A Sacrifice which is constituted by gift! | Anusasana-Parva-Section-60 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 60)
பதிவின் சுருக்கம் : வேண்டி நிற்பவர்கள், வேண்டாதவர்கள் ஆகிய இருவரில் யாருக்குக் கொடுக்கும் கொடை சிறந்தது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தூய நடத்தை, கல்வி, பிறப்பு மற்றும் குருதித் தூய்மை ஆகியவற்றில் இணையானவர்களான இரு பிராமணர்களில், ஒருவர் வேண்டுபவர், மற்றொருவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை மட்டும் கொண்டிருந்தால், அவ்விருவரில் எவருக்குக் கொடையளிப்பது சிறந்தது என நான் கேட்கிறேன்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, வேண்டும் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, வேண்டாமல் இருக்கும் ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் கொடையே பெரும் பலனைத் தருமெனச் சொல்லப்படுகிறது. மனநிறைவுடைய ஒரு மனிதனே அக்குணமில்லாதவனும், உலகின் புயல்கள் மற்றும் உணவுகளுக்கு மத்தியில் ஆதரவற்றவனுமான ஒருவனை விட நிச்சயம் அதிகத் தகுதி வாய்ந்தவன்.(2) ஒரு க்ஷத்திரியனின் உறுதியானது, அவன் பிறரைப் பாதுகாப்பதில் இருக்கிறது. பிராமணனின் உறுதியானது, அவன் {பிறரை} வேண்ட மறுப்பதில் இருக்கிறது. உறுதி, கல்வி, மனநிறைவு ஆகியவற்றைக் கொண்ட பிராமணன் தேவர்களை மகிழச் செய்கிறான்.(3) ஒரு வறிய மனிதனின் தரப்பில் வேண்டி நிற்கும் செயலானது பெரும் நிந்தனைக்குரியது என ஞானிகள் சொல்கின்றனர். பிறரை வேண்டும் இந்த மனிதர்கள் கள்வர்களையும், கொள்ளையர்களையும் போல உலகிற்குத் தொல்லை கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(4) வேண்டி நிற்கும் மனிதன் இறப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், கொடுப்பவன் இறப்பதாகச் சொல்லப்படுவதில்லை. கொடுப்பவன் வேண்டுபவனுக்கு உயிரைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, ஒரு கொடையின் மூலம் அந்தக் கொடையாளி தன்னையே மீட்டுக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.(5)
கருணை மிக உயர்ந்த குணமாகும். கருணையால் வழிநடப்படும் மக்கள் வேண்டி நிற்போருக்குக் கொடையளிக்கிறார்கள். எனினும், இரக்காதவர்களும், ஆனால் வறுமையிலும், துயரிலும் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மதிப்புடன் அழைக்கப்பட வேண்டும்.(6) தங்கள் வகையில் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டிய அத்தகைய பிராமணர்கள் உன்னுடைய நாட்டில் வாழ நேர்ந்தால், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பாக அவர்களை நீ கருத வேண்டும்.(7) தவங்களில் சுடர்விடும் அவர்கள், மொத்த பூமியையும் எரிக்கவல்லவர்களாவர். ஓ! குரு குலத்தின் மகனே, அத்தகைய மனிதர்கள் பொதுவாக வழிபடப்படுவதில்லை என்றாலும், அவர்களை அனைத்து வழியிலும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாகவே கருத வேண்டும்.(8) ஞானம், ஆன்மப் பார்வை, தவம், யோகம் ஆகியவற்றுடன் கூடிய அத்தகைய மனிதர்கள் எப்போதும் நமது வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. ஓ! பகைவர்களை எரிப்பவனே, அத்தகைய பிராமணர்களை நீ எப்போதும் வழிபடுவாயாக.(9) எவரிடமும் வேண்டி நிற்காத முதன்மையான பிராமணர்களிடம் ஒருவன் தானே சுயமாகச் சென்று, பல்வேறு வகைச் செல்வங்களை அபரிமிதமாக அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். வேத கல்வியும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான நோன்புகளைக் கொண்டவருமான ஒரு பிராமணருக்குக் கொடையளிக்கும் மனிதன், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் புனித நெருப்பில் முறையாக ஊற்றப்படும் ஆகுதிகளில் இருந்து பாயும் பலனை அடைவதில் வெல்கிறான்.(10)
ஓ! குந்தியின் மகனே, கல்வி, வேதங்கள் மற்றும் நோன்புகளின் மூலம் தூய்மையடைந்தவர்களும், சார்பற்று {சுதந்திரமாக} வாழ்பவர்களும், வேத கல்வியும், தவங்களும் வீட்டின் உச்சியில் இருந்து அறிவிக்கப்படாமல் மறைத்து வைத்திருப்பவர்களும், சிறந்த நோன்புகளை நோற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை அழைத்து, பணியாட்கள், ஆடைகள், அறைகலன்கள், இன்பத்திற்குரிய பிற பொருட்கள் ஆகியவற்றுடன் கூடியவையும், நன்கு கட்டப்பட்டவையுமான இனிமையான வீடுகளை நீ அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(11,12) ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், நுணுக்கமான பார்வை கொண்டவர்களுமான அந்த முதன்மையான பிராமணர்கள், பக்தியுடனும், மதிப்புடனும் கொடுக்கப்படும் கொடைகளை மறுப்பதால் கொடையாளியை வருத்தமடையச் செய்யக் கூடாது என நினைத்து அவற்றை ஏற்கலாம்.(13) மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போல எந்தப் பிராமணர்கள் திரும்பி வருவதற்காக அவர்களுடைய மனைவிமார் காத்திருப்பார்களோ அவர்களை {அந்தப் பிராமணர்களை} நீ அழைக்க வேண்டும். அவர்களுக்கு உணவைக் கொடுத்த பிறகு, அவர்கள் வீடு திரும்பியதும், அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களுடைய மனைவிமார், உணவுக்காக உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுக் காத்திருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் வகையில் மேலும் அதிகமான உணவை நீ கொடையளிக்க வேண்டும்[1].(14) ஓ! மகனே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடிய பிரம்மசாரிகள், முற்பகலில் ஒருவனுடைய வீட்டில் உண்பதன் மூலம் அவர்கள் எந்த வீட்டில் உண்கிறார்களோ அந்த இல்லறத்தானிடம் மூன்று நெருப்புகளையும் நிறைவடையச் செய்கிறார்கள் {அது ப்ராதஸ்ஸவனம் [காலை ஹோமம்]}.(15)
[1] புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஸ்லோகத்தைச் சற்றே விரித்துக் கூறியிருப்பதாகக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில், "உழவர்கள் மேகத்தையெதிர்பார்ப்பது போல எவர்களை மனைவிகள் எதிர்பார்க்கின்றனரோ அப்படிப்பட்ட பிராம்மணர்கள் உன்னிடத்தில் புசித்து மிகுந்ததைக் கையிலெடுத்துக் கொண்டு தக்ஷிணைகளோடு கிருகங்களுக்குச் சென்றார்களா?" என்றிருக்கிறது.
ஓ! மகனே, உன் இல்லத்தில் கொடை வேள்வி நடுப்பகலில் நடைபெறட்டும், அப்போது (உன் விருந்தினர்களுக்கு நன்றாக உணவு அளித்த பிறகு) நீ பசுக்களையும், தங்கத்தையும், ஆடைகளையும் கொடையளிப்பாயாக. நீ இவ்வாறு நடந்து கொள்வதால் நிச்சயம் தேவர்களின் தலைவனை {இந்திரனை} நிறைவடையச் செய்வாய். {இது மாத்யாந்நஸவனம்}.(16) தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பது மூன்றாம்வேள்வியாகும். இத்தகைய வேள்வியால் நிச்சயம் நீ விஸ்வேதேவர்களை நிறைவடையச் செய்வாய். {இது மூன்றாவது ஸவனம்}.(17) அனைத்து உயிரினங்களிடமும் கருணை, அனைத்து உயிரினங்களுக்கும் உரியதைக் கொடையளித்தல், புலனடக்கம், துறவு, உறுதி, வாய்மை ஆகியவையே அந்தக் கொடை வேள்வியின் இறுதி நீராடலாக {அவபிருதங்களாக} அமைகிறது.(18) ஓ! மகனே, பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், பெரும் தக்ஷிணையுடன் கூடியதுமான இந்த வேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. கொடையால் அமைந்த இந்த வேள்வியே பிற வேள்விகள் அனைத்தையும் விஞ்சி இருக்கிறது. ஓ! மகனே, இந்த வேள்வி உன்னால் எப்போதும் செய்யப்பட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(19)
அநுசாஸனபர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |