Brahmana worship! | Anusasana-Parva-Section-59 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 59)
பதிவின் சுருக்கம் : பிராமண வழிபாடு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தின் தலைவரே, வேதங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் குறிப்பிடப்படும் கொடைகளில் உமது கருத்தின்படி மிகச் சிறந்தது எது?(1) ஓ! பலமிக்கவரே, இக்காரியத்தில் நான் பேராவலைக் கொண்டுள்ளேன். கொடையளித்தவனின் கொடை மறுமையில் அவனைப் பின்தொடர்வதைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(2)
[1] "யுதிஷ்டிரனின் கேள்வியில் உள்ள வேறுபாட்டை இங்கே உரையாசிரியர் விளக்குகிறார். கொடையளிப்பவனும், கொடைபெறுபவனும் மறுமையில் சந்திக்கவில்லை என்றால், மறுமையிலோ, மறுபிறவியிலோ கொடுக்கப்பட்ட பொருள் எவ்வாறு திரும்ப வரும் என்பதே அவ்வேறுபாடு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அனைத்து உயிரினங்களுக்கும் அன்பையும், பற்றையும் உறுதியளிப்பதும், அனைத்து வகைத் தீங்குகளையும் செய்யாதிருப்பதும், துயரில் இருக்கும் மனிதனுக்கு அன்போடு உதவி செய்வதும், தாகத்துடன் வேண்டுபவனுக்கு வேண்டிய பொருட்களைக் கொடையளிப்பதும்,(3) தன்னால் அளிக்கப்படும் கொடையென்று ஒருபோதும் நினைக்காமலேயே கொடையாளிகளால் கொடுக்கப்படும் கொடைகளும் உயர்ந்த மற்றும் சிறந்த கொடைகளாகும்.(4) தங்கத்தைக் கொடையளிப்பது, பசுவைக் கொடையளிப்பது, பூமியைக் கொடையளிப்பது ஆகிய இவையே பாவம் போக்குபவையாகக் கருதப்படுகின்றன. கொடையளிப்பவனைத் தீயச் செயல்களில் இருந்து இவை காக்கின்றன.(5) ஓ! மனிதர்களின் தலைவா, நீ எப்போதும் அறவோருக்கு அத்தகைய கொடைகளை அளிப்பாயாக. கொடைகள் கொடையளிப்பவனைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை.(6)
தன் கொடைகள் நித்தியமானவையாக இருக்க வேண்டும் என விரும்பும் மனிதன், அனைவராலும் விரும்பப்படும் பொருட்கள் எதையும், தன் வீட்டில் உள்ள சிறந்த பொருட்கள் எதையும் தேவையுள்ளோருக்கு எப்போதும் கொடுக்க வேண்டும்.(7) ஏற்புடைய பொருட்களைக் கொடையளிப்பவனும், பிறருக்கு ஏற்புடையவற்றைச் செய்பவனுமான மனிதன், தனக்கு ஏற்புடைய பொருட்களை அடைவதில் எப்போதும் வெல்கிறான். அத்தகைய மனிதன் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான்.(8) ஓ! யுதிஷ்டிரா, வறியவனும், ஆதரவற்றவனும், உதவியை வேண்டுபவனுமான ஒருவனுடைய விருப்பங்களைப் போலிப் பகட்டுடன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் செய்யாத மனிதன் கொடியவனும், இழிந்தவனுமாவான்[2].(9)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஆதரவற்றவனாகவும், பொருளில்லாதவனாகவும் வந்து யாசிப்பவனுக்கு அகங்காரத்தினால் தன்னாற்கூடிய வரையில் உபகாரம் செய்யாதவன்தான் கொடியவன்" என்றிருக்கிறது.
துயரில் வீழ்ந்திருப்பவனும், ஆதரவற்றவனுமான ஒரு பகைவன் உதவியை வேண்டிக் கேட்கும்போதும், அத்தகைய பகைவனுக்கும் உதவி செய்பவன் உண்மையில் மனிதர்களில் முதன்மையானவனாவான்.(10) இளைத்தவனும், கல்விமானும், ஆதரவேதுமில்லாதவனும், துயரால் பலவீனமடைந்தவனுமான ஒரு மனிதனின் பசியை நிறைவடையச் செய்யும் ஒருவனுக்கு எந்த மனிதனும் (தகுதியில்) இணையாகமாட்டார்கள்.(11) ஓ! குந்தியின் மகனே, மகன்கள் மற்றும் மனைவி இல்லாதவர்களாக, துயரில் மூழ்கியவர்களாக இருந்தாலும் பிறரிடம் எவ்வகை உதவியையும் வேண்டாதவர்களும், நோன்புகளையும், கர்மங்களையும் நோற்பவர்களுமான அறம் சார்ந்த மனிதர்களின் துயரத்தை அனைத்து வழிமுறைகளின் மூலமும், சக்திக்குத் தகுந்த வகையிலும் ஒருவன் எப்போதும் விலக்க வேண்டும்.(12)
(கொடை பெறும் எதிர்பார்ப்பில்) தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆசி கூறாதோரும், மதிப்புக்குத் தகுந்தவர்களும், எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், எவ்வகையிலும் வேண்டாமல் பெறும் பிச்சையை உண்டு வாழ்பவர்களுமான மனிதர்கள்,(13) கடும் நஞ்சுமிக்கப் பெரும் பாம்பாகக் கருதப்படுகிறார்கள். ஓ! பாரதா, அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவர்களிடமிருந்து எப்போதும் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. அவர்கள் முதன்மையான ரித்விக்குகளாத் தகுந்தவர்களாவர். ஒற்றர்கள் மற்றும் முகவர்கள் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பாயாக.(14) ஓ! குருவின் மகனே, தேவையான அனைத்துப் பொருட்களுடனும், பணியாட்கள், நல்ல ஆடைகள், இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பொருட்கள் அனைத்துடனும் கூடிய நல்ல வீடுகளைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதர்களை நீ கௌரவிக்க வேண்டும்.(15) அறச்செயல்களைச் செய்யும் அறவோர், வெகுமதிகளை அறுவடை செய்யும் விருப்பத்தால் இவ்வழியில் செயல்படாமல், தங்கள் கடமை என்ற நோக்கத்தால் உந்தப்பட்டு இத்தகைய கொடைகளை அளிக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, மேற்கண்ட அறவோர், பக்தி மற்றும் நம்பிக்கையின் மூலம் புனிதப்படுத்தப்பட்ட அந்தக் கொடைகளை ஏற்காமல் போகும் வகையில் நல்ல மனிதர்கள் செயல்படக்கூடாது.(16)
கல்வியில் குளித்தவர்களும், நோன்புகளில் குளித்தவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். எவரையும் சாராமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். கடும் நோன்புகளைக் கொண்ட இந்தப் பிராமணர்கள், தங்கள் பயிற்சிகளை எவருக்கும் அறிவிக்காமல், வேத கல்வி மற்றும் தவங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள்.(17) தூய நடத்தை கொண்டோரும், புலனடக்கம் கொண்டோரும், ஆசையைப் பொறுத்தவரையில் தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளோடு எப்போதும் நிறைவாக இருப்பவர்களுமான அந்த மனிதர்களுக்கு நீ எந்தக் கொடைகளை அளித்தாலும், நீ செல்லப் போகும் உலங்கங்கள் அனைத்திலும் உனக்குத் துணையாக இருக்கும் புண்ணியத்தை நீ அடைவாய்.(19) காலையிலும், மாலையிலும் புனித நெருப்புக்குள் முறையாக ஆகுதிகளை ஊற்றுவதன் மூலம் ஒருவன் வெல்லும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாள மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலமும் அதே தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் அறுவடை செய்யலாம்.(19) பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், தக்ஷிணையுடன் கூடியதுமான ஒருவேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. அதுவே வேள்விகள் அனைத்திலும் உயர்ந்ததாகும். நீ கொடையளிக்கும்போது அந்த வேள்வி தடையில்லாமல் பாயட்டும் {நடக்கட்டும்}[3].(20)
[3] "இவ்வேள்வி கொடைகளாலான வேள்வியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதர்களை நோக்கில் கொண்டு செய்யப்படும் வேள்வியில், பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் அத்தகைய மேன்மையான மனிதர்களுக்குப் பக்தியுடனும், வழிபாட்டுடனும் கொடுக்கப்படும் கொடைகளை அர்ப்பணிக்கத் தெளிக்கப்படும் நீரானது, ஒருவன் தேவர்களுக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து அவனை விடுவிக்கிறது[4].(21) கோபவசப்படாதவர்கள் பிறருக்குச் சொந்தமான துரும்பையும் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள், இனிமையான வாக்கை உடையவர்கள் ஆகியோர் உயர்ந்த மதிப்புமிக்க வழிபாட்டைப் பெறத் தகுந்தவர்களாவர்.(22) அத்தகைய மனிதர்களும், (ஆசையிலிருந்து விடுபட்டவர்கள்) பிறரும் கொடுப்பவர்களை மதிப்பதில்லை. அதே போலக் கொடைகளைப் பெறவும் முனைவதில்லை. எனினும், கொடையாளிகள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதைப் போல அவர்களைப் பேணி வளர்க்க வேண்டும். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களிடம் இருந்து ஒருவனுக்குச் சொர்க்கமும், நரகமும் கிடைக்கலாம்[5].(23) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் வேதங்களை அறிந்திருக்கும்போதும், சீடர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்போதும் அவ்வாறு ஆகிறார்கள். க்ஷத்திரிய சக்தியானது ஒரு பிராமணனோடு மோதும்போது அதன் பலத்தை இழக்கிறது என்பதில் ஐயமில்லை.(24)
[4] "அத்தகைய மேன்மையான பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் கொடைகள், ஒருவன் தேவர்களுக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து அவனை விடுவிக்கின்றன. கொடைகளின் நீர் என்பது, ஒரு பொருளைக் கொடுக்கும்போது, "இதை நான் கொடுக்கிறேன்" என்று தர்ப்பையைக் கொண்டு நீர்தெளித்துக் கொடுப்பதைக் குறிக்கிறது. கொடைகளுடன் கூடிய வேள்வியில் இத்தகைய நீரானது பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கும் அர்ப்பணிப்பைப் போன்றதாகும். இத்தகைய வரிகளைப் புரிந்து கொள்வதற்கு வேள்விச் சடங்கு குறித்த ஞானம் அவசியம் தேவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சிரத்தையினால் பரிசுத்தமும், தக்ஷிணையுள்ளதுமாகிய நீ செய்யும் இந்தத் தானமென்னும் யாகம் எல்லா யாகங்களிலும் சிறந்தது. இது எப்போதும் நடக்கட்டும். யுதிஷ்டிர, தகுந்தவர்களுக்குக் கொடுப்பது மஹாதானங்களுக்குச் சமமானது. அவர்களைப் பூஜித்துக் கொடுப்பவன் கடன் தீர்ந்தவனாகிறான்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், "எவர்கள் நம்மைக் கொண்டாடாமலும், யாசிக்காமலுமிருக்கின்றனரோ அவர்களைப் புத்திரர்களைப் போலக் காப்பாற்ற வேண்டும். அவர்களை வணங்க வேண்டும். அப்படிச் செய்வதால் பயமில்லை" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, நீ ஒரு மன்னன் என்றும், பெரும் சக்தியைக் கொண்டவன் என்றும், செல்வாக்குடையவன் என்றும் நினைத்துக் கொண்டு, பிராமணர்களுக்கு எதுவும் கொடுக்காமல் உன் செல்வத்தை அனுபவிக்காதே.(25) ஓ! பாவமற்றவனே, உன் வகைக்கான கடமைகளைச் செய்து, உன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உன்னிடமுள்ள செல்வத்தைக்கொண்டு பிராமணர்களை வழிபடுவாயாக.(26) பிராமணர்கள் அவர்கள் விரும்பியவண்ணம் வாழட்டும். நீ எப்போதும் அவர்களுக்கு மதிப்புடன் தலைவணங்க வேண்டும். உன் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து எப்போதும் இன்பமாக இருக்கட்டும்.(27) ஓ! குருக்களில் சிறந்தவனே, நித்திய நிறைவுடன் கூடியவர்களும், உன் நலம் விரும்பிகளும், சிறிதளவிலேயே நிறைவடைபவர்களுமான அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கத்தகுந்தவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(28)
கணவர்களைச் சார்ந்திருந்து அவர்களுக்குக் கீழ்ப்படிவதை மட்டுமே நித்திய கடமையாகக் கொண்ட பெண்களுக்கு அத்தகைய கடமையே ஒரே கதியென்பதைப் போலவே, பிராமணர்களுக்குத் தொண்டாற்றுவதே நமது நித்திய கடமையும், கதியுமாகும்.(29) மதிக்கப்படாத பிராமணர்கள், க்ஷத்திரியர்களில் உள்ள கொடுமைகளையும், பாவம்நிறைந்த பிற செயல்களையும் கண்டு நம்மைக் கைவிடுவார்களேயானால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, (30) பிராமணர்களின் தொடர்பில்லாமல், குறிப்பாக வேத கல்வி கற்பது, வேள்விகள் செய்வது, மறுமையில் அருள் உலகங்களை எதிர்பார்ப்பது, பெரும் சாதனைகளைச் செய்வது ஆகியவற்றைச் செய்ய இயலாமலேயே நாம் இருந்தால் அப்படிப்பட்ட உயிரால் நமக்கென்ன பயன்?(31) இது தொடர்பான நித்திய நடைமுறை என்ன என்பதை நான் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா பழங்காலத்தில் க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குத் தொண்டாற்றினார்கள்.(32)
அதே போலவே வைசியர்கள் அந்தக் காலத்தில் அரச வகையினரை {க்ஷத்திரியர்களை} வழிபடுவதும், சூத்திரர்கள் வைசியர்களை வழிபடுவதும் நடைமுறையில் இருந்தது. இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பிராமணன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாவான். அந்தப் பிராமணனைத் தீண்டவோ, அவனது முன்னிலைக்குச் செல்லவோ இயலாத சூத்திரன் தொலைவிலிருந்தே அவனுக்குத் தொண்டாற்றினான்.(33) க்ஷத்திரியனும், வைசியனும் மட்டுமே அந்தப் பிராமணனைத் தொட்டு, அல்லது அவனது முன்னிலைக்குச் சென்று அவனுக்குத் தொண்டாற்ற முடியும். பிராமணர்கள் மென்மையான இயல்பைக் கொண்டவர்களாவர். அவர்கள் நடத்தையில் உண்மை நிறைந்தவர்கள். அவர்கள் உண்மையான அறத்தைப் பின்பற்றுபவர்களாவர்.(34) கோபமாக இருக்கும்போது அவர்கள் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாவர். ஓ! யுதிஷ்டிரா, இத்தகைய இயல்பைக் கொண்டவர்களை மதிப்புடன் கீழ்ப்படிந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுவாயாக. உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் ஆகியோரை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்களாவர்.(35) சக்தி மற்றும் வலிமையில் சுடர்விடும் க்ஷத்திரியர்களின் சக்தியும் தவங்களும் கூடப் பிராமணர்களிடம் சக்தியற்றுப் போகும்.(36)
பிராமணர்களைவிட என் தந்தையே கூட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் தாயும் கூட அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவளல்ல. ஓ! மன்னா, என் பாட்டனும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் உயிரும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியதல்ல.(37) ஓ! யுதிஷ்டிரா, இந்தப் பூமியில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியது வேறேதுமில்லை. ஆனால், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்.(38) ஓ! பாண்டுவின் மகனே, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். சந்தனு அடைந்த அருள் உலகங்கள் அனைத்தையும் எதைக் கொண்டு நான் அடைவேன் என நம்புகிறேனோ அந்த வாய்மையின் மீது ஆணையாக உறுதிகூறுகிறேன்.(39) அவர்களுக்கு முன்னிலையில் பிரம்மனோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் புனித உலகங்களைத் தெளிவாக நான் காண்கிறேன். ஓ! மகனே, நான் அங்கே சென்று முடிவிலா நாட்களுக்கு அவர்களுடன் வசிக்கப் போகிறேன்.(40) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களை மதிக்கும் வகையிலும், அவர்களுக்குத் துணையாகவும் செய்திருக்கும் இந்தச் செயல்கள் அனைத்தையும் சிந்தித்தும், (என் ஆன்மக் கண்களால்) இந்த உலகங்களைக் கண்டும் நான் மகிழ்ச்சியால் நிறைகிறேன்" என்றார் {பீஷ்மர்}[6].(41)
[6] கும்பகோணம் பதிப்பில், "நான் சொல்வது உண்மையாயிருந்தால் இந்த ஸத்யத்தினாலேயே சந்தனு இருக்கும் லோகங்களுக்கு நான் போகக் கடவேன்; பிராம்மணர்களால் பூஜிக்கப்பட்டவையும், பரிசுத்தமுமான ஸாதுக்களின் உலகங்களையும் பார்ப்பேன். அப்பா! உடனேயானாலும், காலம் பொறுத்தானாலும் அவ்வுலகங்களுக்குத்தான் யான் போக வேண்டும். பரதஸ்ரேஷ்டனே, வேந்தே, இப்படிப்பட்ட லோகங்கள் இருப்பதையறிந்துதான் பிராம்மணர்கள் விஷயத்தில் நான் செய்ததைப் பற்றி வருத்தப்படாமலிருக்கிறேன்" என்றிருக்கிறது
அநுசாஸனபர்வம் பகுதி – 59ல் உள்ள சுலோகங்கள் :41
ஆங்கிலத்தில் | In English |