The gift of food! | Anusasana-Parva-Section-63 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 63)
பதிவின் சுருக்கம் : உணவுக் கொடை குறித்துப் பீஷ்மருக்குச் சொன்ன நாரதர்; உணவுக்கொடையாளி செல்லும் உலகங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மன்னன் இவ்வுலகில் கொடைகளை அளிக்க விரும்பும்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, உண்மையில் மேன்மையான சிறப்புகளைக் கொண்ட பிராமணர்களுக்கு அவன் வழங்க வேண்டிய கொடைகள் என்ன?(1) என்ன கொடையால் பிராமணர்கள் உடனே நிறைவடைவார்கள்? பதிலுக்கு அவர்கள் வழங்கும் பலன்கள் என்ன? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கொடைகளில் இருந்து எழும் பலன் மூலம் அடையத்தக்க உயர்ந்த வெகுமதி என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, இம்மையிலும், மறுமையிலும் வெகுமதிகளை விளைவிக்கும் கொடைகள் என்னென்ன? இவை யாவற்றையும் நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இவை யாவற்றையும் குறித்து என்னிடம் விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தெய்வீகத் தோற்றமுடைய நாரதரிடம் முன்பொரு சந்தர்ப்பத்தில் இதே கேள்விகள் என்னால் முன்வைக்கப்பட்டன. அந்தத் தெய்வீகத் தவசி என்னிடம் மறுமொழியாகச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
நாரதர், "தேவர்களும், முனிவர்கள் அனைவரும் உணவைப் புகழ்கிறார்கள். உலக நடைமுறையும், அறிவுசார் துறைகள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(5) இதற்கு முன்பு உணவுக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இருந்ததும் இல்லை, இனி இருக்கப்போவதுமில்லை. எனவே, மனிதர்கள் எப்போதும் உணவுக் கொடை அளிப்பதையே குறிப்பாக விரும்புகிறார்கள்.(6) இவ்வுலகில், சக்திக்கும், பலத்துக்கும் உணவே காரணமாகிறது. உயிர்மூச்சுகள் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(7) இல்லறத்தார், துறவிகள், தவசிகள் {கிருஹஸ்தர்கள், பிரம்மசாரிகள், ஸந்நியாசிகள், வானப்பிரஸ்தர்கள்} என மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் உணவைச் சார்ந்தே இருக்கின்றனர். உயிர்மூச்சுகள் உணவைச் சார்ந்தே இருக்கின்றன. இதில் ஐயமேதும் இல்லை.(8) (தேவையின் அடிப்படையில்) தன் உறவினர்களில் எவரையும் துன்புறுத்திய ஒருவன், தன் செழிப்பை விரும்பினால் அவன் உயர் ஆன்ம பிராமணர் அல்லது துறவி ஒருவருக்கு உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(9) சிறப்புகள் நிறைந்த பிராமணர் வேண்டுதலின் பேரில் உணவைக் கொடையளிக்கும் மனிதன், மறுமையில் பெரும் மதிப்புமிக்கச் செல்வத்தை அடைவான்.(10)
செழிப்பாக இருக்க விரும்பும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, இல்லத்திலிருந்து நெடுந்தொலைவு பயணத்தால் களைத்துப் போயிருக்கும் ஒரு தகுதியான முதிய மனிதர் அந்த இல்லறத்தானின் வசிப்பிடத்திற்கு வரும்போது அவரை மதிப்புடன் வரவேற்க வேண்டும்.(11) பந்தங்கள் அனைத்தையும் தாண்டும் கோபத்தைக் கைவிட்டு, அறம் சார்ந்த இயல்பை அடைந்து, வன்மத்திலிருந்து விடுபட்டு, உணவைக் கொடையளிக்கும் மனிதன், நிச்சயம் இம்மையிலும் {இப்பிறவியிலும்}, மறுமையிலும் {மறுபிறவியிலும்} மகிழ்ச்சியை அடைவான்.(12) ஓர் இல்லறத்தான் தன் வசிப்பிடத்திற்கு வரும் மனிதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தவோ, திருப்பி அனுப்புவதன் மூலம் அவனை அவமானப்படுத்தவோ கூடாது. ஒரு சண்டாளனுக்கோ, ஒரு நாய்க்கோ கொடுக்கப்பட்ட உணவுக்கொடை ஒருபோதும் தொலைவதில்லை {வீண்போகாது}.(13) முன்பின் அறியாதவனும், வழியில் களைப்படைந்தவனுமான ஒருவனுக்குத் தூய உணவைக் கொடையளிக்கும் மனிதன் நிச்சயம் பெரும்பலனை அடைவான்.(14) பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரை உணவுக்கொடையால் நிறைவடையச் செய்யும் மனிதன், மிகப் பேரளவு பலன்களை அடைவான்.(15)
கொடும்பாவத்தைச் செய்த ஒருவனும், வேண்டி வரும் ஒருவனுக்கு, அல்லது குறிப்பாக ஒரு பிராமணனுக்கு உணவைக் கொடையளித்தால் அவன் அந்தக் கொடும்பாவத்தின் மூலம் ஒருபோதும் கலக்கமடையமாட்டான்.(16) ஒரு பிராமணனுக்கு அளிக்கும் உணவுக்கொடை வற்றாததாகிறது {அழியாததாகிறது}. ஒரு சூத்திரனுக்கு அளிக்கப்படும் உணவுக்கொடை பெரும் பலனை விளைவிக்கவல்லதாகும். இதுவே பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கொடுக்கப்படும் உணவுக்கொடையால் உண்டாகும் பலன்களுக்கிடையிலான வேறுபாடு ஆகும்.(17) ஒரு பிராமணனால் வேண்டப்படும்போது ஒருவன் அவனது குலத்தையோ, ஒழுக்கத்தையோ, வேதப் புலமையையோ விசாரிக்கக்கூடாது. அவன் கேட்ட உணவை ஒருவன் கொடுக்க வேண்டும்.(18) ஓ! மன்னா, உணவுக்கொடை அளிப்பவன், உணவைத் தரும் பல மரங்களையும், இன்னும் பிற விருப்பத்திற்குரிய பொருட்களையும் இம்மையிலும் மறுமையிலும் அடைவான்.(19) மங்கல மாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போலப் பித்ருக்களும் (சிராத்தங்களில்) தங்கள் மகன்களும், பேரப்பிள்ளைகளும் உணவைக் கொடையளிப்பார்கள் என்று எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.(20)
பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் ஒருவனுடைய வசிப்பிடத்தில் வந்து, "எனக்குக் கொடு {தேஹி}" என்று கேட்கும்போது, அந்த வசிப்பிடத்தின் உரிமையாளன் பலனடைய விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த வேண்டுதலைக் கேட்பதன் {கொடுப்பதன்} மூலம் நிச்சயம் பெரும் பலனை அடைகிறான்.(21) பிராமணன் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விருந்தினனாவான். அனைத்து உணவுகளிலும் முதல் பங்குக்கு அவன் உரியவனாகிறான்[1]. பிச்சை வேண்டும் விருப்பத்தில் வந்தடைந்ததும், பிராமணர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதன் விளைவால் மதிப்புடன் திரும்பிச் சென்றதுமான வீடு செழிப்பில் பெருகும். அத்தகைய வீட்டின் உரிமையாளன், மறுமையில் வாழ்க்கையின் அனைத்து ஆடம்பர வசதி வாய்ப்புகளுடன் கூடிய ஒரு குடும்பத்தில் பிறவியை அடைவான்.(22,23) இவ்வுலகில் உணவுக்கொடைகளை அளிக்கும் மனிதன் மறுமையில் நிச்சயம் சிறந்த இடத்தை அடைவான். இன்பண்டங்களையும், இனிப்பான உணவுகளையும் கொடையளிக்கும் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைந்து, அங்கே வசிக்கும் பிறராலும், தேவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவான்.(24) உணவே மனிதர்களின் உயிர் மூச்சுகளாக அமைகிறது. அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளது. உணவுக் கொடைகளை அளிப்பவன், (தன் செல்வமாக) பல விலங்களையும், பல பிள்ளைகளையும், (வேறு வடிவில்) குறிப்பிடத்தக்க செல்வத்தையும் அடைந்து, இன்புத்திற்குரிய ஆடம்பர வசதிகளுடன் கூடிய பொருட்களை அனைத்தையும் அபரிமிதமாக அடைவான்.(25)
[1] கும்பகோணம் பதிப்பில், "எல்லாப் பிராணிகளுக்கும் பிராம்மணன் முதலில் திருப்தியாகப் புசிக்கத்தக்க அதிதியாகிறான்" என்றிருக்கிறது.
உணவுக் கொடையாளி ஒருவன் உயிரைக் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அவன் அனைத்தையும் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மன்னா, அத்தகைய மனிதன் இம்மையில் பலம் மற்றும் வடிவ அழகு ஆகிய இரண்டையும் அடைகிறான்.(26) கொடையாளியின் வீட்டுக்கு ஒரு விருந்தினனாக வந்த ஒரு பிராமணனுக்கு முறையாக உணவு கொடுக்கப்பட்டால், அந்தக் கொடையாளி பெரும் மகிழ்ச்சியை அடைந்து, தேவர்களாலேயே துதிக்கப்படுபவனாகிறான்.(27) ஓ! யுதிஷ்டிரா, பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் வளமிக்க நிலமுமாவான். அந்த நிலத்தில் விதைக்கப்படும் எந்த வித்தும் பலனெனும் அபரிமிதமான பயிராக விளைகிறது.(28) உணவுக் கொடையானது கொடையாளிக்கும், கொடை பெறுபவனுக்கும் உடனே மகிழ்ச்சியை உண்டாக்குவது காணப்படுகிறது. வேறு கொடைகள் அனைத்தும் காணப்படாத {கண்ணுக்குத் தெரியாத} கனிகளையே {பலன்களையே} உண்டாக்குகின்றன.(29) உணவில் இருந்தே உயிரினங்கள் தோன்றின. ஓ! பாரதா, உணவில் இருந்து மகிழ்ச்சியும் இன்பமும் உண்டாகின்றன. அறம், செல்வம் ஆகிய இரண்டும் உணவில் இருந்தே பாய்கின்றன {உண்டாகின்றன}. நோய்த்தீர்வு அல்லது உடல்நலமும் உணவில் இருந்தே பாய்கிறது.(30)
முந்தைய கல்பத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உணவே அமுதம், அல்லது இறவாமையின் தோற்றம் என்று சொன்னார். உணவே பூமி, உணவே சொர்க்கம், உணவே ஆகாயம். அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(31) உணவு இல்லாத போது, உடலுயிராக அமையும் ஐம்பூதங்களும் ஒன்று கலந்த நிலையில் நீடிக்காது {அவை பிரிந்து போகின்றன}. உணவு இல்லையென்றால் பலவானின் பலமும் தவறுவது காணப்படுகிறது.(32) அழைப்புகள், திருமணங்கள் மற்றும் வேள்விகள் அனைத்தும் உணவில்லாமல் நின்று போகின்றன. உணவில்லாத போது வேதங்களும் மறைந்துபோகும்.(33) அண்டத்தில் உள்ள அசையும் மற்றும் அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் உணவையே சார்ந்திருக்கின்றன. மூன்று உலகங்களிலும் அறமும், செல்வமும் உணவையே சார்ந்திருக்கின்றன. எனவே ஞானிகள் உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(34) ஓ! மன்னா, உணவுக்கொடையளிக்கும் மனிதனின் பலம், சக்தி, புகழ், சாதனைகள் ஆகியன மூவுலகங்களிலும் இடைவிடாமல் அதிகரிக்கின்றன.(35)
உயிர்மூச்சுகளின் தலைவனான காற்று தேவன் {வாயு}, (சூரியனால் உறிஞ்சப்படும் நீரைக் கொண்டு சென்று) மேகங்களுக்கு மேலே அமர்கிறான். இவ்வாறு மேகங்களுக்குச் சுமந்து செல்லப்படும் நீரானது, ஓ! பாரதா, சக்ரனால் பூமியின் மீது பொழியப்படுகிறது.(36) சூரியன் தன் கதிர்களின் மூலம் பூமியின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறான். காற்று தேவன் {வாயு} சூரியனிலிருந்து அந்த ஈரப்பதத்தை விழச் செய்கிறான்.(37) ஓ! பாரதா, மேகங்களில் இருந்து அந்த நீர் பூமியின் மீது விழும்போது பூமாதேவி ஈரமடைகிறாள்[2].(38) அப்போது மக்கள், அண்டத்தின் உயிரினங்கள் சார்ந்திருக்கும் மொத்த விளைச்சலைத் தரும் பல்வேறு வகைப் பயிர்களை விதைக்கிறார்கள். இவ்வாறு உண்டாக்கப்படும் உணவிலேயே இறைச்சி, கொழுப்பு, எலும்புகள், அனைத்து உயிரினங்களின் உயிர் வித்து ஆகியவற்றின் தோற்றம் இருக்கிறது.(39) ஓ! மன்னா, இவ்வாறு தோன்றும் உயிர் வித்தில் இருந்து பல்வேறு வகை உயிரினங்கள் உண்டாகின்றன. உடலுக்குள் உள்ள அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் உயிர்வித்தை உண்டாக்கிப் பராமரிக்கிறார்கள்.(40) இவ்வாறு உணவில் இருந்தே சூரியன், காற்று மற்றும் உயிர்வித்து உண்டாகி செயல்படுகின்றன. ஒரே பூதம், அல்லது ஒரே அளவு என்று சொல்லப்படுகிற இவை யாவற்றில் இருந்துதான் அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன.(41) ஓ! பாரதர்களின் தலைவா, தன் வீட்டுக்கு வரும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்கும் மனிதன், உயிரினங்களுக்கு உயிர் மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் காணிக்கையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்" என்றார் {நாரதர்}".(42)
[2] கும்பகோணம் பதிப்பில், "உயிருக்கெல்லாம் அதிகாரியான காற்று மேலே மேகங்களிற்சேருகிறது. அந்த மேகங்களிலுள்ள ஜலத்தை இந்திரன் வர்ஷிக்கிறான். சூரியன் தன் கிரணங்களினால் பூமியிலுள்ள ஜலத்தை இழுக்கிறான். அந்த ஜலத்தைச் சூரியனிடத்திலிருந்து வாயு பகவான் மழையாகப் பொழிகிறான். பாரதனே, அந்த நீர் மேகத்தினிடமிருந்து எப்போது பூமியில் விழுகிறதோ அப்போது பூமிதேவி கொழுமையுள்ளவளாகிறாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உயிர்மூச்சின் தேவனான மங்கலக் காற்றானவன் {வாயு தேவன்}, மேகங்களில் நீரைக் குவிக்கிறான். ஓ! பாரதக்குலத்தின் வழித்தோன்றலே, சக்ரன் மேகங்களில் இருந்து மழையைப் பொழிகிறான். வானத்தின் சூரியன் தன் கதிர்களைப் பயன்படுத்திப் பூமியில் இருந்து சாறுகளை உறிஞ்சுகிறான். இந்தச் சாரங்களுக்காகத் தேவன் பிரஜாபதி சூரியனையும், காற்றையும் இவ்வழியில் பயன்படுத்துகிறான். மேகங்களில் இருந்து பூமிக்கு மழை பொழிகிறது. ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே, அது வசுமதி தேவியை {பூமா தேவியை) மென்மையாக்குகிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில் "வசுமதி என்பது வளம் நிறைந்தவள் என்ற பொருளைத் தரும் பூமாதேவியின் மற்றொரு பெயராகும்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட நான் எப்போதும் உணவுக் கொடைகளைக் கொடுத்து வருகிறேன். எனவே, நீயும் வன்மத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகமிக்க இதயத்துடன் உணவைக் கொடையளிப்பாயாக.(43) ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, உரிய சடங்குகளுடன் தகுந்த பிராமணர்களுக்கு உணவைக் கொடையளிப்பதன் மூலம் நீ சொர்க்கத்தை அடைவதில் உறுதிகொள்ளலாம்.(44) ஓ! ஏகாதிபதி, உணவைக் கொடையளிக்கும் கொடையாளிகளுக்காக ஒதுக்கப்படும் உலகத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. சொர்க்கத்தில் உள்ள அந்த உயர் ஆன்ம மனிதர்களின் மாளிகைகள் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(45) ஆகாயத்து நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையாக, பல தூண்களால் தாங்கப்பட்டவையாக, சந்திர வட்டிலைப் போன்று வெண்மையாக, கிங்கிணி மணிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவையாக, புதிதாய் உதித்த சூரியனைப் போல நம்பிக்கையூட்டுபவையாக உள்ள அரண்மனை போன்ற அந்த வசிப்பிடங்கள் நிலையானவையாகவோ, அசைபவையாகவோ இருக்கின்றன.(46) அந்த மாளிகைகளில், தரையில் வாழும் விலங்குகளும், பொருட்களும், நீரில் வாழும் விலங்குகளும் பொருட்களும் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவற்றில் சில வைடூரியத்தின் பிரகாசத்துடனும், சில சூரியப்பிரகாசத்துடனும் இருக்கும். அவற்றில் சில வெள்ளியாலானவையாகவும், சில பொன்னாலானவையாகவும் இருக்கும்.(47) அந்த மாளிகையில் வசிப்போரின் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல பல மரங்களும் அங்கே இருக்கும். சுற்றிலும் பல குளங்கள், சாலைகள், சபைகள், கிணறுகள், தடாகங்களும் இருக்கும்.(48) எப்போது உரத்த சடசடப்பொலியை வெளியிடும் சக்கரங்களுடன் கூடியவையும், குதிரைகளும் பிற விலங்குகளும் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கே காணப்படும். உணவு மற்றும் அனுபவிக்கத்தக்க பொருட்களின் மலைகளும், ஆடை ஆபரணக் குவியல்களும் அங்கே காணப்படும்.(49) பாலோடும் ஆறுகள் எண்ணற்றவையும், அரிசிக் குன்றுகளும், வேறு உணவு வகைகளும் அங்கே காணப்படும். உண்மையில், பொன்னொளிப் படுக்கைகளுடன் கூடிய வெண்மேகங்கள் போன்ற பல அரண்மனைகள் அந்த உலகங்களில் காணப்படும்.(50)
இவ்வுலகில் உணவுக்கொடை அளித்த மனிதர்களால் இவை அனைத்தும் அடையப்படும். எனவே, நீ உணவுக் கொடையாளியாவாயாக. உண்மையில், இவ்வுலகில் உணவுக் கொடையளிக்கும் உயர் ஆன்மா கொண்ட அறவோருக்கு ஒதுக்கப்படும் உலகங்கள் இவையே. இக்காரணங்களுக்காகவே இவ்வுலகில் மனிதர்கள் எப்போதும் உணவுக்கொடையளிக்க வேண்டும்" {என்றார் பீஷ்மர்}.(51)
அநுசாஸனபர்வம் பகுதி – 63ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |