரு குளம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குளங்களே ஒரு நாட்டின் மிகச் சிறந்த எழிலாக அமைகின்றன.(6,7) தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், உரகர்கள், ராட்சசர்கள், மேலும் அசைவற்ற உயிரினங்களும் கூட நீர் நிறைந்த ஒரு குளத்தையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(8) எனவே, குளங்களால் உண்டாகும் பயன்களையும், அவற்றைத் தோண்டச் செய்த மனிதர்களுக்குக் கிட்டும் பலன்களையும் குறித்துப் பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "தடாகம் செய்வதினாலுண்டாகும் புண்ணியம் தர்மார்த்தகாமங்களென்னும் மூன்று புருஷார்த்தங்களின் பலனையும் தருவதென்று அறிஞர் கூறுகின்றனர்" என்றிருக்கிறது.
மழைக்காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்த பலனை அறுவடை செய்கிறான் என்று ஞானிகள் சொல்கின்றனர்.(10) கூதிர்காலத்திலும் {சரத்காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், ஆயிரம் பசுக்களைக் கொடையளித்தவன் இம்மையில் அறுவடையச் செய்த பலனை அடைகிறான்.(11) குளிர் காலத்தில் {ஹேமந்த காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், அபரிமிதமான தங்கத்தைக் கொடையளித்து வேள்வி செய்தவனின் பலனை அடைகிறான்.(12) பனிக்காலத்தில் {சிசிரருது காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன், ஓர் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(13) வசந்த காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் அதிராத்ர வேள்வியைச் செய பலனை அடைகிறான்.(14) கோடைக்காலத்திலும் {க்ரீஷ்மகாலத்திலும்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான் என்று முனிவர்கள் சொல்கிறார்கள்.(15)
எவன் செய்த குளத்தில் பசுக்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வது காணப்படுகிறதோ, எதிலிருந்து அறவோர் நீர் எடுக்கின்றனரோ அந்த மனிதன் தன் குலம் முழுவதையும் காக்கிறான்.(16) எவனுடைய குளத்தில் பசுக்களும், பிற விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றனரோ அந்த மனிதன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(17) ஒருவனுடைய குளத்தில் இருந்து எவ்வளவு நீர் குடிக்கப்படுகிறதோ, நீராடுவதற்காகப் பிறரால் எவ்வளவும் நீர் எடுக்கப்படுகிறதோ, அவ்வள்ளவும் குளத்தைத் தோண்டியவனின் நன்மைக்காகச் சேமிக்கப்பட்டு, மறுமையில் அவன் முடிவிலாத நாட்களுக்கு அவற்றை அனுபவிக்கிறான்.(18) ஓ! மகனே, நீரானது, குறிப்பாக மறுமையில் அடைவதற்கரிதானதாக இருக்கும். நீரைக் கொடையளிப்பது நித்திய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.(19) இங்கே எள்ளைக் கொடையளிப்பாயாக. நீரைக் கொடையளிப்பாயாக. விளக்குகளைக் கொடையளிப்பாயாக. உயிரோடு இருக்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும் நீ உறவினர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பாயாக. மறுமையில் இச்செயல்களை உன்னால் செய்யவே இயலாது.(20)
ஓ! மனிதர்களின் தலைவா, அனைத்துக் கொடைகளையும்விட நீரைக் கொடையளிப்பது உயர்ந்ததாகும். பலனைப் பொறுத்தவரையில் இது பிற கொடைகள் அனைத்திலும் மேலானதாக இருக்கிறது. எனவே, நீ நீரைக் கொடையளிப்பாயாக.(21) இவ்வாறே குளங்கள் வெட்டுவதில் கிட்டும் உயர்ந்த பலன்களை முனிவர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்போது மரங்களை நடுதல் {தோட்டம் அமைத்தல்} குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(22) ஆறு வகை அசைவற்ற பொருட்கள் {தாவரங்கள்} சொல்லப்படுகின்றன. அவை விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்}, லதைகள் {கொடிகள்}, வள்ளிகள் {செடிகள்}, த்வக்ஷாரங்கள் {மூங்கில்}, பல்வேறு வகைத் திரினங்கள் {புற்பூண்டுகள்} ஆகியனவாகும்.(23) இவையே பல்வேறு வகைக் காய்கறிகள் {தாவரங்கள்}. அவற்றை நடுவதால் ஏற்படும் பலனை இப்போது கேட்பாயாக. மரங்களை நடுவதன் மூலம் ஒருவன், மனிதர்களின் உலகில் புகழையும், மறுமையில் மங்கலப் பலன்களையும் அடைகிறான்.(24) அத்தகைய மனிதன், பித்ருக்களின் உலகில் மெச்சி மதிக்கப்படுகிறான். அத்தகைய மனிதன் தேவர்களின் உலகில் வசிப்பவனாக மாறினாலும் அவனுடைய பெயர் மறையாது.(25)
மரங்களை நடும் மனிதன், தனது தந்தை வழி மற்றும் தாய் வழிகளில் உள்ள மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ மரங்களை நடுவாயாக.(26) ஒரு மனிதன் நடும் மரங்களே அவனுடைய பிள்ளைகளாகின்றன. இதில் ஐயமேதும் இல்லை. அத்தகைய மனிதன் இந்த உலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்திற்கு உயர்கிறான். உண்மையில், நித்தியமான அருள் உலகங்கள் பலவும் அவனுடையவை ஆகின்றன.(27) மரங்கள் தங்கள் மலர்களால் தேவர்களையும், தங்கள் கனிகளால் பித்ருக்களையும், தாங்கள் தரும் நிழலால் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன.(28) கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் மரங்களையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(29)
மலர்களையும், கனிகளையும் சுமக்கும் மரங்கள் மனிதர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன. மரங்களை நடுபவன், பிள்ளைகளால் மீட்கப்படும் ஒரு தந்தையைப் போல மறுமையில் மரங்களால் காக்கப்படுவான்.(30) எனவே, தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், குளக்கரைகளில் மரங்களை நட்டுத் தன் பிள்ளைகளைப் போலவே அவற்றை வளர்க்க வேண்டும். அறிவு மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டின்படியும் ஒரு மனிதன் நடும் மரங்கள், அவற்றை நடுபவனின் பிள்ளைகளே ஆகின்றன.(31) ஒரு குளத்தை வெட்டும் பிராமணன், மரங்களை நடுபவன், வேள்விகளைச் செய்பவன் ஆகியோர் அனைவரும் வாக்கில் வாய்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைப் போலவே சொர்க்கத்தில் வழிபடப்படுகிறார்கள்.(32) எனவே, ஒருவன் குளங்களை வெட்டச் செய்து, மரங்களை நடச் செய்து, பல்வேறு வேள்விகளில் தேவர்களை வழிபட்டு வாய்மை பேச வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(33)
அநுசாஸனபர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |