The timetable for making gifts! | Anusasana-Parva-Section-64 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 64)
பதிவின் சுருக்கம் : எந்தெந்த நட்சத்திரங்களில் என்னென்ன கொடையளிக்கலாம் என்பது குறித்து தேவகியிடம் சொன்ன நாரதர்; அவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உணவுக்கொடைக்கான விதிகளைக் குறித்த உமது உரையாடலை நான் கேட்டேன். இப்போது கொடைகள் அளிக்கக்கூடிய கோள்கள் மற்றும் விண்மீன் சேர்க்கைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)
[1] "எந்தக் குறிப்பிட்ட கொடைகள், எந்த நட்சத்திரம் வரும் நாட்களில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை யுதிஷ்டிரன் அறிய விரும்புகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக தேவகிக்கும், முதன்மையான முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் தேவர்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர் துவாரகைக்கு வந்த போது தேவகி அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(3) தம்மிடம் கேள்வி கேட்ட அவளுக்கு அந்தத் தெய்வீக முனிவர் பின்வரும் சொற்களில் முறையாகப் பதிலளித்தார். அவற்றை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
நாரதர், "ஓ! அருளப்பட்ட பெண்மணியே, கிருத்திகை நட்சத்திரத்தில்[2], நெய் கலந்த பாயசத்தைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடுத்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் மகிழ்ச்சி நிறைந்த உலகங்களை அடைகிறான்.(5)
[2] இங்கே கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து தொடங்கப்படுவதால் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பாரத காலத்தில் கிருத்திகை முதல் நக்ஷத்திரமாக இருந்ததென்பது விளங்குகின்றது" என்றிருக்கிறது.
பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒருவன், ரோகிணி நட்சத்திரத்தில் அரிசி, நெய், பால், பிறவகை உணவு மற்றும் பானங்களுடன் பல கைப்பிடிகள் நிறைந்த மான் இறைச்சியை அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} கொடையளிக்க வேண்டும்[3].(6)
[3] கும்பகோணம் பதிப்பில், "ரோஹிணீ நக்ஷத்திரத்தில் மிகுதியான மான்மாஸ்ங்களோடும் நெய்யன்னத்தோடும் பாலன்னத்தையும் குடிக்கப் பாலையும் தன் கடன் தீர்த்துக் கொள்வதற்காகப் பிராம்மணனுக்குக் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.
சோமதைவதம் (அல்லது மிருகசீரிஷ) நட்சத்திரத்தில் கன்றுடன் கூடிய பசுவை கொடையளிப்பவன் மனிதர்களின் இவ்வுலகில் இருந்து, பேரின்பம் நிறைந்த சொர்க்கலோகத்திற்குச் செல்கிறான்.(7)
{திருவாதிரை நட்சத்திரத்தில்} உண்ணா நோன்பிருந்து, எள் கலந்த கிருசர உணவைக் கொடையளிப்பதன் மூலம் மறுமையில் கத்தி போன்ற கூர் முனைகளைக் கொண்ட பாறைகளுடன் கூடிய மலைகள் உள்ளிட்ட கடினங்கள் அனைத்தையும் கடக்கிறான்[4].(8)
[4] ஆர்த்ரா என்ற சொல் கங்குலியின் பதிப்பில் விடுபட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் திருவாதிரை என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் ஆர்த்ரா என்றும் உள்ளது. ஆர்த்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
ஓ! அழகு நிறைந்த பெண்மணியே, புநர்வஸு {புனர்பூசம்} நட்சத்திரத்தில், உணவுப்பண்டங்களைக் கொடையளிக்கும் ஒருவன் தன் மறுபிறவியில் மேனி அழகு கொண்டவனாக, பெரும் புகழைக் கொண்டவனாக, அபரிமிதமான உணவு இருக்கும் குடும்பத்தில் பிறப்பான்.(9)
புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில் நாணயமாக்கப்பட்ட, அல்லது கட்டியாகவுள்ள பொன்னைக் கொடையாக அளிக்கும் ஒருவன், இருளால் சூழப்பட்ட உலகங்களில் {பகுதிகளில்} வசித்தாலும் சோமனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருப்பான்.(10)
அஷ்லேஷ (ஆயில்யம்} நட்சத்திரத்தில் வெள்ளியையோ, காளையையோ கொடையாக அளிப்பவன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு பெருஞ்செழிப்பையும் செல்வாக்கையும் ஈட்டுவான்.(11)
மகம் நட்சத்திரத்தில் எள் நிறைந்த மட்பாண்டங்களை {மடக்குகளைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகில் பிள்ளைகளையும், விலங்குகளையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான்[5].(12)
[5] "வர்த்தமானம் என்று சொல்லப்படும் தட்டையான மண் குடுவை அல்லது பாத்திரமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் மடக்குகள் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் எள் நிறைந்த பாத்திரங்கள் என்று மட்டுமே இருக்கிறது.
