A Fourth part! | Anusasana-Parva-Section-61 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 61)
பதிவின் சுருக்கம் : ஒரு மன்னன் கொடுக்கக்கூடிய கொடைகள் மற்றும் செய்யத்தக்க வேள்விகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, கொடைகள் மற்றும வேள்விகளுக்கான உயர்வான வெகுமதிகளை ஒருவன் எங்கே அடைகிறான் என்பதைக் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன். அவ்வெகுமதிகள் இம்மையில் ஈட்டப்படுகின்றனவா? மறுமையில் வருமா? இவை இரண்டில் மேன்மையான பலனை உண்டாக்கவல்லதாக எது சொல்லப்படுகிறது? யாருக்குக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும்? எந்த வகையில் கொடைகளும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்? எப்போது அவை செய்யப்பட வேண்டும்? ஓ! கல்விமானான ஐயா, நான் உம்மைக் கேட்கிறேன். கொடைகளுக்கான கடமை குறித்து என்னிடம் உரையாடுவீராக.(1,2) ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், வேள்வி மேடையில் கொடுக்கப்படும் கொடைகள், அல்லது அந்த இடத்திற்கு வெளியே கொடுக்கப்படும் கொடைகள் ஆகியவற்றில் எது உயர்ந்த வெகுமதிக்கு வழிவகுக்கும்?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, பொதுவாகவே ஒரு க்ஷத்திரியன் கடுஞ்செயல்களில் ஈடுபடுபவனாவான். அவனது வழக்கில், வேள்விகளும், கொடைகளும் அவனைத் தூய்மைப்படுத்துவதாகவோ, புனிதப்படுத்துவதாகவோ கருதப்படுகிறது.(4) நல்லோராகவும், அறவோராகவும் இருப்பவர்கள், பாவச்செயல்களில் ஈடுபடும் அரச வகையினரின் கொடைகளை ஏற்பதில்லை. இதன் காரணமாகவே மன்னனானவன் தக்ஷிணையின் வடிவிலான அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்ய வேண்டும்[1].(5) ஓ! ஏகாதிபதி, நல்லோரும், அறவோரும் தங்களுக்கு அளிக்கப்படும் கொடைகளை ஏற்றால் க்ஷத்திரியனானவன் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இடையறாமல் கொடையளிக்க வேண்டும். கொடைகள் பெரும் பலன்களை உண்டாக்கவல்லவையும், பெரிதாகத் தூய்மை செய்பவையுமாகும்.(6) ஒருவன் நோன்புகளை நோற்று, வேள்விகளைச் செய்து, அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாக இருப்பவர்களும், அறவோரும், வேதங்களை அறிந்தவர்களும், செயல்கள், ஒழுக்கம் மற்றும் தவங்களில் பெரும் திறம் கொண்டவர்களுமான பிராமணர்களைச் செல்வத்தால் நிறைவடையச் செய்ய வேண்டும்.(7) அத்தகைய பிராமணர்கள் உன் கொடைகளை ஏற்கவில்லையெனில் எப்பலனும் உனதாகாது. அபரிமிதமான தக்ஷிணையுடன் வேள்விகளைச் செய்து, அறவோருக்கு ஏற்புடைய நல்ல உணவைக் கொடையளிப்பாயாக.(8)
[1] "வேள்விகள், பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் வழிமுறைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு கொடையைச் செய்வதன் மூலம் ஒரு வேள்வியைச் செய்தவனாக உன்னை நீ கருதிக் கொள்ளலாம். வேள்விகளைச் செய்யும் பிராமணர்களுக்குக் கொடைகள் கொடுத்து அவர்களைத் துதிக்க வேண்டும். அதைச் செய்தால், அவர்கள் செய்யும் அந்த வேள்விகளின் பலன்களில் ஒரு பங்கை நீ அடையலாம்.(9) அத்தகைய பிராமணர்களைப் பிள்ளைகளைப் போலவும், சொர்க்கத்திற்கு மக்களை அனுப்புபவர்களைப் போலவும் நீ ஆதரிக்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் நீ நிச்சயம் பெரும் சந்ததியை அடைவாய். உண்மையில் பிரஜாபதியைப் போலவே பெரும் சந்ததியை அடைவாய்.(10) அறவோரானவர்கள், அறச் செயல்கள் அனைத்தின் காரணங்களையும் ஆதரித்து முன்னேற்றமடையச் செய்வார்கள். ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து அத்தகைய மனிதர்களையும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவர்களையும் ஆதரிக்க வேண்டும்.(11) ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை அனுபவிக்கும் நீ, பசுக்களையும், வண்டிக்காளைகளையும், உணவையும், குடைகளையும், ஆட்கள், பாதுகைகள் அல்லது காலணிகளையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(12) வேள்வி செய்யும் பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யையும், உணவு, தேர்கள், குதிரைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், வசிக்கும் வீடுகள், மாளிகைகள் மற்றும் படுக்கைகளையும் கொடையளிப்பாயாக.(13) ஓ! பாரதா, அத்தகைய கொடைகள் கொடையாளியைச் செழிப்பிலும், செல்வத்தில் நிறையச் செய்யும், மேலும் தூய்மையானதாகவும் கருதப்படும். செய்யும் செயல்களுக்காக நிந்திக்கப்படாதவர்களும், தங்களுக்கென வாழ்வாதாரங்கள் ஏதும் இல்லாதவர்களுமான பிராமணர்களைத் தேட வேண்டும்.(14) அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களை ஒதுக்கி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. எப்போதும் அத்தகைய ஒழுக்கம் க்ஷத்திரியர்களுக்கு ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளைவிட உயர்ந்த நன்மையை அளிக்கும்.(15)
பாவத்தில் இருந்து தூய்மையடைந்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய். உன் கருவூலத்தை நிறைத்து உன் நாட்டிற்கு நீ நன்மையைச் செய்ய வேண்டும்.(16) அத்தகைய ஒழுக்கத்தால் நீ நிச்சயம் அதிகச் செல்வத்தை அடைந்து (அடுத்த வாழ்வில்) {மறுமையில்} ஒரு பிராமணனாவாய். ஓ! பாரதா, (அறச்செயல்கள் செய்வதற்கான, ஆதரிப்பதற்கான) உன் வழிமுறைகளையும், வேறு மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பாயாக.(17) நீ உன் பணியாட்களை உன் பிள்ளைகளைப் போல ஆதரிப்பாயாக. ஓ! பாரதா, பிராமணர்கள் என்ன கொண்டிருக்கிறார்களோ அதை அனுபவிக்க விட்டும், என்ன கொண்டிருக்கவில்லையோ அவற்றைக் கொடையளிக்கவும் செய்து அவர்களைப் பாதுகாப்பாயாக.(18) உன் வாழ்வு பிராமணர்களின் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கட்டும். பிராமணர்களுக்கு நீ பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒருபோதும் சொல்லப்படாதிருக்கட்டும். அதிகச் செல்வத்தை, ஒரு பிராமணன் கொண்டிருக்கும்போது; அஃது அவனுக்குத் தீமையின் ஊற்றுக்கண்ணாக மாறும்.(19) நிலையான செல்வம் மற்றும் செழிப்பின் தொடர்பு அவனை நிச்சயம் செருக்கால் நிறைத்து (உண்மைக் கடமைகளில் இருந்து) அவனைத் திகைப்படையச் செய்யும். பிராமணர்கள் திகைப்படைந்து, மடமையில் மூழ்கினால், அறமும், கடமைகளும் நிச்சயம் அழிந்து போகும். அறத்திற்கும், கடமைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டால், அஃது அனைத்து உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.(20)
செல்வத்தைத் திரட்டி, கருவூல அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் அதைக் கொடுத்துவிட்டு, தன் அதிகாரிகளிடம், "இந்நாட்டில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்று சொல்லி, மீண்டும் தன் நாட்டைக் கொள்ளையடிக்கத் தொடங்கும் ஒரு மன்னன்,(21) அச்சம் மற்றும் கடுஞ்சூழ்நிலைகளில் அவனது ஆணைகளுக்கிணங்க இவ்வாறு திரட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகள் செய்வதில் செலவிட்டால், அவ்வேள்விகள் ஒருபோதும் அறவோரால் மெச்சப்படுவதில்லை என்பதை நீ அறிவாயாக.(22) கொடுமைப்படுத்தப்படாத குடிமக்களின் மூலம் கருவூலத்தில் விருப்பத்துடன் செலுத்தப்படும் செல்வத்தைக் கொண்டே ஒரு மன்னன் வேள்விகளைச் செய்ய வேண்டும். கடுமை மற்றும் பலவந்த அபகரிப்பு மூலம் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு ஒருபோதும் வேள்விகள் செய்யக்கூடாது.(23) மன்னன் தன் குடிமக்களின் நலனில் அர்ப்பணிப்புடன் இருப்பதன் விளைவால் அவர்கள் அபரிமிதமானதும், நோக்கத்திற்காகவே விருப்பத்துடன் கொடுக்கப்பட்டதுமான செல்வமாரியால் மன்னனை நீராட்டும்போது, அவன் தக்ஷிணையின் வடிவிலான பெரும் கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்.(24) முதியோர், சிறார், குருடர், வேறுவகையில் தகுதியிழந்தோர் ஆகியவர்களின் செல்வங்களை மன்னன் பாதுகாக்க வேண்டும். வறட்சிக்காலத்தில் தன் மக்கள் கிணறுகளில் இருந்து பெற்ற நீரின் துணையுடன் ஏதோ தானியங்களை வளர்ப்பதில் வென்றால், மன்னன் அவர்களிடம் இருந்து செல்வமெதையும் ஒருபோதும் எடுக்கக்கூடாது. அதேபோல, அழுது கொண்டிருக்கும் பெண்களிடம்[2] இருந்தும் எந்தச் செல்வத்தையும் எடுக்கக்கூடாது.(25)
[2] "அழுதுகொண்டிருக்கும் பெண்கள் என்பது ஆதரவற்ற நிலையில் வரி செலுத்த இயலாத பெண்களைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முதியோர்கள், சிறுவர்கள், கண்ணில்லாதவர்கள், அசக்தர்கள் ஆகிய இவர்களின் தனத்தை அரசன் ரக்ஷிக்க வேண்டும். வேந்தன் பூமியிலிருக்கும் தனங்களை வெட்டியெடுக்கலாகாது. பிரஜைகள் அழும்படி அவர்கள் தனத்தை வாங்கலாகாது" என்றிருக்கிறது.
வறியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் இருந்து எடுக்கப்படும் செல்வம் நாட்டையும், நாட்டின் செழிப்பையும் நிச்சயம் அழித்துவிடும். மன்னன் அறவோருக்கு எப்போதும் இன்பத்திற்குரிய பொருட்களை அபரிமிதமாகக் கொடையளிக்க வேண்டும். அம்மனிதர்கள் கொண்டுள்ள பட்டினி குறித்த அச்சத்தை நிச்சயம் அவன் விலக்க வேண்டும்.(26) முறையாக உண்ண இயலாத பிள்ளைகள், எவர்களுடைய உணவைப் பரிதாபமான ஏக்கத்துடன் பார்ப்பார்களோ அம்மனிதர்களைவிடப் பெரும்பாவிகள் வேறு யாரும் இல்லை.(27) உன் நாட்டிற்குள் அந்தப் பிள்ளைகளைப் போலக் கல்விமானான எந்தப் பிராமணராவது ஏக்கத்துடன் இருந்தால், அத்தகைய செயலை அனுமதித்தற்காகக் கருவைக் கொன்ற பாவத்தை நீ ஈட்டுவாய்.(28)
மன்னன் சிபி, "எவனுடைய நாட்டில் ஒரு பிராமணனோ வேறு எந்த மனிதனோ பசியால் ஏங்குகிறானோ அம்மன்னனுக்கு ஐயோ" என்று சொல்லியிருக்கிறான்.(29)
எந்த நாட்டில் ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பசியேக்கத்தில் இருக்கிறார்களோ அந்நாடு ஏழ்மையில் மூழ்கும். அத்தகைய நாடு அதன் மன்னனுடன் சேர்ந்து நிந்திக்கப்படும்.(30) எவனுடைய நாட்டில் கணவர்கள் மற்றும் மகன்களுக்கு மத்தியில் அழுது கதறி, உள்ளங்கொதித்துத் துன்பப்படும் பெண்கள் எளிதாகக் கடத்தப்படுகிறார்களோ அந்த மன்னன் உயிரோடிருந்தாலும் இறந்தவனேயாவான்.(31) தங்களைப் பாதுகாக்காதவனும், தங்கள் செல்வங்களை வெறுமனே கொள்ளையடிப்பவனும், வேறுபாடுகள் அனைத்தையும் போட்டுக் குழப்புபவனும், வழிநடத்த இயலாதவனும், கருணையற்றவனும், மன்னர்களிலேயே பெரும்பாவியாகக் கருதப்படுபவனுமான மன்னனைக் கொல்ல குடிமக்கள் ஆயுதமேந்த வேண்டும்.(32) எந்த மன்னன் தன் மக்களிடம் தானே அவர்களின் பாதுகாவலன் என்று சொன்னாலும் அவர்களைப் பாதுகாக்க இயலாதவனாக இருக்கிறானோ அவன் விசர்நோயால் பீடிக்கப்பட்டதும், வெறி கொண்டதுமான நாயைப் போலத் தன் குடிமக்களால் கொல்லப்பட வேண்டும்.(33) ஓ! பாரதா, பாதுகாப்பைக் கொடுக்காத மன்னன், குடிமக்கள் இழைக்கும் பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(34) மொத்த பாவங்களும் அத்தகையே மன்னனையே சேரும் எனச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் பாதி அவனுடையதாகும் எனக் கருதுகிறார்கள். எனினும், மனுவின் அறிவிப்பை மனத்தில் சுமக்கும் நாம், பாதுகாப்பைக் கொடுக்காத மன்னர்கள் அத்தகைய பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைவார்கள் என்று கருதுகிறோம்.(35)
ஓ! பாரதா, எந்த மன்னன் தன் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறானோ அவன் தன் பாதுகாப்பின் கீழ் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(36) ஓ! யுதிஷ்டிரா, அனைத்து உயிரினங்களும் மழையின் தேவனுடைய புகலிடத்தை நாடுவதைப் போலவோ, சிறகுபடைத்த காற்றுவாசிகள் {பறவைகள்} ஒரு பெரும் மரத்தைப் புகலிடமாக நாடுவதைப் போலவே நீ உயிரோடுள்ளவரை, உன் குடிமக்கள் அனைவரும் உன்னைப் புகலிடமாக நாடும் வகையில் நீ செயல்படுவாயாக.(37) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ராட்சசர்கள் குபேரனை நாடுவதைப் போலவோ, தேவர்கள் இந்திரனை நாடுவதைப் போலவோ, உன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் உன்னையே அவர்களது புகலிடமாக நாடட்டும்" என்றார் {பீஷ்மர்}.(38)
அநுசாஸனபர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |