Sunday, May 12, 2019

பூமி தானம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 62

The gift of earth! | Anusasana-Parva-Section-62 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 62)


பதிவின் சுருக்கம் : நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ! பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து வகையான கொடைகளிலும் (பலனின் அடிப்படையில்) நிலக்கொடையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. நிலம் அசைவற்றதாகவும், அழிவற்றதாகவும் இருக்கிறது. அதன் உரிமையாளன் தன் இதயத்தில் நிலைநிறுத்தும் சிறந்த பொருட்கள் அனைத்தையும் அது கொடுக்கவல்லது.(2) ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், விலங்குகள், நெல், வாற்கோதுமை ஆகியவற்றை அது கொடுக்கிறது. உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும், நிலக் கொடை கொடுப்பவன் என்றென்றைக்கும் செழிப்பில் வளர்வான்.(3) நிலம் நீடித்திருக்கும்வரை அந்தக் கொடையாளி செழிப்பில் வளர்வான். ஓ! யுதிஷ்டிரா, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(4) மனிதர்கள் அனைவரும் ஒரு சிறு அளவு நிலத்தையாவது கொடையளிப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். மனிதர்கள் அனைவரும் நிலக்கொடையளித்திருப்பதாலேயே அவர்கள் அனைவரும் சிறு அளவு நிலத்திலாவது இன்புற்றிருக்கிறார்கள்.(5)

இம்மையிலாகட்டும், மறுமையிலாகட்டும் எச்சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களைச் சார்ந்தே வாழ்கின்றன. பூமாதேவி {நிலம்} செழிப்பின் சுயமாக இருக்கிறாள். அவள் வலிமைமிக்கத் தேவியாவாள். இம்மையில் பிறருக்குத் தன்னைக் கொடையளிப்பவனை (மறுமையில்) அவள் தன் தலைவனாக்கி {கணவனாக்கிக்} கொள்கிறாள்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அழிவற்றதான நிலத்தைத் தக்ஷிணையாகக் கொடையளிப்பவன், மறுமையில் மனிதனாகப் பிறந்து, பூமியின் தலைவனும் ஆகிறான்.(7) இம்மையில் ஒருவன் அடையும் இன்பம், முற்பிறவியில் அவன் அளித்த கொடைகளின் அளவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். சாத்திரங்கள் சுட்டிக் காட்டும் தீர்மானம் இதுவே ஆகும். ஒரு க்ஷத்திரியன் நிலக் கொடை அளிக்க வேண்டும், அல்லது போர்க்களத்தில் தன் உயிரை விட வேண்டும்.(8) க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இதுவே செழிப்பின் உயர்ந்த ஊற்றுக்கண்ணாகிறது. நிலம் கொடையளிக்கப்படும்போது, அது கொடையாளியைத் தூய்மைப்படுத்துகிறது, புனிதப்படுத்துகிறது என நாம் கேள்விப்படுகிறோம்.(9) பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், பொய்யுரைத்தவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியுமான மனிதன் கூட நிலக்கொடையின் மூலம் தூய்மடைகிறான். உண்மையில் அத்தகைய கொடை அத்தகைய பாவியையும் கூட, அவன் செய்யும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீட்கிறது.(10)

அறவோரானவர்கள், பாவம் நிறைந்த மன்னர்களிடம் இருந்து நிலக்கொடையை மட்டுமே ஏற்பார்கள், வேறெதையும் ஏற்கமாட்டார்கள். பூமியானவள் கொடையளிக்கப்படும்போது ஒரு தாயைப் போலவே கொடுப்பவனையும், பெற்றுக் கொள்பவனையும் தூய்மையாக்குகிறாள்.(11) பிரியதத்தை என்பது பூமாதேவியின் நித்தியமான மற்றும் ரகசியமான மற்றுமொரு பெயராகும்[1]. கொடையாகக் கொடுக்கப்படுபவள், அல்லது ஏற்கப்படுபவளுமான அவளது அன்புக்குரிய பெயர் பிரியதத்தை என்பதாகும்.(12) நிலக்கொடை விரும்பத்தக்கதாகும். ஒரு கல்விமானான பிராமணனுக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், ஒரு நாட்டையே கொடையாக அடைகிறான்.(13) அத்தகைய மனிதன், இவ்வுலகில் தன் மறுபிறவியில், ஒரு மன்னனுக்கு இணையான நிலையையே அடைகிறான். எனவே, ஒரு மன்னனானவன், தனக்குப் பூமி கிடைத்த உடனேயே பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்க வேண்டும்.(14) பூமியின் தலைவனான ஒருவனைத் தவிர வேறு எவனும் {அரசனல்லாதவன் எவனும்} நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல. அதே போலத் தகாத எவனும் நிலக்கொடையை ஏற்பதும் தகாததே[2].(15)

[1] "அன்புக்குரியவனால் கொடுக்கப்படுபவள், அல்லது அன்புக்குரியவனுக்குக் கொடுக்கப்படுபவள், எனவே அவள் பிரியதத்தை என்றழைக்கப்படுகிறாள் என உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரியமாகக் கொடுக்கப்படுவது" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "அரசன் பூமியையடைந்தவுடனே அதைப் பிராம்மணனுக்குத் தானம் செய்ய வேண்டும். அரசனல்லதாவன் பூமியை ஆளுவது எவ்வகையிலும் முடியாது" என்றிருக்கிறது பூமியை வஸ்திரத்தினாலும் மூட முடியாது; வேறு விதமாக மறைத்துக் கொண்டு போகவுமாகாது" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்புகளில், "தானம் செய்வதனால் அரசனுக்குப் பூமியில்லாமற் போகாது" என்றும், "வாங்கினவனுக்குப் பலனும், அரசனுக்கு ஆளுகையும் வியவஸ்யாயிருக்கும்" என்றும் இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையளிக்கும் ஒரு மன்னன் அதைத் திரும்பப் பெறுகிறான். எனினும், நிலத்தின் உரிமையாளன் அந்தச் செழிப்புமிக்க நிலத்தைத் தகாத எவனுக்கும் ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது" என்றிருக்கிறது.

நிலத்தை விரும்புபவர்கள் (நிலக்கொடை அளிக்கும்) இவ்வழியிலேயே தங்களைச் செலுத்திக் கொள்ள வேண்டும். அறம்சார்ந்த மனிதனுக்கு உரிமையான நிலத்தை அபகரிப்பவன் ஒருபோதும் நிலத்தை அடையமாட்டான்.(16) அறவோருக்கு நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் நன்னிலத்தை அடைவான். அற ஆன்மா கொண்டவனான அத்தகைய கொடையாளி இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை ஈட்டுவான்.(17) பிராமணர்கள், எந்த மன்னனைக் குறித்து, "இவன் கொடையளித்த நிலத்தில் நாங்கள் வாழ்கிறோம்" என்று சொல்வார்களோ, அவனது நாட்டைக் குறித்த சிறு பழியையும் அவனுடைய எதிரிகளாலும் சொல்ல முடியாது[3].(18) வாழ்வாதாரம் இல்லாததால் ஒரு மனிதன் இழைக்கும் பாவங்கள் அனைத்தும், மாட்டுக் குளம்பினால் மறைக்கப்படும் அளவுக்கு நிலக்கொடையளிப்பதன் மூலம்கூடக் கழுவப்பட்டுவிடுகின்றன.(19) தங்கள் செயல்பாடுகளில் வஞ்சகமாக இருப்பவர்கள், அல்லது கடுச் செயல் புரியும் மன்னர்களுக்கு, நிலக்கொடையே அதிகம் தூய்மைப்படுத்தும், (பலனடிப்படையில்) அதுவே உயர்ந்த கொடையுமாகும் என்பது கற்பிக்கப்பட வேண்டும்.(20)

[3] "இது முக்கியமான செய்தி என்பது வெளிப்படை. பிரசம்சாந்தி என்பது பொதுவாகப் புகழ் என்ற பொருளைத் தரும். இங்கே அது நிந்தனை என்ற பொருளைத் தரும். இதில் வரும் இரண்டாவது வரிக்கு ‘அவனது எதிரிகள் அவனது நாட்டைத் தாக்கத் துணிய மாட்டார்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உபகாரம் செய்த எந்த அரசனுடைய பூமியைப் பிராம்மணர்கள் எப்போதும் சிலாகிக்கின்றனரோ அவ்வரசனது பூமியை சிலாகிக்கின்றனரோ அவ்வசரசனது பூமியைப் பகைவர்கள் சிலாகிப்பதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பூமி பகைவருக்குக் கிடைப்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அறவோருக்கு நிலக்கொடை அளிக்கும் மனிதனைப் பிராமணர்கள் எப்போதும் புகழ்வார்கள். அவனுக்கு எந்த எதிரிகளும் இருக்க மாட்டார்கள். மொத்த பூமியும் அவனைப் புகழும்" என்றிருக்கிறது.

ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்யும் மனிதனுக்கும், ஓர் அறவனோக்கு நிலக்கொடை அளிக்கும் ஒருவனுக்கும் இடையில் மிகச் சிறிய வேறுபாடு மட்டுமே உண்டெனவே பண்டைக்காலத்தவர் எண்ணினர்.(21) வேறு அறச்செயல்கள் எதனையும் செய்வதன் மூலம் கிட்டும் பலனில் கல்விமான்கள் ஐயுறுவார்கள். உண்மையில், அவர்கள் ஐயுறாத ஒரே செயல், கொடைகள் அனைத்திலும் முதன்மையான நிலக்கொடையே ஆகும்.(22) நிலக்கொடை அளிக்கும் விவேகியானவன், பொன், வெள்ளி, ஆடை, ரத்தினங்கள், முத்துகள் மற்றும் விலமதிப்புமிக்கக் கற்கள் ஆகிய அனைத்தையும் கொடுத்தவனாகிறான்.(23) தவங்கள், வேள்வி, வேதப் புலமை, நன்னடத்தை, பேராசையின்மை, வாய்மையில் உறுதி {சொல்தவறாமை}, பெரியோர், ஆசான்கள் மற்றும் தேவர்களுக்குச் செய்யும் வழிபாடு ஆகிய இவை அனைத்தும் நிலக்கொடை அளித்தவனிடம் வசிக்கின்றன.(24) தங்கள் தலைவர்கள் நன்மையடைவதற்காகத் தங்களைத் துச்சமாக எண்ணிப் போரிட்டுத் தங்கள் உயிரைப் போர்க்களத்தில் விட்டுப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தவர்களும் கூட, நிலக்கொடையளிப்போர் அடையும் பலன்களை விஞ்சிவிட இயலாது.(25)

முலைப்பால் கொண்டு தன் பிள்ளைக்கு எப்போதும் உணவூட்டும் ஒரு தாயைப் போலவே பூமாதேவியானவள், நிலக்கொடை அளிக்கும் மனிதனை {தான் கொண்டுள்ள} சுவைகள் அனைத்திலும் நிறைவடையச் செய்கிறாள்.(26) மிகக் கொடிய மிருத்தியு, வைகின்கர, தண்டம், தமம், நெருப்பு மற்றும் பயங்கரமான மிகக் கொடிய பாவங்கள் அனைத்தும் நிலக்கொடை அளிக்கும் மனிதனை அணுக முடியாது[4].(27) நிலக்கொடையளிக்கும் அமைதியான ஆன்மா கொண்ட மனிதன், (அந்தச் செயலின் மூலம்) பித்ருலோகத்தில் வசிப்பவர்களையும், தேவலோகத்தில் வசிப்பவர்களையும் நிறைவடையச் செய்கிறான்.(28) உடல் மெலிந்தவனும், உற்சாகமற்றவனும், வாழ்வாதரமற்றவனும், பலவீனத்துடன் ஏங்கிக் கொண்டிருப்பவனுமான ஒருவனுக்கு நிலக்கொடையளிக்கும் மனிதன், அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதால் ஒரு வேள்வி செய்த பலனுக்கும், கௌரவத்துக்கும் தகுந்தவனாகிறான்.(29) நிறைந்த மடியில் பால் வழியும் பசுவானது, அன்புடன் தன் கன்றை நோக்கி ஓடுவதைப் போலவே உயர்ந்த அருளைக் கொண்ட பூமியானவளும் நிலக்கொடையளிப்பவனை நோக்கி ஓடுகிறாள்.(30)

[4] கும்பகோணம் பதிப்பில், "பூமி தானம் செய்பவனுக்கு யமன் அடிமையாகிறான். மிகக் கொடிய யமதண்டனையும், நெருப்பின் மிகக் கொடிய தாபமும், பயங்கரமான வருணபாசங்களும் பூமிதானம் செய்பவனை அணுகா" என்றிருக்கிறது.

உழப்பட்டதாகவோ, விதை தூவப்பட்டதாகவோ, பயிர் விளைந்திருப்பதாகவோ உள்ள நிலத்தை, அல்லது தேவைகள் அனைத்துடன் கூடிய ஒரு மாளிகையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் (மறுமையில்) அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றவல்லவனாகிறான்.(31) வாழ்வாதாரத்தையும் இல்லற நெருப்பையும் கொண்டவனும், தூய நோன்புகள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டவனுமான ஒரு பிராமணனை நிலக்கொடையை ஏற்கச் எசய்யும் மனிதன், எந்த ஆபத்திலோ, துயரத்திலோ ஒருபோதும் வீழ மாட்டான்.(32) நாளுக்கு நாள் நிலவு வளர்வதைப் போலவே நிலக்கொடை அளித்தவனின் பலனும் அந்நிலத்தில் ஒவ்வொரு முறை பயிர் விளையும்போதும் மேன்மையடைகிறது.(33) பண்டைய வரலாற்றை அறிந்தவர்கள், நிலக்கொடை தொடர்பாக இந்த ஸ்லோகத்தைப் பாடியிருக்கிறார்கள். அந்த ஸ்லோகத்தைக் கேட்ட ஜமதக்னியின் மகன் (ராமர்) மொத்த நிலத்தையும் கசியபருக்குக் கொடையளித்தார்.(34) "என்னைக் கொடையாகப் பெறுவாயாக. என்னைக் கொடையளிப்பாயாக. என்னைக் கொடையளிப்பதன் மூலம் (ஓ! கொடையாளியே) நீ மீண்டும் என்னையே அடைவாய். இம்மையில் கொடையளித்தது மறுமையில் மீண்டும் அடையப்படும்" என்பதே நான் குறிப்பிடும் ஸ்லோகமாகும்[5].(35)

[5] "இது பூமி சொல்லும் அறிவிப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வேதங்களின் இந்த உயர்ந்த அறிவிப்பை சிராத்தம் செய்யும் நேரத்தில் உரைக்கும் பிராமணன் உயர்ந்த வெகுமதியை அடைகிறான்.(36) பிறருக்குத் தீங்கிழைப்பதற்காக அதர்வணச் சடங்குகளைச் செய்யும் பலமிக்க மனிதனின் பாவத்திற்கு நிலக்கொடையே உயர்ந்த பாவக்கழிவாகும். உண்மையில், நிலக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தனது தந்தைவழி மற்றும் தாய்வழியில் பத்து தலைமுறைகளை மீட்கிறான்[6].(37) நிலக்கொடையின் பலன்களைக் குறித்த இந்த வேதத் தீர்மானத்தை அறிந்தவன், தன் தந்தைவழி மற்றும் தாய் வழி குடும்பங்கள் இரண்டிலும் பத்து தலைமுறைகளை மீட்பதில் வெல்கிறான். (அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்வாதாரங்களை நிலத்திலேயே அடைவதால்) நிலமே அனைத்து உயிரினங்களின் அசல் தோற்றுவாயாகும் {காரணமாக இருக்கிறது}. நெருப்பின் தேவனே {அக்னியே} பூமிக்குத் தலைமைதாங்கும் மேதையாகச் சொல்லப்படுகிறான்.(38) ஒரு மன்னனின் பட்டமேற்பு விழா நடைபெற்றதும், அவன் நிலக்கொடைகளை அளிக்கும் வகையிலும், அறவோரிடம் இருந்து அவன் நிலத்தை ஒருபோதும் அபகரிக்காத வகையிலும் இந்த வேதத் தீர்மானமானது அவனுக்குச் சொல்லப்பட வேண்டும்.(39) மன்னனின் உரிமையில் இருக்கும் மொத்த செல்வமும் பிராமணர்களுக்குரியது என்பதில் ஐயமில்லை. அறநெறி அறிவியலை நன்கறிந்த மன்னனே அந்த நாட்டுடைய செழிப்புக்கான முதல் தேவையாக இருக்கிறான்.(40)

[6] கும்பகோணம் பதிப்பில், "பூமிதானமானது பேய் பிசாசுகளாலும், சாபத்தினாலுமுண்டான கேடுகளுக்குப் பரிகாரமான பெரும் பிராயஅச்சித்தம். இப்படிப்பட்ட பூதானத்தைச் செய்தவனும் வேத வாக்கியமாகிய இந்தச் சொல்லையறிகிறவனும் தன் குலத்தில் முன் பதின்மரையும், பின் பதின்மரையும் பரிசுத்தமாகச் செய்பவர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு தீய வேள்வியைச் செய்வதன் மூலம் பெரும் தீங்குகளை விளைவிப்போர் இவ்வழியில் பாவக்கழிப்பை அடைந்து, பத்து தலைமுறைகளைக் காத்துக் கொள்ளலாம்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில் "முந்தைய பத்து தலைமுறைகளையும், பிந்தைய பத்து தலைமுறைகளையும் காத்துக் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

நேர்மையற்ற ஒழுக்கமும், நாத்திக நம்பிக்கையும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய மக்கள் ஒருபோதும் அமைதியாக உறங்கவோ, விழிக்கவோ முடியாது.(41) அவனுடைய தீச்செயல்களின் விளைவால் அவனுடைய குடிமக்கள் எப்போதும் கவலையால் நிறைந்திருப்பார்கள். குடிமக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் உடைமைகளையும், புதிய உடைமைகளையும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி பாதுகாக்கும் நிகழ்வுகளை அத்தகைய ஆட்சியாளனின் நாட்டில் ஒருபோதும் காண முடியாது.(42) மேலும், ஞானியாகவும், அறம் சார்ந்தவனாகவும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உறங்கி, மகிழ்ச்சியாகவே விழிக்கிறார்கள்.(43) அத்தகைய மன்னனின் அருள்நிறைந்த அறச்செயல்களின் மூலம் அவனது குடிமக்கள் கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். தீச்செயல்களில் இருந்து தடுக்கப்படும் குடிமக்கள் தங்கள் ஒழுக்கத்தின் மூலம் செழிப்பில் வளர்கிறார்கள். தாங்கள் கொண்டுள்ளதைத் தக்கவைத்துக் கொள்ளவல்ல அவர்கள், புதிய உடைமைகளை மேலும் மேலும் அடைகிறார்கள்.(44) நிலக்கொடையளிக்கும் மன்னன் நற்பிறப்பைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான். அவனே ஆண்மகனாகக் கருதப்படுகிறான். அவன் நண்பனுமாவான். அவன் தன் செயல்களில் அறம் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் கொடையாளியாகவும் இருக்கிறான். அவன் ஆற்றல் படைத்தவனாகவும் கருதப்படுகிறான்.(45)

வளமான நிலத்தைப் போதிய அளவில் வேதமறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் தங்கள் சக்தியின் விளைவால் பல சூரியர்களைப் போல இந்த உலகத்தில் ஒளிர்கிறார்கள்.(46) மண்ணில் தூவப்படும் விதைகள் வளர்ந்து நல்ல பயிராக விளைவதைப் போலவே, நிலக்கொடையளிப்பதன் விளைவால் ஒருவனுடைய விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையால் அவன் மகுடம் சூட்டப்படுகிறான்.(47) ஆதித்யன், வருணன், விஷ்ணு, பிரம்மன், சோமன், ஹுதாசனன் {அக்னி}, சிறப்புமிக்கவனும், திரிசூலபாணியுமான மஹாதேவன் ஆகியோர் அனைவரும் நிலக்கொடையளிக்கும் மனிதனை மெச்சுகிறார்கள்.(48) உயிரினங்கள் பூமியில் இருந்து உயிர்பெறுகின்றன, மேலும் அவை மறையும்போதும் பூமியிலேயே கலக்கின்றன. நால்வகை உயிரினங்களும் பூமியையே தங்கள் மூலக்கூறுகளின் சாரமாகக் கொண்டிருக்கின்றன {பூமியின் குணங்களையே கொண்டிருக்கின்றன}.(49) ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் உயிரினங்களுக்குத் தாயும், தந்தையும் பூமியே ஆவாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பூமியோடு ஒப்பிடத்தக்க பூதம் வேறேதும் கிடையாது.(50)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகத் தேவ ஆசானான பிருஹஸ்பதிக்கும், சொர்க்கத்தின் ஆட்சியாளனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(51) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய நூறு வேள்விகளில் விஷ்ணுவைத் துதித்த மகவத் {இந்திரன்}, நாநயமிக்கவர்கள் அனைவரிலும் முதன்மையான பிருஹஸ்பதியிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(52)

மகவத், "ஓ! சிறப்புமிக்கவரே, எக்கொடையை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு வருவதிலும், இன்பநிலையை அடைவதிலும் வெல்கிறான்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உயர்ந்ததும், வற்றாததுமான பலனை உண்டாக்கவல்ல கொடையைக் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்".(53)

பீஷ்மர் தொடர்ந்தார், "தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தேவர்களின் ஆசானும், பெருஞ்சக்தி கொண்டவருமான பிருஹஸ்பதி, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(54)

பிருஹஸ்பதி, "ஓ! விருத்திரனைக் கொன்றவனே, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, பொற்கொடை, பசுக்கொடை, நிலக்கொடை ஆகிய இவற்றாலேயே ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(55) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! பலமிக்கவனே, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ள படி இக்கொடையையே நான் மிக உயர்ந்ததாகக் கருதுகிறேன்.(56) போர்க்களத்தில் அச்சமில்லாமல் பகைவர்களுடன் மோதி தங்கள் உயிரை விடும் வீரர்கள் சொர்க்கத்திற்கு வருகிறார்கள். அவர்களின் கதி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நிலக்கொடையளிக்கும் கொடையாளியை அவற்றில் எதனாலும் விஞ்சமுடியாது.(57) தங்கள் உடல்களை அலட்சியம் செய்து, தங்கள் தலைவர்களின் நன்மைக்காக முயன்று போர்க்களத்தில் தங்கள் உயிரைவிடும் மனிதர்கள் பிரம்ம லோகத்திற்கே உயர்கிறார்கள். அவர்களும் கூட (ஒருவன் அடையும் பலன் அல்லது அவன் வெல்லும் இன்ப நிலையைப் பொறுத்தவரையில்) நிலக்கொடையளிப்பவனைக் கடக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(58) நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன், தனது மூதாதையரில் ஐந்து தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஆறு தலைமுறைகளையும் என இந்தப் பதினொருவரை மீட்கிறான்.(59) ஓ! புரந்தரா, பொன் மற்றும் ரத்தின வளம் கொண்ட நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.(60)

ஓ! மன்னா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களையும் தரவல்ல வளமிக்க நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன் (மறுமையில்) மன்னர்களுக்கு மன்னன் என்ற நிலையை அடைவதில் வெல்கிறான். எனவே, நிலக்கொடையே கொடைகள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(61) ஓ! வாசவா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல நிலத்தைக் கொடையளிப்பவன் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(62) ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே, அனைத்துச் சிறப்புகளையும் கொண்டதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைக் கொடுக்கவல்லதுமான ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(63) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளிக்கும் கொடையாளி, சொர்க்கத்திற்கு வரும்போது, நூற்றுக்கணக்கான தேனாறுகள், நெய், பால் மற்றும் தயிராறுகளால் நிறைவடைகிறான்.(64) ஒரு மன்னன் நிலக்கொடைகளை அளிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். எனவே, நிலக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(65)

பெருங்கடலால் சூழப்பட்ட பூமியைத் தன் ஆயுதங்களின் துணையுடன் வென்று அதைக் கொடையளிக்கும் மன்னன், மனிதர்கள் அனைவராலும் பேசப்படுவான், பூமியின் பரப்பில் மலைகள் இருக்கும் வரையிலும் அவனது நினைவுகளும் நீடித்திருக்கும்.(66) நிலக்கொடைக்கான பலனுடன் கூடியவன், அனைத்துச் சுவைகளுடன் கூடிய மங்கலமிக்க, வளமான நிலத்தைக் கொடையளிப்பவனுக்கு ஒதுக்கப்படும் வற்றாத இன்ப உலகத்தை அடைகிறான்.(67) ஓ! சக்ரா, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைய விரும்பும் மன்னன், உரிய சடங்குகளுடன் தகுந்தோருக்கு நிலக்கொடையை எப்போதும் அளிக்க வேண்டும்.(68) எண்ணற்ற பாவங்களைச் செய்த மனிதன், மறுபிறப்பாள வகையினருக்கு நிலத்தைக் கொடையளித்தால், பாம்பானது தன் சட்டையை உரித்துக் கொள்வதைப் போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(69) நிலக்கொடையளிப்பவன், கடல்கள், ஆறுகள், மலைகள், காடுகள் என அனைத்தையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(70)

நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தடாகங்களையும், குளங்களையும், கிணறுகளையும், ஓடைகளையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். நிலத்தில் உள்ள ஈரப்பதத்தின் விளைவால் ஒருவன் நிலக்கொடையளிப்பதன் மூலம் பல்வேறு சுவைகளுடன் கூடிய பொருட்களைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(71) நிலக்கொடையளிக்கும் மனிதன், பயன்விளைவிக்கும் உயர்ந்த குணங்களைக் கொண்ட மூலிகைகள் மற்றும் செடிகளையும், மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களையும், இனிமை நிறைந்த காடுகளையும், சிறுகுன்றுகளையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(72) நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனானது, தக்ஷிணையின் வடிவில் அபரிமிதமான கொடைகளுடன் செய்யப்படும் அக்னிஷ்டோமம் மற்றும் பிறவற்றைப் போன்ற பெரும் வேள்விகளைச் செய்வதன் மூலமும் அடையப்பட முடியாததாகும்.(73) நிலக்கொடையளிப்பவன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழிக் குலங்களின் பத்து தலைமுறைகளை மீட்கிறான் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அதே போல, கொடையளிக்கப்பட்ட நிலத்தை அபகரிப்பதன் மூலம் ஒருவன் நரகில் மூழ்கித் தன் தந்தை வழி மற்றும் தாய் வழி குலத்தின் பத்து தலைமுறையினரை அதே துன்பத்தில் ஆழ்த்துகிறான்.(74) நிலக்கொடை அளிப்பதாக உறுதியளித்தவிட்டு அளிக்காத, அல்லது கொடையளித்துவிட்டு மீண்டும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்ட மனிதன், யமனின் ஆணையால் வருணனின் பாசத்தில் கட்டப்படுவதன் விளைவால் நீண்ட காலத்தைப் பெருந்துன்பத்தில் கடத்துவான்.(75)

இல்லற நெருப்பில் நாள்தோறும் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், மிகக் குறைந்த வாழ்வாதாரங்களைக் கொண்டவர்களும், தங்கள் வசிப்பிடங்களில் உறைவிடம் நாடி வரும் ஒவ்வொரு விருந்தினரையும் விருந்தோம்பலுடன் வரவேற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை மதித்து வழிபடுவோர் ஒருபோதும் யமனிடம் செல்ல வேண்டியதில்லை.(76) ஓ! புரந்தரா, ஒரு மன்னன் பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிற வகையினரில் உள்ள ஆதரவற்றவர்களையும், பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டும்.(77) ஓ! தேவர்களின் தலைவா, வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற ஒரு பிராமணனுக்கு வேறொருவனால் கொடையளிக்கப்பட்ட நிலத்தை ஒரு மன்னன் திரும்பப்பெறக்கூடாது.(78) உற்சாகமற்றவர்களும், ஏதுமற்றவர்களுமான அத்தகைய பிராமணர்களின் நிலங்கள் திரும்பப் பெறப்படுவதால் அவர்களது விழிகளில் இருந்து விழும் கண்ணீரானது, திரும்பப் பெறுபவனின் மூதாதையர்கள் மற்றும் வழித்தோன்றல்களில் மூன்று தலைமுறையனரை அழிக்கவல்லதாகும்.(79) நாட்டில் இருந்து விரட்டப்பட்ட ஒரு மன்னனை மீண்டும் நிறுவ முயற்சித்து அதில் வெல்லும் மனிதன், சொர்க்கவாசத்தை அடைந்து, அங்கே வசிப்பவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறான்.(80)

கரும்போ, யவமோ {வாற்கோதுமையோ}, கோதுமையோ போன்ற பயிர்கள் விளையும், அல்லது பசுக்கள், குதிரைகள் மற்றும் இழுவைக்கான வேறு கால்நடைகள் நிரம்பியதும், கொடையாளின் கரவலிமையால் வெல்லப்பட்டதும், அடியில் கனிமவளம் கொண்டதும், பரப்பில் அனைத்து வகைச் செல்வங்களாலும் மறைக்கப்பட்டதுமான நிலத்தைக் கொடையளிக்கும் மன்னன், மறுமையில் வற்றாத இன்ப உலகங்களை அடைவான், மேலும் அத்தகைய மன்னன் பூமி வேள்வி {பூமிஸத்திரம்} செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(81,82) நிலக்கொடை அளிக்கும் மன்னன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்பட்டு, அதன் மூலம் தூய்மையடைந்து, அறவோரால் அங்கீகரிக்கப்படுகிறான். இவ்வுலகில் அறம்சார்ந்த மனிதர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறான்.(83) நிலத்தைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனானது, நீரில் விழும் எண்ணெய்த் துளி அனைத்துப் பக்கங்களிலும் பரவி, நீர்ப்பரப்பை மறைப்பதைப் போலவே {நிலத்தினுடைய} உரிமையாளரின் நன்மைக்காக அந்நிலத்தில் பயிர் விளையும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கிறது.(84) ஓ! சக்ரா, பகைவரை நோக்கிப் போர்க்களத்தில் தங்கள் உயிரை விடும் வீரர்களும், சபைகளின் ரத்தினங்களுமான மன்னர்கள் பிரம்ம லோகத்தை அடைகிறார்கள்.(85) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளித்தவன் பூமிலிருந்து சொர்க்கத்திற்கு வரும்போது ஆடல் பாடலில் திறன்பெற்றவர்களும், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய காரிகையர் அவனை அணுகுகிறார்கள்.(86)

உரிய சடங்குகளுடன் மறுபிறப்பாள வகையினருக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் எப்போதும் துதிக்கப்பட்டு தெய்வீக அருள் உலகங்களில் திளைத்திருக்கிறான்.(87) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையாளி ஒருவன் பிரம்மலோகத்திற்கு உயரும்போது தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு அப்சரஸ்கள் அவனை அணுகுகின்றனர்.(88) நிலக்கொடையளிக்கும் ஒருவனுக்கு, சிறந்த நறுமணம் கொண்ட மலர்கள், ஒரு சிறந்த சங்கு, சிறந்த இருக்கை, ஒரு குடை, சிறந்த வாகனங்களுடன் கூடிய சிறந்த குதிரைகள் ஆகியவை எப்போதும் தயாராக இருக்கின்றன.(89) ஒரு மன்னன் நிலக்கொடையளிப்பதன் மூலம், நறுமணமிக்கச் சிறந்த மலர்களையும், பொற்குவியல்களையும் எப்போதும் பெறுகிறான். அனைத்துவகைச் செல்வங்களையும் பெறும் அத்தகைய மன்னனின் கட்டளைகள் எங்கும் மீறப்படுவதில்லை, அவன் எங்கே சென்றாலும் {ஜய எனும் ஒலியாலான} வெற்றிக்கூச்சல்கள் மட்டுமே அவனை வாழ்த்திக் கொண்டிருக்கும்.(90) ஓ! புரந்தரா, சொர்க்கவாசம், பொன், மலர்கள், மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் செடிகள், குசம், கனிமவளம் மற்றும் பசும்புற்கள் ஆகியன நிலக்கொடைக்கான வெகுமதிகளாக அமைகின்றன. நிலக்கொடையளிக்கும் ஒருவன் மறுமையில் அமுதம் விளையும் நிலத்தை அடைவான்.(91) நிலக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இல்லை. தாயைவிடப் பெருமதிப்புக்குத் தகுந்த பெரியோர் வேறெவரும் இல்லை. வாய்மையை விட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. கொடையளித்ததைவிட விலைமதிப்புமிக்கச் செல்வம் வேறேதும் இல்லை" என்றார் {பிருஹஸ்பதி}".(92)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அங்கிரஸ் மகனிடமிருந்து {பிருஹஸ்பதியிடமிருந்து} இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன், பொன், ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அவருக்குக் கொடையளித்தான்.(93) நிலக்கொடைக்கான பலன்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகங்களைச் சிராத்த நிகழ்வின் போது உரைத்தால், அதில் அளிக்கப்படும் காணிக்கைகளின் எந்தப் பகுதியையும் ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ அபகரிக்க முடியாது.(94) இத்தகைய சிராத்தத்தில் பித்ருக்களுக்கு ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் வற்றாதவை ஆகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே, சிராத்த நிகழ்வுகளின் போது, அழைக்கப்படும் பிராமணர்கள் உண்ணும்போது, கல்விமானான ஒருவன் நிலக்கொடையின் பலன்கள் தொடர்பான இந்த ஸ்லோகங்களை உரைக்க வேண்டும்.(95) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அனைத்திலும் முதன்மையான கொடையைக் குறித்து நான் சொல்லிவிட்டேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(96)

அநுசாஸனபர்வம் பகுதி – 62ல் உள்ள சுலோகங்கள் : 96

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்