பூர்வ பால்குனி {பூரம்} நட்சத்திரத்தில் உண்ணா நோன்பிருக்கும் கொடையாளி, பானிதம் {கற்கண்டு} கலந்த உணவை பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவனுக்குக் கிட்டும் வெகுமதி இம்மையிலும், மறுமையிலும் பெருஞ்செழிப்பாகும்[6].(13)
[6] "பானிதம் என்பது இறுகிய கரும்புச்சாறாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணத்தில் இது கற்கண்டு எனச் சொல்லப்படுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் நொதிக்க வைத்த கரும்புச்சாறு என்று சொல்லப்படுகிறது.
உத்தர பால்குனி {உத்திரம்} என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் ஷஷ்திகம் என்றழைக்கப்படும் அரிசியுடன் நெய்யும் பாலும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடையலாம்.(14) உத்திர பால்குனி {உத்திரம்} நட்சத்திரத்தில் மனிதர்களால் அளிக்கப்படும் எக்கொடையும் வற்றாததாகிறது. இது மிக நிச்சயமானதாகும்.(15)
ஹஸ்தம் நட்சத்திரத்தில் உண்ணா நோன்பை நோற்று நான்கு யானைகளுடன் கூடிய தேர் ஒன்றைக் கொடையாக அளிக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்ல பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16)
சித்திரை நட்சத்திரத்தில் ஒரு காளையையும், நறுமணப் பொருட்களையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், நந்தனக் காடுகளில் விளையாடும் தேவர்களைப் போல அருள் நிறைந்த அப்சரஸ் உலகங்களில் விளையாடுகிறான்[7].(17)
[7] கும்பகோணம் பதிப்பில், "சித்திரை நக்ஷத்திரத்தில் விருஷபத்தையும் நல்ல வாஸனைத் திரவியங்களையும் அன்புடன் தானம் செய்கிறவர் அப்ஸரஸுகளின் லோகத்தில் ஸஞ்சரித்துக் கொண்டு நந்தன வனத்தில் விளையாடுவார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சித்திரை நட்சத்திரத்தில் ஒரு காளையையும், மங்கல நறுமணப் பொருட்களையும் கொடையளிக்கும் ஒருவன், நந்தனத்தில் அப்சரஸ்களைப் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாகத் திரிவான்" என்றிருக்கிறது.
சுவாதி நட்சத்திரத்தில், செல்வக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் விருப்பம்போலவே சிறந்த உலகங்களை அடைந்து, அதையும் தவிரப் பெரும்புகழையும் அடைகிறான்.(18)
விசாக நட்சத்திரத்தில், ஒரு காளையையும், மிக அதிக அளவில் பாலைத் தரும் ஒரு பசுவையும், ஒரு வண்டி நிறைய நெல்லையும், அவற்றை மறைக்கும் பிராஸங்கத்தையும்[8], அணிந்து கொள்ள ஆடைகளையும் கொடையளிப்பதன் மூலம்(19) ஒரு மனிதன் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்து மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான். அத்தகைய மனிதன் எந்தப் பேரிடரையும் சந்திக்காமல் நிச்சயம் சொர்க்கத்தை அடைகிறான்.(20) பிராமணர்கள் வேண்டும் எப்பொருளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் வாழ்வாதாரங்களை அடைந்து, மரணத்திற்குப் பிறகு பாவிகள் அடையும் அனைத்து இடர்களில் இருந்தும் நரகத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான்.(21)
[8] "பிராஸங்கம் என்பது மூங்கில் அல்லது வேறு பொருட்களாலானதும், நெல்லை மறைக்கப் பயன்படுவதுமான கூடையைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனுராதா {அனுஷம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருந்து, சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் மற்றும் வேறு ஆடைகளையும், உணவையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் நூறு யுக காலம் மதிக்கப்படுகிறான்.(22)
ஜியேஷ்டம் {கேட்டை} நட்சத்திரத்தில், {மூலகம் என்றழைக்கப்படும்} கிழங்குகளுடன் {முள்ளங்கியுடன்} சேர்த்துக் காலசாகம் என்றழைக்கப்படும் கீரையை {கருவேப்பிலையைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பையும், விரும்பத்தக்க கதியையும் அடைகிறான்.(23)
அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவன், மூல நட்சத்திரத்தில், பிராமணர்களுக்குக் கனிகள் மற்றும் கிழங்குகளைக் கொடையளிப்பதன் மூலம் பித்ருக்களை நிறைவடையச் செய்து, விரும்பத்தக்க கதியை அடைகிறான்.(24)
பூர்வாஷாதம் {பூராடம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருக்கும் ஒருவன், நற்குடியில் பிறந்தவரும், நல்லொழுக்கம் கொண்டவரும், வேதங்களை அறிந்தவருமான ஒரு பிராமணருக்கு தயிர் நிறைந்த குடுவைகளை {தயிர்ப்பாத்திரங்களைக்} கொடையளிப்பதன் மூலம், தன் மறுபிறவியில் பசுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறக்கிறான்.
உத்தராஷாதம் {உத்திராடம்} நட்சத்திரத்தில், அபரிமிதமான நெய் மற்றும் கற்கண்டு ஆகியவற்றுடன் வாற்கோதுமைக் கஞ்சி நிறைந்த குடுவைகளைக் கொடையளிக்கும் ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(25,26) அபிஜித் என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் {உத்தராட நட்சத்திரத்தின் நடுப்பகல் வேளையில்} தேனையும், நெய்யையும் ஞானிகளுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஓர் அறவோன் சொர்க்கத்தை அடைந்து அங்கே மதிக்கத்தகுந்தவனாகிறான்[9].(27)
[9] கும்பகோணம் பதிப்பில், "உத்தராட நக்ஷத்திரத்தில் நெய்யும், தேனும் கற்கண்டும் மிகுதியாகச் சேர்த்து ஜலத்திற்பாகம் பண்ணின மாவைக் கொடுப்பவன் விரும்பினவற்றையெல்லாம் அடைவான். உத்தராடத்தில் அபிஜித்தென்னும் மத்தியான்ன வேளையில் அனுஷ்டானத்தோடிருந்து ஞானவான்களுக்குத் தேன் நெய்யுடன் சேர்ந்த பாலைக் கொடுப்பவன் ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப்படுவான்" என்றிருக்கிறது.
சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கம்பளம் மற்றும் அடர்த்தியான இழைநய அமைப்புக் கொண்ட {தடிமனான} வேறு துணிகளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தூய ஒளியுடன் கூடிய வெண்தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகமெங்கும் உலவுவான்.(28)
தனிஷ்டை {அவிட்ட} நட்சத்திரத்தில் காளைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தையோ, துணிக்குவியல்கள் மற்றும் செல்வத்தையோ அடக்கப்பட்ட ஆன்மாவுடன் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மறுபிறவியில் சொர்க்கத்தை அடைகிறான்.(29)
சதபிஷை {சதய} நட்சத்திரத்தில் அகில் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் அப்சரஸ்களின் தோழமையையும், பல்வேறு வகையான நித்திய நறுமணப் பொருட்களையும் அடைகிறான்.(30)
பூர்வபாத்ரபதம் {பூரட்டாதி} நட்சத்திரத்தில் ராஜமாஷத்தை {மொச்சைக் கொட்டையைக்}[10] கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, அனைத்து வகை உணவுப் பொருட்களையும், கனிகளையும் ஏராளமாகக் கையிருப்பில் கொண்டிருப்பான்.(31)
[10] "ராஜமாஷம் என்பது அவரை போன்ற ஒருவகை மொச்சையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உத்தரா {உத்திரட்டாதி} நட்சத்திரத்தில் ஆட்டிறைச்சியை {செம்மறியாட்டு இறைச்சியைக்} கொடையாக அளிக்கும் ஒருவன், அத்தகைய செயலின் மூலம் பித்ருக்களை நிறைவடைச் செய்து, மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான்.(32)
ரேவதி நட்சத்திரத்தில் கறப்பதற்குரிய வெண்கலப் பாத்திரத்துடன் ஒரு பசுவைக் கொடையாக அளிக்கும் ஒருவனை, அவ்வாறு கொடையளிக்கப்பட்ட பசுவானது, அவன் விரும்பும் அனைத்தும் கனியும் நிலையை அருளத் தயாராக மறுமையில் {அவனை} அணுகுகிறது.(33)
அஸ்வினி நட்சத்திரத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, பெரும் சக்தியுடன் திகழ்கிறான்.(34)
பரணி நட்சத்திரத்தில் பசுவையும், எள்ளையும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும்புகழையும் ஏராளமான பசுக்களையும் அடைகிறான்" என்றார் {நாரதர்}.(35)
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறே எந்தெந்த நட்சத்திர நாள்களில் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நாரதர் தேவகிக்குச் சொன்னார். இதைக் கேட்ட தேவகியும் தன் மருமகள்களுக்கு (கிருஷ்ணனின் மனைவியருக்கு) அவற்றை மீண்டும் சொன்னாள்" {என்றார் பீஷ்மர்}.(36)
அநுசாஸனபர்வம் பகுதி – 64ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |